PDA

View Full Version : நானும் ஒரு காலத்தில...........கீதம்
29-12-2010, 11:02 PM
“ஒரு வறுக்கி குடேன்!”

வற்றிய தொண்டைக்குழிக்குள் வெகுநேரமாய்
மையம் கொண்டிருந்த வார்த்தைகளை
உலர்ந்த உதடு வழி வெளியேற்றுவதற்குள்
முதல்முறை பிரசவிப்பவளின் வேதனையை
முழுதாய் உணர்ந்து முடித்திருந்தான்,
வாழ்ந்துகெட்ட வயோதிகனொருவன்!

“ஏய், சும்மா இங்கயே சுத்திட்டுநின்னே...
சுடுதண்ணிய மூஞ்சியில ஊத்திடுவேன்”

தேநீர்க்கடைக்காரனின் சுடுசொல்
சுருக்கென்று தைத்தாலும்
சுருட்டி இழுக்கும் வயிறு
அங்குலமும் அசையவிடாது தடுக்க,
ஏக்கத்துடன் பார்த்துநின்றான் கிழவன்.

“காலயில வந்து கயித்தறுக்காம,
அப்பால போய்த்தொல, கஸ்மாலம்”'

நாயை விரட்டுவதுபோல்
வள்ளென விழுந்தவனின்
செவிகளைச் சென்றடையாவண்ணம்
முனகினான் அவன்.

'நானும் ஒரு காலத்தில
ஓகோன்னு வாழ்ந்தவன்தான்!'

வழக்கம்போல காற்றுமட்டுமே
அவனுக்கிசைவாய் வீசி
ஆறுதல் சொல்லி அகன்றது.

M.Jagadeesan
30-12-2010, 12:03 AM
வாழ்ந்து கெட்டவன் ஒரு வறுக்கிக்காக*
தாழ்ந்து பிச்சைக் கேட்பதைக் காட்டிலும்
வீழ்ந்து மடிவதே உயர்ந்த செயலென்று
ஆழ்ந்து பயின்றோர் கூறும் அறமாகும்.

ஜானகி
30-12-2010, 01:14 AM
இளைஞனின் வேகத்தை வேறொரு திரியில் படித்துவிட்டு நகர்ந்தால்...
இங்கே முதுமையின் தாகம்..
அந்தோ பரிதாபம் !
இரண்டுக்கும் இடையே ஓர் பாலம் அமைந்தால்... எல்லாம் நேராகுமே !

KAMAKSHE
30-12-2010, 03:21 AM
ஆகா எப்போதும் போல ரொம்ப பிரமாதம் கீதம். வறுக்கி ன்னா எனக்கு புரியல?.

அப்பறம் அந்த முதல் 5 வரிகள் அதைப் புகழ வார்த்தைகளைத் தேடுகிறேன்.

வற்றிய தொண்டைக்குழிக்குள் வெகுநேரமாய்
மையம் கொண்டிருந்த வார்த்தைகளை
உலர்ந்த உதடு வழி வெளியேற்றுவதற்குள்
முதல்முறை பிரசவிப்பவளின் வேதனையை
முழுதாய் உணர்ந்து முடித்திருந்தான்,
வாழ்ந்துகெட்ட வயோதிகனொருவன்!

பாலகன்
30-12-2010, 03:43 AM
வயோதிகனின் வறுமை
நெஞ்சைப்பிசைந்த படைப்பு
வாழ்த்துக்கள் கீதம்

கௌதமன்
30-12-2010, 11:18 AM
சங்கப்பாடல் நினைவுக்கு வந்தது (நாலடியாராகவிருக்கலாம் - பாடலில் பிழையிருந்தால் திருத்த ஜானகியின் பார்வைக்கு)! .

ஈயென இரத்தல் இழிந்தன்று!
ஈயேன் என்பது அதனினும் இழிவு
கொள்ளெனக் கொடுத்தல் உயர்வன்று
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்வே!

இப்படியொரு சிந்தனையை தமிழரைத் தவிர யாரால் தரமுடியும்

M.Jagadeesan
30-12-2010, 12:58 PM
சங்கப்பாடல் நினைவுக்கு வந்தது (நாலடியாராகவிருக்கலாம் - பாடலில் பிழையிருந்தால் திருத்த ஜானகியின் பார்வைக்கு)! .

ஈயென இரத்தல் இழிந்தன்று!
ஈயேன் என்பது அதனினும் இழிவு
கொள்ளெனக் கொடுத்தல் உயர்வன்று
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்வே!

இப்படியொரு சிந்தனையை தமிழரைத் தவிர யாரால் தரமுடியும்

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் கழைதின் யானையார். நாலடியார் பதினென்
கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

கௌதமன்
30-12-2010, 01:05 PM
நன்றி நண்பரே!
மன்றத்திலுலவும் தமிழ்த்தென்றல் நீங்கள்!

CEN Mark
30-12-2010, 03:13 PM
[QUOTE=கீதம்;507192]“ஒரு வறுக்கி குடேன்!”வாழ்ந்து கெட்டு வறுமையை கண்டவன்
ஒரு துண்டு வர்க்கிக்காக கையேந்தும் அவலம்
இன்றைய கைவிடப்பட்ட முதியோரின் நிலைதான்.
ஒரு காட்சியை கண்முன் நிறுத்திய பாங்குதான் இங்கு நாம் உணரப்படவேண்டியது. மற்றபடி பசு தன் தாகத்தின் பொருட்டு தண்ணீர் எனக் கேட்டலும் இழிவு எனும் வள்ளுவனின் சிந்தாந்தம் இங்கு தேவையில்லாதது எனக்கருதுகிறேன்.

கௌதமன்
30-12-2010, 03:31 PM
பசு தன் தாகத்தின் பொருட்டு தண்ணீர் எனக் கேட்டலும் இழிவு எனும் வள்ளுவனின் சிந்தாந்தம் இங்கு தேவையில்லாதது எனக்கருதுகிறேன்.

நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

கீதம்
31-12-2010, 07:08 AM
வாழ்ந்து கெட்டவன் ஒரு வறுக்கிக்காக*
தாழ்ந்து பிச்சைக் கேட்பதைக் காட்டிலும்
வீழ்ந்து மடிவதே உயர்ந்த செயலென்று
ஆழ்ந்து பயின்றோர் கூறும் அறமாகும்.

உண்மைதான். ஆனால் எத்தனைப்பேரால் அறவழி வாழ இயல்கிறது? பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா.

கீதம்
31-12-2010, 07:14 AM
இளைஞனின் வேகத்தை வேறொரு திரியில் படித்துவிட்டு நகர்ந்தால்...
இங்கே முதுமையின் தாகம்..
அந்தோ பரிதாபம் !
இரண்டுக்கும் இடையே ஓர் பாலம் அமைந்தால்... எல்லாம் நேராகுமே !

முதுமை, வறுமை, தனிமை இம்மும்மைகளின் கூட்டு இம்மையில் பெருங்கொடுமையே! பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அவர்களே.

Hega
31-12-2010, 07:16 AM
வாழ்ந்து கெட்டவன் ஒரு வறுக்கிக்காக தாழ்ந்து பிசசைகேட்கும் நிலை பரிதாபமானதுதான். ஆனால் அவன் வாழும் போது பிற்காலத்திற்கென அவனுக்குதவும் மனிதர் நட்பையும், அன்பையும் கூடவா சேர்த்து வைக்கவில்லை.

இன்றைக்கு பல வயோதிபர் இந்த நிலைக்கு தள்ளபட்டதைபார்க்கும் போது ஏன் இந்த இழிநிலை அவர்களுக்கு என தோன்றாமல் இல்லை.

எப்படியோ நாம் அப்படி வாழகூடாது என சிந்திக்க வைத்தமைக்கு நன்றிகீதம் அக்கா..

கீதம்
31-12-2010, 07:16 AM
ஆகா எப்போதும் போல ரொம்ப பிரமாதம் கீதம். வறுக்கி ன்னா எனக்கு புரியல?.

அப்பறம் அந்த முதல் 5 வரிகள் அதைப் புகழ வார்த்தைகளைத் தேடுகிறேன்.

வற்றிய தொண்டைக்குழிக்குள் வெகுநேரமாய்
மையம் கொண்டிருந்த வார்த்தைகளை
உலர்ந்த உதடு வழி வெளியேற்றுவதற்குள்
முதல்முறை பிரசவிப்பவளின் வேதனையை
முழுதாய் உணர்ந்து முடித்திருந்தான்,
வாழ்ந்துகெட்ட வயோதிகனொருவன்!

பாராட்டுக்கு நன்றி காமாக்ஷி.

வறுக்கி என்றால் ரஸ்க் போல் மொறுமொறுவென்று இருக்கும். காபி அல்லது டீயில் நனைத்து உண்பார்கள். சென்னையில் பொறை என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். சரியா என்று தெரியவில்லை.

பாலகன்
31-12-2010, 07:18 AM
பாராட்டுக்கு நன்றி காமாக்ஷி.

வறுக்கி என்றால் ரஸ்க் போல் மொறுமொறுவென்று இருக்கும். காபி அல்லது டீயில் நனைத்து உண்பார்கள். சென்னையில் பொறை என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். சரியா என்று தெரியவில்லை.

பொறை சரியே! :icon_b:

கீதம்
09-01-2011, 09:33 PM
வயோதிகனின் வறுமை
நெஞ்சைப்பிசைந்த படைப்பு
வாழ்த்துக்கள் கீதம்

வாழ்த்துக்கு நன்றி மகாபிரபு.

சங்கப்பாடல் நினைவுக்கு வந்தது (நாலடியாராகவிருக்கலாம் - பாடலில் பிழையிருந்தால் திருத்த ஜானகியின் பார்வைக்கு)! .

ஈயென இரத்தல் இழிந்தன்று!
ஈயேன் என்பது அதனினும் இழிவு
கொள்ளெனக் கொடுத்தல் உயர்வன்று
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்வே!

இப்படியொரு சிந்தனையை தமிழரைத் தவிர யாரால் தரமுடியும்

பின்னூட்டத்துக்கு நன்றி கெளதமன்.

[QUOTE=கீதம்;507192]“ஒரு வறுக்கி குடேன்!”வாழ்ந்து கெட்டு வறுமையை கண்டவன்
ஒரு துண்டு வர்க்கிக்காக கையேந்தும் அவலம்
இன்றைய கைவிடப்பட்ட முதியோரின் நிலைதான்.
ஒரு காட்சியை கண்முன் நிறுத்திய பாங்குதான் இங்கு நாம் உணரப்படவேண்டியது. மற்றபடி பசு தன் தாகத்தின் பொருட்டு தண்ணீர் எனக் கேட்டலும் இழிவு எனும் வள்ளுவனின் சிந்தாந்தம் இங்கு தேவையில்லாதது எனக்கருதுகிறேன்.

பின்னூட்டத்துக்கும் விமர்சனத்துக்கும் நன்றி CEN Mark அவர்களே.

வாழ்ந்து கெட்டவன் ஒரு வறுக்கிக்காக தாழ்ந்து பிசசைகேட்கும் நிலை பரிதாபமானதுதான். ஆனால் அவன் வாழும் போது பிற்காலத்திற்கென அவனுக்குதவும் மனிதர் நட்பையும், அன்பையும் கூடவா சேர்த்து வைக்கவில்லை.

இன்றைக்கு பல வயோதிபர் இந்த நிலைக்கு தள்ளபட்டதைபார்க்கும் போது ஏன் இந்த இழிநிலை அவர்களுக்கு என தோன்றாமல் இல்லை.

எப்படியோ நாம் அப்படி வாழகூடாது என சிந்திக்க வைத்தமைக்கு நன்றிகீதம் அக்கா..

நெகிழ்ந்தளித்த விமர்சனத்துக்கு நன்றி Hega.

சுடர்விழி
15-01-2011, 11:43 PM
வாழ்ந்து கெட்டவனின் வறுமை நிலையை கவிதை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறது...வாழ்த்துக்கள்

கீதம்
26-01-2011, 10:36 PM
வாழ்ந்து கெட்டவனின் வறுமை நிலையை கவிதை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறது...வாழ்த்துக்கள்

நன்றி சுடர்விழி.

அமரன்
27-01-2011, 07:18 PM
கவிதையைப் படித்த நொடியில் நல்ல மனிதர்களை சேமித்து வைக்கத் தவறிவிட்டானே அந்த வாழ்ந்து கெட்டவன் என்றுதான் தோன்றியது. பரிதாபத்துக்குப் பதிலாக படிப்பினைதான் கிடைத்தது.

யாருக்குத் தெரியும், அவன் இப்போது பெற்ற அனுபவத்தை எப்போதோ அவன் எவருக்காவது கொடுத்திருக்கலாம்.

இருந்தாலும், பசியுடன் ஒருவன் என்பது கனக்கிறது.. கவிதையைப் போலவே!!

கீதம்
13-02-2011, 06:20 AM

நன்றி அமரன்.

உமாமீனா
13-02-2011, 06:55 AM
“ஒரு வறுக்கி குடேன்!”

வறுக்கி கோவை ஊட்டி பகுதிகளின் வழக்கு/வட்டார சொல்'நானும் ஒரு காலத்தில
ஓகோன்னு வாழ்ந்தவன்தான்!'

கோவை ஊட்டி இந்த பகுதிகளில் மிகுதியாக காணலாம் இப்படி பட்ட முதியோர்களை - பிழைக்க தெரியாதவர் இவரால் பிழைத்தவர் எத்துனையோ?

சிறப்பாக கவிதை கூறிய படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

கீதம்
15-02-2011, 07:39 PM
வறுக்கி கோவை ஊட்டி பகுதிகளின் வழக்கு/வட்டார சொல்கோவை ஊட்டி இந்த பகுதிகளில் மிகுதியாக காணலாம் இப்படி பட்ட முதியோர்களை - பிழைக்க தெரியாதவர் இவரால் பிழைத்தவர் எத்துனையோ?

சிறப்பாக கவிதை கூறிய படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி உமாமீனா அவர்களே.