PDA

View Full Version : தமிழ் மொழியின் சிறப்புகள்



Hega
26-12-2010, 10:09 AM
தமிழ் மொழியின் சிறப்புகள்


1) அந்தமிழ்- அம் + தமிழ் = அழகிய தமிழ்

2) அருந்தமிழ்- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்

3) அழகுதமிழ்- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4) அமுதத்தமிழ்- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

5) அணித்தமிழ்- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6) அன்னைத்தமிழ்- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ்

7) இசைத்தமிழ்- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)

8) இயற்றமிழ்- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது

9) இன்றமிழ்- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10) இன்பத் தமிழ்- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.

11) எந்தமிழ்- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)

12) உகக்குந்தமிழ்- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்

13) ஒண்டமிழ்- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)

14) கனித்தமிழ்- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15) கற்கண்டுத்தமிழ்- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16) கன்னித் தமிழ்- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17) சங்கத்தமிழ்- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18) சுடர்தமிழ்- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19) சுவைத்தமிழ்- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20) செந்தமிழ்- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)

21) செழுந்தமிழ்- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22) தனித்தமிழ்- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23) தண்டமிழ்- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24) தாய்த்தமிழ்- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்

25) தீந்தமிழ்- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்

26) தெய்வத்தமிழ்- தெய்வத்தன்மை வாய்ந்தது

27) தேன்தமிழ்- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்

28) பசுந்தமிழ்- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்

29) பைந்தமிழ்- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30) பழந்தமிழ்- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்

31) பாற்றமிழ்- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32) பாகுதமிழ்- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33) நற்றமிழ்- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது

34) நாடகத்தமிழ்- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35) மாத்தமிழ்- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36) முத்தமிழ்- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்

37) வண்டமிழ்- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)

38) வளர்தமிழ்- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்

அமரன்
26-12-2010, 10:15 AM
நல்ல தொகுப்பு ஹேகா.

அமிழ்து அமிழ்து என்று தொடர்ச்சியாகப் பலுக்கும் போது தமிழ் பிறக்கும்.

பிறக்கெப்படி இத்தனை சிறப்பில்லாமல் தமிழ் இருக்கும்.

கீதம்
26-12-2010, 10:25 AM
தமிழமிழ்தில் யாமும் அமிழ்ந்துபோனோம். பாராட்டுகள் Hega.

நாகரா
26-12-2010, 11:07 AM
மாயாத் தமிழ்

இதையும் பட்டியலில் சேர்த்து விடுங்கள்.

நம் தமிழ் பற்றி
நயம்படப் பகிர்ந்த*
நல்லாள் ஹேகா உமக்கு
நன்றிகள் பற்பல*

M.Jagadeesan
26-12-2010, 11:43 AM
அன்னை தமிழுக்கு ஈடாக இவ்வுலகில்
இன்னொரு மொழி இருக்கிறதா? செப்பிடுவீர்!
கண்களால் தமிழ் படிப்பது இன்பம்
காதுகளால் தமிழ் கேட்பது இன்பம்
ஆதலினால் தமிழுக்காய்
கண்களையும் காதுகளையும் தவிர
மற்றெந்த உறுப்புகளை
இழந்தாலும் சம்மதமே!


தமிழின் சிறப்புகளைப் பட்டியலிட்ட
ஹேகாவுக்கு நன்றி!

பாலகன்
26-12-2010, 12:17 PM
38 வகை தமிழை அறிந்துக்கொண்டோம். அருமை அற்புதம்

பாராட்டுக்கள் ஹேகா

ஜானகி
26-12-2010, 02:48 PM
தூய தமிழில்,
பழகு தமிழைப் பதம் பிரித்து,
இலக்கணத் தமிழில் கோர்வையாகக் காட்டி,
சிறப்புத் தமிழன்னைக்கு
வண்ணத்தமிழில்
பா[ பூ ] மாலை சூட்டியுள்ளீர்கள். மிக்க நன்று.

சிவா.ஜி
26-12-2010, 02:54 PM
சென்னைத்தமிழ் இல்லையே.....அதையும் சேர்த்தா....முழுசா இருக்கும்.....ஹி..ஹி...

நல்ல தொகுப்பு ஹேகா. எத்தனை தமிழ் இருந்தாலும்....கேட்கக் கேட்க, பேசப் பேச தெவிட்டாத மொழி என்பதில் சந்தேகமே இல்லை.

பகிர்வுக்கு நன்றிம்மா.

அக்னி
26-12-2010, 02:58 PM
இத்தனைத் தமிழும் கலந்த பாராட்டுதல்கள், பதிவிற்கு...

ஜானகி
27-12-2010, 06:19 AM
பாசுரத் தமிழ் - ஆழ்வார்கள் கையாண்டது

இலக்கணத் தமிழ் - நாயன்மார்கள் கையாண்டது

இலக்கியத் தமிழ் - பாவலர்கள் கையாண்டது

தெய்வத் தமிழ் - சித்தர்கள் கையாண்டது

சங்கத் தமிழ் - சங்க காலத்தவர் கையாண்டது

புரட்சித் தமிழ் - பாரதி கையாண்டது

புதுமைத் தமிழ் - புதுக் கவிகள் கையாள்வது

புரட்டுத் தமிழ் - டி.வி காரர்கள் கையாள்வது !

முரட்டுத் தமிழ் - வில்லன்கள் கையாளுவது

சென்னைத் தமிழ் - சென்னை வாசிகள் கையாளுவது

கொங்கு தமிழ் - கொங்கு நாட்டவர் கையாளுவது

சுந்தரத் தமிழ் - மன்றத் தமிழர் கையாளுவது !

ஜனகன்
27-12-2010, 06:29 AM
தமிழில் இத்தனை வகையா? படிக்கப் படிக்க ஆர்வம் மேலோங்குகின்றது.இன்னும் கொடுங்கள் ஹெகா & ஜானகி அவர்களே.

ஜானகி
27-12-2010, 08:01 AM
மறத் தமிழ்...?

தெரிந்தவர்கள் விளக்கவும்

கீதம்
27-12-2010, 10:00 AM
மறத் தமிழ்...?

தெரிந்தவர்கள் விளக்கவும்

மறம் என்றால் வீரம். மறத்தமிழ் என்றால் வீரம் செறிந்த தமிழ் அல்லது வீரம் ஊட்டும் தமிழ் எனப் பொருள்தரும் என்று எண்ணுகிறேன்.

கௌதமன்
27-12-2010, 01:47 PM
தமிழ் என்ற சொல்லே சிறப்பு.
வல்லின, இடையின, மெல்லின எழுத்துகளை தன் பெயரிலேயே கொண்டுள்ளது தமிழ்.

தமிழ் என்றாலே இனிமை தானே
அதனால் தான் பாரதிதாசன்
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
................................
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்

என்கிறார்.

பாராட்டுகள் ஹேகா!

Hega
27-12-2010, 08:05 PM
மறம் என்றால் வீரம். மறத்தமிழ் என்றால் வீரம் செறிந்த தமிழ் அல்லது வீரம் ஊட்டும் தமிழ் எனப் பொருள்தரும் என்று எண்ணுகிறேன்.


விளக்கம் அருமை அக்கா

Hega
27-12-2010, 08:06 PM
கருத்திட்டோர் அனைவருக்க்கும் நன்றி

Hega
27-12-2010, 08:09 PM
தமிழ் மொழியின் சிறப்பு குறித்து பாவாணர் கூறியதையும் கேட்போம்..

தாயினும் சிறந்தது தமிழே
தரணியில் உயர்ந்தது தமிழே
வாயுடன் பிறந்தது தமிழே
வாழ்வெல்லாம் தொடர்வது தமிழே

குலமெனப் படுவதும் தமிழே
கோவெனப் படுவதும் தமிழே
நலமெனப் படுவதும் தமிழே
நாடெனப் படுவதும் தமிழே

தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்து தரைமீது
தனியே விரிந்து கவையே பிரிந்து கிளையே திரிந்து பலவாக

முனிவோர் மொழிந்து முனமே திருந்தி முதனூல் எழுந்த மொழியாகி
முருகால் நடந்த சவைமீது அமர்ந்து முகைவாய் மலர்ந்த தமிழாயே


தோற்றம் அறிவராத் தொல்பெரும் தமிழே
துணை ஒன்றும் வேண்டாத தூயசெந் தமிழே

மாற்றம் எளியவாய் மன்னிய தமிழே
மறைந்த லெமூரியா நிறைந்தசெந் தமிழே

போற்று முதல் நூல்கள் பொருந்திய தமிழே
பூமி எங்கும் புடை போகிய தமிழே

கூற்றம் எனக்கடல் குணிப்ப அருங் கலைகள்
கொள்ளை கொண்டும்வளம் கொண்டது ஓர் தமிழே

குணமதி
28-12-2010, 11:20 AM
அருமை, பாராட்டு.

Hega
02-01-2011, 09:56 PM
நன்றி குணமதி அவர்களே...



"முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே "- திருமந்திரம்