PDA

View Full Version : நாலடி காட்டும் பாதை



ஜானகி
26-12-2010, 02:16 AM
நின்றன நின்றன நில்லா என உணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க

சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்

வந்தது வந்தது கூற்று.

நாலடியார்

நிலையானவை என்று நாம் நினத்திருக்கும் பொருள்கள், காலப் போக்கில், நிலைத்திராமல் அழிந்துவிடும், என்பதனை உணர்ந்து, நம்மால் செய்யக்கூடிய அறங்களை, தர்மங்களை, செய்யநினைக்கும்போதே, விரைவில் செய்யவேண்டும்.

ஏனென்றால், காலம் விரைந்து போய்க்கொண்டேயிருக்கிறது, காலன் வந்துகொண்டேயிருக்கிறான் !

சொ.ஞானசம்பந்தன்
26-12-2010, 05:06 AM
நின்றன நின்றன நில்லா என உணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க

சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்

வந்தது வந்தது கூற்று.

நாலடியார்
!

நாலடி காட்டும் பாதைகளுள் சிறந்த ஒன்றை எடுத்துக்காட்டி இருக்கிறீர்கள். பாராட்டு.

அமரன்
26-12-2010, 09:13 AM
தமிழின் சிறந்த அறநூல்களில் ஒன்றான நாலடியார் கூறும் சிறந்த வாழ்க்கை முறையை நாலடியில் சொன்னவிதமும் நீங்கள் எளிமைப்படுத்திக் கொடுத்த விளக்கமும் கவர்கின்றன.

ஜானகி
26-12-2010, 09:36 AM
நன்றி,
நல்ல சிந்தனைகளாகத் தரவேண்டும் என்ற முயற்சியில், எனது படிப்பிலும், பொழுது போக்கும் எண்ணத்தைவிட, ஆழமான நோக்கமே மேலோங்கியுள்ளது.அலமாரியில் உள்ள, கைபடாத புத்தகங்கள் தூசு தட்டப் பெற்று, பிரிக்கப்படுகின்றன.
நன்றி - தமிழ் மன்றம்

ஜானகி
27-12-2010, 05:24 AM
மற்றறிவாம் நல்வினை யாம் இளையம் என்னாது

கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்

முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு

நாலடியார்

இப்போது இளையவராக இருக்கிறோம், பின்னால் அறம் செய்யலாம் என்று வீணே காலம் கழிக்காமல், இப்போதே, பொருள் இருக்கும் போதே, மறக்காமல் அறம் செய்ய வேண்டும்.

கடுங்காற்றால், சில சமயம், பழங்கள் இருக்க, நல்ல காய்கள் விழுந்துவிடும் அல்லவா ?

இறப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம், அதனால் காலம் கடத்தக் கூடாது.

இன்றே அறம் செய்ய வேண்டும்.

கீதம்
27-12-2010, 05:59 AM
எத்தனை அருமையான கருத்துகள்!

நாலடி காட்டும் பாதையில்
காலடி வைத்து முன்னேற
பேரிடி வாழ்வில் விலக்கிப்
பெருவாழ்வு வாழ்வோமே!

பகிர்வுக்கு நன்றி ஜானகி அவர்களே.

ஜானகி
28-12-2010, 04:07 PM
வினைப் பயன் வந்தக்கால் வெய்ய உயிரா

மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத்

தொல்லையது என்றுணர்வாரே தடுமாற்றத்து

எல்லை இகந்தொருவுவார்

பொருள்

முன்செய்த வினைப் பயனால், இப்போது துன்பம் வரும்போது, அறிவில்லாதவன், மனம் வருந்துவான்.

அறிவுடையோர், அதனை, வினைப்பயன் என்று உணர்ந்து, அதனை ஏற்று, அமைதியாக, அனுபவித்து, பிறவித் துன்பத்தின் எல்லையைக் கடப்பார்கள்.

ஜானகி
30-12-2010, 12:57 AM
அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்

பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த

சாறுபோல் சாலவும் பின்னுதவி மற்றதன்

கோதுபோல் போகும் உடம்பு.

பொருள்:

பெறுவதற்கு அரிய இந்த மனிதப் பிறவியில், சிறந்த புண்ணியத்தை விரைவில் தேடிக்கொள்ள வேண்டும்.

அந்தப் புண்ணியம், கரும்புச் சாறு போல, உயிருக்குப் பெரிதும் உதவும்.

அந்தக் கரும்பின் சக்கை போல, உடம்பு, பயனில்லாமல் அழிந்துவிடும்.

ஜானகி
31-12-2010, 02:25 AM
உறக்கம் துணையதோர் ஆலம் விதீண்டி

இறப்ப நிழற்பயந்த அங்கு அறப்பயனும்

தான் சிறிதாயினும் தக்கார்கைப் பட்டக்கால்

வான் சிறிதாப் போர்த்து விடும்.

பொருள்

மிகச் சிறிய விதையான ஆலவிதை, வளர்ந்து ஓங்கி, தழைத்து பெரியு நிழலைத் தருகிறது.

அதுபோல, நாம் செய்யும் அறம், மிகச் சிறியதாக இருந்தாலும்,அதன் பயன்,வானத்தைக் காட்டிலும் பெரிதாகும்.

ஜானகி
01-01-2011, 01:07 AM
தீவினை அச்சம்

பெரியவர் கேண்மை பிறை போல நாளும்

வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்

வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே

தானே சிரியார் தொடர்பு.

பொருள் :

பெரியோர் நட்பு, பிறைச் சந்திரனைப்போல, நாள்தோறும் படிப்படியாகவளரும்.

கீழோர் உறவு, வானத்தில் தவழும் நிலவுபோல,நாள்தோறும், சிறிது சிறிதாகத் தேய்ந்து, குறைந்து, ஒழியும்.

ஜானகி
02-01-2011, 12:30 AM
விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன்

தவத்தின் முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்

தேய்விடுத்துச் சென்றிருள் பாய்ந்தங்கு நல்வினை

தீர்விடத்து நிற்குமாம் தீது.

பொருள் :

விளக்கொளி வர, வர, அங்கேயிருந்த இருள் அகல்வது போல, ஒருவன் செய்த தவத்தின் முன்னே பாவம் விலகும்.

விளக்கில் எண்ணை குறையும்போது, இருள் பரவுவது போல, நல்வினை நீங்குமிடத்துப் பாவம் நிலைத்து நிற்கும்.

srivinoth
02-01-2011, 03:00 AM
நல்லதொரு முயற்சி!!

ஜானகி
03-01-2011, 05:30 AM
காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும்சொல்

ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே

ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்

காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

பொருள் :

ஒருவன் சொல்லும் சினச்சொல், அவனையே வருத்தும்.

எனவே, அறிவுடையார், சினம் கொண்டு, கடும் சொற்களைச் சொல்லமாட்டார்.

பிறரைத் தாக்கும் கடும்சொல், நம்மையே திருப்பித் தாக்கும்.

ஜானகி
04-01-2011, 12:33 AM
உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்

அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்

தாம் செய்வதலால் தவத்தினால் தீங்கூக்கல்

வான் தோய் குடிப்பிறந்தார்க்கில்.

பொருள் :

உயர்குடிப் பிறந்தோர், ஒருவர், தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பார்க்காது, தமக்கு, மிகுந்த தீமையைச் செய்தாலும், அவர்களுக்குத் திரும்பவும், உதவியே செய்வார்கள், தவறியும் தீமை செய்யமாட்டார்கள்.

ஜானகி
05-01-2011, 12:44 AM
அறிவது அறிந்து அடங்கி அஞ்சுவது அஞ்சி

உறுவது உலகு உவப்பச் செய்து - பெறுவதனால்

இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்

துன்புற்று வாழ்தல் அரிது.

பொருள் :

அறியவேண்டிய நன்மை தீமைகளை அறிந்துகொன்டு,அடக்கமுடையவராகி,

அஞ்சவேண்டிய பழிபாவங்களுக்கு அஞ்சி,

செய்வதை உலகம் மகிழுமாறு செய்து,

அறநெறியால், வந்த பொருளால் மகிழ்ந்து வாழும் இயல்புடையவர்,

எக்காலத்திலும் துன்புறுதல் இல்லை.

ஜானகி
06-01-2011, 01:25 AM
இல்லா இடத்தும் இயைந்த அளவினால்

உள்ள இடம் போல் பெரிதுவந்து -மெல்லக்

கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு

அடையாவாம் ஆண்டைக் கதவு.

பொருள் :

பொருள் இல்லாதபோதும், தம்மால் இயன்ற அளவு பொருள் உள்ளது போல, மகிழ்ந்து, இயல்பாகக் கொடுக்கும் குணமுடய பெரியவர்களுக்கு, மறுமை உலகக் கதவுகள், எப்போதும் திறந்தே இருக்கும்.

ஜானகி
07-01-2011, 01:12 AM
கடிப்பீடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்

இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்

அடுக்கிய மூவுலகுங் கேட்குமே - சான்றோர்

கொடுத்தார் எனப்படும் சொல்.

பொருள் :

முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரையில் உள்ளவர்கள் கேட்கலாம்.

மேகத்தின் இடி ஓசையை, ஒரு யோசனை தூரம்வரை உள்ளவர்கள் மட்டுமே கேட்பர்.

ஆனால், தகுதி உடையவர்களுக்குக் கொடுத்தார் எனும் புகழ்ச் சொல்லை, மூவுலகிலும் உள்ளவரும் கேட்பர்.

சுகந்தப்ரீதன்
07-01-2011, 11:44 AM
நாலு அடிக்கொடுத்தாலும் கிடைக்காத ஞானத்தை நாலடி கொடுக்குமென்று இத்திரி மூலம் அறியமுடிகிறது..!!

ஜானகிம்மாவுக்கு எனது நன்றியும் பாராட்டும்..!!:)

ஜானகி
08-01-2011, 12:52 AM
பல்லாவுள் உய்த்துவிடினும் குழக்கன்று

வல்லதாம் தாய் நாடிக் கோடலைத் - தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு.

பொருள் :

பல பசுக்களின் கூட்டத்திலும், இளங்கன்று, தன் தாயைத் தேடிக் கண்டுபிடித்து அடைந்துவிடும்.

அதுபோல, முற்பிறவியில் செய்த வினையும், அவ்வினை செய்தவனைத் தேடி அடைந்துவிடும்.

இதனை உணர்ந்து, எப்போதும், நல்வினையே செய்யவேண்டும்.

ஜானகி
09-01-2011, 01:34 AM
உறற்பால் நீக்கல் உறுவார்க்கும் ஆகா

பெறற்பால் அனையவும் அன்னவாம் மாரி

வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்

சிறப்பின் தணிப்பாரும் இல்.

பொருள் :

மழை பெய்யாமல் பொய்க்கும்போது, அதனைப் பெய்யவைக்கமுடியாது.

அதிகமாகப் பெய்தால், அதனைத் தடுத்து நிறுத்தவும் முடியாது.

அதுபோல,நமக்கு வந்து சேரும் நன்மை தீமைகளைத்தடுத்து நிறுத்த முடியாது.

ஜானகி
10-01-2011, 12:56 AM
தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை

எக்காலும் குன்றல் இலராவார் - அக்காரம்

யாவரே தின்னினும் கையாகாதாம் கைக்குமாம்

தேவரே தின்னினும் வேம்பு.

பொருள் :

வெல்லத்தை யார் தின்றாலும் கசக்காது, இனிக்கும் ; வேப்பங்காயை தேவரே தின்றாலும் கசக்கும், இனிக்காது.

அதுபோல, சான்றோரும், சான்றோர் அல்லாதவரும், தத்தம் இயல்பிலேயே எப்போதும் குறையாமல் இருப்பார்கள்.

ஜானகி
11-01-2011, 12:25 AM
வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்

நடுவணது எய்த இருதலையும் எய்தும்

நடுவணது எய்தாதான் எய்தும் உலைபெய்து

அடுவது போலும் துயர்.

பொருள் ;

அறம், பொருள், இன்பம் என்ற இம்மூன்றில், நடுவில் உள்ள பொருள் உள்ளவன், மற்ற இரண்டையும் தானே பெறுவான்.

பொருள் இல்லாதவன், வறுமைத் துன்பத்தில் மெய் வருந்துவான்.

ஜானகி
12-01-2011, 12:24 AM
ஆவேறுருவின ஆயினும் ஆ பயந்த

பால் வேறுருவின அல்லவாம் - பால்போல்

ஒரு தன்மைத்தாகும் அறநெறி ஆ போல்

உருவு பல கொளல் ஈங்கு.

பொருள் :

பசுக்கள் பலவேறுநிறமுடையதாக இருந்தாலும், அவை தரும் பாலின் நிறம் ஒன்றே.

அதேபோல, நாம் செய்யும் அறத்தின் பயனும் ஒரே தன்மையுடையதுதான்

அவ்வறத்தை ஆற்றும் முறைகள் பலவாகலாம்.

ஜானகி
13-01-2011, 01:02 AM
பெரியவர் கேண்மை பிறை போல நாளும்

வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்

வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே

தானே சிறியார் தொடர்பு

பொருள் :

பெரியோர்களது நட்பு, பிறைச் சந்திரனைப் போல, நாள்தோறும் படிப்படியாக வளரும்.

கீழோர் உறவு, வானில் தவழும் முழு மதி போல, நாள்தோரும் சிறிது சிறிதாகத் தானே தேய்ந்து, குறைந்து ஒழியும்.

ஜானகி
14-01-2011, 12:59 AM
யார் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்

தேரும் துணைமை உடையவர் - சாரல்

கனமணி நின்றிமைக்கும் நாட, கேள் மக்கள்

மனம் வேறு செய்கையும் வேறு.


பொருள் :

உலகில், ஒருவருடைய மனதில் உள்ள எண்ணத்தை அறியும் வல்லமை பெற்றவர் யார் இருக்கிறார்கள் ?

ஏனெனில், மக்கள் மனம் வேறு, சொல்லும் சொல் வேறு, செய்யும் செயல் வேறாக இருக்கிறது.

அத்தகைய வஞ்சனை புரிபவருடன் தொடர்புகொள்ள அஞ்சவேண்டும்.

நாஞ்சில் த.க.ஜெய்
14-01-2011, 07:18 AM
நாலடியில் காட்டும் வாழ்வியல் நெறிகள் ..அதனை தெளிவுற தமிழில் கூறுவது அருமை தொடருங்கள் ஜானகி அவர்களே...

ஜானகி
15-01-2011, 05:34 AM
இம்மை பயக்குமால், ஈயக்குறைவின்றால்

தம்மை விளக்குமால், தாமுளராக் கேடின்றால்

எம்மை உலகத்தும் யாங்கணோம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து.

பொருள் :

கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்.

பிறர்க்குத் தருவதால் குறையாது.

நம் புகழை எங்கும் பரப்பும்.

உயிரோடிருக்கும்வரை அழியாது.

ஆதலால், எந்த உலகிலும், கல்வியைப் போல, அறியாமையை அழிக்கும் மருந்தைக் காணமுடியாது.

ஜானகி
17-01-2011, 01:35 AM
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது

உலகநூல் ஓதுவது எல்லாம் - கல கல

கூவுந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்

போஒந் துணையறிவார் இல்.

பொருள் :

மெய்ஞானநூல்களைக் கற்காமல், வெறும் உலக அறிவை மட்டும் தரும் நூல்களைக் கற்பது என்பது, வீணான சலசலப்பேயாகும்.

இவ்வுலக அறிவுநூல்களைக் கொண்டு, பிறவித் துன்பத்தைப் போக்கும் வழியை அறிபவர் எங்கும் இல்லை.

ஜானகி
18-01-2011, 12:20 AM
கல்லாமை அச்சம், கயவர் தொழில் அச்சம்

சொல்லாமை உள்ளுமோர் சோர்வு அச்சம் - எல்லாம்

இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம், மரத்தார் இம்

மானாக் குடிப் பிறந்தார்.

பொருள் :

உயர் குடியில் பிறந்தவர், தாம் கல்லாமைக்கு அஞ்சுவார்;

இழிதொழிலைச் செய்ய அஞ்சுவார்;

தகாத சொற்களை வாய் தவறிச் சொல்லிவிடுவோமோ என்று அஞ்சுவார்;

இரப்பவர்க்குக் ஒன்றும் தரமுடியாமை நேருமோ என்று அஞ்சுவார்.

இவ்வாறு அச்சம் கொள்ளுதல், உயர்குடிப் பிறந்தவரது இயல்பாகும்.

இத்தகைய மாண்புகள் அற்றவர், மரம் போலாவர்.

ஜானகி
19-01-2011, 12:25 AM
என்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்

அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றாவார்

அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்

தெற்றெனத் தெண்ணீர் படும்.

பொருள் :

நீரற்ற அகன்ற ஆறு, தோண்டிய உடனே சுரந்து தெளிந்த நீரைக் கொடுக்கும்.

அதுபோல, உயர்குடிப் பிறந்தவர்கள், தம்மிடம் யாதொரு பொருள் இல்லாதபோதும், துன்புறும் தம்மைச் சார்ந்தவர்க்கு, அவரது தளர்ச்சி நீங்க, ஊன்றுகோல் போல உதவுவார்.

ஜானகி
21-01-2011, 01:05 AM
செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன

செல்லிடத்தும் செய்யார் சிறியவர் - புல்வாய்

பருமம் பொறுப்பினும் பாய்பரி மா போல்

பொருமுரண் ஆற்றுதல் இன்று.

பொருள் :

மானானது, சேணத்தைத் தாங்கியிருந்தாலும், பாயும் குதிரை போல, தாக்கிப் போரிடமுடியாது.

அதுபோல, வறுமைக் காலத்திலும், உயர்குடிப் பிறந்தோர் செய்யும் நல்ல செயல்களை, செல்வக்காலத்திலும், கீழோர் செய்யமாட்டார்கள்.

ஜானகி
22-01-2011, 01:02 AM
கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி

இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தேயாகும்

வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்

கூறார் தம் வாயிற் சிதைந்து.

பொருள் :

கரும்பைப் பல்லால் கடித்தும், கணுக்கள் நெரிய ஆலையிலிட்டுச் சிதைத்தும், உரலிலிட்டு இடித்தும், அதன் சாற்றை எடுத்தாலும், அது இனிப்பாகவே இருக்கும்.

அதுபோல, மேன்மக்களின் மனம் புன்ணாகுமாறு, பிறர் எவ்வளவுதான் இகழ்ந்தாலும், அம்மேன்மக்கள், தம் வாயால் ஒருபோதும், தீயவார்த்தைகளைச் சொல்லமாட்டார்.

ஜானகி
23-01-2011, 01:01 AM
விரிநிற நாகம் விடருள தேனும்

உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும் ;

அருமையுடைய அரண்சேர்ந்தும் உய்யார்

பெருமையுடையார் செறின்.

பொருள் :

படம் விரிக்கும் நாகம், நிலத்தின் உள்வெடிப்பினுள்ளே இருந்தாலும், தொலைவில் எழும் இடியோசைக்கு அஞ்சும்.

அதுபோல, மேன்மை மிக்க பெரியோர் சினம் கொள்வாரானால், தவறு செய்தவர், பாதுகாப்பான இடத்திலிருந்தாலும், தப்பிப் பிழைக்கமாட்டார்.

ஜானகி
24-01-2011, 12:37 AM
நளிகடல் தண்சேர்ப்ப நாணிழல் போல

விளியும் சிறியவர் கேண்மை - விளிவின்றி

அல்கு நிழல்போல் அகன்று ஓடுமே

தொல் புகழாளர் தொடர்பு.

பொருள் :

சிறியோர் நட்பு, காலைநேரத்து நிழல் போல, வரவரக் குறையும்.

புகழ்மிக்க பெரியோர் நட்பு, அவ்வாறு குறையாமல், மாலை நேரத்து நிழல் போல, மேலும் மேலும் வளரும்.

ஜானகி
25-01-2011, 01:24 AM
கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்

செல்லாது வைகிய வைகலும் - ஒல்வ

கொடாது ஒழிந்த பகலும் உரைப்பின்

படாஅவாம் பண்புடையார் கண்.

பொருள் :

கற்கவேண்டிய நூல்களைக் கற்காமல் வீணாகக் கழிந்த நாட்களும்,

கேள்வியின் காரணமாகப் பெரியோரிடத்தில் செல்லாமல் கழிந்த நாட்களும்,

இயன்ற அளவுபொருளை இரப்பவர்களுக்குக் கொடாது கழித்த நாளும், பண்புடையவரிடத்தில் உண்டாகாது.

ஜானகி
26-01-2011, 12:50 AM
ஊரங்கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்

பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் - ஓரும்

குல மாட்சியில்லாரும் குன்றுபோல் நிற்பர்

நல்லாட்சி நல்லாரைச் சார்ந்து.

பொருள் :

ஊரில் உள்ள சாக்கடை நீரானது, கடலைச் சேர்ந்தால், அதன் தன்மை மாறுபட்டு,' தீர்த்தம்' என்று பெயர் பெரும்.

அதுபோல, பெருமையில்லாத குடியில் பிறந்தவரும், பெருமை மிக்க பெரியோரைச் சேர்ந்தால், மலைபோல உயர்ந்து நிற்பர்.

ஜானகி
27-01-2011, 01:31 AM
பாலோடு அளாய நீர் பாலாகும் அல்லது

நீராய் நிறந்தெறிந்து தோன்றாதாம் - தேரின்

சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல

பெரியார் பெருமையைச் சார்ந்து.

பொருள் :

பாலுடன் கலந்த தண்ணீர், பாலாகவே தோன்றுமேயல்லாமல், நீரின் நிறத்தை வேறுபடுத்திக் காட்டாது.

அதுபோல, ஆராயுமிடத்து, நற்குணமுடைய பெரியோரின் பெருங்குணத்தைச் சேர்ந்தால், சிறியோரின் சிறுமைக் குணமும் தோன்றாது.

ஜானகி
28-01-2011, 12:54 AM
மனத்தால் மறுவிலரேனும் தாம் சேர்ந்த

இனத்தால் இகழப் படுவர் - புனத்து

வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே

எறிபுனந் தீப்பட்டக் கால்.

பொருள் :

காடு தீப்பற்றி எரியும்போது, மணம் வீசும் சந்தன மரமும், வேங்கை மரமும் கூட வெந்து போகும்.

அதேபோல, மனதில் ஒரு குற்றம் இல்லாத நல்லவராயினும், அவர்கள் தாம் சேர்ந்த தீய இனத்தின் காரணமாக, இகழப்படுவார்.

நாஞ்சில் த.க.ஜெய்
28-01-2011, 03:36 PM
மனத்தால் மறுவிலரேனும் தாம் சேர்ந்த

இனத்தால் இகழப் படுவர் - புனத்து

வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே

எறிபுனந் தீப்பட்டக் கால்.

பொருள் :

காடு தீப்பற்றி எரியும்போது, மணம் வீசும் சந்தன மரமும், வேங்கை மரமும் கூட வெந்து போகும்.

அதேபோல, மனதில் ஒரு குற்றம் இல்லாத நல்லவராயினும், அவர்கள் தாம் சேர்ந்த தீய இனத்தின் காரணமாக, இகழப்படுவார்.

மிக அருமையான உண்மையினை கூறும் வரிகள் .தொடரட்டும் தங்கள் பணி தடங்கலின்றி.....தாங்கள் தமிழில் நாலடியார் பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்களா சகோதரியே ?

ஜானகி
28-01-2011, 03:42 PM
என்றோ, யாரோ கொடுத்த புத்தகத்தைத் திறந்து படித்து, படித்ததைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தைக் தந்தது தமிழ் மன்றம் தான் ! வேறு ஒன்றுமில்லை....

ஜானகி
29-01-2011, 12:48 AM
மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து

சிறுமைப் படாதே நீர் வாழ்மின் - அறிஞராய்

நின்றுழி நின்றே நிறம் வேறாம் காரணம்

இன்றிப் பலவும் உள.

பொருள் :

இளமை முதலான பருவங்கள் மாறும், பல வேறுபாடுகளும் உண்டாகும்.

எனவே மறுமைக்கு வித்தாகிய நல்லறங்களை மயக்கமின்றிச் செய்து அறிவுடையோராக வாழவேண்டும்.

பருவம் முதலியன மாறும்போது, மனக்குறையின்றி இருத்தல் பெருமையாகும்.

ஜானகி
30-01-2011, 12:50 AM
உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி

இறைத்துணினும் ஊராற்றும் என்பர் - கொடைக்கடனும்

சாஅயக் கண்ணும் பெரியார் போல மற்றையார்

ஆஅயக் கண்ணும் அரிது.

பொருள் :

மழை இல்லாத கோடைக் காலத்திலும், நீர் சுரக்கும் கிணறு, தன்னிடம் உள்ள தண்னீரைப் பிறர் இறைத்து உண்ணக் கொடுத்து, ஓர் ஊரை காப்பாற்றும்.

அதுபோல, பெரியோர், வறுமையில் தளர்ந்த போதும், பிறர்க்குக் கொடுப்பார்.

ஆனால், சிறியோர், செல்வம் மிக்க காலத்தும் பிறர்க்குத் தரமாட்டார்.

கீதம்
30-01-2011, 06:13 AM
எத்தனை அருமையான கருத்துகள்!

எத்தனைப் பொருத்தமான உவமைகள்!

படித்ததை எம்மோடு பகிர்ந்துகொள்ளும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

நாஞ்சில் த.க.ஜெய்
30-01-2011, 02:06 PM
இந்தவரிகள் நிகழ்வில் பொருந்தாதவை ...நிழலில் பொருந்துபவை ...இந்த காலத்துல அப்படி யாருங்க இருக்கா ..அப்படியே இருந்தாலும் பிழைக்க தெரியாதவன் என்று தான் கூறுகிறார்களே தவிர கொடுத்து சிவந்த கரம் அதனால் தன் தனத்தை எல்லாம் இழந்து விட்டான் என்று யாரும் கூறுவது இல்லை உண்மை தானே சகோதரி ....

ஜானகி
31-01-2011, 01:14 AM
கடுக்கி ஒருவன் கடுங்குறளைப் பேசி

மயக்கிவிடினும் மனப்பிரிப்பொன்றித்

துளக்கமிலாதவர் தூய மனத்தர்

விளக்கினுள் ஒண்சுடரே போன்று.

பொருள் :

ஒருவன், பிறர் பற்றிக் கடுமையாக, பொல்லாத கோள் சொற்களைச் சொல்லித், தம் அறிவை மயங்கச் செய்தாலும், அப்பிறர் பால், சிறிதும் மன வேறுபாடு இன்றி அசைவில்லாது இருப்பவரே, விளக்கில் ஒளிரும் சுடர் போலத் தூய மனத்தவராவர்.

புறங்கூறலைப் பொருட்படுத்தாமையும் பெருமையாகும்.

ஜானகி
01-02-2011, 01:03 AM
இசைந்த சிறுமை இயல்பிலாதார் கண்

பயைந்த துணையும் பரிவாம் - அசைந்த

நகையேயும் வேண்டாத நல்லறிவினார் கண்

பகையேயும் பாடு பெறும்.

பொருள் :

நற்குணம் இல்லாத, அற்பத்தனம் மிக்கவரிடம் நட்புக் கொண்டிருக்கும்வரை துன்பமே மிகும்.

விளையாட்டாகக்கூடத் தீயனவற்றைச் செய்ய விரும்பாத நல்லறிவாளர்களிடம் கொண்ட பகையும் பெருமை தரும்

அயோக்கியரிடம் கொண்ட நட்பைவிட, யோக்கியரிடம் கொள்ளும் பகை நல்லது.

ஜானகி
02-02-2011, 01:20 AM
மெல்லிய நல்லாருள் மென்மை அதுவிறந்து

ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடமை எல்லாம்

சலவருள் சாலச் சலமே நலவருள்

நன்மை வரம்பாய் விடல்.

பொருள் :

மென்மைத் தன்மையுடைய மக்களிடம், மென்மைக் குணம் உடையவராகத் திகழ்க.

பகைவரிடம், எமனும் அஞ்சத்தக்க குணம் உடையவராகத் தோன்றுக.

பொய்யர்தம் கூட்டத்தில், நம்மைக் காக்கும் பொருட்டு, மிகவும் பொய்யராகத் திகழ்க.

நல்லவர் கூட்டத்தில் நன்மையின் வரம்பாய் விளங்குக.

M.Jagadeesan
02-02-2011, 06:14 AM
நாலடிக் கருத்துக்கள் எல்லாமே அருமை!

ஜானகி
03-02-2011, 01:43 AM
ஆடு கோடாகி அதரிடை நின்றதூஉம்

காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்

வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன் தான்

தாழ்வின்றித் தன்னைச் செயின்.

பொருள் :

அசையும் கொம்பாகி வழியில் நின்ற இளஞ் செடியும், வயிரம் கொண்ட, உறுதி வாய்ந்த பெரிய மரமாக வளர்ந்தபின்ன, ஆண்யானையைக் கட்டும் தறியாகும்.

அதுபோல, ஒருவன், தன்னைத் தாழ்ந்த நிலையில் இல்லாமல், முயற்சி செய்தால், அவனுடைய வாழ்வும், பெருமைஉடையதாகும்.

ஜானகி
04-02-2011, 12:40 AM
நல்ல குலமென்றும் தீய குலமென்றும்

சொல்லளவு அல்லால் பொருளில்லை - தொல் சிறப்பின்

ஒண்பொருள் ஒன்றோ தவம் கல்வி ஆள்வினை

என்றிவற்றான் ஆகும் குலம்.

பொருள் :

நல்ல குலம், தீய குலம் என்று கூறுவதெல்லாம் வெறும் சொல்லளவேயாகும்.

பழமையான சிறப்புடைய பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்னும் இந்நான்கினால் தான் நல்ல குலம் அமையும்.

ஜானகி
05-02-2011, 12:39 AM
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை

மதலையாய் மற்றதன் வீழுன்றியாங்குக்

குதலைமை தந்தைகண் தோன்றில் தான்பெற்ற

புதல்வன் மறைப்பக் கெடும்.

பொருள் :

கறையானால் அரிக்கப்பட்ட ஆல மரத்தினை, அதன் விழுது, தூணாக நின்று தாங்குவது போல, தந்தையிடம் முதுமையால் தளர்ச்சி உண்டாகும்போது, அவன் பெற்ற் மகன், முன்வந்து பாதுகாக்க, தந்தையின் தளர்ச்சி நீங்கும்.

ஒவ்வொருவரும், தனது குடி தாழாதிருக்க முயலவேண்டும்.

ஜானகி
06-02-2011, 01:22 AM
தீங்கரும்பு ஈன்ற திரள்கால் உளையலரி

தேங்கமழ் நாற்றம் இழந்தாங்கு - ஓங்கும்

உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்

பேராண்மை இல்லாக் கடை.

பொருள் :

இனிய கரும்பு ஈன்ற, திரண்ட காம்பினையுடைய, பிடரிமயிர் போன்ற கற்றையான பூவானது, நறுமணத்தை இழந்தது போல, ஒருவனிடம், தன் பெயரை நிலைநாட்டும் பெரிய முயற்சி இல்லாதபோது, அவன் மிகச் சிறந்த குடியிலே பிறந்தால் மட்டும் என்ன பயன் உண்டாகும் ?

ஜானகி
07-02-2011, 03:53 AM
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்

கவாஅன் மகற்கண்டு தாய் மறந்தா அங்கு

அசாஅத்தன் உற்ற வருத்தம் உசாஅத்தன்

கேளிரைக் காணக் கெடும்.

பொருள் :

கருக் கொண்ட காலத்தில் உண்டாகும் மசக்கை நோயும், துன்பங்களும், குழந்தை பெறுங்காலத்தில் உண்டாகும் நோவும், ஆகிய இத்தகைய துன்பங்கள் எல்லாம், மடியில் இருக்கும் குழந்தையைக் கண்டு, தாய் மறப்பது போல, தளர்ச்சியால் நாம் உற்ற துன்பம் யாவும், நலம் விசாரிக்கும் சுற்றத்தாரைக் கண்டால் நீங்கும்.

ஜானகி
08-02-2011, 02:04 AM
அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்க்கெல்லாம்

நிழன் மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம் போல்

பல்லார் பயன் துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே

நல்லாண் மகற்குக் கடன்.

பொருள் :

வெப்பம் மிகுந்த கோடைக் காலத்தில் தன்னை அடைந்தார்க்கு எல்லாம் நிழலைத் தரும் மரம் போல, தன்னைச் சார்ந்த சுற்றத்தாரையெல்லாம், ஒரே தன்மையாய்க் காத்து, பழுத்த மரம் போலப், பலரும் பயன் பெற, தான் வருந்தி உழைத்து வாழ்வது, நல்ல ஆண்மகனுக்கு உரிய கடமையாகும்.

ஜானகி
09-02-2011, 04:42 AM
இன்னார் இனையர் எமர்பிறர் என்னும் சொல்

என்னும் இலராம் இயல்பினால் - துள்ளித்

தொலைமக்கள் துன்பம் தீர்ப்பாரேயார் மாட்டும்

தலை மக்கள் ஆகற்பாலார்.

பொருள் :

'இவர் இப்படிப்பட்டவர், எம் உறவினர், அயலார்,' என்று வேறுபாடு குறிக்கும் சொல்லைச் சொல்லும் இயல்பில்லாதவராய், வறுமைத் துன்பத்தால் வாடும் மக்களைச் சார்ந்து, அவர் தம் துயரத்தைக் களைபவரே, யாவர்க்கும் தலைவர் ஆகும் தன்மையுடையவர் ஆவார்.

ஜானகி
10-02-2011, 12:19 AM
பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்

அக்காரம் பாலோடு அமரர்கைத்து உண்டலின்

உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞ்சர் மாட்டு

எக்காலத்தானும் இனிது.

பொருள் :

பொற்கலத்திலிட்ட, வெண்மையான சோற்றைச் சர்க்கரையுடன், பாலும் கலந்து பகைவர் தர, அதைப் பெற்று உண்பதைவிட, உப்பில்லாத புல்லரிசிக் கூழை, உயிர் போன்ற சுற்றத்தாரிடத்திலே பெற்று, எக்காலத்திலும் இட்டு உண்ணல் இனிதாம்.

ஜானகி
11-02-2011, 12:30 AM
கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்

குருத்திற் கரும்பு தின்றறே - குருத்திற்கு

எதிர்செலத் தின்றன்ன தகைத்தரோ என்றும்

மதுரம் இலார் தொடர்பு.

பொருள் :

கரும்பை, நுனியிலிருந்து தின்றால், வர வர இனிமை அதிகமாகும். அது போல, கற்றோர் நட்பு, நாளுக்கு நாள் இனிமை பயக்கும்.

அதற்கு மாறாக, கரும்பை, அடியிலிருந்து நுனியை நோக்கித் தின்றால், வர வர இனிமை குறைவது போல, கல்லாதார் நட்பு, சுவை குறைந்து வெறுக்கப்படும், என்பதாகும்.

ஜானகி
12-02-2011, 12:35 AM
யானை அனையவர் நண்பொரீ நாயனையார்

கேண்மை கெழீக் கொளல் வேண்டும் - யானை

அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்

மெய்யதா வால் குழைக்கும் நாய்.

பொருள் :

யானை போன்ற பெருமையுடையவர் நட்பை விலக்கி, நாய் போன்ற இழிவுத் தன்மை உடையவராயினும் அவரது நட்பை விரும்பிக் கொள்ளல் வேண்டும்.

ஏனெனில், யானை பலநாள் பழகியிருந்தும், சமயம் வாய்க்கும்போது, பாகனையே கொல்லும்.

நாயோ, தன்னை வளர்த்தவன் சினம் கொண்டு கொண்டு எறிந்த வேலானது தன் உடலில் அழுந்திக் கிடக்க, அவனைக் கண்டதும், வாலை ஆட்டி அவனருகே செல்லும்.

கல்விநலம், குலநலம், ஆகியவற்றை மட்டுமே கருதாமல், மனநலத்தையும் அறிந்து ஒருவரிடம் நட்புக் கொள்ளவேண்டும்.

அகன்ற கல்வியும், சிறந்த குடியும் இல்லாராயினும், மனம் தூயராயின் அவருடன் நட்புக் கொள்ளலாம்.

ஜானகி
13-02-2011, 01:29 AM
கோட்டுப் பூப்போல மலர்ந்து பிற் கூம்பாது

வேட்டதே வேட்டதாம் நட்பாசி - தோட்ட

கயப் பூப்போல் முன் மலர்ந்து பிற்கூம்பு வாரை

நயப்பாரும் நட்பாரும் இல்.

பொருள் :

கொம்பிலே பூக்கும் பூக்கள், முதலில் மலர்ந்து, பின் உதிரும்வரை குவியாமலிருப்பதைப் போல, முதல் நாள் முதல், முடிவு வரையில் மகிழ்ந்து, விரும்பி இருப்பது நட்புடைமையாகும்.

அப்படியன்றி, குளத்திலே இருக்கும் பூவைப் போல, முதலில் மலர்ச்சியைக் காட்டிப் பின்பு முகம் சுருங்கும் தன்மையுடையவரை, விரும்புவாரும் இல்லை, நட்புச் செய்வாரும் இல்லை.

என்றும் முகமலர்ச்சியுடன் பழகுவதே நட்புக்கு அழகாகும்.

ஜானகி
17-02-2011, 01:52 AM
கடையாயார் நட்பிற் கமுகனையார் ஏனை

இடையாயார் தெங்கின் அனையர் - தலையாயார்

எண்ணாகும் பெண்ணைப் போன்று இட்டஞான்று இட்டதே

தொன்மையுடையார் தொடர்பு.

பொருள் :

தொன்மைத் தொடர்பு பாராட்டும், அதாவது, ஒருமுறை செய்த நட்பினைப் போற்றும் , தன்மையுடைய, தலையானவர், விதையிட்ட நாளில் வளர்த்த தண்ணீரன்றிப் பிறகு, ஒரு பராமரிப்பும் செய்யாமலே உதவும் மதிப்பு மிக்க, பனைமரம் போலப் பயன்படுவர்.

கீதம்
17-02-2011, 03:52 AM
அருமையானக் கருத்துகளைச் சொல்லும் நாலடியாரைப் பொருளோடு புகட்டும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள். தொடரட்டும் சேவை.

ஜானகி
18-02-2011, 06:03 AM
தெளிவிலார் நட்பின் பகை நன்று சாதல்

விளியா அருநோயின் நன்றால் - அளிய

இகழ்தலின் கோறல் இனிதே மற்றில்லா

புகழ்தலின் வைதலே நன்று.

பொருள் :

அறிவு தெளிவில்லாதவர் நட்பை விட, அவரது பகை நல்லது.

மருந்தினால் தீராத நோயை விட, சாதல் நல்லது.

ஒருவரது மனம் வருந்தும்படி இகழ்தலைவிட, அவரைக் கொல்வது மேல் ;

ஒருவரிடம் இல்லாத சிறப்புக்களைக் கூறிப் புகழ்தலை விட, அவரைப் பழிதல் மேல்.

அறிவிலார் நட்பைவிட, பகை நல்லது.

ஜானகி
19-02-2011, 01:21 AM
நல்லார் எனத் தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லாரெனினும் அடக்கிக் கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு

புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

பொருள் :

நெல்லுக்கு உமியாகிய குற்றம் உண்டு; தண்ணீருக்கு நுரையாகிய குற்றம் உண்டு; பூவிற்கும் புறவிதழாகிய குற்றம் உண்டு.

ஆதலால், இவர் ' நல்லவர் ' என்று மிகவும் விரும்பி, நண்பராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர், பின் கெட்ட குணமுடையவராகத் தோன்றினாலும், அவர்தம் குற்றங்களைப் பிறர் அறியாமல் மறைத்து, நண்பராகவே மதிக்கவேண்டும்.

dhilipramki
19-02-2011, 04:35 AM
அடடா பிரமாதம் !!! :lachen001:

ஜானகி
20-02-2011, 01:41 AM
இன்னா செயினும் விடுதற்கு அரியாரைத்

துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னரும் சீர்

விண்குத்து நீள்வரை வெற்ப ! களைபவோ

கண்குத்திற்று என்று தம் கை.

பொருள் :

கண்ணைக் குத்திவிட்டது என்பதற்காக, யாராவது தன் கைகளிலுள்ள விரல்களை வெட்டி எறிவார்களா ?

அதுபோல, துன்பங்களைச் செய்தாலும், அரிய நண்பர்களை விலக்கிவிடுதல் தகுதியாகுமா ? ஆகாது.

ஜானகி
21-02-2011, 01:15 AM
நுண்ணுணர்வினரோடு கூடி நுகர்வுடைமை

விண்ணுலகேயொக்கும் விழைவிற்றால் - நுண்ணூல்

உணர்விலராகிய ஊதியமில்லார்ப்

புணர்தல் நிரயத்துள் ஒன்று.

பொருள்:

நுட்பமான அறிவினை உடையவர்களுடன் நட்பு செய்து, அதன் பயனை அனுபவித்தல், வின்ணுலக இன்பத்தினைப் போல, மேன்மையுடையதாகும்.

நூலறிவு அற்ற பயனில்லாதவருடன் நட்பு கொல்ளுதல், நரகங்கள் ஒன்றினுள் சேர்ந்திருத்தல் போலத் துன்பம் தருவதாகும்.

ஜானகி
22-02-2011, 04:41 AM
பெருகுவது போலத் தோன்றி வைத்தீ போல்

ஒருபொழுதும் சொல்லாதே நந்தும் - அருகெல்லாம்

சந்தன நீள்சோலைச் சாரல் மலை நாட !

பந்தமிலாளர் தொடர்பு.

பொருள் :

அன்பு இல்லாதவருடன் கொண்ட நட்பு, வளர்வது போலத் தோன்றி, வைக்கோலில் பற்றிய தீயைப் போல ஒரு கணப் பொழுதும் நில்லாது கெடும்.

Nivas.T
22-02-2011, 05:39 AM
மிகவும் அருமை

உங்களது பணி மிகவும் பயனுள்ளது

மிக்க நன்றி ஜானகி அவர்களே

ஜானகி
23-02-2011, 03:14 AM
செய்யாத செய்தும் நாம் என்றலும், செய்வதனைச்

செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும் - மெய்யாக

இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே

துன்புறூஉம் பெற்றி தரும்.

பொருள் :

செய்யமுடியாததைச் செய்வோம் என்பது வெற்று ஆரவார மொழியாகும்.

செய்யமுடிந்ததைச் செய்யாது, காலம் தாழ்த்துதல், நம்பிகை மோசடியாகும்.

எனவே, இத்தகையோருடன் நட்பு கொள்ளக்கூடாது.

ஜானகி
24-02-2011, 05:18 AM
ஒரு நீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்

விரிநீர்க் குவளையை ஆம்பல் ஒக்கல்லா

பெருநீரார் கேண்மை கொளினும் நீர் அல்லார்

கருமங்கள் வேறுபடும்.

பொருள் :

ஒரே குளத்தில் தோன்றி ஒன்றாகவே நீண்டு வளர்ந்தபோதிலும், விரிந்து மணம் வீசும் தன்மையுள்ள குவளை மலர்களுக்கு அல்லி மலர்கள் ஈடாகமாட்டாது..

அதுபோல, சிறந்த குணங்கள் பொருந்தியவருடைய நட்பைப் பெற்றாலும், நற்குணங்கள் இல்லாதார் செயல்கள் வேறுபட்டிருக்கும்.

நல்லோருடன் பழகினாலும், தமது கெட்ட குணத்தை விடாதவருடன், நட்பு கொள்ளக்கூடாது.

ஜானகி
25-02-2011, 12:55 AM
ஆன்படு நெய்பெய் கலனுள் அது களைந்து

வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு

நல்வரை நாட ! நயமுணர்வார் நண்பொரீஇப்

புல்லறிவினாரொடு நட்பு.

பொருள் :

நன்மையை அறிவாருடன் கூடிய நட்பை நீக்கிப் புல்லறிவினருடன் நட்பு கொள்ளுதலானது,நல்ல பசுவின் நெய் உற்றிவைக்கும் பாத்திரத்தில், அந்த நெய்யை நீகி, வேப்பெண்ணையை ஊற்றி வைத்தல் போலாகும்.

ஜானகி
26-02-2011, 01:37 AM
நளிகடல் தண்சேர்ப்ப ! நல்கூர்ந்த மக்கட்கு

அணிகலம் ஆவது அடக்கம் - பணிவில் சீர்

மாத்திரையின்றி நடக்குமேல் வாழுமூர்

கோத்திரம் கூறப் படும்.

பொருள் :

வறுமையுற்ற மக்களுக்கு அணிகலனாவது அடக்கமுடமையாகும்.

அடக்கமின்றி அளவு கடந்து நடப்பராயின், ஊராரால், அவர்களது குலமும் இழிந்துரைக்கப்படும்.

வறுமையிலும் அடங்கியிருத்தல் அறிவுடமையாகும்.

Hega
26-02-2011, 08:39 PM
நாலடி காட்டும் பாதை தொடருக்காக நன்றி அக்கா

ஜானகி
27-02-2011, 01:16 AM
வேம்பின் இலையுள் கனியினும், வாழைதன்

தீஞ்சுவை திரியாதாம் ஆங்கே

இனந்தீதெனினும் இயல்புடையார் கேண்மை

மனந்தீதாம் பக்கம் அரிது.

பொருள் :

வேம்பின் இலைகளிடையே வாழை பழுத்தாலும், அதன் இனிய சுவை சிறிதும் வேறுபடாது.

அதுபோல, பண்புடையார் சேர்ந்த இனம் தீதாயினும், அதனால் அவர்கள் மனம் தீயதாகும் தன்மை இல்லை.

மனத் திண்மையுடையவர் தீயோர் சேர்க்கையால் மனம் மாறார்.

ஜானகி
27-02-2011, 01:20 AM
நான் ரசித்தது பிறக்கும் உபயோகமாவது கண்டு மகிழ்ச்சி.

ஜானகி
27-02-2011, 01:22 AM
பொழுது போகாமல் வீணாக நான் இடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறேனோ என்ற என் சந்தேகம் தீர, அவ்வப்போது கிடைக்கும் பின்னூட்டங்களுக்கு நன்றி.

கீதம்
27-02-2011, 04:06 AM
பொழுது போகாமல் வீணாக நான் இடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறேனோ என்ற என் சந்தேகம் தீர, அவ்வப்போது கிடைக்கும் பின்னூட்டங்களுக்கு நன்றி.

ஆம், எங்கள் மனதின் வெற்றிடத்தை நிறைத்துக்கொண்டிருக்கிறீர்கள். தொடருங்கள். பாராட்டுகள் ஜானகி அவர்களே.

ஜானகி
28-02-2011, 08:42 AM
கடல் சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலை சார்ந்தும்

உப்பு ஈண்டு உவரி பிறத்தலால் தத்தம்

இனத்தனையர் அல்லர் எறிகடல் தண் சேர்ப்ப !

மனத்தனையர் மக்கள் என்பார்.

பொருள் :

கடல் அருகிலும் இனிய நீர் உண்டாகும்; மலை அருகிலும் உப்பு நீர் சுரக்கும்.

ஆதலால் மக்கள் தாம் சார்ந்த இனத்தை ஒத்தவரல்லர்.

தத்தம் மன இயல்பை ஒத்தவராவர்.

மாசற்ற தெளிந்த அறிவுடையார் எந்தச் சூழலிலும் மனம் திரியார்.

ஜானகி
01-03-2011, 07:57 AM
நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை

நிலை கலக்கிக் கீழிடுவானும் நிலையினும்

மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும் தன்னைத்

தலையாகச் செய்வானும் தான்.

பொருள் :

நல்ல நிலையில் தன்னை நிறுத்திக் கொள்பவனும், அந்த நிலையைக் கெடுத்துத் தன்னை தாழ்ந்த நிலையில் சேர்க்கின்றவனும், இருக்கும் நிலையைவிட மிக மேலான நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்பவனும், தன்னைத் தலைமையுடையவனாகச் செய்து கொள்பவனும் தானே ஆவான்.

ஒருவனது உயர்வும் தாழ்வும், அவனது அறிவினாலேயே உண்டாகும்.

M.Jagadeesan
01-03-2011, 08:35 AM
ஒருவனுடைய உயர்வுக்கும், தாழ்வுக்கும் அவனுடைய செயல்களே
காரணமாக அமைகின்றன.இந்நிலையில் எல்லாவற்றிற்கும் கடவுளே
காரணம் என்பது அறியாமை என்ற கருத்தை இச்செய்யுள் உணர்த்து
கிறது.

ஜானகி
02-03-2011, 01:51 AM
கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத்

தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒரு நிலையே

முட்டின்றி மூன்றும் முடியுமேல் அதென்ப

பட்டினம் பெற்ற கலம்.

பொருள் :

ஒரு கப்பல், பல நாடுகளுக்கும் சென்று, அலைந்து, வியாபாரத்தை முடித்துத் தன் நிலையில் சேர்வது போலே, ஒருவன், பல பிறவிகள் எடுத்து, உழன்று, கடைசிப் பிறவியில், அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் பெற்று, முக்தி அடைதலால், அப்பிறவி பயனுள்ள பிறவியாகும்.

ஜானகி
03-03-2011, 09:44 AM
பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்

வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று

கோலாற் கடாஅய்க் குறினும் புகல் ஒல்லா

நோலா உடம்பிற்கு அறிவு.

பொருள் :

பல நாட்கள் பாலால் கரியைக் கழுவி உலர்த்தினாலும், கரியானது வெண்மையாகாது,

அதுபோல, என்னதான் கோலால் அடித்துக் கூறினாலும், புண்ணியம் இல்லாதவனுக்கு அறிவு வராது.

' தவமும் தவமுடையோர் ' போல, அறிவும் புண்னியம் இருந்தால் தான் பெறமுடியுமாம்.

ஜானகி
04-03-2011, 10:37 AM
பொழிந்தினிது நாரினும் பூமிசைதல் செல்லாது

இழிந்தவை காமுறூஉம் ஈபோல் -இழிந்தவை

தாங்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த்

தேன் கலந்த தேற்றச் சொல் தேர்வு.

பொருள் :

நறுமணம் வீசும் பூவிலுள்ள தேனை ,ஈயானது நாடாமல், இழிவான பொருள்களையே நாடிச் செல்லும்.

அது போல, அறிவில்லாதவர், எப்போதும் உண்மையான உரைகளை நாடாமல், இழிந்த பொருட்களையே நாடுவர்.

ஜானகி
05-03-2011, 04:57 AM
அள்ளிக் கொள் வன்ன குறுமுகிழ வாயினும்

கள்ளி மேற் கை நீட்டார் சூடும் பூ அன்மையால்

செல்வம் பெரிதுடையராயினும் கீழ்களை

நள்ளார் அறிவுடையார்.

பொருள் :

அள்ளிக் கொள்வது போன்ற சிறிய அரும்புகளை உடையவைகளானாலும், கள்ளி மரத்தின் மலர்களை யாரும் சீண்டமாட்டார்கள்.

அதுபோல, மிகப் பெரும் செல்வம் உடையவரானாலும், அவரது செல்வம், பயன்படாமையால், கீழ் மக்களை, அறிவுடையோர், விரும்பிச் சேரமாட்டார்கள்.

ஜானகி
06-03-2011, 04:37 AM
நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்

கல்லர்க்கொன்று ஆகிய காரணம் - தொல்லை

வினைப் பயன் அல்லது வேல்நெடுங்கண்ணாய் !

நினைப்ப வருவதொன்றில்.

பொருள் :

நல்ல அறிவும், நல்ல குணமும் உடையவர் ஏழைகளாக இருப்பதும்;

குணம் அற்ற கீழோர் செல்வராக இருப்பதும், பழைய வினைப் பயன் தானேயன்றி, வேறு காரணம் இல்லை.

ஒழுக்கமற்றவரிடத்து இருக்கும் செல்வத்தால் ஒரு பயனுமில்லை.

ஜானகி
07-03-2011, 01:49 AM
பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள் வாட

மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்றுகுக்கும்

வெண்மையுடையார் விழுச் செல்வம் எய்தியக்கால்

வன்மையும் அன்ன தகைத்து.

பொருள் :

பொன்போன்ற நிறமுடைய செந்நெற் பயிரானது, தன் கதிர்களுடன் வாடிக் கொண்டிருக்க, மின்னல்லுடைய மேகம், அங்கே பெய்யாமல், கடலில் பெய்யும்.

அதுபோல, அறிவற்றவர் தாம் பெற்ற செல்வத்தால் செய்யும் உதவி நல்வழியில் அமையாது.

ஜானகி
08-03-2011, 02:25 AM
ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாது

ஓதி யனையார் உணர்வுடையார் - தூய்தாக

நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார் செல்வரும்

நல்கூர்ந்தார் ஈயாரெனின்.

பொருள் :

உலக நடையினை அறியும் அறிவு இல்லாதவர்கள், கற்றிருந்தும், கல்லாதவரே.

ஆனால், உலக நடையினை அறியும் அறிவுடையவர் கல்லாதவராயினும், கற்றவரேயாவார்.

மனம் தூயராய் இருந்து, பிறரிடம் சென்று ஒன்றும் இரவாதவராக இருப்பவர், செல்வரேயாவர்.

வறியோர்க்கு ஒன்று கொடுத்து உதவாதவர், செல்வரேயாயினும், வறியவரேயாவார்

ஜானகி
09-03-2011, 04:25 AM
எத்துணையானும் இயைந்த அளவினால்

சிற்றறம் செய்தார் தலைப்படுவர் - மற்றைப்

பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்

அழிந்தார் பழிகடலத்துள்.

பொருள் :

தம்மால் முடிந்த அளவு, சிறிய அறமேனும் செய்தவர், மேன்மை அடைவர்.

மிகுந்த செல்வம் பெற்றிருந்தபோதும், அறம் செய்யாதவர், பிறர் பழியாகிய துன்பக் கடலில் மூழ்கி அழிவர்.

ஜானகி
11-03-2011, 09:04 AM
புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்

உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்

போற்றும் புலவரும் வேறே பொருள் தெரிந்து

தேற்றும் புலவரும் வேறு.

பொருள் :

மிகுதியான புத்தகங்களைச் சேர்த்து, வீடெல்லாம் நிரைத்து வைக்கும் புலவர்கள் ஒரு விதம்.

புத்தகங்களைப் படித்து, பொருள் தெரிந்து, மற்றவர்க்கும் தெரிவிக்கின்ற புலவர்கள் வேறு விதம்.

பின்னவரே உயர்ந்தவர் ஆவர்.

ஜானகி
12-03-2011, 01:04 AM
இற்பிறப்பில்லார் எனைத்து நூல் கற்பினும்

சொற் பிறரைக் காக்கும் கருவியரோ ?- இற்பிறந்த

நல்லறிவாளர் நவின்ற நூல் தேற்றாதார்

புல்லறிவு தாம் அறிவதில்.

பொருள் :

உயர் குடிப் பிறப்பு இல்லாதவர்கள், எவ்வளவு தான் கற்றிருந்தாலும், மற்றவரது குற்றங்களைப் பிறர் அறியாதவாறு காக்கும் அடக்கம் இல்லாதவராவார்.

நற்குடிப் பிறந்தோர், மற்றவரது புல்லறிவினைத் தாம் அறிந்திருந்தாலும், காட்டிக் கொடுக்கமாட்டார்.

பிறர் குற்றம் கண்டும் இகழாது இருப்பவரே அவைக்கு உரியவர்.

ஜானகி
13-03-2011, 05:17 AM
இமைக்கும் அளவில் தம் இன்னுயிர் போம் மார்க்கம்

எனைத்தானும் தாம் கண்டிருந்தும் - தினைத்துணையும்

நன்றி புரிகல்லா நாணின் மட மாக்கள்

பொன்றிலென், பொன்றாக்கால் என் ?

பொருள் :

கண் இமைக்கும் நேரத்தில் உயிர் போகும் தன்மையை பார்த்திருந்தாலும், தினை அளவேனும், அறநெறி கேட்பதும், அற வழியில் செல்வதும் ஆகிய நற்செயல்களை மேற்கொள்ளாத நாணமும், அறிவும் அற்ற மக்கள், உயிருடன் இருந்தென்ன, போனாலென்ன ?

ஜானகி
14-03-2011, 02:18 AM
உள நாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால்

பலர் மன்னும் தூற்றும் பழியால் - பலருள்ளும்

கண்டாரோடு எல்லாம் நகா அது எவனொருவன்

தண்டித் தணிப்பகை கோள்.

பொருள் :

வாழப் போகும் சில நாட்களில், உயிருக்கு அரணாகத் தகும் நல்லறச் செயல்களைச் செய்யாமல், பிறரைத் தூற்றும் பழிச் சொற்களைப் பேசுகிறோம்.

எல்லோருடனும் இனிமையாகக் கலந்து பேசி, மகிழாமல், தனித்திருந்து, பலருடனும் பகை கொள்வதால் என்ன பயன்....கேடுதான் பயன்.

ஜானகி
15-03-2011, 03:50 AM
தாமேயும் இன்புறார் தக்கார்க்கு நன்றாற்றார்

ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் - தாமயங்கி

ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ் நாளைப்

போக்குவார் புல்லறிவினார்.

பொருள் :

புல்லறிவினர், செல்வம் உடையவராயினும், அதைக் கொண்டு, தாமும் இன்பமடைய மாட்டார்கள் ;பிறர்க்கும் கொடுத்துதவ மாட்டார்கள்.

உயிர்க்குக் காவலாகும் அறநெறியைச் சேராது, செய்வதறியாமல், செல்வத்திலேயே மயங்கிக் கிடந்து, வாழ் நாளை வீணாகக் கழிப்பர்.

ஜானகி
16-03-2011, 04:48 AM
வெறுமை இடத்தும் விழுப் பிணிப் போழ்தும்

மறுமை மனத்தாரேயாகி - மறுமையை

ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்

சிந்தியார் சிற்றறிவினார்.

பொருள் :

புல்லறிவாளர்கள், வறுமையாக இருக்கும் போதும், கடும் நோய் உற்ற போதும், மறுமைக்குரிய அற நினைவினராய் இருப்பர்.

ஆனால், அறம் செய்வதற்குரிய ஆற்றல், பொருள், நிறைந்த காலத்திலும், அறத்தைப் பற்றி கடுகளவேனும் சிந்திக்க மாட்டார்கள்.

ஜானகி
17-03-2011, 02:19 AM
பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்

ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்

இற்செய் குறைவினை நீக்கி அறவினை

மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.

பொருள் :

குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடித்தபின், அறச் செயல்களைப் பற்றி யோசிப்போம் என்றிருப்பவர் கருத்தானது, பெரிய கடலில் நீராடச் சென்றவர், கடலின் ஓசை முழுதும் அடங்கியபின் நீராடுவோம் என்று கருதியது போலாகும்.

குடும்பப் பணிகள் முடிவில்லாதவை, அதற்குப் பின் அறம் செய்ய எண்ணுவது பேதமை.

ஜானகி
18-03-2011, 04:26 AM
குலம் தவம் கல்வி குடிமை மூப்பைந்தும்

விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலம் சான்ற

மையறு தொல்சீர் உலகம் அறியாமை

நெய்யிலாப் பாற்சொற்றின் நேர்.

பொருள் :

சர்க்கரை முதலியனவற்றைப் பெற்றாலும், நெய் கலந்தது போன்ற இனிமை பால் சோற்றுக்கு இல்லை.

அதுபோல, கல்வி முதலான சிறப்புக்கள் இருந்தாலும், உலகத்தோடு ஒட்டி வாழாதார் வாழ்க்கை, சிறப்பு இல்லாததாகும்; பேதமை உடைத்ததாகும்.

ஜானகி
21-03-2011, 01:57 AM
கல்நனி நல்ல கடையாய மாக்களின்

சொல்நனி தாமுணராவாயினும் - இன்னினியே

நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்று

உற்றவர்க்குத் தாம் உதவலான்.

பொருள் :

பிறர் சொல்லும் சொல்லை அறிந்துகொள்ளாதவையாயினும், கற்கள் மிக நல்லனவாகும் - தம்மை அண்டியவர்க்கு அப்போதே நிற்கவும், உட்காரவும், நடக்கவும், படுக்கவும் உதவுவதில்.

எனவே, யாருக்கும் ஒரு உதவியும் செய்யாத பேதைகளைவிட நல்லனவாகும்

ஜானகி
22-03-2011, 09:47 AM
கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் ; தானுரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத

பித்தனென் றெள்ளப் படும்.

பொருள் :

ஒருவனது கல்வியையும், மேண்மையையும், நற்குடிப் பிறப்பையும், அயலார் பாராட்டிக் கூறினால், அது பெருமையாகும்.

அவ்வாறன்றித் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வாராயின், பித்தன் என்றே இகழப் படுவர்.

தற்புகழ்ச்சி பேதமை உடையது.

ஜானகி
24-03-2011, 02:06 AM
மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்

செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்

எய்திய செல்வந்த ராயினும் கீழ்களைச்

செய்தொழிலாற் காணப் படும்.

பொருள் :

மாசற்ற பொன்னின் மீது, நல்ல நவமணிகள் பதித்துச் செய்யப்பட்டதானாலும், செருப்பானது, காலில் அணிவதற்கே பயன்படும்.

அதேபோல், கீழ்மக்கள் எவ்வளவு செல்வம் பெற்றாலும், கீழ் நிலையில் வைக்கத் தக்கவரேயன்றி, மேல் நிலையில் வைக்கத்தகார்.

ஜானகி
30-03-2011, 04:43 AM
கடுக்கெனச் சொல்வற்றாம் கண்ணோட்டம் இன்றாம்

இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும்- அடுத்தடுத்து

வேகம் உடைத்தாம் விரன்மலை நன்னாட

ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.

பொருள் :

கீழ் மகன் எனப்படுபவன், கடுமையான சொற்களைச் சொல்லவல்லவன்; யாரிடமும் இரக்கமில்லாதவன்; பிறர் துன்பம் கண்டு மகிழ்பவன்; அடிக்கடி சினம் கொள்பவன்; எங்கும் திரிபவன்; யாரையும் பழிப்பவன் ஆவான்.

ஜானகி
02-04-2011, 04:24 AM
செழும் பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்

வழும்பறுக்க கில்லாவாம் தேரை- வழும்பில் சீர்

நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்

தேர்கிற்கும் பற்றி அரிது.

பொருள் :

நீர் நிறைந்த குளத்திலே வாழ்ந்தாலும், தவளைகள்,தம் மேலுள்ள வழு வழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ளமாட்டா.

அதுபோல, சிறந்த நூல்களைக் கற்றாலும், நுண்ணறிவு இல்லாதவர்கள்,அந்நூல்களின் பொருள் உணரமாட்டார்கள்.

ஜானகி
06-04-2011, 11:00 AM
" மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த

விளைநலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்

செய்த நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை

வைததை உள்ளிவிடும். "

பொருள் :

தான் வாழும் மலைவளத்தை நினந்து, குறவன் மகிழ்வான்.

தனக்குப் பயன் தந்த விளைநிலத்தை நினைந்து, உழவன் உள்ளம் உவப்பான்.

தமக்குப் பிறர் செய்த நன்றியை நினைத்து, சான்றோர் இன்புறுவார்.

ஆனால், கயவனோ, தன்னை ஒருவன் இகழ்ந்ததையே நினைத்துப் பகை கொள்வான்.

ஜானகி
20-04-2011, 02:05 AM
ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த

பிழை நூறும் சான்றோர் பொறுப்பர் - கயவர்க்கு

எழுநூறு நன்றி செய்து ஒன்று தீது ஆயின்

எழ்நூறும் தீதாய் விடும்.

பொருள் ;

தமக்கு ஒரு நன்மை செய்தவர், தொடர்ந்து, நூறு குற்றங்கள் செய்தாலும், சான்றோர் பொறுத்துக்கொள்வர்.

ஆனால், கயவர்க்கு எழுநூறு நன்மைகளைச் செய்து, தவறுதலாய், ஒன்று தீமையாய் நேர்ந்துவிட்டால், முன் செய்த எழுநூறு நன்மைகளும் தீமையாகவே ஆகிவிடும்.

தீமையை மறப்பது சான்றோர் இயல்பு ; நன்மையை மறப்பது கயவர் இயல்பு.

ஜான்
21-04-2011, 05:34 PM
ஒருவனுடைய உயர்வுக்கும், தாழ்வுக்கும் அவனுடைய செயல்களே
காரணமாக அமைகின்றன.இந்நிலையில் எல்லாவற்றிற்கும் கடவுளே
காரணம் என்பது அறியாமை என்ற கருத்தை இச்செய்யுள் உணர்த்து
கிறது.

சமணம் கடவுளைப் பற்றி பேசுவது இல்லை அல்லவா?

இளசு
21-04-2011, 09:19 PM
அன்புள்ள ஜானகி அவர்களுக்கு


உங்களின் இவ்வரும்பணிக்கு முதலில் என் வாழ்த்து!

இயன்றவரை என் ஊக்கம் உடன்வரும்..




நின்றன நின்றன நில்லா என உணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க

சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்

வந்தது வந்தது கூற்று.

நாலடியார்

நிலையானவை என்று நாம் நினத்திருக்கும் பொருள்கள், காலப் போக்கில், நிலைத்திராமல் அழிந்துவிடும், என்பதனை உணர்ந்து, நம்மால் செய்யக்கூடிய அறங்களை, தர்மங்களை, செய்யநினைக்கும்போதே, விரைவில் செய்யவேண்டும்.

ஏனென்றால், காலம் விரைந்து போய்க்கொண்டேயிருக்கிறது, காலன் வந்துகொண்டேயிருக்கிறான் !


நாளை நல்லவை செய்வோம் என எண்ணிக்கொள்வது
என் ஓய்வூதியத்தில் உனக்கும் கொஞ்சம் தருவேன் என்பதைப் போன்றது..


பின்னர் பத்து செய்வேன் என எண்ணி இன்று வாளாவிருக்காதீர்..
இன்று செய்யும் ஒன்றிரண்டே கண்கண்ட சாத்தியம்...
நாளை கானல் நீர்... கைவராமலே போகலாம்.

ஜானகி
23-04-2011, 01:58 AM
திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்

உருத்த மனத்தோடு உயர்வுள்ளின் அல்லால்

அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்று

எருத்திரைஞ்சி நில்லாதாம் மேல்.

பொருள் :

செல்வம் தன்னைவிட்டு நீங்கினாலும், ஊழ்வினை சினந்து வருத்தினாலும், மேலோர்கள் ஊக்கம் குன்றாமல், உயர் நெறியையே கடைப்பிடிப்பார்கள்.

அதன்றி, அற்பர் முன் சென்று நாணித் தலை குனிந்து நிற்க மாட்டார்கள்.

இளசு
23-04-2011, 03:31 AM
மற்றறிவாம் நல்வினை யாம் இளையம் என்னாது

கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்

முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு

நாலடியார்

இப்போது இளையவராக இருக்கிறோம், பின்னால் அறம் செய்யலாம் என்று வீணே காலம் கழிக்காமல், இப்போதே, பொருள் இருக்கும் போதே, மறக்காமல் அறம் செய்ய வேண்டும்.

கடுங்காற்றால், சில சமயம், பழங்கள் இருக்க, நல்ல காய்கள் விழுந்துவிடும் அல்லவா ?

இறப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம், அதனால் காலம் கடத்தக் கூடாது.

இன்றே அறம் செய்ய வேண்டும்.


கனியிருப்பக் காய் கவரலாம்..
காற்றும் காலமும்!

நன்றே செய்..
இன்றே செய்!



------------------------------------

ஜானகி அவர்களின் பணிக்கு என் ஊக்கமும் பாராட்டும்!