PDA

View Full Version : மாயமாய் மறையும் மந்திர மனிதன் (உண்மைச்சம்பவம்)simariba
21-12-2010, 12:56 AM
இடம் : தென்னக ரயில் நிலையம். எழும்பூர், சென்னை.
நேரம் : காலை மணி 9. 30
வருடம்: 1988 - 1992 குள் என்றோ ஒரு மே மாத நாள். வருடமொரு முறை மயிலாப்பூரில் இருக்கும் தாத்தா பாட்டி வீட்டுக்கு சென்றதால் சரியாக நினைவில்லை.

"சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் புறப்படும்." ஒலிப்பெருக்கி அறிவிப்பைத் தொடர்ந்து எங்களுக்குள் பதற்றம்.
தண்ணீர் எடுக்க சென்ற அப்பா இன்னும் வரவில்லையே! ட்ரெய்ன் கிளம்பிட்டா?

"இன்னும் நேரமிருக்கு. அப்பா வந்திடுவாங்க,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அங்க இருக்கு பாருங்க ஒரு புத்தக கடை, ஹிக்கின் பாதம்ஸ் அங்க புத்திசாலிங்களுக்கு மட்டும் தான் புத்தகம் விற்பாங்க தெரியுமா?" என்று எங்கள் அம்மா ஒரு வித்தியாசமான வாக்கியத்தை சொல்ல, எங்கள் (நானும், என் தம்பியும்) இருவரின் முகத்திலும் ஆச்சர்யக்குறி.
சரி செக் பண்ணிடுவோம் என்று எண்ணியவாறே, எங்களுக்கு தருவாங்களா? என்றோம்.
"ம் ம் கேட்டுப்பாருங்க", இது அம்மா.
"ஆனா காசு?" இது என் தம்பி.
அம்மா இருபது ரூபாயை கையில் கொடுத்து "போய் வாங்கிக்கங்க." என்று சொல்ல வண்டியிலிருந்து இறங்கி தட தடவென ஓடினோம்.
தான் புத்திசாலியா இல்லையா என தெரிந்து கொள்ள யாருக்குத் தான் ஆர்வம் இருக்காது?
கடை வாசலுக்கு சென்று, "எங்களுக்கு புத்தகம் வேணும்"
என்ன புத்தகம்?
என் தம்பி "ஸ்போர்ட்ஸ்டார்"
" 15 ரூபாய், வேற என்ன வேணும்?"
அப்போது தான் கண்ணில் பட்டது மாயமாய் மறையும் மந்திர மனிதன் என்னும் சிறுவர் கதை புத்தகம்.
"அது வேணும்"
"சரி 3.50, இந்தாங்க மிச்ச சில்லரை". வாங்கிக்கொண்டு புத்திசாலி என நிரூபிக்கப்பட்ட சந்தோஷத்துடன் ஓடி வந்து ரயிலில் ஏறினோம். வண்டி அப்போதும் நின்று கொண்டு தானிருந்தது. ஹி ஹி....
சற்று நேரத்தில் அப்பாவும் வந்து விட வண்டி மெல்ல நகர ஆரம்பிக்க ஜன்னல் ஓர சீட்டுக்கான எங்கள் சண்டை முற்றி பாதி தூரம் வரை அவன் மீதி தூரம் வரை நான் என்று முடிவாகி ஓய்ந்தது, "அப்பா நாங்க இருவரும் புத்திசாலிங்க! தெரியுமா!"
அப்பா, "அப்படியா? யார் சொன்னா?"
"எங்களுக்கு புக் கொடுத்தாங்க"
"யார்?"
"ஹிக்கின் பாதம்ஸ் கடைல"
"அதனால?"
"அங்க புத்திசாலிங்களுக்கு மட்டும் தான் புத்தகம் தருவாங்களாம்!"
"அப்படின்னா அவன் எப்படி கடை நடத்துறது? பாருங்க யார் கேட்டாலும் கொடுக்குறான்"
"அம்மா தான் சொல்லுச்சு"
எங்களையறியாமலே அம்மாவை மாட்டிவிட, "அம்மா சொன்னாளா? அவ புத்தகம் படிக்க ஏதாச்சும் சொல்லி வாங்கவைப்பா"
"அதுக்கு தான் ஸ்போர்ட்ஸ்டார் வாங்கிட்டு வந்திருக்கான் என் பையன்" என்ற அம்மாவின் கவலை அப்போது புரியவில்லை எனக்கு.
பதிலில் குழம்பி ஏமாற்றத்துடன், அப்படின்னா நாங்க புத்திசாலிங்க கிடையாதா? (அதை எப்படி தெரிஞ்சுகாம விடுறது!!??)
" நீங்க புத்திசாலிங்க தான் யார் இல்லனு சொன்னாங்க?" அப்பா.
என்ன டா இது இப்படி குழப்புறாங்களே சரி சொல்லிடாங்க ஒகே!
சரி ஸ்போர்ட்ஸ்டார் நடு பக்கத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த உலககோப்பை கிரிக்கெட் லிருந்து பிரபலங்களின் முழு அளவு படம்
மடித்து ஸ்டேப்பிள் பண்ணியிருக்கும். வேகமாக ஆலன் டேவிட் படத்தை எடுத்து பெட்டி உரையின் ஒரு பக்கத்தில் வைத்தான் தம்பி. சற்று நேரத்தில் அவரவர் சிந்தனைக்குள் அவரவர் காணாமல் போக நான் என் புத்தகத்தில் மூழ்கினேன். மாயமாய் மறையும் மந்திர மனிதனின் உலகிற்குள் மூழ்கியேவிட்டேன்....
அந்த கதையை படித்து முடிக்கும் வரை ஒரு முறை கூட புத்தகத்தை கீழே வைக்கவில்லை. சிறுவர் மலர், கோகுலம் யங்க் வோர்ள்ட் தவிர நான் படித்த முதல் நாவல் எனச் சொல்லாம்.
"நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இது எதுவோ....
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
உன் அருகே....."
இப்படித்தான் என் முதல் காதல் ஆரம்பித்தது (அட புத்தகங்களுடன் தாங்க). இன்று வரை ஒரு நொடியும் அலுக்காமல் தொடர்கிறது. சில சமயம் என் பாய்ஃப்ரெண்டு (அதாங்க ஹஸ்பண்டு) கூட பொறாமைப்படும் அளவு அந்த முதல் காதல் இன்னும் பசுமையா இருக்கு. சரி இப்போ கதைக்கு போவோம்.

ஆராய்ச்சியாளர் இருவர் பேசிக்கொள்ளுவதாக அமைந்த அந்த முதல் பத்தி இன்னும் நினைவில் உள்ளது. "காற்றை கண்ணால் பார்க்க முடிவதில்லை ஏன்னா அது ஓளியை தனக்குள்ள ஊடுருவ விடுறதால..அதே போல எல்லா திடப் பொருள்களையும் மறைய வைக்க முடியும் ங்குறது என் நம்பிக்கை. உதாரணத்துக்கு இந்த காகிதம் இருக்கு இதை ஒளி ஊடுருவது போல மாற்றி வைக்க கொஞ்சம் எண்னெய் தடவினா ஆகிடும். அது போல நான் கண்டுபிடித்த மருந்தை சாப்பிடா உயிரினம் கூட மறைந்திடும். ஓவ்வொரு செல்லயும் மறைய வைக்க தேவையான எல்லாத்தையும் அதில் சேர்த்திருக்கேன்."

ஏன் ஏன் இப்படி அவசரப்படுறிங்க? அதான், அதே தான், கடைசி பத்தி வரைக்கும் படிங்க.

முக்கால் வாசி படிச்சிருப்பேன், அப்போது கூடை நிறைய புத்தகங்களுடன் அதாங்க பழைய சஞ்சிகைகள். குமுதம், ஆனந்தவிடன், ஜூனியர் விகடன், கல்கி ன்னு ஒரு பட்டளத்தையே தூக்கிகிட்டு ஒருத்தர் வந்து எங்கள் அருகே உக்கார்ந்து இருந்தவர்களுக்கு எல்லாம் கொடுத்தார். அப்போதே என்னையும், ஸ்போர்ட்ஸ்டார்ல மூழ்கியிருந்த என் தம்பியையும் முறைத்து பார்த்தார். அப்போது புரியவேயில்லை எனக்கு அவர் முறைத்ததற்கு பொருள்.

இன்னும் கொஞ்சம் நேரம் சென்றதும் கதை முடிந்தது. தம்பிடம் போட்ட ஜன்னலோர இருக்கை ஒப்பந்தம் அடுத்த பகுதிக்கு வர நான் ஓரத்திலும் அவன் நடுவிலும் மாறி அமர பயணம் தொடர்ந்தது. ரயிலில் சாப்பாடு வாங்கி அப்பா தர எல்லோரும் சாப்பிட்டோம். வழக்கம் போல் முழு சாப்பாடு சாப்பிடாத
தற்கு என்னை திட்டி விட்டு மீதி முக்கால் சாப்பாட்டை தானம்
கொடுத்தார்கள். அவன் என் தம்பி மட்டும் எப்படியோ சாப்பாட்டிற்கு திட்டு வாங்காமல் சாப்பிட்டு முடிச்சுடுறான்.

இந்த களேபரத்தில் எல்லாம் மறந்து, வேடிக்கை பார்ப்பதில் மனம் லயித்திருக்க, அங்கு வந்த அவர் அதான் புத்தகம் கொடுத்து படிக்க சொன்ன ஆள் எல்லோர் கையிலிருந்தும் புத்தகங்களை வாங்கிக்கொண்டு ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ பெற்றுக்கொண்டு நகர்ந்தார், இல்லை மீண்டும் என் பக்கம் திரும்பி ஒரு முறை முறைத்து பாப்பா அந்த புத்தகத்தை கொடு என்று கேட்டார். நான் தயங்க, என் அப்பாவுக்கு அவர் புத்தகத்தை தர மாட்டேன் என்று சொல்வதாக புரிந்து விட, கையிலிருந்து வேகமாக பிடுங்கி கொடுத்துவிட்டார். நாம் வாங்கினாலும் கொடுத்து விட வேண்டுமோ என்ற சந்தேகத்துடன் நான் குழம்பி, கேட்டால் திட்டு கிடைக்குமோ என அமைதியாயிருந்து விட்டேன். சற்று நேரத்தில் தம்பி கையிலிருந்த ஸ்போர்ட்ஸ்டாரும்
பறி போய்விட இருவரும் விழித்தபடி இருந்தோம். உறக்கத்திலிருந்த அம்மா விழித்தவுடன் "அவன் கிட்ட இதுக ரெண்டும் மானத்த வாங்கிடுச்சுங்க" என்று அப்பாவே ஆரம்பித்தார்கள்.
எல்லா கதையும் கேட்டு விட்டு "அய்யோ இதுக ரெண்டும் புத்தகத்தை மெட்ராஸ்ல கடையில் வாங்குச்சுங்க. உங்களுக்கு நியாபகம் இல்லையா?" என்றார் அம்மா.
"அவன் பெரிய இவனாட்டம் அவனோடதை வச்சுகிட்டு தராம ஏமாத்துற மாதிரியில்ல பேசினான். ஏன் எங்கிட்ட அப்பவே சொல்லல நீங்க?" என்ற அப்பாவின் குரலில் கனிவிருந்தது.
"பயமா இருந்துச்சு ப்பா"
"சரி அவன் போய்ட்டான், போனா போகட்டும் விடுங்க"
ஏமாற்றத்திலும் ஒரு நிறைவிருந்தது அப்பாவின் அன்புக்கு பாத்திரமானோம்.
"இதுவே பழக்கம் போலிருக்கு, இப்படிதான் அத்தனை புத்தகமும் சுட்டான் போலிருக்கு, திருட்டு பயல், முறைச்சானா அவன், ராஸ்கல், என்ன நினைச்சிகிட்டான் அவன்." என்ற அம்மாவின் கோபமும் சற்று
நேரத்தில் சரியாகிவிட ரம்மியமான பிற்பகலில் வேளையில் மயிலாடுதுறை ஜங்ஷனுக்கு வந்து இறங்கினோம். அதோடு மாயமாய் மறையும் மந்திர மனிதனும் மாயமாய் மறைந்து விட்டான்.

பின் குறிப்பு:
குறிப்பு:
அந்த மாயமாய் மறையும் மந்திர மனிதன் கதை ஆங்கில ஹாலோ மேன் படத்தின் உல்டா கதை என பிற்பாடு படம் பார்த்த போது தான் தெரிந்து கொண்டேன் ஹா ஹா...
தலைப்பை பார்த்து படிக்க வந்து ஏமாந்துவிட்டதாக ஃபீல் பண்னிணா ரொம்ப ஸாரி, உண்மைச்சம்பவம் னு எழுதியிருக்கும் போதே சுதாரிச்சிருக்கனும்....இப்படி எத்தனை பேர்டா கிளம்பியிருக்கிங்க ன்னு நீங்க சொல்றது காதுல கேக்குது.....
வேலை மெனக்கெட்டு என் எழுத்தை படிக்க வந்த அன்பர்களுக்கு என் பணிவான நன்றிகள்! நல்லாயிருந்திச்சுன்னா பின்னூட்டத்தில் சொல்லிடுங்க!

விகடன்
21-12-2010, 05:36 AM
”நல்லாயிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லிடுங்க” என்று போட்டிருக்கிறீர்களே! நல்லாயில்லை என நினைத்து உங்களை திட்ட நினைப்பவர்கள் பின்னூட்டத்தில் திட்டமுடியாதபடி செய்துவிட்டீர்களே!!!

இதுதாங்க நல்லா இருக்கு :D

----

ம்ம்ம்...
அப்பாமார்கள் எல்லாருமே தங்கள் குழந்தைகளை நம்புவதே கிடையாது...
தன் பிள்ளை தவறிளைத்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருப்பதால் அவர்கள் பல தவறிழைக்கிறார்கள். இப்படியான சம்பவம் ஒன்று நடக்காவிட்டால்த்தான் ஆச்சரியம் :)

simariba
21-12-2010, 10:15 AM
நன்றி விகடன்!

மனோஜ்
21-12-2010, 12:39 PM
நீன்ட நாள் ஆகிவிட்டது நான் மன்றத்தில் வந்து கதை படித்து
வித்தியாசமான தலைப்பு என்று வந்தேன் நன்றாக இருந்தது நன்றி
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுத

பாலகன்
21-12-2010, 05:31 PM
இது ஆங்கில படக்கதையாக இருந்தாலும் நீங்க தட்டச்சியதால் மெருகேறியது.
கதை அருமை

simariba
21-12-2010, 11:02 PM
நன்றி மனோஜ்!
நன்றி மகாபிரபு!

கீதம்
21-12-2010, 11:19 PM
நாம் காசு கொடுத்து வாங்கி ஆசையாய்ப் படித்தப் புத்தகத்தை இன்னொருவன் ஏமாற்றிப் பறித்த வேதனையையும் நகைச்சுவை இழையோடப் பதிவிட்டது அழகு அபி. பாராட்டுகள்.

simariba
21-12-2010, 11:45 PM
நன்றி கீதம்!

றெனிநிமல்
22-12-2010, 08:11 AM
இதென்ன புதிய எந்திரன் கதையாக இருக்கே என்று
ஓடி வந்துப் பார்த்தால்................

ஹா ஹா ஹா.........
வாசகர்களை கவர்வதற்கு பல வழிகள்
அதிலே எழுத்தாக்கத்தின் தலைப்பும் ஒருவழி
என்று அறிந்து கொண்டோம்.

ராஜா
24-12-2010, 06:27 PM
சிமரிபா திரியை இனிமே யோசிச்சுதான் அணுகணும் போல..!
:D:D:D

simariba
25-12-2010, 12:53 AM
நன்றி றெனி நிமல்!!
நன்றி ராஜா!!

M.Jagadeesan
25-12-2010, 11:08 AM
கதையின் முடிவு எப்படி இருந்தாலும் எழுதியவிதம் நன்றாக உள்ளது.

கௌதமன்
25-12-2010, 05:24 PM
கதையை விவரிக்கின்ற இலாவகம் உங்களுக்கு இயல்பாகவே கைக்கூடியிருக்கிறது. கதை என்பது ஒரு சம்பவமாகவோ , சம்பவத்தின் பாதிப்பாகவோ அல்லது இப்படி நடந்திருந்தால் என்னும் கற்பனையாகவோ இருக்கலாம். எந்தக் கதைக்கும் ‘ இதனால் அறியப்படும் நீதி யாதெனில்...’ என்று முடிவு கூறப்படவேண்டிய அவசியம் இல்லை. முடிவை வாசகனின் கற்பனைக்கு விட்டு விடுவது படைப்பாளியின் ஒரு புத்திசாலித்தனம். பாத்திரதில் தன்னைப் பொருத்திப் பார்க்கும் வாசகனின் கற்பனை அவனையும் கதை மாந்தராக்குகிறது. அப்படிப்பட்ட பங்களிப்பினாலேயே வாசகனும் ஒரு படைப்பாளியாக மாறுகிறான். அத்தகைய ஆரோக்கிய மாற்றம் தமிழ் சமுதாயத்ததிற்கு வரவேண்டும்.

நன்றி simariba (தமிழில் எப்படி உச்சரிப்பது ? சிமரிபா என்பது சரியா?)

அமரன்
25-12-2010, 05:49 PM
அபிராமி..

சித்திரக் கதைகளில் கரைந்து விடு்விடுவது..

குடும்பத்துடன் ஜன்னல் கரைப் பயணம்..

ஆசைப்பட்டு வாங்கியதை காவு கொடுத்த சோகம்..

இப்படி கிடைத்ததும் கிடைக்காததுமாக சொல்லி உணர்வலைகளை எழுப்பி விட்டீர்கள்..

வித்தியசமான பதிப்பு..

simariba
26-12-2010, 12:32 AM
நன்றி ஜெகதீசன்!
நன்றி கௌதமன்! என் பெயர் அபிராமி.
நன்றி அமரன்!
என் எழுத்து ஆர்வத்தை தூண்டி நம்பிக்கைக்கு உரமிட்டது தமிழ்மன்றமே. படைப்புகளுக்கு உரம் பின்னூட்டங்கள். ஒவ்வொரு பின்னூட்டமும் படைபாளியின் எழுத்தை செதுக்கும் உளிகள். நன்றி உறவுகளே!!

ஜனகன்
26-12-2010, 10:47 AM
உங்கள் கதை கற்பனை எல்லாம் நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து கதைகள் படைக்க வேண்டி, வாழ்த்துகின்றேன் அபிராமி.

simariba
26-12-2010, 12:27 PM
நன்றி ஜனகன்!

govindh
29-12-2010, 10:23 AM
மாயமாய் மறையும் மந்திர மனிதன் (உண்மைச்சம்பவம்) -

அழகாக சொல்லி விட்டீர்கள்...ரசித்தேன்....
புத்தகத்தின் பெயரை, ஏமாற்றுப் பேர்வழியோடு
ஒப்பிட்டு சொன்ன விதமும் நன்றாக இருந்தது...

பாராட்டுக்கள்..

KAMAKSHE
30-12-2010, 01:45 AM
மாயமாய் மறையும் மந்திர மனிதன் (உண்மைச்சம்பவம்) -

அழகாக சொல்லி விட்டீர்கள்...ரசித்தேன்....
புத்தகத்தின் பெயரை, ஏமாற்றுப் பேர்வழியோடு
ஒப்பிட்டு சொன்ன விதமும் நன்றாக இருந்தது...

பாராட்டுக்கள்..
நல்லா இருந்தது கதை. உண்மைக் கதை என் ஆரம்பித்தாலும், கதையைப் படிக்க ஆரம்பிக்கும் போது, ஏதும் நினைவில் இருப்பதில்லை. கதை அப்படி உள்ளே இழுக்கிறது நம்மை. இயற்கையான உரையாடல். உங்களை எப்படியோ யுக்தி செய்து அந்த ரயிலில் படிக்க வச்சு, உங்களை படியோ படின்னு படிப்பாளி ஆக்கின உங்க அம்மா அவர்களுக்கு ஒரு ஷொட்டு. அந்த யுக்தியை என் பையன் கிட்டயும் ட்ரை பண்ண போறேன். மந்திர மனிதன் மாயமாய் மறைந்தாலும் உங்க கதை சொக்குபொடி போட்ட கணக்கா என்னை மயக்கிடுச்சு சிமரிபா!

meera
11-01-2011, 02:09 AM
தன் எழுத்துக்குள் மற்றவர்களை இழுத்து வருவது ஓர் கலை. அது உங்களிடம் இருக்கிறது. கதையும் அருமை தொடருங்கள் சகோதரி.

joy001
18-01-2011, 11:25 AM
தங்களின் கற்பனை திறன் மிக அருமை

simariba
29-01-2011, 01:25 AM
நன்றி கோவிந்த்!
நன்றி காமாக்ஷி!
நன்றி மீரா!
நன்றி joy001!