PDA

View Full Version : மல்லிகையும் ரோஜாவும்



M.Jagadeesan
16-12-2010, 08:24 AM
காற்று வாங்கிடவே பூங்கா ஒன்றினுக்கு
நேறறு நான் சென்றபோது அங்கிருந்த
வாசமிகு மல்லிகையும், வண்ணமிகு ரோஜாவும்
நேசந்தனை மறந்து நெடு நாள் பகைவர்போல்

சண்டையிடும் காட்சி கண்டு
சற்றே நான் அதிர்ந்து போய்
"வீண்சண்டை வேண்டாம்"எனச் சொல்லி
விலக்கிவிட.

"சண்டையிடும் உரிமை
மனிதர்களுக்கு மட்டுமல்ல
மலர்களுக்கும் உண்டு"எனச்சொல்லி
மல்லிகையும்,ரோஜாவும் மீண்டும் சண்டையிட

"என்ன காரணம்?ஏன் சண்டை?
எனக் கேட்க,
"மன்னன் ஆவதிலே, மலர்களின்
மன்னன் ஆவதிலே எங்களுக்குள் சண்டை.
நடுவராய் நீர் இருந்து
நல்ல தீர்ப்பு வழங்கிடுவீர்" எனச்சொல்லி
மல்லிகையும்,ரோஜாவும்
சொல்லத் தொடங்கின அவர்தம் வாதத்தை,

மல்லிகை சொன்னது:

ரோஜா பயலுக்கு கர்வம் அதிகம்
அவன் மனதில் மலர்களின்
ராஜா என்ற மமதை உண்டு.
மற்றவர்கள் அவனுக்கு தினமும்
கூஜா தூக்கவேண்டும் என எண்ணுகிறான்.

பார் புகழும் பண்டித ஜவஹ்ர்லால்
நேரு இவனை நெஞ்சிலே வைத்தாராம்
வேறு யார் பெற்றார் இப்பெருமையென
மார் தட்டுகிறான் மடப்பயல்!

வெட்டிப் பயலை வேரோடு சாய்த்திட
கிட்ட நெருங்கினால்
முட்களின் நடுவே முகம்புதைத்து நிற்கிறான்.
கோழை!
விட்டுப் பிடிப்போமென
விரைந்து நான் வந்திட்டேன்.

ரோஜா சொன்னது:

ஊசி மூஞ்சி மூடன் உளறுகிறான்.
நாசி விரும்பும் நறுமணம் அவனுக்கு
உண்டென்று ஊரெங்கும்
பேசித் திரிகிறான் பேடிப்பயல்!

வெண்மை நிறம் தவிர
வேறென்ன தெரியும் அவனுக்கு
கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள்
என்போல் அவன் கண்டதுண்டா?
உண்மையைச் சொன்னால் அந்த
உதவாக்கரைக்கு கோபம் எதற்கு?

சொந்தக்காலில் நிற்க வக்கில்லாமல்
பந்தலிலே படருகிறான் பரதேசி!
வந்து பார்க்கட்டும் சண்டைக்கு அவன்
வம்சமேஇல்லாமல் துவம்சம் செய்திடுவேன்.

சண்டையிடுவதில்
மனிதனை மிஞ்சின மலர்கள் எனக் கண்டு
இனி அங்கிருப்பது முறையல்ல என்றெண்ணி
"சிவ! சிவா!" எனக் காதுகளைப் பொத்தி
சிட்டெனப் பறந்தேன் வீடு நோக்கி.

இணைய நண்பன்
16-12-2010, 10:21 AM
அழகிய கவிதை.வாழ்த்துக்கள்

மனோஜ்
16-12-2010, 12:04 PM
மனிதனுக்கு தான் மமதை என்றால்
மலருக்குமா கர்பனை அருமை நண்பரே வாழ்த்துக்கள்

கீதம்
16-12-2010, 09:37 PM
கற்பனை பிரமாதம்.
சண்டையின் முடிவு அறிய ஆவலாய் இருந்தேன். இதுபோன்ற சாடல்களுக்குத் தீர்வில்லை என்பதை முகத்தில் அறைந்து சொன்ன முடிவு அருமை.
பாராட்டுகள் ஐயா.