PDA

View Full Version : முரண்பாட்டை விளக்க வேண்டுகிறேன்.



கீதம்
09-12-2010, 10:35 PM
தற்செயலாய்ப் படிக்கநேர்ந்த இருபாடல்களின் கருத்தொற்றுமை என்னை வெகுவாக வியக்கவைத்தது. அவை...

கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்.

இப்பாடல் விளம்பிநாகனார் இயற்றிய நான்மணிக்கடிகையில் உள்ளதாகும்.

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்
அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே
இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்.

இப்பாடல் ஒளவையார் எழுதிய மூதுரையில் ஒன்றாகும்.

இருபாடல்களும் பொதுவாக உரைக்கும் அறவுரைகளாவன:

தருமமல்லாத காரியங்களைச் செய்பவர்களுக்கு அந்தத் தருமமே எமனாக அமையும்; மெல்லிய வாழைமரத்துக்கு அது காய் ஈனும் காரணத்தாலேயே அழிவு நேரிடும்; ஒரு பெண் நல்ல மனையாளாக விளங்காதபட்சத்தில் உண்டாகும் தீங்கு அக்குடும்பத்துக்கே எமனாகும்.

முரண்பட்டு நிற்கும் ஒரே கருத்து முதலாவதாகும்.

நான்மணிக்கடிகையில் கூறப்படுவதாவது,

கல்லாத ஒருவனுக்கு அழிவு அவன் வாயிலிருந்து புறப்படும் சொற்களே என்பது. இது எளிதில் புரியும்படி உள்ளது. இதையே 'நுணலும் தன் வாயால் கெடும்' என்னும் பழமொழி உணர்த்துகிறது.

ஆனால் மூதுரையில் சொல்லப்படுவதாவது,

கல்லாத ஒருவனுடைய அழிவு கற்று உணர்ந்தவர்களின் சொல்லால் உண்டாகும் என்பது. இந்தக்கருத்து எனக்கு விளங்கவில்லை. அறிந்தவர்கள், உதாரணம் சொல்லி விளக்க இயலுமா?

M.Jagadeesan
10-12-2010, 03:51 AM
"கல்லா ஒருவர்க்குத் தம் வாயிற் சொற்கூற்றம்"

"கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்"

இரண்டு கருத்துக்களும் சரியானவையே.முரண்பாடு ஏதும் இல்லை.
மூதுரையில் கூறப்பட்டுள்ள "கல்லாத மாந்தர்" என்ற சொல்லுக்கு
"பள்ளி சென்று படிக்காதவர்கள்" என்று பொருள் கொள்ளக்கூடாது.
"நூல்களை தெளிவாகக் கற்று உணராதவர்கள்" என்றேபொருள் கொள்ள
வேண்டும்.

கற்றவர்கள் கூடியுள்ள சபையில் நூலறிவு இல்லாதவர்கள் மிகவும்
எச்சரிக்கையாகப் பேசவேண்டும். தம் விருப்பப்படி பேசுவார்களானால்
கற்றவர்களால் அவமானப்பட நேரிடும்.

இக்கருத்தையே வள்ளுவரும்,

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

என்று கூறி உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை நிகழ்வு இது. இந்து சமயப்
பெரியார் அவர். பெயர் குறிப்பிட விரும்பவில்லை.தாம் கூறிய ஒரு கருத்தால் கற்றவர்களின் வெறுப்புக்கு ஆளானார்.

ஆண்டாள் திருப்பாவையில் இரண்டாம் பாடலில்,

" நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம்,மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம்,தீக்குறளை சென்று ஓதோம்"

என்று பாவை நோன்பு செய்யும் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய
கடமைகளாக சிலவற்றை ஆண்டாள்குறிப்பிட்டுள்ளார்.இதில் "தீக்குறளை
சென்று ஓதோம்" என்றால் "கோள் சொல்லமாட்டோம்"என்று பொருள்.
இக்கருத்துக்கு மாறாக அந்த இந்து சமயப் பெரியவர்" நோன்பு செய்யும்
காலங்களில் திருக்குறளை ஓத மாட்டோம்" என்று பொருள் சொல்ல
கற்றவர்களின் கண்டனத்திற்கு ஆளானார்.

ஆகவே கற்றவர்கள் கூடியுள்ள சபையில்மிகுந்தகவனத்துடன்பேசவேண்டும்.இல்லை என்றால் கற்றவர்களால் இழிவு ஏற்படும் என்ற*கருத்தையே மூதுரையில் அவ்வையார் குறிப்பிட்டுள்ளார்.

கீதம்
10-12-2010, 04:11 AM
தெளிவான விளக்கம் தந்து ஐயம் தீர்த்தமைக்கு மிகவும் நன்றி ஐயா.

Hega
10-12-2010, 03:13 PM
அருமையான விளக்கம் ஐயா.

கற்றுணந்தோர் முன்னால் கல்லாதோர் பட்ட அவமானங்கள் நம் கதைகளில் அனேகம் உண்டே..

விளக்கம் கேட்டு புதிய விபரம் அறிய செய்த கீதம் அவர்களுக்கும் நன்றி...