PDA

View Full Version : வைர நெஞ்சம்



dellas
08-12-2010, 06:45 AM
விடியற்காலை ஐந்து மணி , மாதா கோவில் மணியோசை காதில் விழுகிறது. கையில் பழைய சோறும் , பச்சை மிழகாயும் நிரம்பிய தூக்கு பாத்திரத்துடன் நான் கடற்கரைக்கு சென்று கொண்டிருக்கிறேன். பொழுது மேலே எழுவதற்குள் நான் என் கட்டுமரத்தை கடலுக்குள் செலுத்தி இருக்கவேண்டும். கொஞ்ச நாளாகவே விடியற்காலை நேரம்தான் அதிக மீன் வலையில் கிடைக்கிறது . உடன் தொழிலுக்கு வரும் பிரான்சிஸ் தயாராக இருப்பான். நான் என் நடையின் வேகத்தை சற்று அதிகரித்தேன் .

அந்த அமைதியான முன்பகலில் ஒற்றைக்குயில் கூவுகிற ஓசை மட்டும் தனியாகக் கேட்டது .வழக்கமாக நான் கேட்கும் குயிலோசைப் போலில்லாமல் யாரையோ தொலைத்து விட்டதுபோல் அதில் ஒரு சோகம். 'குயிலுக்கு என்ன சோகம் இருக்க முடியும்'. பக்கத்து தென்னந்தோப்பின் குயிலோசையை நிராகரித்து விட்டு கடற்கரையை நோக்கிய என் நடையை தொடர்ந்தேன். ஆனாலும் தினமும் கேட்கும் அந்த ஓசையில் வித்தியாசம் இருப்பதாகவே எனக்குப் பட்டது. நிதானித்துக் கேட்க நேரமில்லை .

இன்று சீக்கிரமாகவே கரைக்கு திரும்ப வேண்டும். என் மகன் அலெக்ஸ் வெளிநாடு செல்கிறான். அவனை வழியனுப்ப வேண்டும். அவனுக்கு
இருபத்திமூன்று வயதே ஆனாலும் தொழிலின் நுணுக்கங்களை அதிவிரைவில் கற்றுக்கொண்டு விட்டான் . பள்ளி படிப்பை முடித்தவன் , நானும், என் மனைவியும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்,
' அப்பா..., என்னதான் படித்தாலும் இறுதியில் நான் எதோ ஒரு வேலைக்குத் தான் செல்ல வேண்டும் அதையே நான் உங்களோடு செய்கிறேன். இன்னொருவரிடம் கைகட்டி நின்று வேலை பார்ப்பதை விட, நம் பரம்பரை தொழிலை செய்வதில்தான் எனக்கு விருப்பம் . நாமும் நம் தொழிலும் யாருக்கும் குறைந்து போனவர்களில்லையே . நாட்டின் உற்பத்தியை பெருக்குவதில் நம்போன்ற மீனவர்களின் பங்கும் உண்டு . அந்நிய செலாவணியை நாமும் அதிகம் பெற்றுத்தருகிறோம் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு' என்று அவன் சொல்லியதில் நான் ஆனந்தப்பட்டு போனது உண்மையே.

இந்த சிறுவயதில் அவனுக்கிருந்த அரசியல் மற்றும் உலகியல் அறிவு என்னைப் பலமுறை வியப்பில் ஆழ்த்தியதுண்டு. பொறுமையும் அடக்கமும் என் மனைவி என் மகனுக்கும், மகளுக்கும் தந்த பரிசு .

என் மனைவி, எனக்கு கிடைத்த வரம். என் சொற்ப வருவாயில் முகம்கோணாது குடும்பம் நடத்தி, அதில் சேமிக்கவும் செய்தாள். திருமணமாகி ஏழு ஆண்டுகளில் என் கைகளில் இரண்டு வாரிசுகளையும், சொந்தமாக ஒரு வீட்டையும் தந்து, எனக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரம் பெற்றுத் தந்தவள். கடந்த முப்பது ஆண்டுகளில் இதுவரை அவள் சுகவீனப்பட்டு நான் கண்டதில்லை. யாரிடமும் கடுமுகம் காட்டியதில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பாள். அவளைச் சுற்றி இருப்பதெல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பாள்.

என் மகளுக்கும், மனைவிக்கும் அலெக்ஸ் வெளிநாடு போவதில் உடன்பாடு இல்லை.எனக்கும்தான்.

அவன் தன் தங்கையின் முகம் பிடித்து , தன்பக்கம் திருப்பி ,
' இங்கே பார் ரீனா, அண்ணன் நிரந்தமாகவா போகிறேன் ? ஒரு இரண்டு வருடங்கள்தானே.. எனக்கும் ஒரு மாறுதலும், பல அறிமுகங்களும் கிடைக்கும் இல்லையா. அதோடு என் செல்ல தங்கைக்கு நான் நிறைய பொருட்களும் வாங்கி வருவேன். அண்ணனுக்கு மறுப்பு சொல்லக்கூடாது '
என்று சொல்லி அவளிடம் சம்மதம் வாங்கி விட்டான் .
ரீனா கல்லூரியில் படித்தாலும் அவனுக்கு அவள் எப்போதும் குழந்தைதான். எங்கள் வீட்டின் மகாராணி அவள்.

விமான நிலையத்தில் என் மகன் கையசைத்துக் கொண்டு விடைபெற்றபோது, என் மனைவியும், மகளும் அழுது விட்டார்கள்.
தலை குனிந்தவாறு சென்ற என்மகன் கண்டிப்பாக சற்று தூரம் கடந்து கண்ணீரைத் துடைத்திருப்பான். கலங்கிய என் கண்களின் கண்ணீரை மறைப்பதற்கு நான் சற்று சிரமப்பட வேண்டியிருந்தது.வைர நெஞ்சம் கொண்ட ஆண்மகன் அழுவது கூடாதல்லவா ..

இதோ மூன்று மாதங்கள் கடந்து விட்டது. வெளிநாடு சென்ற என் மகன் மாதமிருமுறை தொடர்பு கொள்வான். அங்கே நிலவும் கடுங்குளிர் மீன்பிடி தொழிலுக்கு பெரும் சவாலாக இருப்பதாகச் சொன்னது கவலை அளித்தது.

இன்று இதோ தொலைபேசி மணியடிக்கிறது. என்மகள் ஓடிச்சென்று அதை எடுக்கிறாள். அவள் முகம் மாறுகிறது.
" ஐயோ அண்ணா...." என்றவாறே மயங்கிச் சாய்கிறாள் .. அவள் சப்தம் அந்த வீதியில் எல்லா வீடுகளிலும் எதிரொலிக்கிறது.

எல்லாமே கனவுபோல் நடந்து முடிந்து விட்டது . மீன்பிடிக்க சென்ற என்மகன் விசைப்படகு , இயந்திரக்கோளாறு காரணமாக அந்த நாட்டு எல்லையைக் கடந்துவிட, பக்கத்து நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டான். இறந்த என் மகனின் உடலை வாங்க இரண்டு வாரங்களாக நான் அரசு அதிகாரிகளிடம் நடந்தேன். என் மனைவியின் சேமிப்புகள் கரைந்தபின் உடல் கிடைத்தது. அன்றிலிருந்து நோய்வாய்பட்ட என் மனைவியை காப்பாற்ற நான் செய்யத முயற்சிகள் எல்லாம் வீணானது. வீட்டை விற்று கொண்ட கடன் அடைக்கும்போது என் மனைவியும் இறந்தாள். என் மகளும் நானும் தனியானோம். பக்கத்து வீட்டுப் பாட்டியின் அடைக்கலத்தில் நானும் என் மகளும் தங்கிவருகிறோம். கல்லூரியை மறந்துவிட்ட என் மகள் பைமுடையும் வேலை செய்கிறாள்.
ஐம்பது வயதுகளில் இருக்கும் நான். என்ன செய்ய?? மனதில் ஒரு உறுதி பிறக்கிறது. 'என் மகளே நான் இருக்கிறேன் உனக்கு. என் உடலில் வலு உள்ளவரை இந்த கடலோடு போராடுவேன் உன்னை வாழ வைப்பேன்'

விடியற்காலை ஐந்து மணி , மாதா கோவில் மணியோசை காதில் விழுகிறது. கையில் பழைய சோறும் , பச்சை மிழகாயும் நிரம்பிய தூக்கு பாத்திரத்துடன் நான் கடற்கரைக்கு சென்று கொண்டிருக்கிறேன். பொழுது மேலே எழுவதற்குள் நான் என் கட்டுமரத்தை கடலுக்குள் செலுத்தி இருக்கவேண்டும். கொஞ்ச நாளாகவே விடியற்காலை நேரம்தான் அதிக மீன் வலையில் கிடைக்கிறது . உடன் தொழிலுக்கு வரும் பிரான்சிஸ் தயாராக இருப்பான். நான் என் நடையின் வேகத்தை சற்று அதிகரித்தேன் .

அந்த அமைதியான முன்பகலில் ஒற்றைக்குயில் கூவுகிற ஓசை மட்டும் தனியாகக் கேட்டது .யாரையோ தொலைத்து விட்டதுபோல் அதில் ஒரு சோகம்.

நான் சற்று நிதானிக்கிறேன். இருளில் மறைந்துள்ள அந்த குயிலின் சோகம் என் மனதில் பாய்கிறது. என்னுடல் குலுங்குகிறது. கண்களில் நீர் முட்டுகிறது. கண்ணீரைத் துடைக்க என் கைகள் முற்படவில்லை. வழிந்தோடும் கண்ணீர் என்னை நிறுத்த முடியாது. நான் என் நடையைத் தொடர்கிறேன். " வைர நெஞ்சம் கொண்ட ஆண்கள் அழுவதில்லை "

Hega
08-12-2010, 08:52 AM
வைர நெஞ்சம் நல்ல தலைப்பு.

இன்றைக்கு வெளி நாடு செல்லும் பலரின் நடைமுறை வாழ்க்கை சிக்கலை தெளிவாக்கி இருக்கும் கதை. கதைக்கரு மற்றும் களங்களை எடுத்தாண்ட விதம் அருமை.


தொடர்ந்து எழுதுங்கள்....

பாலகன்
08-12-2010, 01:17 PM
மிக மிக அருமையான வைர நெஞ்சம் கொண்ட தந்தையின் வாழ்க்கையை மையமாக கொண்ட கதை. கதையின் கரு மிகுந்த வலிமை. வெளிநாடு சென்று மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் சந்திக்கும் ஆபத்துக்களில் இதுவும் ஒன்று.

இப்போது நமது மீனவர்களும் இந்தமாதிரியான இன்னலுக்கு ஆளாகிறார்கள்.

சிறப்பான உங்கள் கதைக்கு எனது பாராட்டுகள் மற்றும் 100 இணைய காசுகள் அன்பளிப்பு

தொடர்ந்து எழுதுங்கள்

ஆன்டனி ஜானி
08-12-2010, 01:41 PM
அருமையான கருத்து நண்பரே இதற்க்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன் சில பேர்
கல்யாணம் பன்னுவார்கள் ஆனால் பொண்டாடி வந்தவுடன் தன்னை பெற்று வளர்த்த தாயயே மறந்து விடுவார்கள் ஆனால் இந்த கதையில் நீங்கள் கூறிய பையன் படித்து இருந்தாலும் தன் பரம்பரை தொழிலை விடக்கூடாது என்ற நோக்கத்தில் மீன் பிடிக்க சென்று சுட்டும் கொல்லப்பட்டான் ..அவன் செய்த இந்த தியாகம் நெஞ்சை உலுக்கிய விஷியம் தான்....

வாழ்த்துக்கள்.

dellas
08-12-2010, 02:23 PM
இனிய நண்பர்களே, சிரம் தாழ்ந்த நன்றிகள்.

ஜனகன்
08-12-2010, 02:49 PM
அழகு வரிகள். கதை படித்தேன் என்று சொல்றதைவிட படம் பார்த்தேன்,

கண் முன் ஓடியது காட்சிகள். வாழ்த்துக்கள் நண்பரே.

பாலகன்
08-12-2010, 03:30 PM
அழகு வரிகள். கதை படித்தேன் என்று சொல்றதைவிட படம் பார்த்தேன்,

கண் முன் ஓடியது காட்சிகள். .

இதுவே எழுத்தாளனின் வெற்றி! சிறப்பு நட்சத்திரங்கள் : 5

மீண்டும் பாராட்டுகள்

ஆன்டனி ஜானி
08-12-2010, 03:39 PM
அழகு வரிகள். கதை படித்தேன் என்று சொல்றதைவிட படம் பார்த்தேன்,

கண் முன் ஓடியது காட்சிகள். வாழ்த்துக்கள் நண்பரே.

எந்த படம் பார்த்தீர்கள் என்ன சொல்றீங்க !!

ஒன்றும் புரிய வில்லையே ?

நான் கதையை மட்டும் தானே படித்தேன் படம் பார்க்கவில்லையே

எனக்கும் காட்டுங்கள் நண்பா !!

கீதம்
08-12-2010, 10:36 PM
வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் போதிக்கும் கதை. எத்தனைப் பெரிய சோகத்தையும் ஒருதுளி கண்ணீர் கரைத்துவிடும் என்பது எத்தனை உண்மை. கதையின் நாயகனின் மனப்போராட்டத்தை கண்முன் பிரதிபலித்த கதைக்கு என் பாராட்டுகள்.

ஐந்துநட்சத்திரங்களுக்குத் தகுதியான கதைதான்.:icon_b:

dellas
13-12-2010, 04:03 AM
சிறப்பான உங்கள் கதைக்கு எனது பாராட்டுகள் மற்றும் 100 இணைய காசுகள் அன்பளிப்பு


ஐந்துநட்சத்திரங்களுக்குத் தகுதியான கதைதான்..

மீண்டும் என் நன்றிகள்.