PDA

View Full Version : கவிமூலம்



inban
29-11-2010, 04:00 PM
இளமை காலத்து கவிதைகள் என்றாலே
எபோதும்
தனிப் பிரியம் எனக்கு

அவைகளிலே
சந்தம் இருக்காது
அலங்காரம் இருக்காது
பொருளியல் ஒழுங்கிருக்காது
படிமம் குறியீடு என
பண்பட்ட கவிதைக்கான
ஒன்றுமே இருக்காது

ஆனாலும்
அது கவிதை தான்.
கட்டறுத்த காட்டாறு போல
அது கவிதைதான்.

ஒப்பனை காணாத
கிராமத்துப் பெண்ணைப்போல
அழகானது அது

ஓசை மிகுந்த கடலில்
ஒளிந்திருக்கும்
ஆழ்ந்த அமைதியைப்போல
மர்மமானது அது

படிய மறுத்த
வார்த்தைகளின் நெருடலில் தான்
ஒரு கவிஞனின்
வெற்றியன் ரகசியம்
ஒளிந்திருக்கிறது

அவனின் எல்லாக் கவிதையிலுமே
எப்படியேனும் ஒரு வேர்
இங்கே வந்து ஒட்டிக்கொள்கிறது

நண்பர்களே!

ஒரு கவிஞனை
அறிந்து கொள்ள ஆவல் எழுமேயானால்

அவனின்
ஆரம்பகாலக் கவிதைக்கு ஓடுங்கள்
ஏனென்றால்
அந்த கவி விருச்சத்துக்கான வேர்
அங்குதான் இருக்கிறது