PDA

View Full Version : நூல் - தூண்டுகோல்!குணமதி
29-11-2010, 12:13 PM
(அண்மையில் நடைபெற்ற நூலக விழாப் பாட்டரங்கத்தில் பாடிய நேரிசை ஆசிரியப்பா)

நூல் – தூண்டுகோல்!

பருகுறச் சுவைமிகும் பாட்டரங்(கு) இதனின்
செழிதகைத் தலைவீர்! செந்தமிழ்ப் பாவலீர்!
குழுமிய அறிஞீர்! கூர்த்துணர் பெரியீர்!
செயல்வல் இளமையீர்! சீர்சால் தாய்க்குலப்
பெயலளி உளஞ்சேர் இயல்சீர் எழிலீர்!
தோழமை சான்ற தூயநல் லுளத்தீர்!
ஆழன் பேந்தி அவையை வணங்கினேன்!

அறிவுரம் பெருக்கி அறியா மையுரம்
தெறிவுறக் கெடுப்பது நூலெனத் தெளிவாய்ப்
பவணந்தி நன்னூல் பகர்ந்திடும் இலக்கணம்!
இவணிதைப் பலரும் தவலற விளக்கினர்!
நூலின் சிறப்பையும் நூலக மாண்பையும்
ஏல விளக்கிச் சால உரைத்தனர்!

உன்னிடின் நூல்கள் உயர்வாழ் வளிப்பன!
பன்னெடுங் காலமாய்ப் பார்த்திடும் மெய்யிது!
அறிவுச் சுரங்கமாய் அகநம் பிக்கைச்
செறிவுற அளிக்கும் செழும்புதை யல்கள்!
அருமையாய்த் தூண்டிடும் அருஞ்செய லூக்கிகள்!
மருந்தாய் மாந்தர் மனவளம் சேர்ப்பவை!
நண்பனாய் குருவாய் நல்வழி காட்டியாய்
திண்ணிதாய் உதவிடும் நுண்ணிய உறவுகள்!

நூலிலா வாழ்வு போலி!; யானதை
ஏலி வாழ இயலா தென்றே
அறிஞர் செபர்சன் அறைகுவார்; மொழியும்
அறிவியல் வரலா றறமும் புனைவுறு
புதினம் அடங்க மதிநுட் பெழுத்தெலாம்
புதிய பழைய புத்தகம் அளிக்கும்!
நட்புப் பாலமாய் நன்னெஞ் சிணைக்கும்!
பெட்பற மடமை கொட்பில் விலக்கும்!
அறிவு வேட்கையை ஆற்றுநீ ரூற்றவை!
நெறிசேர் ஞானம் நேரளி அரசடி!

உடற்குறை யாளர்க்குத் துணையாம் ஊன்றுகோல்!
முடங்கல் வரைய முழுத்துணை எழுதுகோல்!
பொறியர் கலைஞர் பொய்யறு வணிகர்
நெறியுறப் பணிசெய நில்துணை அளவுகோல்!
உயர்வுற மாந்தர்க்கு உயர்நூல் தூண்டுகோல்!
மயர்தவிர் உண்மை மயக்கிலா தெளிவிதாம்!

சுடர்விளக் காயினும் தூண்டுகோல் வேண்டும்!
திடமுடைப் பொன்செய் திரிவிளக் காயினும்
வேண்டும் தூண்டுகோல் யாண்டுமென் றறிவோம்!
மாண்டிகழ் நூல்கள் தூண்டுகோல் ஆவன!
ஒழுக்கம் உயர்வு ஒற்றுமை உணர்வினை
இழுக்கற நூல்கள் இயம்பிடும் இவையே
என்றும் தூண்டுகோல் எனஉத விடுங்கொல்!
இன்றுயர் வடைந்த எல்லா அறிஞரும்
என்றோ படித்தநூல் எனக்குத் தூண்டுகோல்
என்று விளக்கலை இக்கால் கேட்கிறோம்!

விலங்குக்கூ டாரமாய் விளங்கிய சீனத்
திலங்கிய அறிவுப் புரட்சி எழற்கே
கன்பூ சியசின் கனல்நூல் தூண்டுகோல்!
இன்னும் பலவும் எடுத்துரைத் திடலாம்!

மார்க்கோ போலோ ஓர்ப்புற எழுதிய
ஈர்ப்புறு செலவுகள் எனும்நூல் தூண்டுகோல்
கொலம்ப சமெரிக்காக் கூர்ந்துகண் டிடவே!
புலந்தந் ததுபுது நிலங்கா ணற்கே!

மேலாண் மையியல் மேதகு அறிஞர்
தோலா பீட்டர் டிரக்கர் தம்வெற்றி
நூல்கள் தூண்டுகோல் நோன்றதால் என்கிறார்!

அரிசு டாட்டில் அவருடன் பிளாட்டோ
தெரிசாக் ரட்டீசு வரித்த நூல்கள்
அய்ரோப் பியரின் மறுமலர்ச் சிக்கும்
உய்தொழிற் புரட்சி உருவா தற்கும்
தூண்டுகோ லாகித் தொண்டு புரிந்தன!
ஈண்டுரை சான்றென இன்னொரு உண்மை!

‘கடையனுக் கும்கடைத் தேற்ற’ மெனும்பெயர்
உடையரசுக் கின்நூல் ஒருவர் படித்தார்
அந்நூல் தூண்டுகோல் ஆனதால் அவர்பெயர்
அண்ணல் காந்தியென் றானதை அறிவோம்!

தொலைக்காட் சிதரும் துடிப்புஉரைக் காட்சித்
தலைமுன் னோடித் தகைஞர் ஓப்பிரா
வின்பிரே விடுக்கும் தென்பார் சூளுரை
‘என்றும் ஓயேன் எனதமெ ரிக்கா
நூல்படி நாடென நூக்குவேன்’ என்பது!
சால்புற நூற்படிப் பேல்பு மூலமாம்!

புத்தகம் நேசிப் போரெலாம் வாழ்வை
நித்தமும் நேசித் தித்தரை வாழ்பவர்!

நண்பரைத் தேர்கையில் நல்லவர் தேறல்போல்
தெண்மையில் நல்லநூல் தேர்ந்து படிப்போம்!
தூண்டுகோல் எனநூல் துணைதர
வேண்டும் வெற்றி வினையெலாம் விளைப்போம்!
-------------------------------------------------

ஆன்டனி ஜானி
29-11-2010, 01:42 PM
கவிதைகளில் சிறு ,சிறு எழுத்து பிழைகள் இருந்தாலும் ,அதை சமாளித்து
ரெம்ப கஸ்டப் பட்டு படித்தேன் ..... :icon_ush:
அப்படி படித்ததால் அதற்க்கு அர்த்தங்கள் புரிந்தன .......
ரெம்ப ஒரு அருமையான உங்கள் படைப்புக்கு
பாராட்டுக்கள் ...... :cool:

கீதம்
29-11-2010, 09:43 PM
ஊடுபாவூடே ஊடிய நூல்கொண்டு
உருவாகுமே அழகுப் பாவாடை!
நாவோடூடிய நயமிகு பாவாடை
கட்டியே நடம்புரிகிற நூல்கண்டு
மனம் தரவிழையுதே மலர்ச்செண்டு.

பாராட்டுகள் குணமதி அவர்களே.

M.Jagadeesan
29-11-2010, 11:43 PM
இனிய கவிதை தந்த நண்பர் குணமதிக்கு வாழ்த்துக்கள்!
இதுபோன்ற மரபுக் கவிதைகளை தொடர்ந்து தாருங்கள்
நூல்களே உண்மையான நண்பர்கள்
உன்னத வாழ்விற்கு அதுவே தூண்டுகோல்.

குணமதி
30-11-2010, 04:37 PM
கவிதைகளில் சிறு ,சிறு எழுத்து பிழைகள் இருந்தாலும் ,அதை சமாளித்து
ரெம்ப கஸ்டப் பட்டு படித்தேன் ..... :icon_ush:
அப்படி படித்ததால் அதற்க்கு அர்த்தங்கள் புரிந்தன .......
ரெம்ப ஒரு அருமையான உங்கள் படைப்புக்கு
பாராட்டுக்கள் ...... :cool:

பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.

படிக்கும்போது உங்களுக்குத் தொல்லைதந்த எழுத்துப் பிழைகளை அன்புகூர்ந்து சுட்டிக்காட்டுங்கள்; திருத்திக்கொள்வேன்.

யானறிந்தவரை, எழுத்துப்பிழை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
தாங்கள் குறிப்பிட்டுக் கூறினால் திருத்திக்கொள்வேன்.

குணமதி
30-11-2010, 04:54 PM
ஊடுபாவூடே ஊடிய நூல்கொண்டு
உருவாகுமே அழகுப் பாவாடை!
நாவோடூடிய நயமிகு பாவாடை
கட்டியே நடம்புரிகிற நூல்கண்டு
மனம் தரவிழையுதே மலர்ச்செண்டு.

பாராட்டுகள் குணமதி அவர்களே.

பாட்டினைப் பாவா டையொடு உறழ
நாட்டிய எழுத்து நனிமிகச் சிறப்பு!
தீட்டிய எழுத்தில் செழுமலர்ச் செண்டை
நீட்டி அளித்தீர்; நெஞ்சங் கனியக்
கூட்டி யுரைத்தேன் கொள்கவென் நன்றியே!

குணமதி
30-11-2010, 04:58 PM
இனிய கவிதை தந்த நண்பர் குணமதிக்கு வாழ்த்துக்கள்!
இதுபோன்ற மரபுக் கவிதைகளை தொடர்ந்து தாருங்கள்
நூல்களே உண்மையான நண்பர்கள்
உன்னத வாழ்விற்கு அதுவே தூண்டுகோல்.

மனமார்ந்த நன்றி ஜகதீசன்.
எனக்கும் தொடர்ந்து மரபுப்பா எழுத விருப்பம் உண்டு.
வாய்ப்புக் கேற்ப எழுதுவேன்.
பாராட்டுக்கு மீண்டும் நன்றி.