PDA

View Full Version : அப்பாPremM
25-11-2010, 05:16 AM
சில ஆண்டுகளுக்கு முன்னால்,
பத்து மாத உறக்கம் களைந்து,
பூமி தொட்டது இந்த பாதங்கள்..
"அப்பா பாரு டா செல்லம்",
என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினாள் அம்மா..

தடித்த மீசை,
கறுத்த தேகம்..

அனுபவங்களை சில வரிகளில்
சொல்லி முடித்திருக்கும் முகச்சுருக்கங்கள்..

கறுத்த வானில் மின்னல் கீற்றாய்,
ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் நரை முடி..

ஐம்பதை முத்தமிட்டு,
நெஞ்சுயர்த்தி நடைபோடும் வயது..

இவை யாவும் அவரது இப்போதைய அடையாளங்கள்...

நடு நிசியில் உறக்கம் தொலைத்து,
கண்ணீரில் கலவரம் செய்தேன்..
அவர் உறக்கத்தையும் ,தோள்களையும் கடனாய் தந்தார்..

இடப்பக்கம் வகுடுடெத்து,
வலப்பக்கம் படிய வைத்து,
தலை வாரக் கற்றுக்கொடுத்தது அவர் கைகள்..

மென் பொருளை பதம் பார்க்கும் இக்கைகள்,
இன்று சேற்று மணலில் நனைந்து இருக்கும்,
அவர் தந்த கரும்பலகை இல்லையேல்..

பூமி தொடுகையில்,
கண்ணீரை தவிர வேறொன்றும்
என்னிடம் இல்லை..
ஆம்,எனதென்று சொல்லிக் கொள்ள இங்கே எதுவும் இல்லை, என்னில் உள்ளவையெல்லாம் அவரால் என என்றும் அவர் சொல்லியதும் இல்லை..

நான் உடுக்கும் வண்ண ஆடைகளின் பின்னில்,
சில வியர்வை படிந்த அவர் ஆடைகள் அலக்கப்பட்டிருக்கிறது..

நாகரீக சூழலில் நான் நிற்க,
நகரத்து நெரிசலில் அவர் குடுங்கினார்..

கண்கள் அறியா காயங்களும்..
சொற்களாய் மாறாத ரணங்களும்,
அவரது ஏதோ ஒரு நாடித் துடிப்பில்
ஒலித்து கொண்டு தான் இருக்கின்றது..

சட்டென்று கலைந்தது கனவு..
விரைந்தது கால்கள்,
முதியோர் இல்லம் நோக்கி..
எல்லாம் உணர்ந்தேன்..
நாளை நானும் ஒரு தந்தை ஆகப் போகிறேன்
என அறிந்த பின்னர்..

sharavanan
25-11-2010, 06:35 AM
ரொம்ப நல்லா இருக்கு.
தவமாய் தவமிருந்து :)

ஜனகன்
25-11-2010, 08:53 AM
கவிதை வரிகள் அனைத்தும் கோர்க்கப்பட்ட மணிகள். மனிதனின் மகத்துவமே மனிதநேயத்திலேயே அடங்கி உள்ளது நன்று.

மேலும் பவனி வர வாழ்த்துக்கள் பிறேம்.

அமரன்
25-11-2010, 07:01 PM
எதிர்காலம் பற்றிய பயத்தின் விளைவு என்றாலும் மாற்றம் வரவேற்கத்தக்கதே!

முகவரிகள் எழுதிய அனுபவங்கள்.. அருமை.

வானவர்கோன்
25-11-2010, 07:26 PM
தந்தையால் உயராதோர் உலகில் எவருமிலர்! அருமையான கவிதை வரிகள், அப்பாவின் வழிகாட்டலை அசை போட வைத்தமைக்கு நன்றி. ஐரோப்பிய நாடுகளில் பெற்றோர் முதியவர்களாகி விட்டால் முதியோர் இல்லங்களில் கொண்டு விடுவது நாகரீகமாகி விட்டது, இதனை எம்மவர்களும் பின்பற்றி வருகின்றார்கள், நாளை எமக்கும் இதே நிலை என்பதை பிரேம் அருமையாக சித்தரித்துள்ளார், பாராட்டுக்கள்!

PremM
01-01-2011, 02:13 AM
அனைவரின் பின்னூட்டத்திற்க்கும் நன்றி...

ஜானகி
01-01-2011, 02:30 AM
அப்பப்பா... என்ன யதார்த்தம் ?

தப்பை உணர்வார் பலரும் !

PremM
08-01-2011, 05:58 AM
நன்றி ஜானகி,
கடைசி பத்தியை தவிர எல்லாம் என் தந்தையைப் பற்றி எழுதியது..
அதனால் வந்த எதார்த்தமாக இருக்கலாம்..