PDA

View Full Version : தேடவேண்டாம் எங்களை!



கீதம்
22-11-2010, 01:38 AM
என் சொற்களைக் காணவில்லை
என்றொரு அறிவிப்பை
மன்றப்பலகையில் காண்பீராயின்
தயவுசெய்து தேடும் முயற்சியில்
தீவிரமாயிறங்கிடல் வேண்டா!
சொல்வது யாரென யோசியாதீர்!
நாங்கள் நாங்கள்தான்!

அன்புடையீர்!
அவனிடம் சொல்லிவிடாதீர்
எங்கள் அஞ்ஞாத இருப்பை!
அறிகிறானில்லை அஞ்ஞானி
எங்கள் ஆழ்மனக்கிடப்பை!

அவன் கனவுகளே எங்கள் கருப்பை;
கவிப்பசி தோன்றுந்தோறும்
குருதி வழிய எம்மைக் குதறித் தின்று
நிறைக்கிறானவன் இரைப்பை!

அன்றொருநாள் இதுபோலவே
அள்ளியெடுத்தக் கரங்களினூடே,
அரைத்து விழுங்கும் பற்களினூடே
அகப்பட்ட இடத்திலெல்லாம்
அகப்படாது தப்பினோம்,
குற்றுயிரும் குலையுயிருமாய்!
எனினும் கண்டுபிடித்துவிட்டான்
சாமர்த்தியக்காரன்!

சாகசக்காரனும் கூட!
இல்லையெனில் எழுத்துக்களைக் கொல்ல
காதலை ஏவுவதும்,
காதலியைக் கொலைசெய்ய
எழுத்துக்களைக் கூர்தீட்டுவதும்
ஒரேநேரத்தில் சாத்தியப்படுமா?

இருவரையும் மோதவிட்டு
ஒற்றைப் பார்வையாளனாய்
ஒய்யாரமாய் அமர்ந்து ரசிக்கத்தான் இயலுமா?

மீனைக்கொண்டு மீனைப்பிடித்தல் போல,
யானை கொண்டு யானை பிடித்தல் போல
கைவசமிருக்கும் எழுத்துக்களைக் கொண்டு
காணாமற்போன எங்களுக்கு
கண்ணி வைத்துக் காத்திருக்கவும் கூடுமோ?

இத்தனை சொல்லியும் அவனோடு
இணக்கமாகிப் போவீராயின்...
எச்சரிக்கை!
இயன்றவரை உம் சொற்களை
அவனிடமிருந்து மறைத்தே வையுங்கள்!

ஆன்டனி ஜானி
22-11-2010, 03:19 AM
ஆ,ஆ,ஆ, கவிதை,கவிதை எப்படி எல்லாம் கவிதைகள் இருக்கிறதப்பா

........ரெம்ப ஒரு அருமையா முயற்சி ,,

ரெம்ப நல்லா , இருக்கு ..... தேடலை வைத்து நல்ல ஒரு
இலக்கியத்தோடே இதை எழுதியிருக்கிறீர்கள்




நன்றி.... என்றும் உங்கள் ரசிகன்......

அக்னி
22-11-2010, 01:56 PM
இதுக்குள்ள உள்குத்து ஏதுமில்லையே...???
இதுக்கு பதில் வந்தாப்பிறகு பின்னூட்டம் வரும்... :icon_ush:

கீதம்
22-11-2010, 10:04 PM
இதுக்குள்ள உள்குத்து ஏதுமில்லையே...???
இதுக்கு பதில் வந்தாப்பிறகு பின்னூட்டம் வரும்... :icon_ush:

என் எச்சரிக்கை கண்டுதானே
உம் சொற்களைப் பத்திரப்படுத்தி
பின்னூட்டமிடாமற்போனீர்?
அக்கினிப்பிழம்புதானே ஆதவன்?
அவனைக்கண்டு நீர் பதுங்கலாம்;
நீர் பதுங்கலாமோ?

கீதம்
22-11-2010, 10:06 PM
ஆ,ஆ,ஆ, கவிதை,கவிதை எப்படி எல்லாம் கவிதைகள் இருக்கிறதப்பா

........ரெம்ப ஒரு அருமையா முயற்சி ,,

ரெம்ப நல்லா , இருக்கு ..... தேடலை வைத்து நல்ல ஒரு
இலக்கியத்தோடே இதை எழுதியிருக்கிறீர்கள்

நன்றி.... என்றும் உங்கள் ரசிகன்......

நன்றி ஆன்டனி ஜானி அவர்களே.

ஆதவா
23-11-2010, 03:27 AM
இன்னிக்கு உங்க கையில என்னோட குடுமியா?? :eek::eek:
அவ்வ்.....
ரொம்ப அருமையா (பெருமையா) இருக்குங்க அக்கா. :)


சாகசக்காரனும் கூட!
இல்லையெனில் எழுத்துக்களைக் கொல்ல
காதலை ஏவுவதும்,
காதலியைக் கொலைசெய்ய
எழுத்துக்களைக் கூர்தீட்டுவதும்
ஒரேநேரத்தில் சாத்தியப்படுமா?

இதைப் பார்த்துதான் கொஞ்ச நேரம் சிரித்துவிட்டேன்...

முதலில் சொற்கள் கவிதை சொல்லியாக்கியதற்கு பாராட்டுக்கள்.
தேடுதல் என்பதே நமக்கு அருகில் உள்ளதை தொலைவில் தேடுவதுதான்... அருகில் உள்ளதை உணர்பவர்களே வெற்றி பெற்றுவிடுகிறார்கள். சொற்களும் அப்படித்தான்... நம்மைச் சுற்றியே இரைந்து கிடக்கும் சொற்களை நாம் எப்படி தேடிப் பொறுக்கியெடுத்து கவிதை செய்கிறோம் என்பதில்தான் வெற்றியின் சூக்குமமே இருக்கிறது.

எல்லா கவிஞர்களுக்கும் தேடல் இருக்கும்... வார்த்தை தேடல். சில பொருத்தமான வார்த்தைகளுக்காக தேடச்செய்வார்கள். வார்த்தைகள் எப்போதும் பதுங்கிக் கொள்வதில்லை.. கவிஞனின் அகக்கண்கள் நுண்மையாகத் தேடாதவரை அந்த வார்த்தை அகப்படுவதேயில்லை!!! அகப்படுதல் என்பதே நுண்மையான தேடலில் கிடைத்தவை என்பதுதானே!

கவிஞர்களுக்காக எழுதப்பட்ட கவிதை.... கவிஞர்களாக இருக்கும் அனைவருக்கும் பொருந்தும் கவிதை!!
மிக அருமை!

இந்த கவிதை (http://tamilmantram.com/vb/showthread.php?t=16511)உங்களுக்குப் பிடிக்கக் கூடும்... படித்துப் பாருங்களேன்!!

கவிதைக்கு வாழ்த்துக்கள்!

அக்னி
24-11-2010, 10:57 AM
அவனைக்கண்டு நீர் பதுங்கலாம்;
நீர் பதுங்கலாமோ?
இது பதுங்கலில்லை. பதுக்கல்...
என்னிடமிருக்கும்
கொஞ்சச் சொற்களையும்
அவன் பறித்துக்கொண்டால்
நான் என் செய்வேன்...???

ஆனால்,
முரண்படுகின்றன என்னுடன் என் சொற்கள்...

நீ கல்லை அப்படியே வைத்துக்
கட்டுமானம் செய்துவிட்டு
சிதைக்கவில்லை என்கின்றாய்...
ஆனால், அவனோ
கல்லைச் செதுக்கிச்
சிற்பமாக்கிவிடுகின்றான்...

என்கின்றன என் சொற்கள்...

கீதம்
26-11-2010, 02:55 AM
நீ கல்லை அப்படியே வைத்துக்
கட்டுமானம் செய்துவிட்டு
சிதைக்கவில்லை என்கின்றாய்...
ஆனால், அவனோ
கல்லைச் செதுக்கிச்
சிற்பமாக்கிவிடுகின்றான்...

என்கின்றன என் சொற்கள்...

செதுக்கிய சிற்பம் யாவும்
சேரவேண்டும் கருவறை!
சேர்ந்த பின்னே சேரும்
சீரும் சிறப்பும் தானே!!
கட்டடம் காணா சிற்பங்கள்
காற்றரித்துக் கலையழிந்து
களையிழந்து போகும்!
எனவே கல்லைச் செதுக்குவதினும்
கட்டுமானப்படுத்தியதில் பெருமையே!

எண்ணுமோ உம் சொற்கள்?