PDA

View Full Version : வானிலை அறிக்கை.......ரங்கராஜன்
20-11-2010, 04:46 AM
வானிலை அறிக்கை.......

இன்று காலை வழக்கம் போல இல்லாமல், சரியாக 8 மணிக்கு எழுந்தேன். வழக்கமாக 11 மணி ஆகும் எழுந்துக் கொள்ள. என்னுடைய மெக்ஸிமம் (அதாங்க பெரியம்மா) கொஞ்சம் வெளியே போகும் வேலை இருப்பதால் என்னை எழுப்பி விட்டு வீட்டை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு சென்றார்கள். தூக்கத்தில் எழுப்பினாலே எனக்கு பிடிக்காது அதுவும், வீட்டை வேற பார்த்துக் கொள்ள வேண்டுமாம்..... வீட்டை என்னத்த பார்த்துக் கொள்வது, யாராவது வந்து பேத்துக் கொண்டா போய் விடுவார்கள் வீட்டை. முனவிக் கொண்டு எழுந்து அவர்களை வழியனுப்பி விட்டு என் ரூம் ஜன்னலை தூரந்தேன்........ ஆச்சர்யம் அழகாக மழை பெய்துக் கொண்டு இருந்தது. மழையே அழகு தான், அதென்ன அழகாக பெய்துக் கொண்டு இருந்தது. அனைவருக்கும் உலகத்தில் ஒவ்வொரு இடம் பிடிக்கும்...... அப்பாவின் தோள், அம்மாவின் கழுத்து, தாத்தாவின் முதுகு, பாட்டியின் விரல், காதலியின் மடி, நண்பனின் உரசல் இப்படி எதாவது ஒன்று அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். உலகத்திலே எனக்கு மிகவும் பிடித்த இடம் என்னுடைய ரூம் தான். ரூம் என்றவுடன் அழகாக இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள், ஒரு பெச்சுலர் ரூம் எப்படி இருக்குமோ, அதை விட கேவலமாக தான் என்னுடைய ரூம் இருக்கும். புத்தகம் இருக்கும் இடத்தில் பனியன் இருக்கும், சட்டை மாட்ட வேண்டிய இடத்தில் வாட்ச் தொங்கும், செலவை செய்த துணிகள் எல்லாம் கட்டிலில் இருக்கும், தலையணை எல்லாம் பீரோவில் இருக்கும். என் ரூமை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், அது பக்கங்கள் மாற்றி அடிக்கப்பட்ட அகராதி மாதிரி. அதில் பொருளை தேடுவது மிகவும் கடினமான ஒன்று. இருந்தாலும் அந்த ரூம்மை பிடிக்க காரணம், அங்கு இருக்கும் ஒரு உடைந்த ஜன்னலும் அதன் பின்னாடி இருக்கும் மரமும் தான். அதுவும் தூங்கு மூஞ்சி மரம், நான் தூங்குவதற்கு முன்பே அது தூங்கி விடும், நான் எழுவதற்கு முன்பே அது எழுந்து விடும். நான் அழகான மழை என்று குறிப்பிட்டதற்கு காரணம் அந்த மரத்தின் மீது மழை நேரடியாக கீழே விழாமல், கிளைகளில் சிதறி, உருண்டு சில துளிகளாக டிவைட் ஆகி சங்கீதத்துடன் பூமியை அடைந்துக் கொண்டு இருந்தது. அதை பார்த்தவுடன் என் மனம் திடீரென பிரகாசமானது, ஆயிரம் டம்ளர் குடித்த எனர்ஜி வந்தது,.......... ஆயிரம் டம்ளர் பூஸ்டு குடித்தால், எனர்ஜி வராது வாந்தி தான் வரும். வேறு எதாவது உவமை கூறுகிறேன் இருங்க........... ம் ம் ம்....... ஆ.... நாம் நேசிக்கும் பெண்ணிடம் இருந்து முதல் முத்தம் பெறும் போது ஒரு சந்தோஷ உற்சாகம் வருமே அது போல இருந்தது எனக்கு. அது அந்த உடைந்த ஜன்னல் வழியாக மழையின் சாரல் என்னுடைய முகத்தில் படுமே அப்போது வரும் பாருங்க ஒரு உற்சாகம் சான்ஸை இல்லை, அதை என்னால் எழுத்துகளால் வர்ணிக்க முடியவில்லை. அத உற்சாகத்திற்காகவே நான் பல நாட்கள் காத்து இருக்கிறேன்.

ஆதன் மாதிரி ஆட்கள் இதை அனுபவித்தால் உடனே கவிதை எழுத தொடங்கி விடுவார்கள், எனக்கு எழுத தெரிந்தது கதை மட்டும், தான் அதுவும் இப்போ கருக்கள் ஸ்டாக் இல்லை, சில பல இருந்தாலும் அதை கோர்வையாக்கும் பொறுமை இப்போது இல்லை. அதனால் இந்த மழையை பற்றியே எழுதி விடலாம் என்று முடிவெடுத்து இதை ஆரம்பித்தேன்.

இந்த நவம்பர், டிசம்பர் காலங்கள் வந்தாலே, நம்ம வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் புதிதாக சில சட்டைகளை வாங்கி வைத்துக் கொள்வார். காரணம் தினமும் வானிலை அறிக்கையை பற்றி அவர் தொலைகாட்சி வந்து சொல்ல வேண்டும் இல்லையா. ரமணன் யார் என்று செய்திகளை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும், அதுவும் இப்போது அவர் பள்ளி மாணவர்களிடையே மிகவும் பிரபலம்.

“டேய் மச்சி இந்தாளு சொன்னா ஊருகே லீவு விடுறாங்கடா, எதோ பெரிய ஆளுங்கட்சி எம்பி போல டா” என்றுக் கூட கிண்டலாக பசங்க பேசும் அளவிற்கு இவர் பிரபலம், பல சினிமா படங்கள் கூட இவரை வைத்து பல கிண்டல் செய்து இருக்கிறார்கள். காரணம் இவர் சொல்லும் வானிலை அறிக்கை தான்.

தொலைகாட்சியில் : வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, நாளை தமிழகத்தில் பலத்த மழை பெய்யும்”

தொலைகாட்சியை பார்த்துக் கொண்டு இருக்கும் மாமி : ஏன்னா, அப்ப கவலை இல்லை நாளைக்கு நான் மிளகாயை காய வச்சிடுறேன், அடிக்கிற வெயிலுக்கு சட்டுனு காஞ்சிடும். மதியம் சத்த மிஷினுக்கு போயி அத மறக்காம அரைச்சிட்டு வந்துடுங்கோ”
என்று அந்த அளவுக்கு ரமணன் மேல் நம்பிக்கை வைத்து அந்த மாமி பிளான் போட ஆரம்பிச்சிடுறா.

இது ஒரு பக்கம் நகைச்சுவையாக இருந்தாலும், உண்மையில் இந்த வானிலை அறிக்கைப் பற்றி உங்களுக்கு கொஞ்சம் எடுத்துக் கூற விரும்புகிறேன். செய்திகளுக்கு கடைசியில் வரும் இந்த வானிலை அறிக்கையை யார் கவனிக்கிறார்கள், என்று தெரியவில்லை. உண்மையில் நமக்கு மிக்கியமில்லாமல் படும் இந்த வானிலை அறிக்கை பலருக்கு வாழ்க்கையாக இருக்கிறது, குறிப்பாக மீனவர்கள், கட்டுமான பணியில் இருப்பவர்கள், ஆலைகள், செங்கல் சூலை, உருக்காலை, சாலை போக்குவரத்து அதிகாரிகள், மாநகராட்சி, மின்சாரத்துறை, மருத்துவமனைகள் இப்படி பலதரப்பட்டவர்களுக்கும் இந்த வானிலை அறிக்கை மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.

தப்பான அறிக்கையை கொடுப்பது மூலம், பல ஆபத்துகள் விளையும், ஏன் பலமுறை விளைந்துக் கொண்டு தான் இருக்கிறது. மீனவர்கள் கடல் சீற்றத்தில் உயிரிழப்பது, கட்டுமானப் பணியை தொடங்கி லட்சக்கணக்கான சிமெண்டு, பெயின்ட், கட்டுமான பொருட்கள் அனைத்தும் மழையில் நனைந்து நாசமாவது, செங்கல், கல்குவாரி, சுரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகுந்து விட்டால் இத்தனை நாள் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் சேதம் தான்... அதுவும் சுரங்கங்களில் அப்படி தோண்டப்பட்ட இடங்கள் மண்ணுக்குள் புதையும் அபாயமும் இருக்கிறது. மாநகராட்சி எப்போதும் தயாராக இருக்க வேண்டும், வெள்ளம், தண்ணீர் புகுதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். மின்சாரத்துறை எந்த நேரத்திலும் கரெண்ட் கட்டாகும், மழையின் காரணமாக சில இடங்களில் மின் விபத்துகள் நிகழலாம், அந்த ஏரியா கரெண்டை துண்டிக்க இவர்களும் தயாராக இருக்க வேண்டும். போக்குவரத்து அதிகாரிகள் மழையினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை சரி செய்ய வேண்டும், தலைவர்கள் பார்வையிட வருவார்கள் அவர்களுக்கு வழி செய்து கொடுக்க வேண்டும், மரங்கள் விழுந்தால் அதை வெட்டி எடுத்து வழியை சீர் செய்ய வேண்டும். மேலே உள்ள துறைகளினால் ஏற்படும் விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகள் தகுந்த முதலுதவி அளிக்க வேண்டும், அதற்கான டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

இத்தனை இருக்கிறது இந்த வானிலை அறிக்கையில்.

இப்போது புரிகிறதா இந்த வானிலை அறிக்கை எவ்வளவு முக்கியமானது என்று.

மழை கொஞ்சம் பெய்தால் போதும், அனைத்து செய்தியாளர்களும் வானிலை மையத்தில் தான் படையெடுப்போம். எங்களை பார்த்தவுடன் ரமணன் டென்ஷன் ஆகி விடுவார்.

“ஏம்பா கொஞ்சம் கூட தூரக்கூடாதா உடனே இங்கு மைக்கை நீட்டி எதாவது சொல்லு சொல்லு சொன்னா என்ன செய்வது, இருப்பா எங்களுக்கே தில்லியில் இருந்து ரிப்போர்ட்டு வரலை” என்பார் அலுப்புடன்.

“சார் வழக்கம் போல சொல்லுங்க சார், வருமாம்ம்ம் ஆனா வராதுன்னு” நாங்கள் கலாய்க்க அவர் மேலும் டென்ஷனாகி விடுவார்

நீண்ட நேர அவரிடம் போராடி தான் நாங்கள் அவரிடம் பேட்டி வாங்குவோம். ஏன் போராட வேண்டும், நீங்களே குத்து மதிப்பாக மழை வரும் அப்படினு தொலைகாட்சியில் சொல்ல வேண்டியது தானே, அவரின் பேட்டி அவ்வளவு முக்கியமா,....... ஆம் முக்கியம் தான். அவரிடம் பேட்டி வாங்கப்படுவது ஒரு அத்தாச்சிக்காக, அதுதான் எங்களுக்கு விட்னஸ், மழை வராது என்று நாங்கள் சொல்லப்போய், மழை வந்து ஊரே வெள்ளக்காடாக காட்சியளித்து பல கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அதனால் விடாமல் மாணவர்களுக்கு எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால், அரசு அந்த தொலைகாட்சியை உண்டு இல்லை என்று செய்து விடும். கோர்ட்டில் கேஸ் போட்டு விடும், நஷ்டஈடு கேட்கும்...... அதனால் தான் இயக்குனரின் பேட்டியை வாங்கிக் கொள்வது, அப்படி எதாவது அசம்பாவிதம் நடந்தால், ஐயோ சாமி எனக்கு இதுக்கு எந்த சம்பந்தமுமில்லை, இதோ இவரு தான் அப்படி சொன்னாருங்க............. பாருங்க வீடியோவை என்று இவரை மாட்டி விட்டு விடலாம்.

நாங்களே அப்படி விவரமா இருந்தா, அந்த வானிலை இயக்குனருக்கு பொழப்பே இது தானே. அதனால் அவர் எங்களை விட மிகவும் உஷாராக பேட்டி கொடுப்பார்....... செய்தியில் வானிலை அறிக்கை பார்த்து கேட்டவர்களுக்கு இது நினைவிருக்கலாம். இதோ அவரின் வார்த்தைகளை நாம் கேட்போம் இப்போது.

“வங்க கடலின் மத்திய பகுதியில் (எந்த பகுதி என்று சொல்ல மாட்டார்) கடந்த சில நாட்களாக (என்றிலிருந்து சொல்ல மாட்டார்) நிலைக் கொண்டிருந்த (எப்போ) காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்து (எவ்வளவு சொல்லமாட்டார்) தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. (சரிரிரிரி மேலே). இதனால் அது புயலாகவும் மாற வாய்ப்பு இருக்கிறது (மாறுமா மாறாதா தெளிவாக சொல்லமாட்டார்), இந்த தாழ்வு மண்டலமானது மேற்கே நகர்ந்து (யாருக்கு மேற்கே நகர்ந்து சொல்லமாட்டார்) ஒரிசா மற்றும் கன்னியாகுமரிக்கு நடுவே கரையை கடக்க இருக்கிறது. (ஒரிசாவிற்கும் கன்னியாகுமரிக்கும் இடையே எத்தனை மாநிலம், எத்தனை நகரம், எத்தனை கிராமம் இருக்கிறது, எந்த இடத்தில் கரையை கடக்கிறது என்று சொல்லமாட்டார்). இதனால் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்யும் (நல்ல மழை என்றால், என்ன விபதி குங்குமம், சாமி பிரசாதமாகவா பெய்யும்), சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படு்ம், ஆங்காங்க லேசான மழை பெய்யும், கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது (இந்த வரியை திரும்பவும் படியுங்கள், மழை பெய்யாது, மழை கொஞ்சமாக பெய்யும், கனமழையும் பெய்யும்....... பாருங்க மூணுத்தையும் சொல்லிட்டான்). தமிழகத்தின் பல பகுதிகளில் மேகம் வரண்டு காணப்படும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் (அந்த சில பல பகுதிகள் என்ன என்பது மழை பெய்ந்த பின் தான் அவருக்கே தெரியும்). கடலோர பகுதிகளில் காற்று பலமாக வீசக்கூடும் (கடலோர பகுதிகளில் காற்று எப்போதும் பலமாக தான் வீசும்). வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காற்றின் வேகத்தில் வலுவிழக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக தில்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன (மேலே அரைமணி நேரமா சொன்னது எல்லாம் நடந்தா தான் நடக்குமாம்).

சொல்லுங்க மக்களே இத வச்சி நாம என்னத்த கணிக்க முடியும்........ வானிலையை பொறுத்தவரை கடவுளை தவிர வேறு யாரும் அதை சரியாக கணிக்க முடியாது. திரும்பவும் இங்கு இடியுடன் கூடிய மழை ஆரம்பித்து விட்டது, நான் என் ஜன்னல் வழியாக அதை ரசிக்க போகிறேன், வரீங்களா உறவுகளே........

Mano.G.
20-11-2010, 05:20 AM
செய்திகள் வாசிப்பு முடிந்து
வானிலை அறிக்கை அறிவிப்பு செய்யும்
பொழுது எழும் ஐயங்களை தெளிவாக
எடுத்து கூறிய தம்பிக்கு "வரும் ஆனா வராது"
வசனத்தை மீண்டும் நிவைவூட்டியதற்கு வாழ்த்துக்கள்


மனோ.ஜி

M.Jagadeesan
20-11-2010, 06:17 AM
சுனாமி வரப்போகிறது என்று யாராலும் சொல்ல முடியவில்லையே.
இயற்கையை வெல்ல யாராலும் முடியாது.ரமணனால் மட்டும் எப்படி முடியும்?

கீதம்
20-11-2010, 06:23 AM
இந்தியாவில் இருந்தவரை வானிலை அறிக்கையை சிறிதும் லட்சியப்படுத்தியதே இல்லை. காரணம் நீங்கள் சொன்னதுபோல்தான். எப்போதும் ஒரே பல்லவி.

ஆனால் ஆஸ்திரேலியாவில் வந்தபிறகு இங்கு சொல்லப்படும் வானிலை அறிக்கை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்க நிலையில் இருப்பதால் எங்கும் வெளியில் செல்வதானால் வானிலை அறிக்கையை பார்த்துவிட்டே முடிவெடுப்பது வழக்கமாகிவிட்டது. இதைவிடவும் வேடிக்கை என்னவெனில் ஒரு மாதத்துக்கான வானிலையை முன்கூட்டியே அறிவித்துவிடுவதுதான். கடலோர வெப்பம், காற்று வீசும் வேகம், அலைகளின் தன்மை இப்படிப் பல விவரங்களும் சொல்லி கடலுக்கு நீந்தவும், சர்ஃபிங் செய்யவும் செல்வோரை உஷார்படுத்துகின்றனர்.

இந்தியாவிலும் இதுபோன்ற வசதி இருந்தால் எத்தனை உபயோகமாக இருக்கும் என்று என் மனம் அடிக்கடி ஏங்கும்.

பகிர்வுக்கு நன்றி, ரங்கராஜன்.

அமரன்
20-11-2010, 07:13 AM
கீதாக்கா சொன்னதுதான்..

காலையில் டிவிப்பெண் சொல்றதைத் தட்டவே மாட்டேன். இன்ந்தச் சட்டையை மாட்டிட்டுப் போ என்று அவதான் கட்டளை போடுறா..

ரங்கா..

அந்த மரம் உங்களோட ரொம்பத்தான் அட்டா்ச்மெண்டா இருக்கு.

குழம்பிய அறை.. உடைஞ்ச கண்ணாடி.. அதனூடு வரும் குளிர்காற்று.. கசங்கிய காகிதம் போல நீங்கள்.. அப்படியே பறக்குறீங்க..

கவிதையாக ஒரு வாழ்க்கை உங்களுக்கு அமைஞ்சிருக்கு.. அனுபவி ராஜா அனுபவி..