PDA

View Full Version : போரின் விளைச்சல் !



வானவர்கோன்
19-11-2010, 01:54 PM
http://graphics8.nytimes.com/images/2009/05/29/world/asia/29lede_lanka.1.480.jpg
கால் நூற்றாண்டுப்
போராட்டம்
எமக்குத் தந்தன
மனித அரவமற்ற சுடுகாடும்,
அரைகுறையாய்க் கிண்டிய கிடங்கினுள்
அவசரமாய்ப் புதைத்த மனிதப் பிண்டங்களும்
எலும்புக் கூடுகளும் மண்டையோடுகளுமே!

உண்ண உணவின்றி
உடுக்க உடையின்றி
ஒதுங்கக் கூரையின்றி
பரட்டையாய் கலைந்த கேசத்துடனுன்
நாடோடியாய்
எலும்புக் கூடாய் நலிந்த தேகத்துடன்
முட்கம்பி வலையத்தினுள்!

துப்பாக்கிச் செல் வீச்சுக்கும் பயந்து
பதுங்குகுழியில் பதுங்கிய
மானிடம் அதனுள்ளே
மௌனித்ததே சடலங்களாய்!

ஊனமுற்ற உடலங்களும்
உயிரற்ற சடலங்களும்
பட்டினியால் நலிந்த தேகங்களும்
குண்டு துளைத்த தேசமும்
கால் நூற்றாண்டு போராட்டத்தின்
இன்றைய விளைச்சலே!

அமரன்
19-11-2010, 02:36 PM
போரை எரிக்க வேண்டும் என்ற எண்ணம் கவிதையில் நன்றாகத் தெரிகிறது.

பாராட்டுகள் வானவர்கோன்.

படத்தில் இந்தளவு கோரம் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் கூடவே எழுகிறது..

படத்தை மாற்றுவது குறித்து ஆவன செய்யுங்களேன் நண்பரே!

வானவர்கோன்
19-11-2010, 02:54 PM
போரை எரிக்க வேண்டும் என்ற எண்ணம் கவிதையில் நன்றாகத் தெரிகிறது.
பாராட்டுகள் வானவர்கோன்.
படத்தில் இந்தளவு கோரம் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் கூடவே எழுகிறது..

படத்தை மாற்றுவது குறித்து ஆவன செய்யுங்களேன் நண்பரே!

படத்தை இணைக்கும் போதே ஒரு கணம் சிந்தித்தேன், என்னாலும் முடியவில்லை தான், ஆகவே படத்தினை மாற்றி விட்டேன் நண்பரே!

கருத்துக்கு நன்றி.

அமரன்
19-11-2010, 02:56 PM
நன்றி வாகோ.

இப்படிச் சுருக்கமாக அழைக்கலாம்தானே்

கீதம்
19-11-2010, 09:39 PM
நான் அறிந்த விளைச்சலிலே
அறுவடை செய்யப்படும் பயிர்கள்!
அதுபோக மீறும் (வைக்கோற்)போர்கள்!
இங்கே போரின் விளைச்சலால்
அறுவடையாயின உயிர்கள்!
போனவை போக மீந்தன
உணர்வுகள் கவிதையென!

உளக்குமுறலை வெளிப்படுத்தியவிதம் நன்று, வானவர்கோன் அவர்களே.

ஜனகன்
19-11-2010, 10:39 PM
போரின் விளைச்சல் கவிதை அதில் தவிப்பும் தகிப்பும்... ஏக்கமும் எரிச்சலுமா வரிகளில் வந்து விழுந்திருக்கிறது..!!

மனதை பாரமாக்கிவிட்டது. ஒவ்வொரு வரிகளிலும் உண்மை பதிந்திருக்கிறது.

உங்கள் கவிபணியை தொடர என் வாழ்த்துக்கள்!

ஆதவா
20-11-2010, 03:08 AM
விதை சரியில்லை, விளைச்சல் ?
கால் நூற்றாண்டுகள் காத்திருந்தது
வயல் எரிவதற்கா???

கவிதை எண்ணத்திற்கு வணங்குகிறேன்.

வானவர்கோன்
20-11-2010, 10:12 AM
நன்றி வாகோ.
இப்படிச் சுருக்கமாக அழைக்கலாம்தானே்

தாராளமாக.

வானவர்கோன்
20-11-2010, 10:18 AM
நான் அறிந்த விளைச்சலிலே
அறுவடை செய்யப்படும் பயிர்கள்!
அதுபோக மீறும் (வைக்கோற்)போர்கள்!
இங்கே போரின் விளைச்சலால்
அறுவடையாயின உயிர்கள்!
போனவை போக மீந்தன
உணர்வுகள் கவிதையென!

உளக்குமுறலை வெளிப்படுத்தியவிதம் நன்று, வானவர்கோன் அவர்களே.

போரிலே
அறுவடையான உயிர்கள்
போனவை போக
மீந்தன
நிரந்தரமாய் ஊனமுற்ற உறவுகள்
உணர்வுக்கவிதைகளாய்
கூடவே!

நன்றி கீதம்.

Ravee
20-11-2010, 05:40 PM
அவன் பாவி, இவன் பாவி என்று அவலம் பேசாமல் அப்பாவிகள் கடைத்தேற வழி செய்யுமா அரசாங்கம் ? :icon_p:

வானவர்கோன்
20-11-2010, 06:29 PM
போரின் விளைச்சல் கவிதை அதில் தவிப்பும் தகிப்பும்... ஏக்கமும் எரிச்சலுமா வரிகளில் வந்து விழுந்திருக்கிறது..!!

மனதை பாரமாக்கிவிட்டது. ஒவ்வொரு வரிகளிலும் உண்மை பதிந்திருக்கிறது.

உங்கள் கவிபணியை தொடர என் வாழ்த்துக்கள்!

நன்றி ஜனகன்.

வானவர்கோன்
21-11-2010, 09:24 AM
விதை சரியில்லை, விளைச்சல் ?
கால் நூற்றாண்டுகள் காத்திருந்தது
வயல் எரிவதற்கா???

கவிதை எண்ணத்திற்கு வணங்குகிறேன்.

விதையில் கலப்படம் இல்லை
களத்தில் குற்றம் இல்லை
தளத்தை வசப்படுத்த
தானே பெரியவனென
ஓங்கிய அகங்காரம்
அழிவுக்கு நகர
வயல் எரிந்தது!

நன்றி ஆதவா.

வியாசன்
21-11-2010, 11:03 AM
விதை சரியில்லை, விளைச்சல் ?
கால் நூற்றாண்டுகள் காத்திருந்தது
வயல் எரிவதற்கா???

கவிதை எண்ணத்திற்கு வணங்குகிறேன்.

விதை வீரியம்தான். விளைச்சல் கண்ட
அண்டை வீட்டானின் பொறாமையினால்
கால் நூற்றாண்டாய் செய்த வேளாண்மை
அறுவடைநாள் தள்ளிப்போனது.

வானவர்கோன்
21-11-2010, 04:55 PM
அவன் பாவி, இவன் பாவி என்று அவலம் பேசாமல் அப்பாவிகள் கடைத்தேற வழி செய்யுமா அரசாங்கம் ? :icon_p:

யார் குற்றியும்
அரிசியே தேவையெனும் உணர்வு
எஞ்சியுள்ளதே
இப்போதும் அதிகமாய்!

நன்றி ரவி.

அக்னி
25-11-2010, 01:07 PM
கால் நூற்றாண்டு காலம்
தள்ளிப்போடப்பட்டது
ஈழத்தமிழரின் அவலம்...

உலகச்சமூகத்திற்கு
ஈழத்தமிழினம் என்றோர் இனம்
வதைபடுவது தெரியும்வரை
காத்திருந்த பேரினவாதத்திற்கு
நன்றி...

உலகம் இன்று பார்த்திருந்தபோதே
இத்தனை அவலம் என்றால்,
இந்த அவலம் அன்றே நிகழந்திருந்தால்..,
காணாமற்போனோர்
என்றொருபட்டியல் இருந்திருக்காது...
ஈழத்தமிழினம்
என்றொரு பெயர் மட்டுமே இருந்திருக்கும்...

வானவர்கோன்
25-11-2010, 01:17 PM
விதை வீரியம்தான். விளைச்சல் கண்ட
அண்டை வீட்டானின் பொறாமையினால்
கால் நூற்றாண்டாய் செய்த வேளாண்மை
அறுவடைநாள் தள்ளிப்போனது.

சிம்மாசன சொப்பனம் தலைக்கேறி தலைகனம் சீரழித்ததாலே
கால் நூற்றாண்டு ஆயுதப் போர்
முள்ளிவாய்க்காலில் மௌனித்தது. ...............நன்றி வியாசன்.

குணமதி
25-11-2010, 02:00 PM
இந்தப் போர்ப் பயிருக்கு
இரட்டை விளைச்சலுண்டு!

ஒரு விளைச்சலைக் காட்டினீர்கள்...
உள்ளக் குமுறலான எழுத்திலும் படத்திலும்!

இன்னொரு விளைச்சல்...
இனிமேல்தான் விளையவிருக்கிறது!

ஆம். மாந்தநேய உணர்வுள்ளவர்கள்
அந்த விளைசலுக்காக
அவரவரும் இயன்றவரை உழைத்தாக வேண்டும்!

அந்த விளைச்சல்
அனைத்துலகும் வரவேற்கும் விளைச்சலாக இருக்கும்!

வானவர்கோன்
26-11-2010, 01:17 PM
கால் நூற்றாண்டு காலம்
தள்ளிப்போடப்பட்டது
ஈழத்தமிழரின் அவலம்...

உலகச்சமூகத்திற்கு
ஈழத்தமிழினம் என்றோர் இனம்
வதைபடுவது தெரியும்வரை
காத்திருந்த பேரினவாதத்திற்கு
நன்றி...

உலகம் இன்று பார்த்திருந்தபோதே
இத்தனை அவலம் என்றால்,
இந்த அவலம் அன்றே நிகழந்திருந்தால்..,
காணாமற்போனோர்
என்றொருபட்டியல் இருந்திருக்காது...
ஈழத்தமிழினம்
என்றொரு பெயர் மட்டுமே இருந்திருக்கும்...

கவிதை மூலமான கருத்துப் பகிர்வுக்கு நன்றி அக்னி.

வானவர்கோன்
29-11-2010, 05:24 AM
இந்தப் போர்ப் பயிருக்கு
இரட்டை விளைச்சலுண்டு!

ஒரு விளைச்சலைக் காட்டினீர்கள்...
உள்ளக் குமுறலான எழுத்திலும் படத்திலும்!

இன்னொரு விளைச்சல்...
இனிமேல்தான் விளையவிருக்கிறது!

ஆம். மாந்தநேய உணர்வுள்ளவர்கள்
அந்த விளைசலுக்காக
அவரவரும் இயன்றவரை உழைத்தாக வேண்டும்!

அந்த விளைச்சல்
அனைத்துலகும் வரவேற்கும் விளைச்சலாக இருக்கும்!


நன்றி குணமதி.