PDA

View Full Version : போன்சாய்..



rambal
20-11-2003, 09:30 PM
போன்சாய்..

நீளத் துடிக்கும்
வேர்களை
ஒட்ட நறுக்கி விட்டேன்..

கிளைகள் எல்லாம்
சிறிய அளவில்..

சிறிய மாற்றத்தில்
நிகழ்ந்ததொரு
மிகப்பெரிய அதிசயம்..

மிகப்பெரிய மரத்தை
மிகச் சிறியதாக
வீட்டுத் தொட்டிக்குள்
பிரதியெடுத்துவிட்டேன்..

சாசுவதாமாய்
அதே மனத்தை வீசுகிறது
போன்சாய்...

aren
28-11-2003, 04:06 AM
போன்சாய் ஒரு கொடூரமான கண்டுபிடிப்பு. ஒரு பெரிய மரத்தை நூற்றில் ஒரு பங்குக்குச் சிறியதாக்கி அதைப் பார்த்து மனிதன் பெருமைப்படுவதைவிட வேதனைப்படுவதே நல்லது.

விலங்குவதைச் சட்டம் என்று ஒன்று இருப்பதுபோல் தாவரவதைச் சட்டம் என்று ஒன்றை கொண்டுவரவேண்டும்.

போன்சாய் மரம் - ஒரு பாவப்பட்ட உயிர்.

முத்து
28-11-2003, 10:45 AM
போன்சாய் ஒரு கொடூரமான கண்டுபிடிப்பு. ஒரு பெரிய மரத்தை நூற்றில் ஒரு பங்குக்குச் சிறியதாக்கி அதைப் பார்த்து மனிதன் பெருமைப்படுவதைவிட வேதனைப்படுவதே நல்லது.

விலங்குவதைச் சட்டம் என்று ஒன்று இருப்பதுபோல் தாவரவதைச் சட்டம் என்று ஒன்றை கொண்டுவரவேண்டும்.

போன்சாய் மரம் - ஒரு பாவப்பட்ட உயிர்.

அருமை ஆரென் அவர்களே ...
உங்களின் கருத்தை நான் முழுவதுமாய்,வலிமையாய்
ஆதரிக்கிறேன் ...
உங்களின் கருத்தைப் படித்தவுடன்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் ..
எனற வரிகளே முதலில் நினைவுக்கு வந்தன ...
நன்றிகள் பல ....

முத்து
28-11-2003, 10:55 AM
சாசுவதாமாய்
அதே மனத்தை வீசுகிறது
போன்சாய்...


போன்சாய் வளர்க்கும் நண்பரே ...
அழகான மாளிகை ஆனாலும்
அரசனே படையுடன் தங்கும்
ஆலமரத்தை உள்ளேயே
வளர்க்க முடியுமா ... ?

ஆனாலும்
மரத்தை அப்படியே வைத்திருங்கள் ...
ஆலமரங்களை அடக்கும் அளவுக்கு
பிரம்மாண்டமாய் வளர்ந்து வருகிறது
மாளிகை ...

மேலும் உங்கள்
போன்சாயை வளர்க்க
நீங்கள் இடும்
சின்ன கட்டளைச்சொல் போதுமே ..

எனவே ..
கொஞ்சம் பொறுத்திருங்கள் ...
பெரும் ஆலமரங்களை அப்படியே
வளர்க்க வேகமாய்
வளர்ந்துவருகிறது மாளிகை ....

Nanban
28-11-2003, 12:23 PM
கொஞ்சம் பொறுத்திருங்கள் ...
பெரும் ஆலமரங்களை அப்படியே
வளர்க்க வேகமாய்
வளர்ந்துவருகிறது மாளிகை ....



புரியவில்லையே முத்து...........

முத்து
28-11-2003, 12:46 PM
மாளிகை - தமிழ்மன்றம் ..

poo
28-11-2003, 03:03 PM
ஆரேன் அண்ணனின் கருத்து மனதை தொடுகிறது...


ராம் எழுதியது குறியீடுகளின் குடும்பமாய் இருக்கலாம்!!?

இளசு
28-11-2003, 10:41 PM
ஆமாம் பூ..
ராம் குறியீடுகளில் விளையாடும்போது
எப்போதாவதுதான் எனக்குப் "புரிந்த" மாதிரி இருக்கும்.
அப்போதெல்லாம் பதில் தருவேன்.

ஆரெனின் கருத்து மிக அதிக பாதிப்பு தந்தது.
நண்பன் சொல்வதுபோல் நம் மன்றத்தில்
கவிதைகள் ஒரு படித்தரம் என்றால்
அதையொட்டி வரும் அலசல்
பலவும் கற்றுத்தரும் இன்னொடு உயர்தரம்..

முத்துவின் பதில் கவிதையே இதற்கு நல்ல உதாரணம்.

முத்து,
விளக்கியபின்
உன் "குறியீடுகள்"
எனக்கும் புரிந்தன.

மன்றத்தைப் புரிந்து புகழ்ந்த
அந்த "மாளிகை"க் குறியீட்டுக்கு வந்தனம்.

பொதுவாய் என் கருத்து...

எளிய உவமைகள் அனைவரையும் கவரும்.
என்னைப்போன்றவர்களுக்கும் புரியும்.

இருண்மையில் எழுதுவோர் தம் படைப்பு
மிக உயர்ந்த இரசனை, அறிவு, பரிச்சயம் உள்ள ஒரு சிலர்க்கே
போய்ச்சேரும் என்பதை எதிர்பார்த்தே படைக்கவேண்டும்.
கருத்துகள் சில மட்டுமே வரும்.
ஆனால் கனதியான கருத்துகளாய் வரும்.

இல்லையென்றால் தலைப்பை
பலரும் புரியும்படி தாருங்கள்.

என் " குறியீட்டுக் கவிதை" ஒன்று..

முதல் தலைப்பு:
உதை பந்து..

இரண்டு அணியும்
ஒரே கோல் போஸ்ட் நோக்கி
உதைக்க
வதைபட்டு கிழிந்தே போனது..


நான் என்ன நினைத்து எழுதினேன்..?

அலசல் தொடரட்டும்...

வேறு தலைப்பு பின்னர் தருகிறேன்.

முத்து
28-11-2003, 10:52 PM
இரண்டு அணியும்
ஒரே கோல் போஸ்ட் நோக்கி
உதைக்க
வதைபட்டு கிழிந்தே போனது..


இளசு அண்ணா...
பையனைப் படிக்கச் சொல்லி
அப்பாவும் , அம்மாவும் பாடாய்ப்படுத்தி
படிப்பையே வெறுத்துவிடும் பையன் ... :D

Nanban
29-11-2003, 08:07 AM
மன்றத்தைப் புரிந்து புகழ்ந்த
அந்த "மாளிகை"க் குறியீட்டுக்கு வந்தனம்.

பொதுவாய் என் கருத்து...

எளிய உவமைகள் அனைவரையும் கவரும்.
என்னைப்போன்றவர்களுக்கும் புரியும்.

இருண்மையில் எழுதுவோர் தம் படைப்பு
மிக உயர்ந்த இரசனை, அறிவு, பரிச்சயம் உள்ள ஒரு சிலர்க்கே
போய்ச்சேரும் என்பதை எதிர்பார்த்தே படைக்கவேண்டும்.
கருத்துகள் சில மட்டுமே வரும்.
ஆனால் கனதியான கருத்துகளாய் வரும்.

இல்லையென்றால் தலைப்பை
பலரும் புரியும்படி தாருங்கள்.


என் ரசனைகள் உயர்ந்தவை என்று கூறிக் கொள்ளும் எவராலும் ஒரு கலைஞனை வாழ வைக்க முடியாது என்று நேற்று தான் சினிமா பக்கங்களில் எழுதிவிட்டு வந்தேன். பூவும் அதற்கு எல்லா துறைகளுக்கும் பொருந்துமா என்று கேட்டு எழுதியிருந்தார்.

இங்கு வந்தால், அதே கருத்தில் விவாதங்கள் தொடர்கிறது.

முதலில் ஒரு விளக்கம் - இருண்மை, குறியீடு இரண்டும் வெவ்வேறானவை. இருண்மை - பொருளை மறைத்து வைத்து, எந்த குறிப்பும் தாராது தேடச்சொல்வது. குறியீடுகள் தெளிந்த பொருளை, நேரிடையாகச் சொல்லாமல், அதற்கு இணையான பொருள்களைச் சொல்லிக் குறிப்பிடுவது.

இருண்மைக்கு, அந்த கவிதை எழுதும் கவிஞரைப் பற்றி நல்ல அறிமுகம் உள்ள வாசகர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இந்த வகைக் கவிதைகளை எழுதும் பொழுது, அதன் உள்நோக்கமே, தன் அலைவரிசையில் தன்னை ஒத்த சிந்தனை கொண்ட சிலருடன் மட்டுமே பகிர்ந்து கொள்ளத் தக்க படைப்புகளைத் தரவேண்டும் என்ற எண்ணம் தான். தொடர்ந்து பரிச்சயம் உள்ள அன்பர்களால் அது நன்றாகப் புரிந்து கொள்ளப்படும் பொழுது அது எழுதியவர்க்கு மட்டுமல்ல, வாசித்தவருக்கும் இன்பம் தரும் - மற்ற கவிதைகளை விட பன்மடங்கு.

இது - இருண்மை - என்பது கவிதை வெளியீட்டுத் தன்மையின் ஒரு உத்தி. குறியீடு என்பது வெளியீட்டுத் தன்மையின் ஒரு உத்தி அல்ல. அது பொருள் விளங்கச் செய்ய இடப்படும் அடையாளங்கள் மட்டும் தான். குறியீடுகளை உலகம் பலகாலமாக உபயோகிக்கிறது.

புறா என்று சொல்லுங்கள் - எல்லோரும் புரிந்து கொள்வர் - அது சமாதானம் என்று. கண்ணம்மா பாடல்களைப் பாருங்கள் - அது பெண் என்ற குறியீட்டின் மூலம் இறைவனை நோக்கிப் பாடப்பட்டவை தானே? நேரிடையாக இறைவனைப் பற்றிப் பாடினால், அது பலரையும் ஈர்க்காது என்பதால், ஒரு அழகிய பெண்ணை குறியீடாக வைத்து எழுதப்பட்டது.

குறியீடுகள் எவ்வாறு உண்டாகின்றன.......

காலம் காலமாக உபயோகிக்கப்படும் அடையாளங்கள்..... புறா, வெண்மை என்றெல்லாம் நாம் சொல்லும் பொழுது சமாதானம் என்று எல்லோருக்கும் சட்டெனப் புரிகிறது. கவிதை எழுதுபவனோ, இந்தப் புழக்கத்தில் உள்ள வார்த்தைகளைத் தவிர்த்து, தனக்கெனப் பிரத்யேகமாக வார்த்தைகளை உண்டாக்க முயலுகிறான். புழக்கத்தினால் சாரமிழந்த வார்த்தைகள் வலு சேர்ப்பதில்லை கவிதைக்கு. இப்படி பிரத்யேகமாக வார்த்தைகளை உண்டாக்கும் பொழுது, எல்லோருக்கும் அது புரிந்து விடுவதில்லை. உடன் அதை இருண்மை என்று ஒதுக்கி விடுவது கூடாது. புறா என்றால் சமாதானம் என்று மொழி அறிந்த அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது - அவர்கள் கவிதையில் பரிச்சயமில்லாதவர்களாக இருந்தாலும் கூட.

ஆனால் சில குறியீடுகளை எந்தத் தளத்தில் புழங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தே விளங்கிக் கொள்ள முடியும். உதாரணமாக இதைப் படியுங்க்ளேன் -
****
இந்தக் கணத்திற்கு
சற்று முன்புகூட
நீண்ட சாலை
முடிவற்றதாகத் தோன்றியது.

இதோ,
இந்தக் கணத்தில் தான்
இந்தச் சாலை,
இரண்டாகப் பிரிந்து
வலமும், இடமுமாகப் போகிறது.

இரண்டு சாலைகளும்
ஊர் சென்றடையும்.

மந்தியின் ஆட்டம் மனதில்
'இதில்...... இல்லை.... அதில்...... இதில்....'

ஒன்றில் சென்று,
திரும்பி
மற்றதில்
தொடர
கைச்செலவாணி இல்லை.

மனம் மருகி நிற்கையிலே
சாலையிலே எழுதப்பட்ட
மஞ்சள் கோடு
என்னைப் பார்த்து சிரிக்கிறது......

*********

இதில் சில குறியீடுகள் மட்டுமே உள்ளன. இருண்மை இல்லை. ஆனால், இந்தக் குறியீடுகளைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் இருண்மை ஆக ஒதுக்கி விட்டுப் போய்விடுவான் வாசகன். இந்தக் குறியீடுகள் கவிதை எழுதும் அனைவராலும் பயன்படுத்தப்படுவது தான். சாலை, இடம், வலம், கைச்செலவாணி, மஞ்சள் கோடு இவைகள் தாம் குறியீடுகள்.

சாலை என்பது வாழ்க்கைப் பயணம்.
இடம், வலம் - முடிவு செய்ய வேண்டிய தருணம்.
கைச்செலவாணி - வாழ்க்கைக் காலம்.
மஞ்சள் கோடு - விதி.

இதில் மஞ்சள் கோட்டைத் தவிர மற்றவை அனைத்தும் எளிதாக புரிந்து கொள்ளப்படவேண்டியவையே....

மஞ்சள் கோட்டை எப்படிப் புரிந்து கொள்வது? மஞ்சள் கோடு சாலையின் விதிகளை நிர்ணயிக்கும் கோடு. அந்த விதிகள மீற முடியாது. சாலையின் விதிகள் என்று சொல்லிவிட்டோம். சாலை எதைக்குறிக்கிறது - வாழ்க்கைப் பாதையை. அப்படியானால் மஞ்சள் கோடு என்றால், வாழ்க்கைப்பாதையின் விதி என்றாகும்! இப்பொழுது எல்லா அர்த்தங்களும் விளங்கி விடும்.....

விதி என்னைப் பார்த்து சிரிக்கிறது என்று எழுதினால், அங்கு கவிதை போய்விடும் - உரை நடை ஆகிவிடும். ஒரு வாசகன், தொடர்ந்து தன் வாசிப்பினால், குறியீடுகளைப் பழகிக் கொள்ள வேண்டும்.




உதை பந்து..

இரண்டு அணியும்
ஒரே கோல் போஸ்ட் நோக்கி
உதைக்க
வதைபட்டு கிழிந்தே போனது..

இதில் என்ன என்ன குறியீடுகள் இருக்கும் - இளசு விளக்கம் கொடுக்கவில்லை. ஆகையினால், அது என்னவாக இருக்கும் என்று நாம் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது வாசகர்களாக, நம்முடைய intellectual capablitiesஐ உபயோகித்துப் பார்க்கலாமே......

பந்து விளையாடப்படுவது - மைதானத்தில். மைதானம் - ஒரு போராட்டக் களம். போராட்டக் களம் - வாழ்க்கையைக் குறிக்கும்.

இங்கு இரண்டு அணிகள் இருக்கிறது - இருவருக்குமே ஒரு லட்சியம் - goal இருக்கிறது. அடுத்தவர் களத்தில் இருக்கும் கோல் வளைக்குள் அந்தப் பந்தைத் தள்ளினால் வெற்றி. அப்படியானால், இலட்சியம் என்பது அடுத்தவர் வளைக்குள் அந்தப் பந்தை அடிக்க வேண்டும். ஆக, உதை பந்து ஒரு இலட்சியப் போராட்டம். அதில் போரிடுபவர்கள் எப்படி இருக்க வேண்டும்?

எதிராளியின் கோல் வளையை நோக்கி முன்னேற வேண்டும். நம் கோல் வளையை நோக்கி அவர்கள் முன்னேற்றத்தை நோக்கி தடுக்க வேண்டும். ஆனால், இங்கு என்ன நடக்கிறது. நாம் அவர்களைத் தடுக்க வில்லை. மாறாக, அவர்களுக்கு நம் வளை தகர்ந்து போக உதவுகிறோம். அதன் அர்த்தம் என்ன?

நமக்கு இலட்சியம் இல்லை. We do not have the goal and hence we do not have the resolve to win. முனைப்பு இல்லை. அதனால் தோற்றுப் போகிறோம். நம் இலட்சியங்கள் கிழிந்து தொங்குகின்றன. அது தான் கிழிந்து வதை படும் பந்து.

அந்தக் கவிதையின் அர்த்தம் இது தான் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளாமல், நமது புத்தியை உப்யோகித்து, விடை கண்டது இது. ஒரு கவிதை இவ்வாறான யோசனைகளைத் தூண்ட வேண்டும். நேரிடையாக 'இலட்சியம் கொள், வீறு கொண்டு எழு' என்று இரண்டே வரிகளில் சொல்லி விடலாமே! அது கவிதையாகாது. அறிவுரை ஆகும். விவேகானந்தர் போல சன்யாசியின் வார்த்தைகள் ஆகிவிடும்.

கவிஞன் சன்யாசி அல்ல. வாழ்க்கையைப் பார்ப்பவன். அறிந்து கொள்ள முயற்சிப்பவன். அனுபவம் பெறுபவன். பெற்ற அந்த அனுபவத்தை பிறருக்கு உணர்த்துவதன் மூலம் தான் சொல்ல நினைப்பதை பிறர் உணரச் செய்யமுனைகிறான். இந்தக் கவிதையை வாசிக்கும் வேறொருவரின் அனுபவம் வேறு மாதிரியாக இருக்கலாம். Same side goal அடித்து, திரை மறைவில் அதற்கு ஆதாயம் பெற்றுக் கொல்கிறான் என்று நினைப்பதும் இதில் சாத்தியமே. ஆனால், அதற்கான குறிப்புகள் எதுவும் இல்லை. இல்லாத குறிப்புகளைக் கொண்டு, ஆனால், நிகழக்கூடிய சாத்தியக்கூறுகளை நினைத்துக் கொள்வது, எழுதியவனுக்கும், வாசிப்பவனுக்கும் தோல்வியே!

சரி, மஞ்சள் கோட்டைப் பற்றி எழுதி இருக்கும் உங்கள் கவிதையில் என்ன அனுபவம் இருக்கிறது? அது ஒவ்வொருவருக்கும் நிகழலாம். நல்லது என்று தேர்ந்தெடுத்த பாதை தவறாகப் போய் விடக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. மீண்டு வந்து இன்னொரு பாதையில் பயணிக்க சாத்தியங்கள் இல்லாமல் போகலாம். இக்கட்டான முடிவு எடுக்க வேண்டிய நிலையில், நாம் என்ன சொல்வோம்? விதி சிரிக்கிறது என்று தான். அல்லது விளையாடுகிறது என்று. நம்மைப் பார்த்து கேலியாக சிரிப்பவனிடம் என்ன சொல்கிறோம் - விளையாடதே.... அது தான் இதுவும்.

இந்தக் கவிதையை எழுதியது என்னுடைய சொந்த அனுபவம் - Career என்ற பாதையில், இப்பொழுது இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை. இப்பொழுது வேலை செய்யும் இடத்தில், சென்னைக்கு செல்லுங்கள் - இப்பொழுது வாங்கும் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி தருகிறோம். உங்கள் மொழி ஊர். வசதி தானே என்கிறார்கள். அதே சமயம் - துபாயிலிருந்து அழைப்பு - லட்சங்கள் சம்பாதிக்க சாத்தியக்கூறுகள்....... இடமும் வலமுமாக இரண்டு சாலை - எங்கே போவேன்? குழப்பம். ஒரு இடத்திற்குப் போய்விட்டு அது பிடிக்கவில்லை என்றால், திரும்ப வந்து அடுத்த பாதையில் பயணிக்க காலம் அனுமதிக்காது. முடிவு செய்ய இருபக்கமும் கால அவகாசம் வாங்கிக் கொண்டு நிற்கிறேன்.......

இந்த அனுபவத்தை சொன்னதும் உங்களுக்குப் புரியும் - அந்தக் கவிதை எத்தனை எளிமையானது என்று. ஆனால், இந்த அனுபவத்தை தெரியாத பொழுது, இந்த மாதிரியான அனுபவம் இல்லாதவர்கள் கொஞ்சம் தடுமாறலாம். ஆனால் இருண்மை என்று அதை எப்படி சொல்ல முடியும்?

இங்கு நமக்கு வாய்ப்பு இருக்கிறது - முத்துவின் மாளிகையை நான் எவ்வாறு புரிந்து கொண்டேன் தெரியுமா? ஒரு புதிய தளத்தையே உருவாக்கிவிடுவோம் என்று. மாளிகை என்ற பொழுது நான் நினைத்தது - இன்னும் விசாலமான, புதிய தளம் என்று. அதற்கு அவசியம் இல்லையென்று எனக்குத் தோன்றினாலும், அந்தக் கவிதை என்னை இட்டுச் சென்றது அந்த மாதிரியான ஒரு சிந்தனைக்குத் தான். கற்றுக் கொள்வதில் எப்பொழுதுமே நான் வெட்கப்பட்டதில்லை. ஆகையால், தைரியமாகக் கேட்டே விட்டேன் - புரியவில்லையே என்று. இங்கு கேட்கவும், பதில் பெறவும் வசதி இருக்கிறது. தனிமடலில் முத்து பதில் கூறினார். அப்பொழுது அவரிடத்திலும் நான் சொன்னேன் - எப்படி என்னை அந்த வரிகள் சிந்திக்கச் செய்தது என்று. ஆக, இந்த வசதியை உபயோகித்துக் கொண்டு, கேட்டே பெற்று விடலாம் விளக்கங்களை. அதில் தவறும் இல்லை.

சரி, இனி மற்றவர்களின் கருத்திற்கு அப்புறம் மீதி உரையாடல்கள்......

முக்கியமாக, இளசு பதில் சொல்லிய பின்பு......அந்தக் கவிதையை எந்த அர்த்தத்தில் எழுதினார் என்று......

Nanban
29-11-2003, 10:31 AM
சற்று நேரம் திரும்பி வந்து படித்த பொழுது, முத்துவின் கருத்து சரியாக இருக்குமோ என்று தோன்றியது. பெற்றோர்கள் ஒரு அணியாகத் தான் இருக்க வேண்டும் - இரு அணிகளாக அல்ல. அவர்களுடைய இலக்கு ஒன்றாகத் தான் இருக்க முடியும் - அதனால் அவர்கள் எதிரும் புதிருமாக இயங்க முடியாது குழந்தையின் படிப்பைப் பொறுத்த வரையிலும். அது சரி வராது.

இலட்சியம் என்பது பொதுப்படையாக இருக்கிறது. இந்த லட்சியத்திற்கு ஒரு வடிவம் கொடுத்துப் பார்த்தால் தான் முழுமை அடையும். போராட்டக் களமாக நாட்டின் பாதுகாப்பு........போராடும் அணிகளாக நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் தீவிரவாதிகள் - அவர்களுடன் இணைந்து கொள்ளும் உள்ளூர் தீவிரவாதிகள்....... நாட்டின் பாதுகாப்பைப் பெற வேண்டிய மக்கள் தான் அவதிப் படுவார்கள் - வதை பட்டு.......

Nanban
29-11-2003, 12:26 PM
ஒரு இருண்மை மிக்க கவிதை எப்படி இருக்கும் தெரியுமா?

இதோ ஒரு சாம்பிள்.........

ஆத்மநாம் எழுதியது:

நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்...........

உங்கள் intellectual capablitiesஐ உசெ பண்ணி நிஜத்தைத் தேடுங்கள்...............

இதுதான் இருண்மை...........

முத்து
29-11-2003, 12:29 PM
நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்...........


நண்பன் அவர்களே ...
கவிதை பயங்கரமாக இருக்கிறது ... :D

முத்து
29-11-2003, 05:34 PM
சற்று நேரம் திரும்பி வந்து படித்த பொழுது, முத்துவின் கருத்து சரியாக இருக்குமோ என்று தோன்றியது. பெற்றோர்கள் ஒரு அணியாகத் தான் இருக்க வேண்டும் - இரு அணிகளாக அல்ல. அவர்களுடைய இலக்கு ஒன்றாகத் தான் இருக்க முடியும் - அதனால் அவர்கள் எதிரும் புதிருமாக இயங்க முடியாது குழந்தையின் படிப்பைப் பொறுத்த வரையிலும். அது சரி வராது.

ஒரே கோல்போஸ்டை நோக்கி உதைப்பதால் இலக்கு ஒன்றுதான் என்று எனக்குத் தோன்றியது ..


உதை பந்து..

இரண்டு அணியும்
ஒரே கோல் போஸ்ட் நோக்கி
உதைக்க
வதைபட்டு கிழிந்தே போனது..

நண்பன் அவர்களே ...
இளசு அண்ணாவின் அந்தக் குறியீட்டுக் கவிதையைப் படித்தவுடன் தோன்றியது இதுதான் என்றாலும் ஒரு விளையாட்டுக்காகத்தான் அதைச் சொன்னேன் என்றாலும் அது கொஞ்சம் பொருத்தமாகவே தோன்றுகிறது ... எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன் ...

ஒரு குழந்தையின் ஆர்வம் என்பது பள்ளத்தை நோக்கி ஓடும் தண்ணீரின் இயல்பைப் போல இருக்கவேண்டும் ... அது இயற்கையாக இருக்கவேண்டும் ... ஒரு பையனின் ஆர்வத்துக்கும் , முயற்சிக்கும் ஊக்கமளிக்கலாமே தவிர இதைத்தான் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது ...
அதாவது பெற்றோர்கள் குழந்தையின் ஆர்வம் , விருப்பம் இவற்றைத் தள்ளிவிட்டு தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை திணிக்கக்கூடாது .... பெற்றோரின் பங்கு ... நீரின் ஓட்டத்தை எளிதாக்கக் கால்வாயின் ஆழத்தை அதிகப்படுத்துவதுபோல இருக்கலாம் ... ஆனால் கால்பந்தை கோல் போஸ்ட்டை நோக்கி உதைப்பதாக இருக்கக்கூடாது ....

இன்று நிறைய நடப்பது கால்பந்தை உதைப்பதுதான் ... பையன் வேறு ஏதோ படிக்க நினைப்பான் .. பெற்றோர் தாங்கள் படிக்க நினைத்ததைத் தன் பையன் படிக்க வேண்டும் என்று நினைப்பர் .... இதுதான் அந்தக் கவிதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது .....

இப்போது ஒரு நகைச்சுவை எனக்கு ஞாபகம் வருகிறது ...( இங்கே வந்துவிட்டதா என்று தெரியவில்லை ...) இது கவிதைப் பகுதி என்றாலும் இங்கு கொஞ்சம் பொருத்தமாக இருப்பதால் இங்கேயே சொல்லிவிடுகிறேன் .... :D

குப்பு : எங்க அப்பா மாதிரி நானும் என் பையனை டாக்டராக்க விரும்புகிறேன் ....

சுப்பு : ஓ .. அப்படியா ... உங்க அப்பா டாக்டரா .. ?

குப்பு : இல்லை ... இல்லை .. நான் என் பையனை டாக்டராக்க நினைப்பதுபோல என்னை டாக்டராக்க நினைத்தார் ....

சுப்பு : .........? .......... ? .. !

poo
30-11-2003, 06:54 PM
என் " குறியீட்டுக் கவிதை" ஒன்று..

முதல் தலைப்பு:
உதை பந்து..

இரண்டு அணியும்
ஒரே கோல் போஸ்ட் நோக்கி
உதைக்க
வதைபட்டு கிழிந்தே போனது..



1.கணவன் - மனைவி சண்டையில் சிக்கி சின்னாபின்னமாகிப்போன சின்னஞ்சிறு பிஞ்சு!!


2. தேர்தல் களத்தில் நிற்கும் இருகட்சிகள்- வாக்காளன்!


3.பணம்தான் நிம்மதியென இருவரும் சம்பாதிக்க போராடிக்கொண்டு தமக்குள் எல்லா இன்பங்களையும் இழந்து..இருந்த நிம்மதியை தொலைத்துவிடுதல்!.

poo
30-11-2003, 06:56 PM
ஆனால்... அண்ணன் மிக எளிதான ஒன்றை நினைத்து இதை எழுதியிருந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை...

(அதனால்தான் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு நான் வருவதேயில்லை!!!)

இளசு
30-11-2003, 10:40 PM
முத்து, நண்பன், பூ - அனைவருக்கும் நன்றி.

பூவுக்குப் பதில் தரும் என் பதிவில் இருந்து
இதைத் தனித்தலைப்பாய்ப் பிரித்து
இன்னும் விரிவாய் அலசலாம் என்பது என் எண்ணம்...

உங்கள் கருத்து?

முத்து
01-12-2003, 07:13 AM
அண்ணா ..
தனித்தலைப்பாய்ப் பிரிப்பது இன்னும் வசதியாய்
இருக்கும் என்பதே என் எண்ணமும் ...
பூவுக்குப் பதில் தரும் பதிப்புக்கு முன்னரே கூட
சில பதிவுகளையும் அத்துடன் சேர்த்துக் கொள்ளலாமே ...

இளசு
01-12-2003, 05:48 PM
நண்பன், பூ -கருத்துகள் வரட்டும் முத்து.

poo
01-12-2003, 07:10 PM
மன்னிக்கவும்.. என் மனதில் ஓடியவைகளை பதித்துவிட்டேன்..யாரும் தவறாக எண்ணவேண்டாம்..தர்க்கங்களும் வேண்டாம்...

எனக்கு சமீபகாலமாய் எதுவும் எழுத தோணவில்லை...நிறைய படித்தால் நிறைய எழுதலாம்.. ஆனால் என்னில் அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்குகிறது...

படிக்கும் கவிதைகள் குறியீட்டுக் கவிதையாக இருக்கும்பட்சத்தில் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருண்டுவிடுவதாய் எண்ணம்...

நம்மைச்சுற்றி நிகழ்பவைகள் என் நெஞ்சில் வந்து நின்று இதுவா.. அதுவா.. என மனதை அலைகழித்து மூளைக்குள் வலியை உண்டாக்கும் உணர்வு...

மேலும் சொந்த வாழ்வின் சோகங்களும்கூட எட்டிப்பார்த்து "ஹாய்" சொல்கிறது.. சில கவிதைகளின் வரிகளுடனே..

அதிகமாக வெளிதொடர்புகளும்.. புத்தக தொடர்புகளும் கொண்டிருப்பவர்களுக்கு இது எளிதாக இருக்கலாம்.. களங்கள் பலவாக அவர்களுக்கு இருப்பதால் எதனூடும் ஒட்டி அதை புரிந்துகொள்ளலாம்...ஆனால் என்போன்ற குண்டசட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களுக்கு மண்டைவலிதான் மிச்சம்போலும்!!

நான் ஆராய்ச்சி மாணவன் அல்ல.. அனுபவிக்கும் சுகவாசியுமல்ல..

வீம்புக்காக வம்பில் மாட்டிக்கொள்வதாக உள்ளே உறைக்கிறது..
அதிகம் படிக்க வேண்டுமென புரியாததை படித்து புடம்போட்டு பார்க்கும் விஷப்பரிட்சையில் என்னையே பணயம் வைப்பதாய் உறைக்கிறது..

என் இரசனைகள் இதுமட்டும் இருக்கட்டும்.. படித்ததும் புரியும்படியான எளிய கவிதைகளை படித்து ஒரு சாமானியனாகவே இருந்துவிட்டு போகிறேன்.. என சத்தம்போட்டு சொல்லத் தோணுகிறது!!

ஆகையால்.. அண்ணா.. நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி.. செய்யுங்கள்.. நான் வரவில்லை இந்த விளையாட்டிற்கு!!

-குறிப்பு.. யார் மனதையும் புண்படுத்தும் முயற்சியல்ல இது.. என் தோல்வியை ஒப்புக்கொள்ளும் பண்பு(!?).

முத்து
01-12-2003, 09:55 PM
பூ .. என்ன ஆச்சு ... ?
படித்த பின்னர் நமக்கு என்ன தோன்றுதோ
அதுதான் மிகப் பொருத்தமானது என்று நாமாகவே
நினைத்துக் கொள்ளவேண்டியதுதானே ..

எப்படி இருந்தாலும் கடைசியில் எழுதியர்
அவர் நினைத்து எழுதியைச் சொல்லப்போகிறார் ..
அவ்வளவுதானே ...
கிட்டத்தட்ட விடுகதை போல ... :wink:
இதில் என்ன பெரிய குழப்பம் .. ?

இக்பால்
02-12-2003, 03:36 AM
பாராட்டுக்கள் ராம் அவர்களே.

ஆரேன் தம்பி கருத்து அருமை.

போன்சாயின் அழகை ரசிக்கும் உலகில் ...
அதன் அவலத்தை நினைத்த விதம் அருமை.

பூ தம்பி... என்ன அதிகமாய் சிந்திக்கிறீர்கள்?!
எதையும் சொல்லும் முன் யோசியுங்கள்.
சொன்னபின் நிலைத்து நில்லுங்கள்.
தன்னம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ளுங்கள்.

-அன்புடன் அண்ணா.

Nanban
02-12-2003, 07:54 AM
என் இரசனைகள் இதுமட்டும் இருக்கட்டும்.. படித்ததும் புரியும்படியான எளிய கவிதைகளை படித்து ஒரு சாமானியனாகவே இருந்துவிட்டு போகிறேன்.. என சத்தம்போட்டு சொல்லத் தோணுகிறது!!

ஆகையால்.. அண்ணா.. நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி.. செய்யுங்கள்.. நான் வரவில்லை இந்த விளையாட்டிற்கு!!

-குறிப்பு.. யார் மனதையும் புண்படுத்தும் முயற்சியல்ல இது.. என் தோல்வியை ஒப்புக்கொள்ளும் பண்பு(!?).

என்னாயிற்று பூ அவர்களே......

கவிதை ஒவ்வொருவருக்குள்ளும் எந்த மாதிரியான உணர்வுகளைத் தோற்றுவிக்கிறது என்பதைப் பொறுத்து தான் அதன் வெற்றி....

என் கவிதை ஏன் தப்பாகப் புரிந்து கொண்டாய் என்றும் யாரும் கேட்க முடியாது...

அதுபோல, ஏன் புரியாத கவிதைகளை எழுதுகிறாய் என்றும் கேட்கமுடியாது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் புரிதலுக்கேற்ற வகையில் கவிதை ரசிக்க வேண்டும். புரிதல் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். இதில் மனம் புண்பட ஏதுமில்லை. மன உளைச்சல் அடையவும் தேவையில்லை.

மற்ற எல்லா தளங்களையும் விட, இந்தத் தளத்தில் தான் இந்த மாதிரி விவாதங்கள் நடத்தி, நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. அதை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அவா....

தனித் தலைப்பாகத் தொடங்கி மேலும் விவாதிப்பதில் தவறு ஏதுமில்லை.......

இக்பால்
02-12-2003, 09:28 AM
நண்பர் நண்பனின் புரிந்து கொள்ளும் தன்மைக்கும், விசால மனப்பான்மை
கொண்ட மனதிற்கும் நன்றி.-அன்புடன் அண்ணா.

Nanban
02-12-2003, 09:40 AM
நண்பர் நண்பனின் புரிந்து கொள்ளும் தன்மைக்கும், விசால மனப்பான்மை
கொண்ட மனதிற்கும் நன்றி.-அன்புடன் அண்ணா.

எத்தனை குறியீடுகள் வைத்து
எழுதினாலும்
சக்திக்கேற்ற வகையில்
புரியும் தன்மை உண்டு.

குறியீடுகளே இல்லாமல்
எழுதினாலும்
குழப்பமடையாது
புரிந்து கொள்ளுவதும் உண்டு.

நேராகவும் இல்லாமல்
குறிப்பாகவும் இல்லாமல்
எழுதப் படுபவைகளைத் தான்
புரிந்து கொள்ள இயலவில்லை.

மனதினுள் எழுதிக் கொள்ளும்
கவிதைகளை
வாசிக்கத் தான்
இன்று வரையிலும்
யாரும்
சொல்லித் தரவில்லை எனக்கு.......

இக்பால்
02-12-2003, 09:54 AM
நண்பர் நண்பன் ... அடடா... நீங்கள் எதைப் புரிந்து கொள்ள
முடியவில்லை எனச் சொல்லி இருக்கிறீர்களோ அதை புரிந்து
கொள்வதில் சிறந்தவர் என்பதையும் சேர்த்துத்தான் சொன்னேன்.
பரவாயில்லை. உங்களைப் பற்றி உங்களுத்தான் நன்றாக தெரியும்.
(தவறாக எதுவும் எடுத்துக் கொள்ள வேண்டாம்)
-அன்புடன் இக்பால்.