PDA

View Full Version : தங்கமோ தங்கம்...ஆதவா
16-11-2010, 08:37 AM
உலோகங்கள்.....
மனிதனின் சொகுசு வாழ்க்கைக்காக கடவுள் பூமிக்குள் புதைத்து வைத்திருக்கும் பரிசுதான் உலோகங்கள். மனிதனின் அறிவால் எத்தனையோ உலோகங்களைக் கண்டுபிடித்துள்ளான். இன்றும் தன் வாழ்வில் உலோக சம்பந்தமில்லாத ஒரு மனிதனையும் பார்க்க முடிவதில்லை இல்லையா... உலோகங்கள் பற்றி எட்டாம் வகுப்பில் படித்தது மட்டுமே ஞாபகமிருக்கிறது. ஆனால் என்ன படித்தேன் என்று நினைவுகூற முடியவில்லை. பலராலும் அது முடிவதில்லை. ஆனால் இன்று உபயோகப்படுத்தப்படும் இரும்பிலிருந்து தங்கம் வரையான உலோகங்கள் குறித்து முன்பே அறிந்து மறந்து போயிருக்கிறோம் என்பது வேடிக்கையாக இருக்கிறது!!

தங்கம்!!!
பேரைக் கேட்டவுடனே காதில் ஜிவ்வென்று ஏறும் உலோகம். அடர்த்தி மிகுந்த மென்மையான உலோகம். ஆனால் இது எத்தனையோ கொலைகளுக்குக் காரணமான கொலை தனிமம். தங்கத்திற்காக எதையும் செய்யத் துணிந்தவர்களின் வரலாறை நாம் படிக்கிறோம். உண்மையில் தங்கம் என்பது என்ன? இத்தனை நாளும் நான் எனக்குள் கேட்டிராத கேள்வி இது.

தங்கம் பழங்காலங்களில் நாணயமாக பயன்படுத்தப்பட்டு வந்தது நீங்கள் அறிவீர்கள். அதேசமயம் ஆபரணமாகவும் பயன்படுத்தப்பட்டது. சுமார் ஐயாயிரம் வருடங்களாக மனிதனின் இனம்புரியாத கவர்ச்சியில் தங்கம் பெருமளவில் வசித்து வருகிறது. எகிப்து பிரமிடுக்குள் சமாதியான மன்னனின் தங்க ஆபரணங்கள், தங்கத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. எகிப்தில் கெய்ரோ அருங்காட்சியகத்தில் இன்றும் நாலாயிரம் வருடத்திற்கு முந்தைய தங்க ப்லேட்டுகளும் பாத்திரங்களும் உள்ளன. எனில் அப்பொழுது தங்கச் சுரங்கங்கள் எப்படி இருந்திருக்கும்? அதில் பணி செய்தவர்கள் குறித்த எண்ணங்களை நீங்களே நினைத்துக் கொள்ளலாம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் திருவள்ளுவரும்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

என்ற குறளில் தங்கத்தைக் குறித்து சுடச்சுட ஒளிவிடும் பொன் என்று எழுதியிருக்கிறார். ஆக தங்கம் இன்று நேற்று முளைத்து மனிதனோடு ஒன்றியவையல்ல. பழங்காலமாக மனிதனின் வாழ்வில் ஒட்டிக் கொண்டேவந்திருக்கிறது. தங்கத்திற்கான படையெடுப்புகள் பற்றியும் அறிந்திருப்பீர்கள்! இந்த பழகிப் போன ஹிஸ்டரியை இத்தோடு நிறுத்திக் கொண்டு அடுத்த கட்டத்திற்குள் நுழைவோம்.

மண், ஆறு, கடல் ஆகிய வளங்களிலிருந்து தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது. இதற்கு பல முறைமைகள் உண்டு.

1. சலித்தல்
2. ஸ்லுஸ் பெட்டி
3. சேறு வாரியெடுத்தல்
4. உலோகம் அறி கருவிகள்

ஆகியன குறிப்பிடத்தக்கன.

சலித்தல் முறையை நாம் பல இடங்களில் கண்டிருக்கலாம். பெரும்பாலான நகரங்கள் நகைத் தொழில் செய்யும் வீதிகளில் சாக்கடை மண்ணை அள்ளி சலிப்பார்கள். இதில் மிகவும் குறைந்த அளவே (மில்லி கிராம்) தங்கம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தங்கம் இருப்பதாகக் கருதப்படும் மண்ணை சட்டியில் போட்டு சலித்து எடுக்கலாம். தங்கம் அடர்த்தி அதிகமானது என்பதால் அது சட்டியின் அடியில் தங்கிவிடும், மற்ற உலோகங்களை வெளியேற்றிவிடலாம். இது பெருமளவு எடுப்பதற்கான உத்தியல்ல. ஸ்லூஸ் பெட்டிகள் என்பது சலித்தெடுக்கப்படுதலை சற்று பெரிய அளவில் செய்யப்படுவதைப் போன்றதாகும். இது நீளமான பெட்டியில் நீரைப் பாய்ச்சி தங்கம் பிரிக்கும் உத்தி. இன்னும் பெரிய அளவில் Dredging முறையில் எடுக்கப்படுகிறது. இந்த ட்ரெட்ஜிங் இயந்திரம் ஸ்லூஸ் பெட்டியுடன் இணைந்திருக்கும் கடல் நீரிலோ, ஆற்று நீரிலோ அடியில் கிடக்கும் மண்ணை உறிஞ்சி ஸ்லூஸ் பெட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தங்கம் பிரிக்கப்படுகிறது. இதுபோன்று இன்னும் சில முறைகளும் உண்டு.

தங்கம் கிடைக்கிறது என்றவுடன் அது சுத்தமாகக் கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். தங்கம் சிலசமயம் மட்டுமே துகள்கூட்டுகளாக அல்லது கட்டிகளாகக் கிடைக்கும். பெரும்பாலும் தாதுப்பிண்டங்களோடு துகள்களாகக் கலந்திருக்கும். இதை சைனடை வினைபுரிதலோடு தனியாகப் பிரிக்கிறார்கள். பாதரசம் மற்றும் நைட்ரிக் அமிலம் மூலமும் தங்கத்தைப் பிரித்தெடுக்க முடியும். சிலசமயம் இந்த தங்கத் தாதுப்பிண்டங்களில் வெள்ளியும் கலந்திருக்கும் இதை பலவகையான முறையிலும் பிரிக்கிறார்கள். நைட்ரோ ஹைட்ரோகுளோரிக் அமிலம், குளோரின் வாயு மூலமும் தங்கத்தின் தரத்தை (99.99 % தரம்) உயர்த்திப் பிரிக்கலாம்.

தங்கம் மெலிதான, அடர்த்தியான, ஒளிவீசக்கூடிய உலோகம். எத்தனை வருடங்கள் ஆனாலும் நிறம் மாறாத, துருப்பிடிக்காத, தரம் குறையாத உலோகம்.. தங்கம் வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தக்கூடியது. பூமியில் மிக மிக குறைவாகவே கிடைக்கும் அரிதான உலோகங்களில் தங்கமும் ஒன்று. மனித வரலாறில் இதுவரை 1,65,000 டன் எடையுள்ள தங்கம் பூமியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு டன் தாதுக்களில் ஒன்றிரண்டு கிராம் தங்கம் மட்டுமே கிடைக்கும். இது பாதரசத்தைத் தவிர சாதாரணமாக வேறெதிலும் கரையாது. (வேறுமுறையிலும் கரைவதுண்டு..) நைட்ரிக் அமிலத்தில் மற்ற உலோகங்கள் யாவும் கரைந்துவிடும், தங்கம் கரைவதில்லை என்பதால் தங்கத்தைப் பரிசோதிக்க நைட்ரிக் அமிலத்தை உபயோகிப்பார்கள்.

பொதுவாக, வெள்ளி, செம்பு, துத்தநாகம் போன்ற சில உலோகங்களோடு தங்கம் கலப்பதுண்டு. அதனதன் சதவிகிதத்திற்கேற்ப தங்கத்தின் நிறம் மாறும்.

நூற்றுக்கும் மேற்பட்ட உலோகங்கள் அனைத்திலும் மிக உயர்ந்ததும் விலை மதிப்புமிக்கதும், பெண்களைக் கவரக்கூடியதுமாகிய தங்கம் குறித்த சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்!!

1. பொதுப்பண்புகள் :

குறியீடு : Au (லத்தீனில் Aurum)
அடர்த்தி : 19.320 g/cm3
உருகுநிலை : 1064.18 °C,
அணு எண் : 79
நிறம் : மஞ்சள்

2. எடையளவு

1000 கிராம் = 1 கிலோ பார் தங்கக்கட்டி இது 99.50 % சுத்தமானது
10 தொலா = 116.640 கிராம்
1 ட்ரய் அவுன்ஸ் = 31.104 கிராம்
1 பவுண்டு = 453.600 கிராம்
1 பங்கு = 280.000 கிராம்

இவையனைத்தும் 99.90% சுத்தமானது.
தங்கம் இறக்குமதி செய்யப்படும்பொழுது ட்ரய் அவுன்ஸ் கணக்கிலேயே செய்யப்படும்.

3. தங்கத்தின் தரம்

தங்கத்தின் தரத்தை Karat or Carat எனும் மதிப்பால் குறிப்பிடுவார்கள். மிக சுத்தமான 99.99% தங்கம் 24 KT என்று குறிப்பிடப்படுகிறது

1 kt = 0.200 மில்லி கிராம்
1 kt = 100 செண்ட் அல்லது 1 பாயிண்ட்
1 செண்ட் = 0.002 மில்லிகிராம்
5 கேரட் = 1 கிராம்
24 கேரட் = 99.99 % தங்கம்
1 கேரட் = 4.166 %
9 கேரட் = 37.494 %
14 கேரட் = 58.324 %
18 கேரட் = 74.988 %
21 கேரட் = 87.486 %
22 கேரட் = 91.652%
24 கேரட் = 99.984 %

நாம் அணியும் ஆபரணங்கள் 24 கேரட்டில் செய்ய முடியாது. ஏனெனில் தங்கம் மென்மையானது ; அதனோடு வெள்ளி, செம்பு, காட்மியம், ஜின்க் போன்ற உலோகங்களைக் கலக்க அது உறுதி பெற்று அணிகலன்களை உருவாக்க முடியும். நீங்கள் தங்கம் வாங்கும்பொழுது அது எத்தனை சதவீதம் இருக்கிறது என்று பார்ப்பது நல்லது. 22 கேரட்டுக்குக் கீழ் தங்கம் வாங்குவது தவிர்ப்பது நல்லது. உதாரணத்திற்கு

21 கேரட்டில் ஆபரணம் வாங்குகிறீர்கள் என்றால் அதில் 87.486 % மட்டுமே சுத்தமான தங்கம் இருக்கும், மீதியிருப்பவை மற்ற உலோகங்கள்.


தங்கத்தின் தரம் குறைத்தல்

தங்கத்தில் செம்பு மற்றும் வெள்ளி கலந்தால் மட்டுமே அதை அணிகலன்களாக மாற்றமுடியும் என்று சொன்னேனல்லவா... எனில் எத்தனை சதவீகிதத்திற்கு எத்தனை கிராமுக்கு செம்பு கலக்கவேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கு ஒரு Formula இருக்கிறது

a - b
------- x w
b

இதில்
a என்பது தங்கத்தின் தற்போதைய தரம்
b என்பது வேண்டப்படும் தரம்
w என்பது எடை

உதாரணத்திற்கு

1 கிலோ கிராம் (99.50%) அளவுள்ள சுத்த தங்கத்தின் தரத்தை 90 % ஆக மாற்ற எத்தனை செம்பு கலக்கவேண்டும்?

1 கிலோ கிராம் = 1000 கிராம்
தரம் a = 99.50%
வேண்டப்படும் தரம் b = 90 %

a - b
------- x w
b

99.50 - 90
-------------- x 1000
90

கிடைக்கும் விடை = 105.55 கிராம்.

ஆக ஒரு கிலோ எடையுள்ள சுத்த தங்கத்தின் தரத்தை 90 % ஆக மாற்ற 105.55 கிராம் செம்பு கலக்கவேண்டும். மொத்த எடை 1000+105.55 = 1105.55 கிராம் இருக்கும்.

தங்கத்தின் தரம் உயர்த்துதல்

தரத்தில் குறைந்த தங்கத்தை உயர்த்த வேண்டுமெனில் அதற்கும்
ஒரு formula இருக்கிறது

b - a
--------- x w
100 - b

or

b - a
------- x w
24 - b

இதில்

a என்பது தற்போதுள்ள தங்கத்தின் தரம்
b என்பது வேண்டப்படும் தங்கத்தின் தரம்
w என்பது எடை
100 என்பது தங்கத்தின் மிக சுத்தமான தரமான 99.99 %
24 என்பது கேரட்

உதாரணத்திற்கு

1000 கிராம் எடையுள்ள 90 % தரமுள்ள தங்கத்தை எப்படி 99 சதமாக மாற்றுவது?

a = 90
b = 99
w = 1000

b - a
--------- x w
100 - b

99 - 90
----------- x 1000
100 - 99

இந்த சமன்பாட்டில் வரும் விடை = 9000. ஆக, 1000 கிராம் எடையுள்ள 90 % தரமுள்ள தங்கத்தை 99 % விகிதம் மாற்ற 9000 கிராம் அதாவது 9 கிலோ சுத்த தங்கம் தேவைப்படும்.. ஆனால் இது சாத்தியமா என்று பார்த்தால், இதைவிட அருமையான முறைகள் உண்டு! இந்த முறையில் யாரும் மாற்றுவதில்லை.


தங்கத்தின் தரம் பார்த்தல்

நாம் வாங்கும் தரம் அல்லது நம்மிடம் உள்ள தங்கத்தின் தரத்தை எப்படி சரிபார்ப்பது?
அதற்கு 5 வகையான வழிமுறைகள் உள்ளன.

அ. உரைகல் (Touch Stone)
ஆ. அடர்த்தி முறை (Density Measurement)
இ. XRF (X-ray fluorescence spectrometer)
ஈ. ICP (Inductively Coupled Plasma with spectrometer)
உ. குப்பல்லேஷன் (Cupellation)

அ. உரைகல்

பெரும்பாலும் நாம் இந்த முறையையே பார்த்திருப்போம். உரைகல்லில் உரசி தங்கத்தின் தரத்தைப் பார்த்தல்.. இது 100 % துல்லியமானது அல்ல. இதன்மூலம் எப்படி தரம் கவனிக்கப்படுகிறது?

தங்கம் மென்மையான உலோகம் என்பதால் உரசுவதற்கு மிருதுவாக இருக்கும். உரசும் ஒலி அவ்வளவாக எழாது.
உரசியபின்னர் உரைகல்லில் தங்கத்தின் துகள்கள் சிதறியிருக்கும் ; மற்ற உலோகங்களில் சிதறாது
தங்கத்தின் நிறமான மஞ்சள் வர்ணத்தில் இருக்கும்
உரசியபின்னர் நைட்ரிக் அமிலச் சொட்டினால் தங்கம் எந்த மாற்றத்திற்குள்ளும் ஆகாது,. (மற்ற உலோகங்கள் கரைந்துவிடும்)
உரசிய ஒரு நிமிடத்தில் உப்பு துகள்களால் உரசிய தங்கத்தின் நிறம் மாறாது (மற்ற உலோகங்கள் பச்சை வர்ணத்தில் மாறும்)
தரம் எவ்வளவு உள்ளது என்பது அறிய “துகள் சிதறல்”, ”நிறம்” “ ”அமிலச்சோதனை மாற்றம்” ஆகியவை கொண்டு கணிக்கலாம்.


ஆ. அடர்த்தி முறை

இது ஆர்க்கிமிடிஸ் தத்துவப்படி உருவாக்கப்பட்ட எடை இயந்திரம் ஆகும், இந்த எடை இயந்திரத்தின் அடியில் நூல் இருக்கும் ; முதலில் சாதாரணமாக எடை போட்டு பின்னர் நூலில் கட்டி நீருக்குள் தங்கத்தை மூழ்கச்செய்து எடை போடவேண்டும். சாதாரணமாக எடை போடுவதை ”காற்றில் எடை போடுதல்” என்பார்கள். இந்த இரு எடைகளையும் கழித்து காற்றினால் போடப்பட்ட எடையால் வகுக்க, வரும் விடையே தங்கத்தின் தரமாகும். நீரின் அடர்த்தி 1 கிராம் என்பதால் தரம் தெரிந்துவிடுகிறது.

இ. X-ray fluorescence spectrometer

http://img.directindustry.com/images_di/photo-g/micro-x-ray-fluorescence-xrf-spectrometer-184570.jpg

X-ray மூலமாக தரம் காணப்படும் இயந்திரம் ஆகும். இந்த இயந்திரத்தையே பெரும்பாலான பெரிய நகைக் கடைகள் மற்றும் ஹால்மார்க் செண்டர்கள் வைத்திருப்பார்கள். இந்த இயந்திரத்தில் 20 லிருந்து 30 மைக்ரான் (20/1000 mm) அளவு கதிர் பாய்ந்து உலோகங்களின் சதவிகிதத்தை 99 சதவிகிதம் வரை துல்லியமாகக் காணலாம்.

ஈ. ICP

http://bohr.winthrop.edu/icp.jpg

இதுவும் உலோகங்களின் விபரங்கள் அறியும் ஒருவகை கருவி. இக்கருவியில் X-Ray Tourch பொருத்தியிருப்பார்கள். தங்கத்தின் மேல் சுமார் 2 மணிநேரம் வெளிச்சம் ஒளித்து கண்டறிவார்கள்.

உ. குப்பல்லேஷன் (Cupellation)

இதனை பொதுவாக ஆசிட் டெஸ்டிங் என்று சொல்லுவார்கள். ஹால்மார்க் சீல் வைக்க இந்தவகை தரம் அறியும் முறை கட்டாயம் தேவை. ஏனெனில் மற்ற நான்குவகை சோதனையில் தங்கத்தின் தரத்தை மிகத் துல்லியமாக அறியமுடியாது. XRF ல் கூட .10 %லிருந்து .30 % வரை மாறுபாடு இருக்கும். குப்பலேஷனில் அப்படி இருக்காது.
எப்படி கண்டறிவார்கள்?

250 மி.கிரா அளவுள்ள தங்கத்தை வெட்டியெடுத்து 4 ஸ்தானங்கள் அடங்கிய எடை இயந்திரத்தில் எடை போடுவார்கள். எடையானது 2501 (.2501 கிராம்) லிருந்து 2505 (.2505 கிராம்) வரை வரும்.

250 மி.கிராம் அளவுள்ள தங்கத்தின் தரம் அறிய அதைவிட ஒருமடங்கு அதிகமாக வெள்ளி சேர்த்து உருக்குவார்கள் அதாவது 500 மி.கிராம் வெள்ளி, உருக்கிய உருண்டையை ஒரு காரீய தகட்டில் சுருட்டி மங்கனீசியமும் விலங்குகளில் எலும்புகளாலும் ஆன ஒரு குப்பியில் வைத்து 1000 டிகிரி வரை சூடேற்றுவார்கள். அந்த சூழ்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி தவிர, மீதி இருக்கும் உலோகங்கள் யாவும் குப்பியில் ஒட்டிக் கொள்ளும். செம்பை, காரீயம் உறிஞ்சிக் கொள்ளும். ஆக, சுத்தமான தங்கமும் சுத்தமான வெள்ளியும் கலந்த கலவை நமக்கு கிடைத்துவிடும். இந்த கலவையை சுருளாக சுருட்டி

நைட்ரிக் அமிலம் + டிஸ்டில்ட் வாட்டர் கலந்த ஒரு குடுவையில் கலந்தால் வெள்ளி முழுவதும் நைட்ரேட் ஆக மாறி கரைந்துவிடும், வெள்ளி முழுவதுமாக நைட்ரேட் ஆனபிறகே தங்கத்தை குப்பியிலிருந்து எடுக்க முடியும் என்பதால்

நைட்ரிக் அமிலம் 1 பங்கு - டிஸ்டில்ட் வாட்டர் 2 பங்கு எனும் விகிதத்தில் ஒருமுறையும்
நைட்ரிக் அமிலம் 1 பங்கு - டிஸ்டில்ட் வாட்டர் 1 பங்கு எனும் விகிதத்தில் ஒருமுறையும்
இறுதியாக
நைட்ரிக் அமிலத்தில் மட்டும் அச்சுருள்களைப் போட்டு எடுக்க, சுத்தமான வெள்ளியாவும் நைட்ரேட் ஆகிவிடும்..

குப்பியில் இருக்கும் மிகச் சுத்தமான தங்கத்தை எடைபோட்டு பார்ப்பார்கள். அதன் எடை எவ்வளவு குறைந்திருக்கிறதோ அவ்வளவு தரமும் குறைந்திருக்கும்.
உதாரணத்திற்கு .2320 கிராம் எடை வந்திருந்தால், முதலில் போடப்பட்ட எடையோடு வகுத்து 100 ஆல் பெருக்கவேண்டும்,

2320
-------- x 100
2502

விடையானது 92.72% ஆகும்...
வெட்டியெடுக்கப்பட்ட தங்கம் 92.72 % தரத்தைக் கொண்டிருக்கும்.

4. சுத்திகரித்தல். அல்லது தங்கத்தைப் பிரித்தல்

தங்கத்தின் தரத்தை உயர்த்துவது பற்றி மேலே எழுதியிருந்தேன். ஆனால் அது வெறும் ஃபார்முலாவாக மட்டுமே பார்க்கப்படுகிறது. உண்மையில் சுத்தமான தங்கத்தை மற்ற உலோகங்களிலிருந்து பிரிப்பதற்கு கீழ்காணும் முறையையே எல்லோரும் பயன்படுத்துவார்கள். தங்கத்தை பூமியிலிருந்து வெட்டியெடுத்தபிறகும் இதே முறைதான்..

அக்வாரிஜியா என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழில் இராஜதிராவகம் என்று சொல்லுவார்கள். நைட்ரிக் அமிலம் 1 பங்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் 3 பங்கும் இணைந்த கலவையே இராஜதிராவகம் அல்லது அக்வாரிஜியா என்பார்கள்.

100 கிராம் தங்கத்திலிருந்து சுத்தமான தங்கம் மற்றும் மற்ற உலோகங்களை எப்படி தனித்தனியாகப் பிரித்தெடுப்பது?

1 கிராமுக்கு 1 மில்லி அளவு எனும் கணக்கில் 100 கிராமுக்கு 100 மில்லி நைட்ரிக் அமிலமும் 300 மில்லி (1:3) ஹைட்ரோகுளோரிக் அமிலமும் இணைக்க வேண்டும் (இப்போதே அல்ல). 100 கிராம் தங்கத்தை நன்கு உருக்கி அதை தண்ணீரில் (H2O) ஊற்ற அது பூ மாதிரியான வடிவம் பெறும். அந்த வடிவத்தை 100 மில்லி ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஊற்றிய குடுவையில் போட்டு பிறகு நைட்ரிக் அமிலம் (300 மில்லி) ஊற்றி லேசாக சூடேற்றுவார்கள். இதில் செம்பும் தங்கமும் கரைந்துவிடும் அதாவது திராவகத்தோடு கலந்துவிடும் ஆனால் வெள்ளி மட்டும் கரையாது. வெள்ளி பொடிப்பொடியாகி குடுவையின் அடியிலேயே தங்கிவிடும். இவற்றை மோட்டார் இணைத்த இன்னொரு குடுவையில் Filter Paper வைத்து ஊற்றுவார்கள். இந்த பேப்பரானது மிக நுண்ணியமான துளைகளைக் கொண்டது. குடுவையோடு இணைக்கப்பட்ட மோட்டார் குடுவைக்குள்ளிருக்கும் காற்றை வெளியேற்றி குடுவைக்குள் வெற்றிடத்தை ஏற்படுத்திவிடும். Filter Paper ல் பொடிப்பொடியாக பவுடர் மாதிரியாக இருக்கும் வெள்ளியை தனியே எடுத்து வைத்துக் கொள்வார்கள். இதில் எவற்றையும் விரலால் தீண்டக்கூடாது என்பது மிகமுக்கியம். இப்பொழுது திராவகமாக இருக்கும் தங்கம்+செம்பினை இன்னொரு குடுவையில் ஊற்றி Sodium Mettaby Sulphate or Ferrous Sulphate தண்ணீரை இக்குடுவையில் ஊற்ற முன்பு வெள்ளி பொடிப்பொடியானது போல தங்கம் பொடியாகிவிடும். மீண்டும் அதேமுறையில் Filter Paper வைத்து தங்கப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
இதில் தங்கமானது 99.999% வரை மிகச்சுத்தமாகக் கிடைக்கும்.

சோடியம் மெட்டாபை சல்பேட்டுக்குப் பதில் கோல்ட் ரீஜெண்டும் (Reagent) உபயோகப்படுத்துவார்கள். ரீஜெண்ட் திரவ நிலையில் இருக்கும், அதற்கு வினைபுரி சக்தி மிக அதிகம் என்பதால் 1 பங்கு ரீஜெண்டுக்கு 7 பங்கு நீரை ஊற்றி சுத்திகரிக்கலாம்.

நண்பர்களே.... தங்கம் குறித்து ஓரளவு எழுதியிருப்பதாக நினைக்கிறேன். உங்கள் சந்தேகங்களை என்னிடம் கேட்கலாம்!!

ஸ்ரீதர்
17-11-2010, 03:32 AM
அருமையான விளக்கங்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ..

கீதம்
17-11-2010, 06:24 AM
இந்த காலாண்டில் என் மகனின் அஸைன்மென்ட் தங்கம் பற்றியது. அவனுக்கு உங்கள் கட்டுரை பலவிதங்களில் உதவியது. நானும் பல தகவல்களை அறிந்துகொண்டேன். மிகவும் நன்றி ஆதவா.

பாரதி
17-11-2010, 06:30 AM
அருமை ஆதவா...! மிகவும் நன்றி.

சிவா.ஜி
17-11-2010, 07:08 AM
அசத்தல்...இப்ப தங்கம் விக்கிற விலைக்கு....இப்படி கட்டுரையில படிக்கத்தான் முடியும். நல்ல உழைப்பு தெரியுது ஆதவா. ரொம்ப நன்றி.

ஆதவா
17-11-2010, 07:42 AM
நன்றி நன்றி நன்றி!!!

@ கீதம் அக்கா..
உங்கள் மகனிடம் கேட்டு அல்லது அவரே நேரடியாக தங்கம் பற்றி இங்கே பகிர்ந்து கொள்ளலாம். நானும் தெரிந்து கொள்வதாக இருக்கும்.

@ சிவா.ஜி அண்ணே,

இப்ப கிட்டத்தட்ட 15000 க்கு விற்கப்படற தங்கத்தோட மோகம் இன்னும் குறையலைன்னாலும் முதலில் இருந்த மாதிரி இல்லை, ஏழைகளால் நெனச்சுக்கூட பார்க்க முடியாத உலோகம் ஆயிடுச்சு......
சொல்ல முடியாது, ஷேர்மார்கட்ல இருந்து தங்கத்தை தூக்கிட்டா, படார்னு குறையும்.. நடக்குமா?
அடுத்த வருஷம் 20000 ரூபாய் ஆகிறதுக்குள்ள இப்பவே வாங்குங்க..... (எதுக்கும் ஜனவரி வரைக்கும் காத்திருப்பது நல்லது)

M.Jagadeesan
17-11-2010, 08:48 AM
தங்கத்திற்கு மருத்துவ குணம் உண்டா?

ஆதவா
17-11-2010, 09:34 AM
தங்கத்திற்கு மருத்துவ குணம் உண்டா?

நிச்சயமாக உண்டு. மருத்துவத்தில் இதை பயன்படுத்துகிறார்கள்.

மூட்டுகளை பாதிக்கு Rheumatoid Arthritis (http://en.wikipedia.org/wiki/Rheumatoid_arthritis) எனும் நோய்க்கு தங்கம் குளுகோஸாக செலுத்தப்பட்டு பயன்படுகிறது. கோல்ட் தைகுளுகோஸ் (http://en.wikipedia.org/wiki/Aurothioglucose)என்று இது அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் செய்யப்படுவதில்லை ; காஸ்ட்லி, மற்றும் ஆபத்து அதிகம்.

govindh
17-11-2010, 10:58 AM
தங்கம் - தகவல்கள்
தந்த ஆதவாவிற்கு
மிக்க நன்றி.