PDA

View Full Version : வெள்ளைக் காகிதம்



PremM
14-11-2010, 10:52 AM
கருப்பு,சிவப்பு என பேதம் இல்லை,
எனவே நிறவெறி அற்ற சமூகமாய்
அறிவிக்கிறேன் உன்னை..

பொருளாதார ஏற்றத்தாழ்வில்
நீயும் ஒடுக்கப் படுகிறாய்
பேப்பர் பந்தாய் மாறுகையில்..

காயப்படுத்த எண்ணம் இல்லாத காரணத்தினால்,
போர்களத்தில்,
சமரசப் உடன்படிக்கைகளே உன் மேல் எழுதப்படுகின்றது..

முதல் குட்டு,
முதல் சபாஷ்
இரண்டையும் நீ வாங்கி விடுகிறாய்
ஒரு மாணவனுக்கு கிடைக்கும் முன்,

முதல் கண்ணீர்,
முதல் முத்தம்
இரண்டையும் நீ ஏந்திக் கொள்கிறாய்
ஒரு காதலனுக்கு கிடைக்கும் முன்,

உன்னை அடித்தும்,திருத்தியும்
தன்னை வளர்த்த கவிஞர்கள் ஏராளம்..

கவிஞன் கசக்கி எறிந்த வெள்ளை காகிதத்தில்
ஒரு கர்வம் ஒளிந்திருக்கும்,
அவனை ஒரு படி ஏற்றி விட்டோமென..

தொழில்நுட்பமும்,கணிப்பொறியும் வளர்ந்து விட்டபோதிலும்,

எல்லா உயிருனுள்ளும் இருக்கின்றது,
ஏதோ ஒரு புதிய நோட்டு புத்தகத்தின் உன் வாசம்..

எல்லா குழந்தையினுள்ளும் மிதக்கின்றது,
ஏதோ ஒரு காகிதக் கப்பலில் உன் நினைவுகள்..

இறுதியாய் ஒரு கேள்வி,
உயிரற்ற பொருள் நீ என்றால்,
உணர்வுகளை எப்படிச் சுமக்கிறாய்?
-பிரேம்

சிவா.ஜி
14-11-2010, 04:13 PM
அழகான சிந்தனை. முதல் குட்டு, முதல் முத்தம்...பிரமாதமான வரிகள். வித்தியாசமாய் வந்தக் கவிதை வரிகள். வாழ்த்துக்கள் பிரேம்.

PremM
14-11-2010, 05:03 PM
மிக்க நன்றி திரு,சிவா..வாழ்த்துக்களுக்கு நன்றி.. :)

கீதம்
14-11-2010, 08:40 PM
வெண் மை பூசிய காகிதத்தின்
உண்மைகள் உணர்த்தினீர்!
பேனா முனை உழுது விதைத்த
எழுத்துகளுக்கு
உணர்வின் உரமூட்டி வளர்த்து
அறுவடை செய்திட
எங்களை ஏவிவிட்டீர்!

அமோக மகசூலில் உம் பங்கு
அன்பான பாராட்டுகள் மட்டுமே!.

ஆதவா
15-11-2010, 03:49 AM
இறுதியாய் ஒரு கேள்வி,
உயிரற்ற பொருள் நீ என்றால்,
உணர்வுகளை எப்படிச் சுமக்கிறாய்?


வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கிறது
தொடர்ந்து எழுதுங்கள்.
:icon_b:

PremM
16-11-2010, 05:09 AM
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கீதம் & ஆதவா..

கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்...

:)

வசீகரன்
16-11-2010, 08:47 AM
காகிதத்திற்கு கவிதை...
அருமை நண்பரே!
நல்ல சிந்தனை! பாராட்டுக்கள் பல..!

பென்ஸ்
18-11-2010, 10:25 PM
உன்னை அடித்தும்,திருத்தியும்
தன்னை வளர்த்த கவிஞர்கள் ஏராளம்..

......
........
இறுதியாய் ஒரு கேள்வி,
உயிரற்ற பொருள் நீ என்றால்,
உணர்வுகளை எப்படிச் சுமக்கிறாய்?
-பிரேம்

நான் ரசித்த அழகு வரிகள்....

பிரேம்... வடிக்கும் முன் நீங்கள் ரசித்து இருந்திருக்க வேண்டும்..
இல்லையேல் இவ்வளவு அழகான வார்த்தைகள் அமைவது கடினம்...

செல்வா
19-11-2010, 01:55 AM
இறுதி வரிகள் அருமை....

தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்....!

PremM
20-11-2010, 07:12 AM
தங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி பென்ஸ் & செல்வா..
@பென்ஸ் - கண்டிப்பாக எல்லா வரிகளையும் ரசித்து எழுதுவதுண்டு..
இதை எழுதுகையில் ஒரு காகிதம் நம்மை அறியாமல் ,நம் வாழ்வில் இத்தனை வடிவத்தில் ஒரு உறவு வைத்திருப்பதை எண்ணி வியந்தேன்...

govindh
20-11-2010, 09:18 AM
வெள்ளைக் காகிதம்-கவி
வெகு அருமை.

வாழ்த்துக்கள் பிரேம்.

அக்னி
22-11-2010, 12:58 PM
பார்த்ததும் கிறுக்கத் தூண்டும் வெள்ளைக்காகிதம்...

சில சிற்பமாவதும், சில சித்திரமாவதும்,
சில சிறுகதையாவதும், சில கவிதையாவதும்
வெள்ளைக்காகிதம் தன்மேல் அனுமதிக்கும் தழும்புகளே...

இந்தத் தழும்புகளின் விளிம்பு தாண்டிப் பார்த்த கவிதை அற்புதம்...

இந்த வெண்மைப் பக்கங்கள்
தம்மீதான தழும்புகளை
முதன்மைப்படுத்துவதனால்
அத்தழும்புகள் அழகியலாவது
அற்புதம்...
அது வெள்ளைக் காகிதம் தரும்
பெரும் கற்பிதம்...

பாராட்டு...

அமரன்
22-11-2010, 06:04 PM
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்..

எண்ணமும் அதைப் பதிவு செய்தலும் (செயல்படுத்தல் என்றும் கொள்ளலாம்) அவ்வளவு முக்கியமாம்.

அத்தகைய எழுத்தினை துப்பும் துப்பாக்கி பேனாவை எழுதிப் பார்க்க காகிதத்தைத் தவிர வேறெதுவும் பொருத்தமான தளமில்லை.

அந்தக் காகிதம் கையில் கிடைத்தால் கிறுக்கியோ, கசக்கியோ, கிழித்தோ, என்ன பாடு படுத்தினாலும் காகிதம் என்ற உயிருடன் இருக்கும். பயன் தரக்கூடியதாகவே இருக்கும்.

அப்படிப்பட்ட காகிதத்தை சிலாகித்துப் பாடிய கவிதை சிறப்பாக உள்ளது.

பாராட்டுகள் நண்பரே!

PremM
25-11-2010, 03:45 PM
நன்றி கோவிந்த்..

தங்கள் பின்னூட்டமே கவிதையாய் அமைந்ததில் மகிழ்ச்சி திரு,.அக்னி..
தங்கள் பாரட்டுக்கு நன்றி..

உண்மை அமரன்..சுருங்கச் சொன்னால் மனிதர்களைப் போல் அல்ல காகிதம்..

குணமதி
01-12-2010, 12:42 AM
***உயிரற்ற பொருள் நீ என்றால்,
உணர்வுகளை எப்படிச் சுமக்கிறாய்?***

அருமை!

PremM
01-01-2011, 01:13 AM
நன்றி குணமதி :)

ஜானகி
01-01-2011, 01:23 AM
உள்ளதை உள்ளபடி சொன்னதற்கும்...

இல்லாததையும் வெளிக் கொணர்ந்ததற்கும்..

வெள்ளைக் காகிதத்தின் சார்பில்

நன்றிகள் !

PremM
08-01-2011, 05:02 AM
மிக்க நன்றி ஜானகி..