PDA

View Full Version : கொள்ளை கொண்ட பைங்கிளி



கிரிகாசன்
12-11-2010, 04:58 AM
நீள்விழியாள் என்நெஞ்சத் திருந்தவள்
நித்தம் உலாவருவாள்
ஆழ்மனதுள் வந்தே ஆசைக்கடை விரித்
தன்பை விலைக்கெடுத்தாள்
வேள்வியில் தீயிட்டு வைத்த மனத்தினை
வெண்பனிநீர் தெளித்தே
ஆழி அலைமேவும் ஆவேசத்தில் என்னை
அன்பினுள் மூழ்கடித்தாள்

தேவிஎன் எண்ணத்தில் சேர்ந்தே இருந்தொரு
தீபம் எடுத்து வைத்தாள்
ஆவி சிலிர்த்திட ஆக்கினை செய்தொரு
அன்பிற் கடிமை கொண்டாள்
கூவி ஒலித்திடும்வான் வெளிபுள்ளினம்
போலும் சுதந்திரத்தை
பாவிபறித்துமே பாதிநாள் தன்னுடை
பக்கமிருத்திவிட்டாள்

மேவி எழுந்திடும் மென்னிளம் பூக்களின்
மெல்லியவாசமிட்டாள்
தூவிடும் வண்ணத்துத் தூரிகைக் கெட்டாதோர்
ஓவியத் தோற்றமுற்றாள்
வாவிமலர் தூங்கும் வண்டினையொத்த
விழிகளை மின்னலிட்டு
தாவிமலர் செல்லும்தன்மைகெடுத்தென்னை
தாவணியில் முடிந்தாள்

காரெழும் வான்முகில் கட்டுடை கூந்தலைத்
தோளில் விரித்துவைத்து
வேரெழு மூங்கில் வியன் தரு மென்மைகொள்
வெண்மலர்க் கையெடுத்து
தேரெனவே அசைந்தாடும் நளினத்தில
சித்திரமாய் அசைந்து
பேரெனை பித்தனென்றாக்கிய வித்தகி
பேச்சை இழக்கவைத்தாள்

தேடி மலர் கொய்ய பூந்தளிர் தூங்கிடும்
சோலை அலைந்திருந்தேன்
வாடிக் கருகிடும் வண்ணமலர்பல
வீணில் பறித்துவந்தேன்
கூடிவிழிமலர் கொஞ்சிடும்தாமரை
கூந்தலில் பூஇருத்தி
கோடிமலர் கொண்ட மேனி மலர்க்கொரு
பூசணி கட்டிவைத்தாள்

செவ்விளவானச் சிவப்பினிலே பல
சித்திர மேகங்களில்
எவ்வித மிங்கவள் எட்டிநிறமெடுத்
தீர்கன்னம் பூசிவைத்தாள்
கொவ்வை இதழ்கள் குலுங்க சிரித்தவள்
கொட்டிய புன்னகையில்
பவ்வியமோஇந்த காளைதனை ஓர்
பைங்கிளி வென்றுவிட்டாள்

கீதம்
12-11-2010, 08:46 AM
சித்தம் நிறை பித்தம்
சிதறித் தெளித்த பைங்கிளி
கொள்ளைகொண்டாள் உம்மை,
கொலுவேறினாள் பைந்தமிழ் அம்மை!
பாராட்டுகள் கிரிகாசன் அவர்களே.

ஆன்டனி ஜானி
12-11-2010, 10:53 AM
தேடி மலர் கொய்ய பூந்தளிர் தூங்கிடும்
சோலை அலைந்திருந்தேன்
வாடிக் கருகிடும் வண்ணமலர்பல
வீணில் பறித்துவந்தேன்
கூடிவிழிமலர் கொஞ்சிடும்தாமரை
கூந்தலில் பூஇருத்தி
கோடிமலர் கொண்ட மேனி மலர்க்கொரு
பூசணி கட்டிவைத்தாள்
******************************************* இந்த வரிகள் மலர்களை பற்றி அழகாக கூறப்பட்டுள்ளது *********************************

கிரிகாசன்
12-11-2010, 03:57 PM
அண்மையில்தான் இங்கே அறிமுகமாகினேன் அதனால் எப்படி தங்களை விளிப்பது தெரியவில்லை
பொதுவாக அன்பு உறவுகளே என்று தற்போதைக்கு அழைத்துக் கொள்கிறேன். தங்கள்பாராட்டு என்னை மிக மகிழ்வித்தது. இப்படிப்பட்ட மகிழ்வுகொண்ட நேரமொன்றில் எழுதியது இது. அதைப்பகிர்ந்து கொள்கிறேன். நன்றி


கோவிலோ கூடமோ மாளிகையோ -இது
கொற்றவன் நிற்கவே மாடமதோ
மாவிலை கட்டிய தோரணமோ -இம்
மன்னவன் சாயச்சிம் மாசனமோ
தேரிலே சுற்றிடும் ஆனந்தமோ -அது
தென்ற லேறிவிளை யாடிடுதோ
பூவிலே தொங்கும்பல் மாலைகளோ -இடை
பூத்ததும் வானத்துத் தாரகையோ

ஏறியே ஓடத்தான் மேகங்களோ -இந்த
ஏழையை சுற்றிநல் தேவர்களோ
கூறியே கொட்டினர் பூமழையோ -இவன்
கொண்டது வாழ்வில் அரிதல்லவோ
பேறிலே நல்லதோர் பேறிதுவோ -அவன்
பிரம்மனும் எண்ணாப் பெருங்கொடையோ
மாறியே கொள்ளும் பகலிரவோ -இம்
மாற்றம்மென் வாழ்வில் பெருங்கனவோ

அன்பினில் இனிய செந்தமிழே -என்
ஆவி கலந்திட்ட பொன்மகளே
என்பிலும் ஊடேஓர் தீஎரிதே -இதில்
இன்ப நினைவும் பெருகிடுதே
பொன்னெனும் வெண்ணிலா பூத்திருக்க -அயல்
பொய்கையில் நீரலை ஆர்ப்பரிக்க
சின்னஇசை பாடித் தென்றல்வர -அதில்
செவ்விதழ் பூமணம் சேர்ந்துவர

மின்னும் வண்ணவெடி மத்தாப்பென என்
மேனியும் இன்பமாம் பூச்சொரிய
கண்ணிலே ஆனந்த நீர் பெருக -இது
கனவேயென் றென்மனம் கேலி செய்ய
தன்னிலே சொர்க்கம் தரைநழுவி..வந்து
தாழுதே காலடி தாங்கிடுமோ
என்னிலே அன்புகொள் செந்தமிழே இனி
இங்கிவன் உன்மடிப் பிள்ளையன்றோ