PDA

View Full Version : அன்றொருநாள் சொல்லிய சொல்லொன்றுM.Jagadeesan
11-11-2010, 04:31 PM
வேலை நிமித்தமாய் வெளியூர் செல்லுகையில்
எழுத்தறிவித்த ஆசிரியர் எதிரே வரக்கண்டு
காரை நிறுத்தியே அவர் காலில் பணிந்திட்டேன்

ஆசிரியர்:
யாரப்பா நீ? என் காலில் விழுகின்றாய்?
ஆண்டு பலவாக ஆன காரணத்தினால்
அடியேனுக்கு உன்னை அடையாளம் தெரியவில்லை.

நான்:
தமிழ் எனக்குக் கற்பித்த தெய்வத் திருஉருவே
தங்கள் மாணவன் நான் தங்கராசு என் பெயராம்

ஆசிரியர்;
"நன்றி மாணவரே நலந்தானா?" எனக்கேட்க

நான்:
நலமாக இருக்கின்றேன். நன்றி உமக்கய்யா.
அன்றொருநாள் வகுப்பறையில்
அடியேன் எனைப்பார்த்து
சொல்லிய சொல்லொன்றே
இன்றளவும் என்காதில்
நின்று நிலைத்ததையா
நித்தமும் ஒலிக்குதையா.

ஆசிரியர்:
மணமாகிவிட்டதா?

நான்:
மணமாகி விட்டதையா மங்கலமாய் என்மனைவி
காலையில் எழுந்தே கடமையைத் தொடங்கிடுவாள்
வாசல் தெளித்தே,வண்ணமிகு கோலமிட்டு
வீடுமனை பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவாள்
எங்கிருந்தோ வந்தாள், எங்கள் குலம் தழைக்க
மங்கையர்க்குத் தனியரசி மாதர்குல மாணிக்கம்

இத்தனைக்கும் காரணம் நீர்
முத்தமிழ் வித்தகரே
அன்றொருநாள் வகுப்பறையில்
அடியேன் எனைப்பார்த்து
சொல்லிய சொல்லொன்றே
இன்றளவும் என்காதில்
நின்று நிலைத்ததையா
நித்தமும் ஒலிக்குதையா

ஆசிரியர்:
சொத்து பத்து ஏதாவது?

நான்:
வீடுவாசல் என்றும், காடு கழனிஎன்றும்
தேடிய செல்வமோ எண்ணத் தொலையாது
ஓடி ஓடி நான் சேர்த்திட்ட பொருளெல்லாம்
கோடி கோடியாய் கொட்டிக் கிடக்குதையா
இத்தனைக்கும் காரணம் நீர்
முத்தமிழ் வித்தகரே
அன்றொருநாள் வகுப்பறையில்
அடியேன் எனைப்பார்த்து
சொல்லிய சொல்லொன்றே
இன்றளவும் என்காதில்
நின்று நிலைத்ததையா
நித்தமும் ஒலிக்குதையா

ஆசிரியர்:
குழந்தைகள்?

நான்:
ஆஸ்திக்கு ஓர் ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும்
அழகிய மக்கள் இருவருண்டு ஐயா.
அருமை மகனோ அக்கரைச் சீமையில்
அமெரிக்க மண்ணிலே ஆராய்ச்சி செய்கின்றான்
ஆசை மகளோ ஐ.ஏ.ஸ் படிக்கின்றாள்
அவளது லட்சியம் கலெக்டர் ஆவதாம்
இத்தனைக்கும் காரணம் நீர்
முத்தமிழ் வித்தகரே
அன்றொருநாள் வகுப்பறையில்
அடியேன் எனைப்பார்த்து
சொல்லிய சொல்லொன்றே
இன்றளவும் என்காதில்
நின்று நிலைத்ததையா
நித்தமும் ஒலிக்குதையா

ஆசிரியர்:
"அடிக்கடி இவ்வார்த்தை சொல்லுவதன் காரணத்தை
அடியேன் எனக்குரைத்தால் நலம்" என்று அவருரைக்க

நான்:
அன்றொருநாள் வகுப்பறையில்
அழகு தமிழ் இலக்கணத்தில்
அடுக்கடுக்காய் கேள்விகளை
அடியேனிடம் கேட்டதற்கு
விடை ஏதும் தெரியாமல் நான்
விழித்திருந்த நிலைகண்டு
தாங்கள்
நெட்ட நெடுமரமாய் நிற்கின்றாயே
விட்டமாக இருந்தாலும் வீடுகட்ட உதவிடுமே
ஏடு தூக்கும் வேலை இனியுனக்கு வேண்டாம்
மாடு மேய்ப்பதுவே பொருந்தும் பணிஉனக்கு
என்று
சொல்லிய சொல்லொன்றே
நின்று நிலைத்ததையா
நித்தமும் ஒலித்ததையா
மறுநாள் முதல்
பள்ளிக்குச் செல்லவில்லை
பலநாள் சிந்தித்து
பசுமாடு ஒன்றுவாங்கி
பால் தொழிலைத் தொடங்கிட்டேன்
ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி
நான்கு பலவாகி நானூறு ஆயிற்று
பால் என்றும் தயிர் என்றும்
பசுமாட்டு நெய் என்றும்
பல தொழிலைச் செய்கின்றேன்
குறையேதும் இல்லாமல் நிறைவாக வாழுகின்றேன்
வாழ்த்திடுவீர் எனச் சொல்லி வணங்கிட்டேன் அவர் தாளை.

Ravee
11-11-2010, 11:18 PM
ஆஹா இந்த அறிவுரையை
அப்போது என் ஆசிரியர் சொல்லாமல் போனாரே ....
வீணாய் படித்து விலை போகவில்லையே !!!
ம்ம்ம் குறை ஒன்றும் இல்லை
அனைத்தும் நலமே ...... :lachen001:

ஜெகதீசன் நீங்கள் குறுங்கவிதையில் பதியாமல் , குறும்பு கவிதை பகுதியில் பதித்து இருக்கலாம் :lachen001: :lachen001: :lachen001:

M.Jagadeesan
12-11-2010, 12:06 AM
ஆஹா இந்த அறிவுரையை
அப்போது என் ஆசிரியர் சொல்லாமல் போனாரே ....
வீணாய் படித்து விலை போகவில்லையே !!!
ம்ம்ம் குறை ஒன்றும் இல்லை
அனைத்தும் நலமே ...... :lachen001:

ஜெகதீசன் நீங்கள் குறுங்கவிதையில் பதியாமல் , குறும்பு கவிதை பகுதியில் பதித்து இருக்கலாம் :lachen001: :lachen001: :lachen001:

நன்றி ரவி அவர்களே.

கீதம்
12-11-2010, 01:38 AM
ஆசிரியர் சொல் பிசகாது
அவரே அசந்துபோமளவு
அற்புதமாய் வாழ்ந்துகாட்டிய
அதிசய மாணாக்கர்!

அருமையான கவிதை!
பாராட்டுகள் ஐயா.

பென்ஸ்
12-11-2010, 03:21 AM
கற்பனை வளம் உள்ளவரே நல்ல கலைஞனாக முடியும்
கணித வளம் உள்லவரே நல்ல பொறியாளராக முடியும்...
நிலம் கண்டு விதைப்பதுதானே நல்ல விவசாயின் வேலை...
அறிவு நிலை கண்டு போதிப்பதும் ஆசிரியர் வேலையன்றோ..???

இவருக்கும் சரியான அறிவுறை... அனால் ஆசிரியர் சொன்னவிதம் நன்றாயிருந்திருக்கலாம்....

ஆனால் நீங்கள் கதை சொன்ன விதம் சுவை.. அழகு... சிரிப்பு.... வாழ்த்துகள்...

M.Jagadeesan
12-11-2010, 03:57 AM
கற்பனை வளம் உள்ளவரே நல்ல கலைஞனாக முடியும்
கணித வளம் உள்லவரே நல்ல பொறியாளராக முடியும்...
நிலம் கண்டு விதைப்பதுதானே நல்ல விவசாயின் வேலை...
அறிவு நிலை கண்டு போதிப்பதும் ஆசிரியர் வேலையன்றோ..???

இவருக்கும் சரியான அறிவுறை... அனால் ஆசிரியர் சொன்னவிதம் நன்றாயிருந்திருக்கலாம்....

ஆனால் நீங்கள் கதை சொன்ன விதம் சுவை.. அழகு... சிரிப்பு.... வாழ்த்துகள்...

நன்றி பென்ஸ் அவர்களே.