PDA

View Full Version : தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: நான் (9)



rambal
19-11-2003, 07:05 PM
தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: நான் (9)

0
அடிக்குறிப்பு:
நியாபகங்கள்: முலைப்பால், முதல் முத்தம், ரவுண்ட்சில் விட்ட ஒற்றை சிகரெட் முதல் மறக்கமுடியாத
அடிகள், ரணங்கள் வரை மூளையின் ந்யூரான்களில், காலங்கள் சற்று முன்னும் பின்னும் கலந்து
கிடக்கின்றன. எப்போதாவது ஏதும் செய்வதற்கு உத்தேசமற்ற பொழுதுகளில் ஒரு மாட்டினைப் போல்
அசை போடுவதற்கு வசதியாய் கணிணியின் கோப்பாய் கண் முன் தோன்றி மறைகின்றன. இந்த
நியாபகங்களை தூசு தட்டி காலம்வாரியாக ஒழுங்காக வரிசப்படுத்தும் மென்பொருள் எனக்குக் கிடைக்குமா?

0
ஆதி தேவதை பற்றிய தோற்றங்களும், கதைகளும், பாடல்களும் நாளடைவில் மறைந்து போயின. அப்பொது
அந்த இனக்குழுவில் அவளுக்கு வயது நான்கு. அந்த தோட்டப்பாறை இன்று வறட்சியாகவும் அந்த இடத்தில் வரும்
மழை மேகங்களை மலை உச்சியில் இருக்கும் மேகபூதம் உறிஞ்சி குடித்துக் கொண்டு மழையை பெய்ய விடாமல்
செய்தது பற்றியும் அவளிடம் சொன்னார்கள். கருப்பையில் இருந்து வெளியேறிய அவளை நிணக்குடலின் பிசு பிசுப்பைக்
கழுவக் கூடா நீர் இல்லாமல் அவள் நிணக்குடலின் பிசுபிசுப்பினூடாக வளர்ந்தாள்.

மலை எங்கும் ஓட வேண்டிய அத்தனை சுனைகளையும் அந்த மேக பூதம் தனக்குள் சிறை வைத்திருப்பதாக
அவளுக்குச் சொல்லப்பட்டது. யாராவது நீர்வேண்டி மேக பூத்தத்திடம் சென்றால் அவர்கள் மேகபூதத்தின்
கோபத்திற்கு இரையாகி இறக்க நேரிடுவதையும் அவர்கள் அவளுக்குச் சொன்னார்கள்.
ஒவ்வொரு பௌர்ணமி தோறும் அவள் மழை வேண்டி பாடித் திரிவாள். அவளது பாடல் கானகம் எங்கும்
எதிரொலித்து அவளது காதுகளையே வந்தடையும்.

பலகாலமாய் அவளது மழை வேண்டிய தவப்பாடல்களை மேகபூதத்தின் மகன் மலை உச்சியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தான்.
அந்தப் பாடல்கள் அவனை பெரிதும் கவர்ந்தது. அவன் நாலு கால்களும் சிலிர்த்தெழும் தலை முடியும் கொண்ட
பொன் நிறம் கொண்டவனாய் இருந்தான். இன்னுடைய உன் மொழி வழியாய் சொல்வதானால் அவன் உன்னுடைய மொழியில்
சிங்கம் என்று அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தான்.

அவள் உடலில் இன்னும் கமழ்ந்து கொண்டிருக்கும் அவளது தாயின் நிணத்தின் வாடையை மோப்பமுற்று
அவளை நோக்கிய ஈர்ப்பில் தன் வசமிழந்து தன் தந்தையின் எச்சரிக்கையையும் மீறி அவளிடம் செல்ல
எத்தனித்துப் பாதி வழியிலேயே ஒவ்வொரு முறையும் அந்த மிருகம் திரும்பி விடுவது வாடிக்கையாயிருந்தது.

ஒருநாள் விறகு பொறுக்க மலையோரங்களில் திரிந்து கொண்டிருந்த அவளை அச்சிங்கம் நேர் கொண்டது.
அவள் முன் மண்டியிட்டு நா தழுதழுக்க கண்களில் நீர் வர தனது வாலை ஆட்டி தந்து பல நாள்
மோகத்தை வெளிப்படுத்தியது. பலகாலமாக அவளது பாடல்களைத் தான் கேட்டதாகவும் அந்தப் பாடல்கள்
தனது தந்தையின் மனசாட்சியை அசைத்துப் பார்ப்பதால் அவள் மீது அவர் தீரா கோபம் கொண்டதாகவும்
அவளைக் கொல்ல தன்னை விரட்டியதாகவும், தான் அவளை அப்படிச் செய்ய முடியாதென்றும் அதற்கு அவளுடைய
பாடல்கள்தான் காரணம் என்றும் கூறியது.

இதைக் கேட்ட அவள் ஏதும் சொல்லாமல் தன் வழி பார்த்து நடக்கலானாள். தன்னால் அவள் இல்லாமல்
ஒரு கஷணம் கூட வாழ முடியாது என்றும் குறைந்த பட்சமாக தனது நாவால் அவளது உடலை
ஒரே ஒருமுறை மட்டும் நக்கிக் கொள்ளவாவது அனுமதி வேண்டும் என்றும் சிங்கம் அவள் முன் மண்டியிட்டுக் கெஞ்சியது.
அவளது எண்ணமோ வேறாயிருந்தது. நீர் சுனைகளை எப்படி கீழே கொண்டு வருவது என்பது பற்றி யோசிக்கலானாள்..
இறுதியாக அவள், எனது உடலோ எனது தாயின் நிணத்தால் அசுத்தமடைந்துள்ளது என்றும் சுனையில் என் உடலைக்
கழுவினால்தான் என் உடல் புணர்ச்சிக்கு தகுந்ததாய் மாறும் என்றும் கூறினாள். இதைக் கேட்ட சிங்கமோ
வரும் பௌர்ணமியன்று எந்து தந்தையை மலையின் வேறொரு பக்கத்தில் உறங்கச் செய்துவிட்டு ஒரு சுனையை
தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்து விடுவதாகவும் அங்க்லு நீராடிய பின்பு புணரலாம் என்றும் திட்டம் ஒன்றை வகுத்துவிட்டு
சம்மதமா என்று அவளிடம் கேட்டது. அதற்கு அவள் ஒரு புன்னகையை சிந்தி விட்டு சென்றுவிட்டாள். இதைக் கண்ட
சிங்கமோ கும்மாளமிட்டது.

அன்று அந்த பௌர்ணமியோடு அவளுக்கு வயது பதின்மூன்று ஆரம்பமாகிறது. மலை உச்சிக்கு சிங்கம் அவளை அழைத்துச் சென்றது.
ஆங்காங்கு கிடைத்த வளைவுகளில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிங்கம் அவளது உடலை உரசி
சிற்றின்பத்தை அனுபவித்தது. மேலும், அவள் பாடிய பாடல்களை வழி நெடுகும் பாடிக் கொண்டே வந்தது. அவளது பெயரை
மலைகளில் உரக்கக் கத்தியது. அவளுக்கு சுனையை நெருங்க நெருங்க காற்றின் ஈரப்பதத்தை முதல் முறையாக
அனுபவிப்பதால் அவளது அடி வயிற்றில் சிறு வலி ஏற்பட்டு கால் வழியே குருதி வழிய ஆரம்பித்தது. சுனையை நெருங்க
நெருங்க அவளுக்குள் இன்னும் என்னென்னவோ பரவச நிலைகள் ஏற்பட்டன. வழிந்த அவளது குருதியை சிங்கம்
தனது நாவால் நக்கியது. அவளது கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது. சிங்கம் தனது கால்களை அவளது
தோளில் இட்டு கண்ணீரை நக்கியது. முதல் முறையாக ஆண் வீச்சத்தை தனது நாசிகளில் அவள் உணர்ந்தாள்.
அவல் சிங்கத்தை இறுக்கி அணைத்து அதன் இதழ்களில் முத்தம் கொடுத்தாள். சிங்கம் பரவசத்தின்
உச்ச நிலைக்குச் சென்று தரையில் புரண்டது.

அதை எட்டிய தூரத்தில் இருக்கும் பாறையில் இருக்கச் சொல்லிவிட்டு அவள் ஆடை களைந்தாள். கூந்தல் கலைந்து
சுனையில் இறங்கினாள். அதன் ஆழத்திற்குச் சென்று நீர்க் கம்பிகளில் பாயும் உணர்ச்சியை அனுபவித்தாள்.
வெளியே தலையை நீட்டினாள். அப்போது கூந்தலை சுழற்றினாள். அது ஒரு மழையின் சாரலாக மலை எங்கும்
படர்ந்து வீழ்ந்தது. திடீரென்று சாரல் பட்டதால் திடுக்கிட்டெழுந்த மேக பூதம் சுனையில் பெண் இருப்பதைக் கண்டு
சபிக்கத் தொடங்கியது. இனி நீ உன் குடியோடு இருக்க மாட்டாய் என்றும் சிங்கத்தை அவளைத் தேடி நீ பௌர்ணமிகளில்
அலைவாய் என்றும் அதுவும் அதிசயப் பூ பூக்கம் பௌர்ணமிகளில் அலைவாய் என்றும் சாபமிட்டது.

அதன் பின் அந்த இடத்தில் மழை பொழிய ஆரம்பித்தது. அந்த மழை இடைவிடாது பெய்ய மலர்களும் மரங்களும் சமவெளிகளில்
பச்சையும் தழைக்கத் தொடங்கின.

மழையைக் கண்டு பயந்து போகும் மலைபூதம் எனும் பாடலைப் பாடும் இனக்குழுவிற்கு அவள் தாயானாள். அதாவது
ஆதி தேவதையானாள். பாறைகள் நிறைந்த தோட்டத்தில் அவள் இருப்பதாகவும் அங்கிருக்கும் சுனையில் அவல் வசிப்பதாகவும்
புதிய கதைகள் எழுந்தன. பனிரெண்டு ஆண்டுகளுக்கொருமுறை பூக்கும் அதிசயப் பூத் திருநாளில் வரும் பௌர்ணமியில்
செம்பழுப்புப் பறவைகள் பௌர்ணமி நோக்கி பறப்பதாகவும் கதைகள் உருவாயின.

பன்னிரெண்டு வருடத்திற்கொருமுறை அந்த பௌர்ணமியில் மலை முகட்டில் இருந்து சிங்கத்தின் அழுகுரல் ஒலித்துக்
கொண்டிருப்பதாக இன்னும் சொல்லப் படுகிறது..