PDA

View Full Version : தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: நான் (8)



rambal
19-11-2003, 06:08 PM
தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: நான் ( 8 )


அடிக்குறிப்பு:

சுயநினைவு: மாயைகளின் தோற்றப்பிழையில் முதலிடம் வகிக்கும் சொல் சுய நினைவு. எது சுய நினைவு?
குழந்தைகளும் பைத்தியங்களும் ஒன்றும் அறியாது அதாவது உலக ஞானம் துறந்திருப்பது அல்லது
போதையின் ஆழத்தில் தன்னை மறந்து ஒரு சஞ்சார நிலையில் இருந்து விடுபடுவது அல்லது
உறக்கத்தின் ஆழத்தில் அகழ்ந்தெடுக்கப்படும் கனவு நிலையில் இருந்து மீண்டு வருவது அல்லது
இந்த வாக்கியத்தில் இந்த வார்த்தையை பித்து பிடித்த நிலையில் எழுதிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்து
மீண்டு வருவது? எது இதில் சுய நினைவு? இதில் எவைகளுமே இல்லையென்றால் கண்ட கனவுகளும்
அனுபவித்த போதைகளும், மனச்சிதைவுகளும், பித்து நிலையும் நினைவு தப்பிப் போன மாயைகள் என்ற கருத்திற்கொவ்வுகிறது,
அப்படியானால் சுயநினவு கூட மாயைதான். சரி, மேலே கூறிய அத்துனையும் நினைவுகளின் தோற்றப் பிழையில்லையென்றால்
சுயநினைவென்பதாது? இதை எழுதும் இந்தக் கணத்தில் சுய நினைவின்றியே இந்த வாக்கியத்தை இதோ இந்த முற்றுப் புள்ளியில்
முடிக்கிறேன்...


அந்த நிலப்பகுதிக்கு வெளியில் இருந்து வந்த சிலர் அவர்கள் மொழியைக் கற்றுத் தேர்ந்து அவர்களில் இரண்டறக் கலந்து
விட்டனர். அவர்கள் ஆயுதமற்றவர்களாக இருந்ததால் அவர்கள் மேல் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.. அவர்களிடம்
சில பாடல்கள் மட்டும் இருந்தன. அவர்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத போதிலும் அவர்களை வெளியேற்ற
அந்த இனக்குழுவிற்கு மனம் வரவில்லை. அவர்கள் காடுகளில் தங்கள் பாடல்களைப் பாடி வேலை செய்தனர்.
நாளடைவில் ஆதித் தேவதையைப் பற்றியும் பாடினார்கள். அதில் ஆதி தேவதை மூன்று மலைகளுக்கு அப்பால் இருக்கும்
பச்சை நிறக் கண்களுடைய ஒருவன் மேல் ஆசை வைத்துள்ளதாக திரித்துப் பாடினர். குழந்தைகளைப் பெறுவதற்கு
வழிவகை செய்யும் சில பெண் மருத்துவச்சிகள் மட்டுமே அவர்களை நம்பாதிருந்தனர். அவர்கள் சொன்ன சொல்லை
அந்த இனக்குழு நிராகரித்தது. இப்படி இருக்கையில் பருவம் தப்பிப் போனது. ஆதி தேவதையும் வழக்கமாக வரும்
பௌர்ணமிகளில் வந்து போகாததால் அந்த இனத்துக் குழுவின் வயோதிகர்கள் பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமென்று
சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த நிலப்பரப்பிற்கு புதிதாய் வந்தவர்களோ, ஆதி தேவதை மூன்று மலைகளுக்கு
அப்பால் இருக்கும் பச்சை நிறக்கண்களுடையவனுடன் புணர்ச்சியில் ஈடுபட்டிருப்பதால்தான் இந்தப் பக்கம் வரமுடியவில்லை
என்று கதையைத் திரித்து பாட்டுக் கட்டத் தொடங்கினார்கள். நாளடைவில் இந்த வதந்தி அந்த இன மக்களிடையே பரவியது.
இந்த சமயத்தில் ஆதி தேவதை சிலரது கனவுகளில் தோன்றி தமது நிலப்பரப்பில் விளையும் காளான்களைப் பாதுகாக்காததே
இத்தனைக்கும் காரணம் என்று சொன்னதை அந்த இன மக்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அந்த விஷேச காளான்
முற்றிலுமாக அழிந்து விட்டால் தம்மால் அந்த இடத்திற்கு வரமுடியாது என்பதை ஆதி தேவதையால் வெளிப்படையாக
சொல்லமுடியவில்லை. அந்த விஷேச காளான்கள் புதிதாக வந்தவர்களால் முற்றிலுமாக அந்த இடத்தை விட்டு அழிப்பதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைக் கண்ட இனக்குழுவின் பெண்கள் ஊருக்குள் இருக்கும் மக்களிடம் செய்தியைச் சொல்ல அவர்கள் ஒன்று சேர்ந்து
குலவையிட வேற்று மனிதர்களின் ஆயுதங்கள் எரிந்தன. அவர்களில் பாதிப் பேர் அந்த இடத்தை விட்டு ஓடிப் போயினர்.
மற்றவர்கள் வழக்கம் போல் இனக்குழுவோடு ஒன்று சேர்ந்து ஒன்றான போதிலும் அவர்கள் இன தேவதையின் கதையை
திரித்துக் கூறி குழப்பத்தை ஏற்படுத்தினர். அவர்கள் ஆதி தேவதையின் பாறைத் தோட்டத்திற்கு அருகில்
தங்கள் இருப்பிடங்களை அமைத்துக் கொண்டார்கள். அங்கு இருக்கும் விலை மதிப்பிடமுடியாத கற்களைப்பற்றி
சுவடிகளில் எழுதி வெளிநாட்டிற்கு அன்ப்பிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு வேறு ஒரு இனக்குழு அந்த பாறைத் தோட்டத்திற்கு
ஒரு நாள் வந்தது. அவர்கள் ஆதி தேவதையின் விலை மதிக்கமுடியாத கற்களை பொறுக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட
ஆடு மேய்க்கும் சிறுவர்கள் ஊரில் வந்து சொல்ல இனக்குழு ஒன்று சேர்ந்து கையில் கிடைத்த பூக்களை அள்ளி
மழை பெய்து கொண்டிருந்த வானில் விட்டெறிய மிகப்பெரிய மின்னல் ஒன்று புதிதாய் வந்த வேற்று இனக்குழுவைத் தாக்கி
அவர்களின் கண்களைப் பறித்துக் கொண்டது. புதிதாய் இனக்குழு வந்த பிறகே இவைகள் நடப்பதாகக் கூறிய
அந்த இனக்குழுவைச் சார்ந்த முதியவர் விதை பொறுக்கக் காட்டிற்குப் போன பொழுது பெயர் தெரியாத விலங்கு
தாக்கி இறந்து போனார். எப்போதும் இறப்பு முன் அறிவிப்பில்லாமல் வருவதில்லை. இப்போதோ, முன்னறிவிப்பு ஏதுமன்றி
மாயமான முறையில் பலர் இறந்து போவதைப் பற்றி அந்த இனக்குழு கவலைப்படுவதாய் இல்லை.

இப்போது மீண்டும் ஒரு புதிய இனக்குழு அங்கு வந்தது. அவர்கள் முன்பு வந்தவர்கள் போல் இல்லை. அவர்கள் கையில்
பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் ஆதிதேவதையின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வேற்று இனக்குழுவைச் சார்ந்தவர்களை
அடிக்கடி ரகசியமாய் சந்தித்து வந்தனர்.

இவர்கள் ஆதிதேவதைக்கு சம்பந்தமான எதிலும் நேரிடையாகத் தலையிடாமல் காடுகளைச் சுற்றி ஆங்காங்கு பலத்த
சப்தங்கள் எழுப்பும் எந்திரங்களை உபயோகப்ப்டுத்தினர். இதனால், காட்டிந் அமைதி குலைந்தது. மிருகங்கள் குடியிருப்புப் பகுதிக்கு
வர இனக்குழு பிரிந்து வேறு வேறு இடங்களுக்கு சென்றது. விலங்குகளுக்கு தொந்தரவாய் இருக்க விரும்பாமலும், இரைச்சல்
அற்ற தங்களது இசைக்கருவிகளின் ஓசையை மட்டுமே கேட்க விரும்பியும் இவர்கள் பயணத்தை மேற்கொண்டார்கள்.
இப்படிப் பிரிந்து போனதின் மூலம் சிலர் இனக்குழுவோடு சேர முடியாமல் வழி தவறினர். சிலர் திரும்பி வந்து பார்த்த பொழுது
தேவதையின் கற்களைக் காணாமல் திகைத்தனர். வேறு சிலர் திரும்பி வந்த பொழுது தேவதைக்குச் செய்யாமல் விட்ட
வழிபாடுகளுக்காக வருந்து ஹற்கொலை செய்து கொண்டனர். மேலும் சிலர் திரும்பி வந்த பொழுது சில மண் வகைகளும்,.
சில பறவை இனங்களும் முற்றிலுமாக காணாமல் போயிருந்ததற்காகக் கவலைப் பட்டார்கள்.
மீண்டும் அவர்கள் ஒரே இனக் குழுவாக சேரவிடாதபடி புதிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.
சிலர் வெறி கொண்டு ஆயுதம் தாங்கிய இனக்குழுவைச் சார்ந்தவர்களை ரகசியமாய் கொன்றார்கள்.
இருந்த போதும் இந்த இனக்குழு ஒன்றாய் சேராமல் தனித் தனியாய் பிரிந்து போனது. அங்கிருந்த தேவதையும் எங்கோ போய் விட்டாள்
என்று மீதி இருந்த சிலரும் அந்த இடத்தை விட்டு வெளியேறி பக்கத்தில் இருந்த நகரத்திற்கு குடி பெயர்ந்தார்கள்.

அங்கு இவர்கள் அடிமைகளாக வேலைக்கு நியமிக்கப்பட்டார்கள். இவர்களிடம் இருந்த இவர்களின் பாடல், மொழி ஆகியவைகளை
அழிக்க ஆயுதம் ஏந்திய இனக்குழுவிற்கு இருநூறு ஆண்டுகள் ஆயின. அவர்கள் பாறைத் தோட்டத்தை அழித்தனர். அதிசயக் காளானை
முற்றிலுமாகவும், பழுப்பும் சிகப்புக் கலந்த பறவையினத்தை கொஞ்சம் கொஞ்சமாகவும் அழித்து விட்டு ஒரு நாள்
அந்த தேவதையையும் அழித்து விட்டதாகவும் அறிவித்தனர்.

இன்று அடிமைகளாக இருக்கும் இந்த நிலப்பகுதி ஒரு காலத்தில் தங்களுக்கு சொந்தமாய் இருந்ததை அடிமைகளாக
மாறிய அந்த இன மக்கள் முற்றிலுமாக மறந்தனர். இது தங்களுடைய எஜமானர்களின் பகுதி என்று அவர்களின்
நியாபகங்களில் படிந்து போனது. அவர்கள் ராஜ விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டான இனமாயினர்.