PDA

View Full Version : தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: நான் (7)



rambal
19-11-2003, 04:57 PM
தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: நான் (7)

0
அடிக்குறிப்பு:
வாழ்க்கை: ஓடிக் கொண்டிருக்கிறது ஒரு நதியாய். நதி மூலம் கருவறை என்றால் சங்கமம் என்பதை
மரணத்திற்கு ஒப்பாகக் கொள்ளலாம். ஆனால், மரணம் ஒரு முற்றுப் புள்ளியல்ல.. தொடக்கம்..
வாழ்க்கை எனும் சிற்றாறு சமுத்திரத்தோடு கலந்து விடுகிறது. வாழ்க்கை என்பது ஒரு புள்ளியில்
ஆரம்பித்து ஒரு புள்ளியில் முடிவடையும் கோடு அல்ல. அது ஓடிக் கொண்டே இருக்கிறது..
ஒரு நதி போலும்.. சங்கமம் ஒன்றும் கவலைக்குரியது அல்ல. கொண்டாடுதலுக்குரியது.
சமுத்திரம் எனும் மிகப்பெரிய நீர் நிலையோடு சங்கமிப்பதை கொண்டாடாமல் வேறு என்ன செய்வது?
அப்படியானால் மரணம் என்பது உண்மையா? அப்படியானால் உண்மையான மரணம் என்பது என்ன?
பைபாஸ் சர்ஜரி செய்யும் பொழுது வெளியில் இருக்கும் எந்திரங்கள்தான் இதயத்திற்குப் பதிலாக
சுவாசத்தை மேற்கொள்கின்றன.. அப்படியானால் ஆபரேசன் செய்யும் கணங்களில் அவன் இறந்தவனா? இல்லை..
உண்மையான மரணம் என்பது பையாக இருக்கும் உடலுக்குத்தான். ஆத்மாவிற்கு இல்லை.. ஆத்மா
சமுத்திரம் எனும் பெருங்கடலோடு கலந்துவிடுகிறது. அழிவு உடலுக்குத்தான்.. ஆத்மாவிற்கு இல்லை..
உபநிசத்துகள் சொல்வதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.. ஆகவே, மரணத்தைக் கொண்டாடுங்கள்
உவகையோடு..

0
ஆதி தேவதையை நோக்கி வந்தவர்கள் வித விதமான ஒலிக்கருவிகளை இசைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் களிப்பும் பெரு உவகையோடும் இருந்தது அவர்கள் முகத்தில் தெரிந்து. சிலர் தீச் சுடர்களை காற்றில்
அணையா வண்ணம் கொண்டு வந்திருந்தனர். சிறுவர்களும் திறந்த முலைகளோடு பெண்களும் ஊர்வலமாக
சென்று கொண்டிருந்தனர். அவர்களோடு நானும் கலந்து கொண்டேன். ஊர்வலம் இந்தச் சமவெளியைக் கடந்து
அடுத்த சமவெளியை அடைந்தது. அங்கு ஒரு நகரம் இருந்தது. அதில் இருந்த ஆண்களும் பெண்களும் சிறுவர்களும்
இந்த ஊர்வலத்தோடு சேர்ந்தனர். இப்போது ஊர்வலம் பெரும் ஜனத்திரளாக மாறியிருந்தது. இப்படியாக அருகில் இருந்த
ஊர்களில் இருந்தும் மக்கள் சேரச் சேர அந்த ஊர்வலம் மிஅக்ப்பெரிய ஜனத்திரளாக மாறியிருந்தது. அவன் அப்படி
ஒரு பௌர்ணமியைக் கொண்டாடியதே இல்லை. அந்த நேரத்தில் பௌர்ணமி நிலவு மனதிற்கு ஆறுதலைத் தந்தது.
பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு மு¨றை பூக்கும் அதிசயப் பூ பூக்கும் காலம் அது, அதோடு பௌர்ணமியும் சேர்ந்து கொள்ள
அவர்கள் மலையுச்சியை நோக்கி நடந்தார்கள். இடையிடையே வட்ட வடிவில் நின்று கொண்டு ஆட்டம்.
அவனது இனத்தின் விதிமுறைப்படி ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் கை கோர்க்கக்கூடாது என்பதே ஆகும். அதன் படி
வெட்கத்தில் மருங்கும் விழிகள், நடுங்கிய கைகள், அதிகமான மூச்சிறைப்பில் ஏறி இறங்கும் முலைகள் என்று சிறு சிறு
குழுக்களாகப் பிரிந்து வட்ட நடனமாடிக் கொண்டே மலையுச்சி ஏறினார்கள்.

மலையுச்சியில் சிறு சிறு வட்டங்கள் ஒன்றிணைந்து பெரிதாய் ஆகிவிட்டது இசை எழுப்பாத நிசப்தம் நிலவுகிறது.
திடீரென்று ஒரே ஒரு இசைக் கருவி மட்டும் அதிர மற்ற இசைக் கருவிகளும் சேர்ந்து கொள்ள நடனம்
ஒரே தாளகதியில் வேகமாக ஆடப்படுகிறது. அப்போது திடீரென்று மலை உச்சியில் இருக்கும் பாறைகளுக்குப் பின்னால்
இருந்து பழுப்பும் சிகப்பும் கலந்த பறவை ஒன்று வெளிப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் இருக்கும் முழு நிலவை நோக்கி
சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து புள்ளியாய் மறைகிறது. இதைக் கண்ட கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

இந்த ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் சற்றுத் தள்ளி நிற்கிறேன் நான். அதே போன்று என் வயதை ஒத்த சிறுமிகள்
அங்கு நிற்கிறார்கள். அவர்களில் நீலநிறக்கண்களுடையப் பெண் ஒருத்தி என் முன் வர அவளுக்கு காட்டுக் கொடிகளினால்
ஆன மாலை ஒன்றை அவள் கழுத்தில் அனுவித்தேன். விஷயம் அறிந்த மற்ற சிறுமிகள் அவளைப் பார்த்து
சிரிக்க அவளோ வெட்கம் தாளமுடியாமல் ஓடிப் போகிறாள். அவளைத்துரத்திக் கொண்டு ஓடுகிறேன்.
அவள் பத்து பேர் சேர்ந்து கட்டிப் பிடிக்கும் ஒரு ஆஜானுபாக மரத்திற்குப் பின்னால் சென்று ஒளிந்து கொள்கிறாள்.
அவளை மரத்தின் மறுபுறமிருந்து சென்று கட்டிப் பிடித்து அவளது உதடுகளில் முத்தம் கொடுக்கிறேன். முதலில் மறுத்தால்.
பின் ஒத்துழைப்புக் கொடுத்து ஆழ்ந்த முத்தத்திற்கு வழி வகுத்தாள். சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு [b]சுய நினைவுவந்தவளாய் என்னைத் தள்ளிவிட்டு ஓடினாள். நான் துரத்த அவள் மலை சமவெளி தாண்டி ஒரு பாறையின் உச்சியில் ஏறி நின்றாள்.
நான் பயத்தோடு அவளைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவள் அங்கிருந்து கீழே குதித்தாள். அங்கு ஒரு சுனை. சில நிமிடங்கள்
கழித்து தந்து தலைய வெளியே எடுத்து தனது கூந்தலை ஒரு சுழட்டு சுழட்டி விட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

எனக்குள் வியர்த்து மண்பானைக்குள் இருந்து தலையை எடுத்தேன். அந்தச் சிறுமி இப்போது அவளாக என் அருகில்
நின்று கொண்டிருந்தாள். அதே நீலக் கண்கள். கழுத்து நரம்புகள் கூட நீல நிறம். அந்த மூதாட்டி அந்தச் சிறுமியை
அழைத்துக் கொண்டு அடுத்த அறைக்குள் சென்றாள். அந்தச் சிறுமி என்னைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு
அடுத்த அறைக்குள் முதாட்டியோடு நுழைந்தாள்.