PDA

View Full Version : தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: நான் (6)



rambal
19-11-2003, 04:57 PM
தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: நான் (6)

0
அடிக்குறிப்பு:
கனவுகள்: வருகின்றன.. உருவமில்லாது நிழல்களாய். அதில் சில காட்சிகள் தெரிகின்றன. அவைகளும்
உருவமில்லாத நிழலாய். அந்த நிழல்கள் பேசும் மொழி எனக்குக் கேட்கிறது. அரிதாய் ஒரு தடவை
ஒரு பழுப்பும் சிகப்பும் கலந்த பறவை முட்டையில் இருந்து வெளிவந்ததிலிருந்து மனித உடல்களைத்
தின்று வளர்ந்து இறுதியில் இன்னொரு பறவையால் சாகடிக்கப்பட்டு தின்னப்பட்டதோடு அந்தக் கனவு
முடிவடைந்துவிட்டது. ஒரு பறவையின் முழு வாழ்க்கையும் கனவுகளில் வந்து போனால்..
ஒருவேளை நான் வாழும் எனது இந்த [b]வாழ்க்கை ஒரு பறவையின் கனவாக இருக்கக் கூடாது?
யாருக்குத் தெரியும்? நாம் காணும் இந்தப் பால்வீதி நெபுலா பிரபஞ்சம் யாவுமே யாரோ ஒருவருடைய
மிகப் பெரிய கனவாகக் கூட இருக்கலாம்..

0
அடுத்த நாள் அவளைக் காண அதே இடத்திற்கு சென்றேன். அவள் என் கையைப் பிடித்துக் கொண்டு
பாரீஸின் குறுகிய தெருக்கள் வழியாக சென்று பாதாள ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றாள்.
அவளது உள்ளங்கைகளில் ஒருவித தாய்மை இருந்தது.. அங்கிருந்து ரயில் ஏறி ஏதோ ஒரு இடத்தில்
இறங்கினாள். அங்கிருந்து புராதாணக் கட்டிடங்கள் நிறைந்த பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.
மீண்டும் புராதாணக் கட்டிடங்கள் அருகே இருந்த குறுகிய சந்துகள் பல கடந்து நகரின் ஒதுக்குப் புறத்தில்
அமைந்திருந்த ஒரு சிறிய வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.

உள் அறையில் நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள். அவள் ஏதோ ஒரு பூ வேலைப்பாட்டை துணியில் செய்து
கொண்டிருந்தாள். அவளுடைய கண்களும் நீலமாக இருந்தது. அவளிடம் பேச முற்பட்டேன். சுமார் ஏழு தடவைகளுக்கு
அப்புறம் எட்டாவது தடவையில் பதில் பேசினாள். அவளுக்கு வயது 125 என்றாள். ஆனால், அவளைப் பார்த்த பொழுது
அப்படித் தெரியவில்லை. சுமார் அறுபதுதான் மதிக்கமுடியும். வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில் சட்டத்திற்குப்
புறம்பாக அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி சுமார் 80 களின் இறுதியில் இங்கு வந்து நிரந்தரமாக தங்கி விட்டதாக
அவள் சொன்ன கதையின் மூலம் அறிய முடிந்தது.

அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் உள் அறைக்குள் நுழைந்த பொழுது அடி வயிற்றில் இனம் தெரியாத பயம் ஒன்று ஆட்கொண்டது.
அந்த அறை அத்தனை சக்தி வாய்ந்ததாக இருந்தது. அவளுடைய அதாவது நம்முடைய தாய்த் தேவதையானது
நயவஞ்சகர்களால் நயமாகக் கொல்லப்பட்டது என்று நமது இனக்குழு நம்பிக் கொண்டிருக்கிறது என்றும் ஆனால்,
அவள் கொல்லப்படவில்லை என்றும் அவள் இன்னும் உயிரோடுதானிருக்கிறாள் என்றும் அவளை வ்வப்பொழுது
தான் பார்ப்பதாகவும் நம்பிக்கை கூறினாள்.

மலைகளுக்கு அப்பால் இருக்கும் சமவெளிகளில் பழுப்பும் சிகப்பும் கலந்த பறவைகள் சங்கமிக்கும் இடத்தில் தனது
நீண்ட கூந்தலை அள்ளி முடிந்து கொண்டே அவள் மறைவாள். அவளது நிழலை காண்பவர்கள் ஒரு பயங்கர
பேச்சற்ற அமைதியும் பயமும் கொண்டு அமைதி ஆகிவிடுவார்கள் என்றும் அவள் கூறினாள்.

அப்பொழுது அவனை அங்கு கூட்டிக் கொண்டு வந்த அவள் ஒரு மண்பானையில் நீரைக் கொண்டு வந்து மூதாட்டிக்கு
முன்பாக இருந்த மூங்கில் மேஜை மேல் வைத்து விட்டு ஒன்றும் தெரியாதவள் போல் நின்று கொண்டிருந்தாள்.
எனக்கோ அவளின் கண்களில் இருந்து வெளியேறும் ஒளியின் வெம்மையில் தலை சுற்றிக் கொண்டிருந்தது.
அப்போது அந்த மூதாட்டி, தண்ணீரில் என்ன தெரிகிறது என்று கேட்டாள். நான் அந்தத் தண்ணீரைப் பார்த்துவிட்டு
ஒன்றும் தெரியவில்லை என்றேன். மீண்டும் நன்றாகப் பார் அங்கு நமது ஆதித்தாயின் முலைகள், நீல நிறக் கண்கள்
தெரியும் என்றாள். அந்த மண் பானையில் முகத்தைப் புதைத்தேன். நல்ல குளிர்ந்த நீர். இரவு. ஒருவிதமான
குளிர்ச்சி உடலில் ஏற உடல் விறைத்தது. அங்கு, ஆதி தேவதை தனது திறந்த யோனியையும் முலைகளையும்
ஆட்டிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவளின் கண்கள் நீல நிறத்தில் இருந்தது.
ஆதித் தாயின் முகம் என்னுடைய மனங்கவர்ந்தவளுடைய முகத்தை ஒத்திருந்தது. அவளுடா விஸ்வரூப தரிசனத்தை
எதிரில் இருக்கும் மலை உச்சியில் இருந்து கண்டேன். அதன்பின் இரு மலைகளுக்கும் இடையே இருந்த
குட்டையை நீந்திக் கடந்து அவள் நின்று கொண்டிருக்கும் மலையின் அடிவாரத்திற்குச் சென்றேன்.
அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக மகிழ்ச்சியோடு ஆதி தேவதையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

0
ஆதி தேவதையைப் பற்றியக் கவிதை:

உன் முலைகளில்
ஆதியின் ஈரம்
சுரந்து கொண்டிருக்கிறது..

உனது யோனியின்
பிறப்புறுப்புக்கள் இன்னும்
பிரசவித்துக் கொண்டுதானிருக்கின்றன..

நான் தான் இன்னும்
உன்னில் இருந்து
பிரசவிக்கவில்லை..