PDA

View Full Version : தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: நான் (5)



rambal
19-11-2003, 04:56 PM
தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: நான் (5)

0
அடிக்குறிப்பு:
நான்: என்பது [b]கனவுகளின் கூட்டமைப்பா,
அல்லது வெறும் தூசுப்படலத்தின் கட்டமைப்பா என்று எனக்கு விளங்கவில்லை.
என்னில் இருந்து வெளியில் இருக்கும் அடுத்த உயிரி உணரும் சுவை, பசி போன்றவைகளை ஏககாலத்தில்
எனக்குள்ளும் உணரமுடிவதில்லை எனும் பொழுது நான் தனித் தீவாக்கப்படுகிறேன். இப்படியாக வாழும் ஜீவராசிகள்
அனைத்தும் தனித்தனித்தீவாக இயங்குகின்றன. இதில் என்னுடைய தீவு எனும் பொழுது அது என்னுடைய உடலைக் குறிக்கிறது.
என்னுடைய உடல் என்பது நானானால் என்னுடைய சிந்தனைகளை எங்கு சேர்ப்பது? என்னுடைய சிந்தனைகள் மூளையின்
எந்த அடுக்கில் எந்த ந்யூரானில் பொதிந்துள்ளது? அப்படியானால் மனம் என்பதும் அதில் சிந்தனைகள் என்பதும்
ந்யூரான்களின் பணி என்றால் மனம் என்பதை எங்கு சென்று தேடுவது?
கேகோபஷித்துகள் கூறியுள்ளதுபடி மனதை ஆராயாமல் மனதின் போக்கை மட்டும் கட்டுக்குள் கொண்டு வருவதெப்படி?
மனதை கட்டுப்படுத்துதள் எனும் பொழுது நான் எனும் நானும் கட்டுப்படுத்தப்படுகிறேன்..
அப்படியானால், நான் வெறும் சதை, எலும்பு, கொஞ்சம் கழிவு, நிறைய நரம்புகளும் செல்களும் கொண்டு படைக்கப்பட்ட
பிண்டமா? பிரபஞ்சத்துளிக்குள் நானும் ஒரு துளியா? அப்படியானால் எல்லாத்துளிகளுக்கும் வேறு வேறு செயல்கள் இருப்பதின்
அர்த்தம் என்ன?

0
அடுத்து வந்த நாட்களில் அவளை கபேயில் சந்திக்க ஆரம்பித்தேன். அவளுடைய ஆதி தேவதையின் நிறம் பழுப்பும் சிகப்பும்
கலந்ததென்று அவள் சொன்னாள். அவளுடைய இனத்தார்கள் இதே தேசத்தில் கலைப் பொருட்கள் செய்பவர்களாகவும்,
மிகச்சிறிய கபே வைத்திருப்பவர்களாகவும், பறவைகளையும் மிருகங்களையும் பழக்கிவிடும் பயிற்சியாளர்களாகவும், அதிசயக் கற்கள்
விற்பன்னர்களாகவும், மரத்தில் நுணுக்கமான வேலைப்பாடு செய்பவர்களாகவும் இருப்பதாக அவள் சொன்னாள். அவர்கள் அதிகம்
வெளியில் நடமாடுவதை தவிர்த்தும் வந்தார்கள். நான் கூட அரசின் குடியுரிமை இல்லாததினால் பலநாட்கள் என் அறையை விட்டு
வெளியே வந்தது கிடையாது என்பதை அவளிடம் சொன்னேன். என் கண்களுக்கு மட்டும் அந்த நீலக்கற்கள் தெரிந்த
கதையைக் கேட்டாள். எனக்கு அவைகள் வித்யாசமாக இருந்ததால் என் கவனத்தை ஈர்த்தது. அதனால்தான் முதியவரிடம்
இந்த நீலக்கற்கள் யாருடையவை என்று கேட்டேன். நீ ஏன் இதைப் பற்றிக்கேட்கிறாய் என்றேன்... அதற்கு ஒரு புன்னகையை மட்டும்
உதிர்த்து விட்டுச் சென்றுவிட்டாள்.. அதன் பின்பிலிருந்து எனது தலைக்குள் அவள் குரல் கேட்கத் தொடங்கியது.
என்னைச் சுற்றிச் சுற்றி அவளது சிரிப்பொலியும் பேச்சொலியும் இடைவிடாது கேட்டது. அன்று இரவு எனக்கு வந்த கனவில்
எனது இனத்தின் மொழி, புரியாத நாட்டுப்புறப் பாடலின் ஒலியாய் தெளிவாகக் கேட்டது. அதன் மூலம் புரிந்து கொள்ள
முடியாத அந்த மொழிதான் எனது ஆதி மொழி என்று தெரிந்து கொண்டேன்.. அடுத்த நாள் அவளைக் கண்டேன்.
அப்போது, அவள் என்னைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தாள். அந்த முணுமுணுப்பு எனக்கு தெளிவாகக் கேட்டது.
அது நேற்றிரவு எனது கனவில் நாடோடிப்பாடலின் ஒலியாய் கேட்ட எனது இனத்து மொழிதான். இப்போது
அந்த மொழி எனக்குக் கொஞ்சம் புரிந்தும் புரியாததுமாய் இருந்தது. இது பற்றி அவளிடம் கேட்டதற்கு, அநேகமாக
நீயும் எனது இனக்குழுவில் ஒருவனாக இருக்கலாம்.. என்று அர்த்தப்புன்னகையுடன் சிரித்தாள்.. இதைப்பற்றி முழுமையாக
தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாளை இதே இடத்திற்கு வரவும் என்று சொல்லி விட்டுச் சென்றுவிட்டாள்.

0
" இதுவரை எனது உடலை விட்டுக் காணாமல் போயிருந்த எனது ஆவியே இப்போது தனித் தன்மையுடன் என்னிடம்
திரும்பி வந்ததாய் உணர்கிறேன்.. எனது மண்டைக்குள் அவளது குரல், எனது இனத்து ஆதி மொழியில்
கேட்டுக் கொண்டிருக்கிறது. அவளின் உணர்வுகளை நான் உணர்கிறேன். அவள் சுவாசிக்கிறாள். சுவாசத்தில்
அவளது நெஞ்சு ஏறி இறங்குவதை தாலாட்டாய் உணர்கிறேன். அவளது உடலின் இளஞ்சூட்டின் தகிப்பை
எனது உடம்பில் உணர்கிறேன்.. சுவாசத்தை வெளிவிடும் பொழுது எனக்குள் இருக்கும் அசுத்தங்கள் வெளியேறுவதை
நான் உணர்கிறேன். அவளது கருங்கூந்தல் என்னைத் தாக்க நான் புனிதமாகிக் கொண்டே இருக்கிறேன்.
அவளது எச்சில் விழுங்கும் தொண்டைக்குழியின் மிடறும் சத்தம் எனக்குள் கேட்கிறது. அவளது கழுத்தில் விரவியிருக்கும்
மெல்லிய சூட்டில் எனக்கான பாதுகாப்புள்ளது. காலம் முழுதும் அந்த சூட்டில் வாழ்வேன் என்று ஏதோ ஒன்று எனக்குள்
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. எனது தனிமைக் கணங்களில் உடல்களற்ற உருவங்கள்
என்னைச் சுற்றி நடமாடுகின்றன. அரை உறக்கத்தில் இருந்து கொண்டு இதை பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
நான் விழித்தெழுந்ததும் அந்த உருவங்கள் மறைந்து விடுகின்றன. இரவில் எனது நகங்கள் நீல நிற சாயம் பூண்டிருக்கின்றன.
காலை எழுந்து அறை ஜன்னலைத் திறந்ததும், சூரிய வெளிச்சம் பரவும் பொழுது அவைகள் காணாமல் போய் விடுகின்றன.
என்னைச் சுற்றி எப்போதும் உருவமில்லாமல் அவள் சுற்றிச் சுற்றி வருகிறாள்.
அவளின் வியர்வையின் மணம் எப்போதும் எனது நாசிகளில் உலவுகிறது.
அந்த மணம் சுகந்தமாகவும், ஒரு வித லயிப்பிலும் என்னை ஆழ்த்துகிறது"

0
இனி அவளுக்காக நான் எழுதிய கவிதை:

என் தனிமைக் கானகத்தின்
அநாதிப் புலம்பல்
எங்கும் உலவுகிறது..

கூட்ட நெரிசலில்
சிக்கித் தவிக்கும்
எண்ணற்ற சுவாசங்களின்
ஊடாக உன்னை வந்தடைகிறது..

அதுவும் ஒரு
தேவையில்லாத
சத்தம் என்று
நீ ஒதுக்கித் தள்ளுகிறாய்..

இருந்தாலும் உன்
நெஞ்சுக் கூட்டுக்குள்
அடங்கிக் கிடக்கும்
நம் இனத்தின் மொழியில்
புதைந்துள்ளது
அந்தச் சொற்கள்..

அடுத்தமுறையாவது
நீ விடும்
பெருமூச்சினூடாக
அந்தச் சொற்களை என்னிடம்
சொல்வாயா?

puppy
20-11-2003, 06:05 AM
தமிழ்நாட்டில் ஒரு பிரபலமான பத்திரிக்கை ஒன்று இருக்கு...அது இப்படி தான் அடிக்கடி எதாச்சும் இந்தமாதிரி எழுதி தன் முதலிடத்தை தக்கவைத்து கொள்ளும்....முகம் சுளிக்க வைக்கும் கதைகள்...விஷயங்கள் ..துனுக்குகள்...
இதுவும் இந்தவகையை சேர்ந்தது தான்...இந்த மாதிரி கதை எழுத வேறு இடம் இருக்கிறது....இங்கே இதற்கு அனுமதி இல்லை......வேறு ஏதோ
சொல்ல வந்து இடைசெருகலாக கொஞ்சம் உயர்த்ர மஞ்சள் பத்திரிகை ரகத்துக்கு ஈடாக எழுதிவிட்டது போல இருக்கிறது.....மற்றவர்களின் கருத்துகளுக்காக இது இங்கே இருக்கும் சில நாட்கள்...அப்புறம்
இவை அகற்றபடும்....

பப்பி

rambal
20-11-2003, 07:27 AM
மன்னிக்கவும்..
அந்தக் கவிதை எழுதும் பொழுது தன் போக்கில் வந்துவிட்டது.. எழுத வேண்டும் என்று திட்டமிட்டு
எழுதவில்லை.. நேற்றும் இன்றும் இரு தினங்கள் மட்டும் எனக்கு விடுமுறை என்பதால் நேற்று ஒரே நாளில்
இந்தக் குறுநாவலை முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது. மற்றபடி இப்படித்தான் எழுதவேண்டும் என்றெல்லாம்
எழுதவில்லை.. கவிதையை மாற்றி விடுகிறேன்.. நீங்கள் குறிப்பிட்டது கவிதையை மட்டுமா? அல்லது
இந்த முழு அத்யாயத்தையுமா?

பாரதி
20-11-2003, 09:21 AM
மற்றவர்களின் கருத்துகளுக்காக இது இங்கே இருக்கும் சில நாட்கள்...அப்புறம் இவை அகற்றபடும்....


அன்பு பப்பி,
அப்பிடியெனில் இப்போதே நீங்கள் விரும்பும் முடிவை எடுக்கலாம். மற்றவர்கள் கருத்துக்குப் பின் நீக்கப்படுவதால் என்ன பயன்?

அன்பு ராம்பால்,
மீண்டும் உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி. இந்த அத்தியாயத்தை நன்கு அறிந்து கொண்ட பின் (இது இங்கே இருந்தால்..) என் கருத்தைக் கூற முயற்சிப்பேன்.

பாலமுருகன்
20-11-2003, 12:10 PM
மற்றவர் கருத்துக்காக இந்த பதிப்பு என்றால்...

ராம்பால் உங்கள் இந்த படைப்பு சற்றே வித்தியாசமான் கோனத்துடன் எழுதப்பட்டது. ஒரு மெல்லிய காதலை உணர்ச்சிப்பூர்வமாக அளித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

இடைச்சொருகளாக வந்த அந்த வரிகள் வேறு வடிவத்தில் மாற்றியிருந்தால் இன்னும் அழாகாய் இருந்திருக்கும்.

பாலமுருகன்

பாரதி
24-11-2003, 01:06 PM
வழக்கமாக ராம்பாலின் படைப்புகளை விமர்சிப்பவர்கள் கூட இப்போது விமர்சனங்களை தவிர்ப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. உண்மை அதுதானா?

முத்து
24-11-2003, 06:07 PM
பாரதி அவர்களே ...
கதை தெளிவாகப் புரிந்தவர்கள் யாரும் விமர்சனம் செய்யாமலா போவர்கள் ... ? :D

பாரதி
25-11-2003, 01:28 AM
அன்பு முத்து,
நான் இக்கதையை மட்டும் சொல்லவில்லை. 'சைக்கிள் பழகுபவனும்,கில்லி......" கவிதையையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். சரி. நடப்பவை எல்லாம் நன்மைக்கே.

முத்து
25-11-2003, 09:35 AM
பாரதி ...
அங்கே விமர்சங்கள் இருப்பதாய் ஞாபகம் ...

பாரதி
25-11-2003, 09:44 AM
நீங்கள் சொன்னால் சரி முத்து. நன்றி.