PDA

View Full Version : தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: மொழி (3)



rambal
19-11-2003, 04:55 PM
தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: மொழி (3)

0
அடிக்குறிப்பு
மொழி: ஆதியில் மொழிகள் ஏதுமற்ற மௌனம் மட்டுமே பிரபஞ்சம் எங்கும் விரவிக்கிடந்தது. யாராவது யாரையாவது
புணர வேண்டுமென்றால் கூட மொழிகள் அற்ற மௌனம் மட்டுமே பாஷையாக இருந்து வந்திருக்கிறது.
பின்பு மெள்ள மெள்ள கற்களினால் பாறைகளில் வரைந்து கருத்தை சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
பறவைகளும், விலங்குகளும் மட்டுமே ஏதேதோ பாஷை பரிவர்த்தனங்கள் செய்திருக்கின்றன. அந்த மாதிரி
பறவைகளில் இருந்து விலங்குகளில் இருந்து எழுப்பப்பட்ட ஓசைகளை உன்னிப்பாகக் கவனித்து
அவற்றை புரியும் முயற்சியில் வெற்றி கொள்ள அதுவே பின்னாளில் ஒவ்வொரு இனக்குழுவின் மொழியாய்
மாறி இருக்கிறது. ஆதியில் மொழிகள் எல்லாம் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றன. அதன்பின்புதான்
பறவைகள் மூலமாகவும் அந்த அந்த இடத்தில் இருந்த மிருகங்களின் மூலமாகவும் அங்கு வாந்த இனக்குழுக்கள்
தங்களுக்கென்று தனி மொழியை உருவாக்கிக் கொண்டன. இதில் எனது மொழி எதுவென்று தெரியாத நிலையில்...

0
இன்று கள்ளத்தனமாக குடியுரிமம் பெறுவதற்காக ஏஜெண்ட்டை காணச்சென்றேன். அங்கு இருந்தவனோ
எனது இனத்து மொழியைக் கேட்டான். எனக்கு தெரியாது என்பதை மட்டும் அவனுக்குப் பதிலாகச் சொன்னேன்.
இதனால், அவன் மிகக் கோபமாக எனக்கு குடியுரிமம் எடுத்துக் கொடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டான்.
எனக்கு இவன் மேல் வருத்தமே இல்லை. அதற்குப்பதிலாக, என் தாய் மொழியைக் கேட்கும் இவன் தனது ஆதி மொழியைப்
பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கமாட்டான் என்ற வருத்தமே மேலோங்கியது. இப்படித்தான் உலகம் முழுதும்
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் பலர் தனது ஆதி மொழி பற்றிய விழிப்புணர்வோ, தனது இனக்குழு பற்றிய
அறிவோ இல்லாது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

0
கபேயில் ஒரு முதியவர் இருந்தார். அவரைப் பார்த்ததும் எனக்குள் என்னென்னவோ சந்தோசங்கள். அவரது கண்கள்
பழுப்பும் சிகப்பும் கலந்து இருந்தது. முன் ஒரு முறை எனது இனத்தில் உள்ளவர்களுக்கு கண்களின் நிறம்
இப்படித்தான் இருக்கும் என்று எனது பாட்டி கூறியிருந்தாள். அவரிடம் எனது இனம் எதுவென்று கேட்டேன்.
அதற்கு நீயும் நானும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும்.. ஆனால், நீ நம் இனத்தைப் பற்றி
அதில் இருக்கும் குணாதிசயங்கள் பற்றி ஏதாவது ஒரு செய்தி சொன்னால் மட்டுமே உன்னை நம் இனத்தின் தேவதையிடம்
கூட்டிச் செல்வேன் என்று கூறினார். எனது இனத்தைப் பற்றிச் சொல்ல என்னிடம் ஏதும் செய்திகள் இல்லை. இருந்தாலும்
நாளை வரும் பொழுது கண்டிப்பாக சொல்கிறேன் என்றும் அப்படிச் சொன்னால் என்னை நம் இனத்து தேவதையிடம் கூட்டிக் கொண்டு
போகமுடியுமா என்று கேட்டதற்கு முடியும் என்றார்.

0
உன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு நபரைப் பார்க்கும் பொழுது கண்டிப்பாக உனது மூளையின் அடி ஆழத்தில் இருந்து
உன் இனத்தைப் பற்றிய செய்திகள் மெள்ள மெள்ள மேலே வரும். இது எனது பாட்டி எனக்குச் சொன்னது.
காலம் கடந்து பயணம் செய்வதெப்படி? மூளையின் எந்த அடுக்கில் எனது இனத்தைப் பற்றிய செய்திகள் பொதிந்துள்ளது? என்று எதைப் பற்றியும் திட்டவட்டமாக ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை.

0
எனது மொழி எதுவென்று தெரியாத நிலையில் எல்லாம் கற்பனையாக என்னை மிரட்டிக் கொண்டிருந்தது.

எனது மொழி
எதுவென்று தெரியும் நாளில்
உரக்கக்கத்துவேன்
நானும்
ஓர் இனத்தைச் சேர்ந்தவன்
அகதி அல்ல..

தன் இனம் எதுவென்று தெரியாமல் அடுத்த இனத்தோடு இரண்டறக்கலந்தவர்களே.. நீங்கள்தான் உண்மையான அகதிகள்...