PDA

View Full Version : ஜெனிபர் சொன்ன உலகம்...



சசிதரன்
08-11-2010, 12:44 PM
கேட்கும் கதைகளை கொண்டே
ஒரு உலகம் உருவாக்கி வைத்திருந்தாள்
ஜெனிபர்.

குழந்தைகளால் நிரம்பியிருந்த அவ்வுலகத்தில்
அத்தனையும் உயிர் பெற்றிருந்தது.

உருவங்கள் ஏதுமின்றி வெறும்
சிறகுகள் மட்டும் தனித்து
வானமெங்கும் பறந்துக் கொண்டிருந்தன.

மஞ்சள் மேகங்கள்
பச்சை சூரியன்
நீல புல்வெளி
ரோஸ் நிலா
நிறம் மாறிக் கொண்டே இருந்தன ஒவ்வொன்றும்.

அவள் அவ்வுலகத்தினுள்
தன் நண்பர்களை மட்டுமே அனுமதித்திருந்தாள்.
மற்ற நேரங்களில் அதன் கதவுகளை பூட்டி
சாவியை ஒளித்து வைத்தாள்.

தன் உலகத்தை பற்றிய கதைகளை
அவளே கூறத் தொடங்கினாள்.
அதை காணும் ஆவல்
அதிகமாகி போனது.

அவளறியாத ஒரு தருணத்தில்
திருடிய சாவி கொண்டு
அவ்வுலகத்தின் கதவுகளை திறந்த பொழுது

ஏதுமற்ற ஒரு மணல்வெளி மட்டுமே
முடிவற்றதாய் நீண்டிருந்தது.
அவள் சொல்லும் உலகத்தின்
எந்த அடையாளமுமின்றி இருந்தது.

ஜெனிபர் உறக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

கீதம்
08-11-2010, 10:07 PM
குழந்தைகள் சிருஷ்டிக்கும் அற்புத உலகினை
ஆழ்ந்த உறக்கத்திலும்
தம் பிஞ்சு உள்ளங்கைக்குள்
பொத்திவைத்திருக்கும் உண்மையறியாது
களவாடிய சாவியால் என்ன பயன்?

நயம் தெறிக்கும் கவிதை. ஜெனிபரின் உலகம் அலாதியானதுதான்.

பாராட்டுகள் சசிதரன்.

ஓவியன்
09-11-2010, 12:57 AM
குழந்தைகள் உலகினை அடைய,
குழந்தைகளால்தான் முடியும்....

சாவியிருந்தும் பயனேது,
குழந்தை மனசு இல்லாதபோது....

வாழ்த்துகள் சசி..!!

தாமரை
09-11-2010, 01:14 AM
ஜெனிபர் குழந்தையா?

ஜெனிபர் யார் என்பதைப் பொறுத்து கவிதைகள் மாறலாம்.

ஆனால் உண்மை என்னவென்றால்

ஒரு பழைய மகாபாரதக் கதை இருக்கிறது.

கிருஷ்ணர் துரியோதனனை அழைத்து உலகத்தில் ஒரு நல்லவனைக் கண்டுபிடித்து அழைத்து வரச் சொல்லுவார். அவன் தேடித் தேடிக் களைத்துப் போய் உலகில் எல்லோரிடமும் ஏதாவது ஒரு கெட்ட குணம் இருக்கிறது யாரும் நல்லவர் இல்லை என்று சொல்லுவான்.

தர்மனை அழைத்து ஒரு கெட்டவனை அழைத்து வரச் சொல்லுவார். . அவன் தேடித் தேடிக் களைத்துப் போய் உலகில் எல்லோரிடமும் ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்கிறது யாரும் கெட்டவர் இல்லை என்று சொல்லுவான்.


தேடுபவரின் கண்களில்தான் எல்லாம் இருக்கிறது என்பார்கள். அதுபோல் ஜென்னிஃபர் சொன்ன உலகம் அவள் கண்களில் / நெஞ்சில் இருக்கிறது.. அத்தனையையும் அவள் தன் கண்களுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறாள்.

அவர்கள் உலகம் காணும் பொழுது அந்தக் கண்ணாடிகளின் வழியே பார்ப்பதால் அவர்களுக்குத் தெரிகிறது. நம்மிடம் அவை இல்லை.. அதனால் நமக்கு ஒன்றும் தெரிவதில்லை.

இந்தக் கவிதைக்கும் உலகம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. அதில் நீ உன்னையே பல கோணங்களில் காணுவதற்காகத் தேடுகிறாய் என்ற கருத்து பின்புலத்தில் இருக்கிறது..

ஆனால் இடறும் ஒரே விஷயம் சாவிதான். சாவி என்றால் திறவுகோல் என்று பொருள். அவள் உலகைத் திறக்க எண்ண சாவி இருக்கிறது. ஆனால் புலியைப் பார்த்து சூடுபோட்டுக் கொண்ட பூனை, கான மயிலாட கண்டிருந்த வான்கோழி போன்ற பழைய உதாரணங்கள் இந்தக் கள்ளச் சாவி விவகாரத்தைத் தொட்டுச் சென்றிருக்கின்றன.

இந்தக் கவிதையும் அதன் பாதிப்பில் எழுந்த உனக்கென இருப்பேன் கதையும் கருவின் ஆழத்தை உணர்த்துகின்றன.

பாராட்டுகள்

ஆதவா
09-11-2010, 08:57 AM
ஜெஸி...
ஜெஸிகா...
ஜெனிபர்!!

என்ன கொடுமை சசிதரன் இது???
நான் என்னையே பார்த்துக் கொண்டதைப் போல இருந்தது கவிதை!
வாழ்த்துக்கள்!

மதி
09-11-2010, 09:56 AM
ஜெஸி...
ஜெஸிகா...
ஜெனிபர்!!

என்ன கொடுமை சசிதரன் இது???
நான் என்னையே பார்த்துக் கொண்டதைப் போல இருந்தது கவிதை!
வாழ்த்துக்கள்!
:D:D:D:D
ரொம்ப நாள் கழிச்சு ஒரு கவிதை படிச்சேன்.. உண்மையிலேயே அது தனி உலகம்...
அவர்கள் பார்வைக்கு மட்டுமே அது தெரியும்.. எந்த கள்ளச்சாவி போட்டாலும் அந்த கதவு மட்டும் திறக்காது... :icon_b:

Ravee
09-11-2010, 12:34 PM
ஆலிஸின் விந்தை உலகம் போல் ஒரு கவிதை ... இது .... முடிவா இல்லை ஆரம்பமா எனபது தெரியாத ஒரு வினா கவிதை முடிவில் , அருமை சசி :)

வசீகரன்
10-11-2010, 06:43 AM
சில ஆங்கில படங்கள் நினைவுக்கு வந்தது...!
இது ஒரு புதுவித கவிதை, புதிய சிந்தனை...
வாழ்த்துக்கள் சசி..!