PDA

View Full Version : தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: ஆரம்பம் (2)



rambal
19-11-2003, 04:54 PM
தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: ஆரம்பம் (2)

0
அடிக்குறிப்பு
ஆரம்பம்: இது தானாக ஆரம்பிப்பதில்லை. ஏதாவதொரு இயக்கத்தின் முடிவில் வேறொன்றாக ஆரம்பிக்கிறது
ஆற்றலைப் போல். ஆற்றலை அழிக்கவோ உருவாக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றலாம்.
உதாரணமாக நெருப்பு எனும் ஆற்றலில் இருந்து மின்சாரம் எடுக்கலாம். அப்படியானால் நெருப்பு என்பதுதானே
ஆரம்பம் என்று நினைக்கலாம். கிடையாது. அதைத்தான் பௌதிகம் சொல்கிறது. இந்த பிரபஞ்சத்தின் தாதுக்களில்
நெருப்பு என்பது மறைந்து கிடக்கிறது அதை வேண்டும் எனும் பொழுது எடுத்துக் கொள்ளலாம். இப்படியாகத்தான்
என்று எதையும் உருவாக்கிவிடமுடியாது. ஆரம்பிக்க முடியாது.

0
எனது நாட்டை விட்டு அந்நிய நாட்டில் தரையிறங்கினேன். எனது நாடு எனும் முடிவில் அடுத்த நாட்டில் வாழ ஆரம்பிக்கிறேன்.
எனது நாட்டில் ஏற்பட இனக்கலவரத்தில் வேறு வழியில்லாமல் இங்கு வந்து இறங்கினேன். எனது இனம் எது என்பது பற்றிய
பிரக்ஞை என்னிடம் ஏதும் இப்போது இல்லை. ஆனால், என்றாவது ஒருநாள் என் இனக்குழுவை கண்டுபிடித்து விடுவேன்
எனும் நம்பிக்கை மட்டும் என்னிடம் உள்ளது. ஒரு நாட்டை விட்டு அகதியாக மற்றொரு நாட்டிற்கு சென்று
அங்கிருக்கும் மொழியைக் கற்று அங்கு இருக்கும் இனக்குழுவோடு இரண்டறக் கலப்பதில் இப்போது எல்லோரும்
சந்தோசம் கொள்கின்றனர். எனக்கு இன்னும் எனது இனத்தின் மீதான பற்று மட்டும் குறைந்தபாடில்லை.
இறங்கியதும் முதல் வேலையாக எனது குடியிருப்பு அட்டையைக் கிழித்து எறிந்து விட்டேன்.
இப்போது எனக்கு இந்த நாட்டின் குடியுரிமமும், வேலைக்கான உரிமமும் வழங்கப்படவேண்டும்.
எல்லாம் சாதாரணமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

0
இங்கு இருக்கும் இன மக்கள் பேசும் மொழி உவர்ப்பாக இருந்தது. எனது ஆதி மொழி எதுவென்று தெரியாத நிலையில்
புதிதாய் ஒரு மொழி கற்பதற்கு மனதில்லை. ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அதன் தாய்க் கடவுளை
அழித்துவிட்டால் போதும். அந்த இனம் அழிந்து விடும் என்பது காலங்காலமாக நடந்து வரும் பாரம்பரியம்.
அதன் மொழி, அதன் குழுக்கள் எல்லாம் திரிந்து போய் நாளடைவில் முற்றிலும் அழிந்து...
முதலில் நான் எனது தாய்க்கடவுளைக் கண்டுபிடிக்கவேண்டும். இல்லையெனில் என்னிடம் இருக்கும்
சில குறிப்புகள் கொண்டு எனது இனக்குழுவில் ஒருவரையாவது கண்டுபிடிக்கவேண்டும். அதன் பின்புதான்
எனது மொழியையும் அதன் சுவையையும் அறிய முடியும். இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் மொழி
என்னுடைய இனக்குழுவைச் சார்ந்ததல்ல. வேறு ஒரு இனக்குழுவின் மொழி இது.
அந்த இனக்குழு எனது தேசத்தின் ஒரு பகுதியில் பெரும் இனக்குழுவாக இருந்து கொண்டு அரசை எதிர்த்து
மாற்று அரசு அமைக்க முயல்கிறது. இதனாலேயே என்னையும் அந்த இனக்குழுவின் பிரஜையன்று பயம் கலந்து
அணுகுகிறார்கள்..

0
எனக்கு இன்னும் வேலைக்கான உரிமம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் குடியுரிமம் கூட இல்லாத
நிலையில் கபேக்குச் சென்றேன். அந்த பாதை எனக்கு மிகவும் பழக்கப்பட்டதாகவும் மேலும், நான் அங்கு ஏற்கனவே
வந்துபோய் பரிச்சயமானது போன்றும் ஒரு தோற்றத்தை மனதில் கொடுத்தது. அங்கு இப்போதுதான் முதல் முறையாகப் போகிறேன்.யென் உள்மனதிற்கு மட்டும் ஏதோ உவகையாக இருந்தது. எனது இனக்குழுவையும், எனது தாய்க்கடவுளையும் எனது மொழியையும்
கண்டுபிடித்துவிடுவேன் என்று...