PDA

View Full Version : திருக்குறள் கதைகள்.



M.Jagadeesan
04-11-2010, 12:38 PM
ஒருவன் தன வேலையில் இடமாற்றம் காரணமாக, இருந்த வீட்டைக் காலி செய்து கொண்டு வேறு ஊருக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது.அந்த ஊருக்குப் போகவேண்டுமானால், வழியில் உள்ள ஒரு பெரிய ஆற்றைக் கடந்தாகவேண்டும்.ஆறு நிறைய தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு,ஒரு படகை வாடகைக்குப் பேசி ஏற்பாடு செய்து கொண்டான்.வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் படகில் ஏற்றினான். மனைவி, மற்றும் இரு குழந்தைகளுடன் படகில் ஏறி அமர்ந்து கொண்டான்.

படகு ஆற்றில் சிறிது தூரம் சென்றவுடன், ஆடத் தொடங்கியது.படகில், அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றியதன் காரணமாக,படகு,மெல்ல மெல்ல ஆற்றில் அமிழத் தொடங்கியது.ஆற்றுநீர் கொஞ்சம் கொஞ்சமாக படகின் உள்ளே வரத் தொடங்கியது.நிலைமையின் ஆபத்தைப் புரிந்துகொண்ட அவன்,விரைந்து செயலாற்றத் தொடங்கினான்.பாரத்தைக் குறைப்பதற்காக, ஒவ்வொரு பொருளாக எடுத்து ஆற்றில் வீசினான்.இவ்வாறு கட்டில்,பீரோ,கிரைண்டர்,மிக்சி,குளிர்சாதனப் பெட்டி என்று ஒவ்வொன்றாக ஆற்றிலே தள்ளி விட்டான்.ஓரளவு பாரம் குறைந்தவுடன்,படகு, மெல்ல மெல்ல மேலே எழும்பி வந்தது.படகில் நீர் நுழைவதும் நின்றுவிட்டது.படகு பாதுகாப்பாக மறுகரையை வந்து அடைந்தது.

கவலையுடன் இருந்த மனைவியைப் பார்த்துக் கணவன் சொன்னான்,"கவலைப்படாதே,இந்தப் பொருட்கள் எல்லாம், நம்மைவிட்டுப் போகாதிருந்தால்,நம்முடைய உயிர்,நம்மைவிட்டுப் போயிருக்கும்.நம்முடைய அருமைக் குழந்தைகளையும்,நாம் இழந்திருப்போம்.நம்மைவிட்டுப் போன இப்பொருட்களை எல்லாம், நாம் திரும்பப் பெறமுடியும். ஆகையால் நீ கவலைப்படாதே"-என்று ஆறுதல் கூறினான்.அவன் மனைவி,கண்களில் ஆனந்தக் கண்ணீர்மல்க,அப்படியே தன கணவன் மீது சாய்ந்து கொண்டாள்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

என்பது குறள்.ஒருவன்,எந்தெந்தப் பொருட்களிடம் பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ,அந்தந்தப் பொருட்களினால்,அவனுக்குத் துன்பம் இல்லை என்பது இக்குறளின் பொருள்.

வானவர்கோன்
04-11-2010, 02:43 PM
குறளும், கருத்துக் கதையும் அருமை.

M.Jagadeesan
04-11-2010, 02:51 PM
குறளும், கருத்துக் கதையும் அருமை.

நன்றி வானவர்கோன்

கீதம்
04-11-2010, 10:36 PM
பகிர்வுக்கு நன்றி ஜெகதீசன் ஐயா.

திருக்குறள் கதைகள் என்ற தலைப்பில் அனைத்தையும் ஒரே திரியின்கீழ் தொகுத்தளிக்கலாம் என்பது என் கருத்து.

M.Jagadeesan
05-11-2010, 12:34 AM
பகிர்வுக்கு நன்றி ஜெகதீசன் ஐயா.

திருக்குறள் கதைகள் என்ற தலைப்பில் அனைத்தையும் ஒரே திரியின்கீழ் தொகுத்தளிக்கலாம் என்பது என் கருத்து.

சரி அவ்வாறே செய்கிறேன்.

M.Jagadeesan
05-11-2010, 11:40 AM
என் மகளுடைய திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருந்தன.திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் வேகமாக நடந்துகொண்டிருந்தன.பக்கத்து ஊருக்குச் சென்று நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.வழியில் இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள அடர்ந்த வனப்பகுதியைக் கடக்கவேண்டும்.பஸ் வசதி கிடையாது.மாலை மணி மூன்று.இருட்டுவதற்குள் அந்த வனப்பகுதியைக் கடந்து விடவேண்டும் என்பதற்காக வேகமாக நடந்தேன்.இருட்டிவிட்டால் கொடிய காட்டு மிருகங்கள் நடமாடும் இடம். எனவே விரைவாக நடந்தேன்.

காட்டின் நடுப் பகுதிக்கு வந்தபொழுது திடீரென்று இடி இடித்தது போல பெரிய ஓசைக் கேட்டது.எதிரே நான் பார்த்த காட்சி என்னைக் குலை நடுங்க வைத்தது.இரண்டு ஆண் யானைகள் பயங்கரமாகப் பிளிறிக்கொண்டு ஒன்றுடன் ஒன்று போரிட்டுக் கொண்டிருந்தன.அவைகளின் பிளிறல் சத்தம் அந்த வனாந்திரம் முழுவதும் எதிரொலித்தது.முயல், நரி போன்ற சிறு விலங்குகள் அலறி அடித்துக் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் தஞ்சம் புகுந்தன.யானைகள் இரண்டும் மூர்க்கத் தனமாகப் போரிட்டுக் கொண்டிருந்தன.ஒன்றையொன்று ஆவேசமாகத் தாக்கிக் கொண்டன. இரண்டு மலைகள் மோதிக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்தக் காட்சி.

யானைகள் சுழன்று சுழன்று போரிட்டன.இருபதடி தூரத்தில் நான்.நம்மீது மோதிவிட்டால் என்ன ஆகுமோ என்ற பயத்தில், பக்கத்தில் இருந்த ஒரு உயரமான பாறையின் மீது ஏறி நின்று கொண்டேன். பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன், பயம் விலகிவிட்டது.யானைகள் போரிடுகின்ற அந்தக் காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது.தொடர்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது.யானைகளின் மத்தகங்களில் இருந்து ரத்தப் பெருக்கு ஏற்பட்டு, ரத்தம் தும்பிக்கைகளின் வழியாக வழிந்துகொண்டிருந்தது.மோதிக்கொண்ட வேகத்தில், ஒரு யானையின் தந்தம் முறிந்து கீழே விழுந்தது.வலிகாரணமாக அந்த யானையால், தொடர்ந்து போரிட முடியவில்லை.பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு,காட்டுக்குள் ஒடி விட்டது.மற்றொரு ஆண்யானை, அதை விரட்டிக் கொண்டே அதன் பின் சென்றது.

யானைப்போர், ஒரு வழியாக முடிந்தது.இனி ஆபத்தில்லை என்று உறுதி செய்துகொண்டு,பாறையை விட்டு இறங்கிவந்தேன்.வேகமாக நடந்து ஊர் வந்து சேர்ந்தேன்.

பத்து நாட்கள் கழித்து,என்மகளின் திருமணம் இனிதே நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்திவிட்டு மகிழ்ச்சியுடன் விடை பெற்றுச் சென்றனர்.

என்னுடைய நண்பர் ஒருவர் விடை பெற்றுச் செல்லும்போது,"மகளின் திருமணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தி முடித்து விட்டீர்கள்.சாப்பாடு பிரமாதம்; எவ்வளவு செலவாயிற்று?" என்று கேட்டார்.
"சுமாராக ஐந்து லட்சம் வரைக்கும் செலவாயிருக்கும் என்று எண்ணுகிறேன்" என்று பதில் சொன்னேன்.
"வங்கியில் கடன் ஏதும் வாங்கினீர்களா?" என்று நண்பர் கேட்டார்.
"இல்லையில்லை; கடன் ஏதும் வாங்கவில்லை.சென்ற ஆண்டு நான் ஒய்வு பெற்றேன்.அதனால் வந்த பணப்பயன்கள் யாவையும் சேமித்து வைத்திருந்தேன்.நல்ல வரன் வந்தது.பத்து பைசா கடன் வாங்காமல் திருமணத்தை நடத்தி முடித்துவிட்டேன்" என்று சொன்னேன்.
மிகவும் நல்ல காரியம் செய்தீர்கள்.கையில் பணத்தை வைத்துக்கொண்டு திருமணம், வீடுகட்டுதல் போன்ற செயல்களை மேற்கொள்ளும்பொழுது எவ்வித மன இறுக்கமும் இருக்காது.அதில் ஏற்படும் இன்பமே அலாதிதான்" என்று சொல்லி முடித்தார்.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

என்பது குறள். தன கையிலே பொருளை வைத்துக் கொண்டு ஒரு செயலைச் செய்தல் என்பது மலைமேல் பாதுகாப்பாக நின்று கொண்டு யானைப் போரைக் காண்பதற்கு ஒப்பாகும் என்பது இக்குறளின் பொருள்.

M.Jagadeesan
07-11-2010, 01:08 AM
பொய்யா விளக்கு.
-----------------------------
இராமகிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது சுமார் ஒன்பது வயதில், அவரது பிறந்த குலவழக்கப்படி, அவருக்குப் பிரம்மோபதேசம்,அதாவது பூணூல் போட்டு ஆன்மீக உபதேசம் செய்யும் உபநயனச் சடங்கு நடந்தது.அதில்,பூணூல் போட்ட சிறுவன்,மற்றவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டும் என்று ஒரு கட்டம் உண்டு.பிச்சை ஏற்கும் கட்டம் வந்ததும்,இராமகிருஷ்ணருக்குத் தான் கொடுத்த வாக்கு ஒன்று நினைவிற்கு வந்தது.தனது அன்னைக்குப் பலவகையிலும் உதவி செய்து அன்னையின் அன்பிற்குப் பாத்திரமாக நடந்து வந்தாள் தானி என்னும் ஒரு கருமானின் மனைவி.அவள் தன்மேல் அன்பு காட்டியதன் விளைவாக,"உபநயனத்தன்று,என்னிடம் பிச்சை ஏற்பாயா?" என்று கேட்டதற்கு,"ஏற்பேன்" என்று வாக்களித்தார் இராமகிருஷ்ணர்.

அந்த வாக்கு இப்போது நினைவிற்கு வந்தது. அண்ணாவிடம் அதைக்கூறி,அவளிடமிருந்துதான் முதலில் பிச்சை ஏற்கப் போவதாகக் கூறினார்.உடனே அண்ணா வெகுண்டார்,"தாழ்ந்த குலப் பெண்ணிடம் பிச்சை ஏற்பது மரபல்ல" என்றுகூறி "அவளிடம் பிச்சை ஏற்கக்கூடாது" என்றார்.

ஆனால் இராமகிருஷ்ணர்,"அவளுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்.கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்றால் நான் உண்மை நெறியினின்று தவறியவன் ஆவேன்.உண்மை நெறியை நான் கடைப் பிடிக்கவில்லை என்றால் இந்தப் பூணூல் அணிவதால் பயன் ஏதும் இல்லை" என்று கூறிப் பிடிவாதமாக தானியிடமிருந்து பிச்சை ஏற்றுத் தன வாக்கினைக் காப்பாற்றினார்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

புற இருளை நீக்குகின்ற சூரியன்,சந்திரன்,தீபம் போன்ற விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல.அகத்தே ஏற்றப்படுகின்ற "உண்மை" என்னும் விளக்கே சான்றோர்களுக்கு அழகு தருவதாகும்.

தாமரை
07-11-2010, 01:51 AM
ஜகதீசன், எளிமையான கதைகள் - குறள் விளக்கம் என்று கொண்டு செல்கிறீர்கள். எளிமையான கதைகளே குழந்தைகளுக்கு குறள் கற்றுக் கொடுக்க உகந்த வழியாகும். இதே மாதிரி அவர்களுக்கு ஏற்ற மாதிரியான கதைகளையே கொடுத்தீர்களென்றால் அது மிக உபயோகமாக இருக்கும்.

M.Jagadeesan
07-11-2010, 02:49 AM
ஜகதீசன், எளிமையான கதைகள் - குறள் விளக்கம் என்று கொண்டு செல்கிறீர்கள். எளிமையான கதைகளே குழந்தைகளுக்கு குறள் கற்றுக் கொடுக்க உகந்த வழியாகும். இதே மாதிரி அவர்களுக்கு ஏற்ற மாதிரியான கதைகளையே கொடுத்தீர்களென்றால் அது மிக உபயோகமாக இருக்கும்.

தங்கள் ஆலோசனைக்கு நன்றி.

M.Jagadeesan
09-11-2010, 03:41 PM
கூற்றம் குதித்தலும் கைகூடும்
-----------------------------------------------
மார்க்கண்டேயர் என்பவர் மிருகண்டு முனிவர் என்பவருடைய புதல்வர்.மிருகண்டு முனிவர் மக்கட் பேற்றை விரும்பித் தவம் செய்தபோது இறைவன் தோன்றி, "நூறாண்டுகள் வரையில் வாழ்ந்திருக்கக் கூடிய அறிவற்ற புதல்வன் வேண்டுமா? அன்றி அறிவுடையவனாய் என்பால் அன்புடையவனாய் பதினாறே ஆண்டுகள் மட்டும் உலகில் வாழ்ந்திருக்கக் கூடிய புதல்வன் வேண்டுமா?"-என்று கேட்டார்.மிருகண்டு முனிவர் இறைவனை நோக்கிச்,"சில ஆண்டுகளே வாழ்ந்தாலும்,அறிவுடையவனாய்ச் சிவத் தொண்டனாக விளங்கக் கூடிய சிறுவனே எனக்கு வேண்டும்" என்று கேட்டார்."அவ்வாறே ஆகுக" என்று இறைவனும் அருள் புரிந்தார்.

இறைவன் திருவருள் செய்தபடி மார்க்கண்டேயர் பிறந்தார். அறிவில் சிறந்து விளங்கினார்.பதினாறாம் ஆண்டின் இறுதியில் மகனை இழக்கவேண்டுமே என்று பெற்றோர் வருந்தினர்.செய்தியை உணர்ந்த மார்க்கண்டேயர் இறைவனை நோக்கித் தவம் புரிந்தார். தம் உயிர் கொண்டுபோக வந்த யமனையும் வென்று என்றும் பதினாறு ஆண்டுடையவர் என்னுஞ் சிறப்பையும் அடைந்தார்.விடா முயற்சியைப் பற்றுக் கோடாகக் கொண்டால் ஊழையும் வெல்லலாம் என்பதை இவர் உலகுக்கு உணர்த்தினார்.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

தவத்தின் ஆற்றலால், எமனையும் வெல்லமுடியும் என்பது இக்குறளின் கருத்து.

கீதம்
09-11-2010, 08:29 PM
குறள் தேர்வும் அதற்கான விளக்கக் கதைகளும் வெகு சிறப்பு. குறளைப் பொருளுடன் எம் மனதில் இருத்தும் முயற்சியில் உங்களுக்கு வெற்றியே!

பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
09-11-2010, 10:47 PM
குறள் தேர்வும் அதற்கான விளக்கக் கதைகளும் வெகு சிறப்பு. குறளைப் பொருளுடன் எம் மனதில் இருத்தும் முயற்சியில் உங்களுக்கு வெற்றியே!

பாராட்டுகள் ஐயா.

நன்றி கீதம்

M.Jagadeesan
12-11-2010, 04:24 AM
நெஞ்சத்தார் காதலவராக.
-------------------------------------
காப்பி சாப்பிடலாம் என்று எண்ணி காதலனும்,காதலியும் ஓட்டல் சரவணபவனுக்குள் நுழைந்தார்கள்.

காதலன்: (சர்வரிடம்) "சூடாக இரண்டு கப் காப்பி கொண்டு வா"
காதலி:(சர்வரிடம்) "ஒரு காப்பி, ஒரு ஐஸ்கிரீம் கொண்டு வா"
காதலன்:"ஏன் காப்பி வேண்டாமா? இந்த மழைகாலக் குளிரில் யாராவது ஐஸ்கிரீம் சாப்பிடுவார்களா?"
காதலி:"சுடச்சுடக் காப்பி சாப்பிடப் பிடிக்கவில்லை"
காதலன்: "ஏன் பிடிக்கவில்லை?"
காதலி:"உங்களைப் பார்த்த முதல் நாளே, நீங்கள் என் நெஞ்சில் குடியேறி விட்டீர்கள்.அன்றுமுதல் சூடாக எதையும் சாப்பிடுவதில்லை.ஏனென்றால் வெம்மையின் காரணமாக உங்கள் உடல் வெந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்"
காதலன்:அப்படியா? நானும் இன்றுமுதல் ஒரு சபதம் ஏற்கப்போகிறேன்.
காதலி:"என்ன அது?"
காதலன்:"இன்றுமுதல் நான் சிகரெட் பிடிக்கப் போவதில்லை"
காதலி:"ஏன்?"
காதலன்:" எப்படி உன் உள்ளத்தில் நான் இருக்கின்றேனோ அதேபோல என் உள்ளத்திலும் நீ இருக்கின்றாய். நான் சிகரெட் பிடித்தால் உனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுமே? அதற்காகத்தான்."

இருவரும் வாய்விட்டு சிரிக்கின்றனர்.

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.(1128 )

எம்காதலர் எப்போதும் நெஞ்சில் இருப்பதால்,வெம்மையான பொருளை உண்பதற்கு அஞ்சினோம். என்பது இக்குறளின் பொருள்.

M.Jagadeesan
14-11-2010, 11:33 AM
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
---------------------------------------------------------
ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலே தலைக்காடு என்னும் ஊரிலே செல்லையாப் புலவர் என்னும் பெயருடைய புலவர் ஒருவர் இருந்தார்.அவர் ஓரளவு கல்வி கற்றுக் கொண்டவுடன் தம்மை ஒரு பெரும் புலவராக எண்ணி ஆணவத்தோடு எல்லோரிடமும் நடந்து கொண்டார்.யாரையும் இவர் பொருட்படுத்துவதே இல்லை..பல இடங்கட்கும் போய்த் தம்முடைய கல்விப் பெருமையைக் காட்டிச் சொற்பொழிவுகள் செய்து கொண்டு திரிந்தார்.தாம் பேசுகிற அவைகளிலெல்லாம் தம்முடைய பெருமிதம் தோன்றுமாறு பேசினார்.ஓரிடத்தில் கல்வியறிவு பெற்றிராத பொதுமக்களைக் காட்டு மிராண்டிகள் என்றும், விலங்குகள் என்றும் கூறினார்.நூல்களில் அவ்வாறுதான் சொல்லப் பட்டிருக்கிறது என்றும் பேசினார்.செல்லையாப் புலவருடைய ஆணவத்தை அடக்க வேண்டும் என்று சிலர் எண்ணிக் கொண்டிருந்தனர்.

ஒரு சிறுவன், தான் புலவருடைய செருக்கை அடக்கி விடுவதாகச் சொன்னான்.புலவர் செல்லக்கூடிய வழியில் வேறு சில பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான்.அவனுக்கு அகவை பன்னிரண்டு தான் இருக்கும்.பிள்ளைகள் எதிர்பார்த்தபடி புலவர் அவ்வழியே வந்தார்.புலவரின் ஆணவத்தை அடக்குவதாகக் கூறிய சிறுவன்,புலவருக்கு எதிரே சென்று,"எங்களுக்கு ஓர் ஐயம் இருக்கிறது;அதனைத் தாங்கள் தீர்க்கவேண்டும்"என்று கேட்டுக் கொண்டான்.புலவர் அவனைப் பார்த்து நகைத்துத்,"தமிழ் நெடுங்கணக்கு முழுவதையும் இன்னும் கற்றுக்கொள்ளாத உன்னுடைய ஐயத்தை என்னால் தீர்க்க முடியாதா? கூறு, உடனே போக்குகிறேன்"என்றார்.

சிறுவன் புலவரைப் பார்த்து,"ஐயா எழுபத்தைந்தோடு "மை" சேர்த்தால் என்னாகும்?" என்று கேட்டான்.அவன் கேட்பது புலவருக்கு விளங்கவில்லை."என்னடா பையா உளறுகிறாய்?"என்று சொன்னார்.இச்சமயத்தில் பல பெரிய மனிதர்கள் அவ்விடத்திற்கு வந்துவிட்டார்கள்.சிறுவன் புலவரைப் பார்த்து "ஐயா நான் உளறவில்லை; நன்றாக எண்ணிப் பார்த்துச் சொல்லுங்கள்"என்று கூறி மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டான்.புலவர் விழித்தார்.கூடியிருந்தவர்கள் நகைத்தனர்.புலவர்,நகைப்பவர்களைப் பார்த்து,"அவன் உளறுகிறான்;நீங்கள் நகைக்கிறீர்களே" என்று சினத்துடன் மொழிந்தார்.

சிறுவன் "நான் உளறவில்லை;எழுபத்து ஐந்தோடு "மை"சேர்த்தால் என்ன ஆகும் என்று கேட்டேன்.எழுபத்தைந்து என்ற எண்ணைக் குறிக்கும் தமிழ் எண் "௭௫ " இத்துடன் "மை" சேர்த்தால் "எருமை" வரும். இது படித்தவராகிய உங்களுக்கு விளங்கவில்லையே?"என்றுகூறி நகைத்தான்.கூடியிருந்தவர்களும் பலமாகச் சிரித்தனர்.செல்லையாப் புலவர் பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டார்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

Thanks:Neethi nerikkathaikal, kazhaka veliyeedu.

கீதம்
14-11-2010, 09:36 PM
குறள் சொல்லும் கதைகள் அருமை. பகிர்வுக்கு நன்றி ஐயா.

M.Jagadeesan
14-11-2010, 11:42 PM
குறள் சொல்லும் கதைகள் அருமை. பகிர்வுக்கு நன்றி ஐயா.

பாராட்டுக்கு நன்றி கீதம்.

M.Jagadeesan
19-11-2010, 03:13 AM
சாதலின் இன்னாதது இல்லை
-----------------------------------------------
குமணன் என்பவன் வள்ளல்களில் ஒருவன்.இவன் இரப்பவர்க்கு இல்லையென்னாது வாரிக்கொடுக்கும் வள்ளன்மை கொண்டிருந்தான்.குமணன் பலருக்கும் பொருள் கொடுத்து உதவுவது அவனுடைய தம்பி அமணனுக்குப் பிடிக்கவில்லை.அவன் பலவகையிலும் தன் அண்ணனுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான்.பிறகு சூழ்ச்சியால் ஆட்சியைக் கவர்ந்தான். தன் அண்ணன் குமணனைக் காட்டிற்கு விரட்டிவிட்டான்.பிறகு அண்ணன் திரும்பி வராமல் இருக்க, அவனைக் கொன்று தொலைக்கவும் ஏற்பாடு செய்தான். தன் அண்ணனுடையத் தலையைக் கொண்டு வருபவர்களுக்குக் கோடி செம்பொன் வழங்குவ தாகவும் பறை அறிவித்தான்.இச்செய்தி காட்டிலிருந்த குமணனுக்குத் தெரிந்தது.

ஒருநாள் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர், பரிசில் பெறக்கருதி காட்டில் இருந்த குமணனிடம் சென்றார்.தம் வறுமை நிலையை எடுத்துரைத்தார்.புலவரின் வறுமை நிலை அறிந்து குமணன் மிகவும் வருந்தினான்.புலவரிடம் கொடுப்பதற்கு தன்னிடம் பொருள் இல்லையே என்று ஏங்கினான். பிறகு தன்னுடைய தம்பி தன்னுடைய தலைக்குக் கோடி செம்பொன் கொடுப்பதாகக் கூறியிருத்தலை எண்ணி மகிழ்ந்தான்."நாம் இறந்த பிறகு நம்முடைய தலை வீணாகப் போகப்போகிறது. அதனை இப்பொழுது இப்புலவருகுக் கொடுத்தால் இவருடைய வறுமை நீங்கி நலமுறுவார். நமக்கும் புகழுண்டாகும், புலவருடைய வறுமையைப் போக்காத நாம் உடலைத் தாங்கிக் கொண்டிருத்தலால் என்ன பயன்?"என்று எண்ணினான். தன்னுடையத் தலையைக் கொய்து கொண்டுபோய் தம்பியிடம் கொடுத்துக் கோடி செம்பொன் பெற்றுக் கொள்ளுமாறு கூறினான்.

ஆனால் புலவர் குமணனை கொல்ல விரும்பவில்லை.குமணன் தந்த வாளோடு அவன் தம்பி இளங்குமணனிடம் சென்றார். "யான் உன் தமையனைக் கண்டு பாடினேன்.அவன் தான் நாடு இழந்த துன்பத்தைவிட எனக்குப் பொருள் தராத துன்பத்தைப் பெரிதாக எண்ணினான்.தன்னிடம் வேறு பொருள் இல்லாததால் தன் தலையைக் கொய்து கொள்ளுமாறு வாளை என்னிடம் தந்தான்.அதனுடன் நான் வந்தேன்"என்று கூறினார்.

பிறகு "இவ்வுலகத்தில் நிலைபெற விரும்பியவர் புகழை நிலைநிறுத்திச் சென்றனர்.மற்றவர் இரந்தவர்க்கு வேண்டியன தராது இவ்வுலகத்தில் தொடர்பின்றி மறைந்தனர்." என்று உரைத்தார்.இளங்குமணன் மனம் திருந்தினான், தன் அண்ணனை அணுகித் தன் மனமாற்றத்தை உரைத்து திரும்ப அழைத்து வந்து நாட்டை ஆளச் செய்தான்.

சாதலின் இன்னாதது இல்லை இனிததூம்
ஈதல் இயையாக் கடை.

இறப்பை விடக் கொடிய துன்பம் தருவது எதுவும் இல்லை.ஆனால் தன்னிடம் இரப்பவர்க்கு எதுவும் கொடுக்க இயலாதபோது இறப்பும் இனிமை உடையதாகும்.

sa1985
19-11-2010, 10:50 AM
நன்று:smilie_abcfra:

M.Jagadeesan
19-11-2010, 11:41 AM
நன்று:smilie_abcfra:

பின்னூட்டத்திற்கு நன்றி.

கீதம்
20-11-2010, 12:04 AM
ஈதலே வாழ்க்கையென வாழ்ந்தவருக்கு ஈயாநிலை, சாவுக்கு நிகரெனக் குறளுக்கு எடுத்துக்காட்டிய குமணன் கதை அருமை. நன்றி ஜகதீசன் அவர்களே.

M.Jagadeesan
20-11-2010, 12:51 AM
ஈதலே வாழ்க்கையென வாழ்ந்தவருக்கு ஈயாநிலை, சாவுக்கு நிகரெனக் குறளுக்கு எடுத்துக்காட்டிய குமணன் கதை அருமை. நன்றி ஜகதீசன் அவர்களே.

பாராட்டுக்கு நன்றி கீதம்.

M.Jagadeesan
22-11-2010, 09:15 AM
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
------------------------------------------------
மனித வாழ்க்கை இயந்திரத்தனமாகிவிட்டது.சென்னை நகரைப் பொறுத்தவரை பக்கத்து வீடுகளில் யார் வசிக்கின்றனர் என்பது கூடத் தெரியாமல் வாழ்கின்றனர்.சாலையில் யாரேனும் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடினால் கூட வேடிக்கை பார்த்துச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.

மனிதர்களுக்கே உதவி செய்ய விரும்பாத மனிதர்கள் மத்தியில்,கடந்த 10 ஆண்டுகளாக பல தெரு நாய்களுக்குத் தினமும் மதிய உணவு அளித்து வருகிறார் ஒரு நரிக்குறவர்.திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் முகப்புப் பகுதியில் மதிய வேளையில் இந்த அரிய காட்சியை
பலர் பார்த்து நெகிழ்ந்து வருகின்றனர்.

அடையாறு இந்திராநகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிப்பவர் ஜெமினி.வயது 43 .நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர்,அடுக்கு மாடி குடியிருப்புகளில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி சொக்கம்மாள்.இவர்களுக்கு இரண்டு மகன்களும்,ஒரு மகளும் உள்ளனர்.

சொக்கம்மாளும், கணவருக்கு உதவியாக துப்புரவுத் தொழிலில் ஈடுபடுகிறார்.ஜெமினி, வேலை பார்க்கும் குடியிருப்புகளில் பழைய உணவுகளை தினமும் சேகரித்துக்கொண்டு திருவான்மியூர் வந்து தெரு நாய்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இவரது தலை தெரிந்ததும் அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள், ஜெமினியை சூழ்ந்து கொள்கின்றன.

ஜீவகாருண்ய சேவை குறித்து ஜெமினி கூறியதாவது:

நான் துப்புரவுத் தொழிலை 20 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்.சிறுவயது முதல் நாய்கள் என்றால் எனக்கு பிரியம்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.அவற்றில் தூக்கி எறியப்படும் உணவுகளை நாய்கள் சுலபமாக சாப்பிட்டு வந்தன.

பின், ஓனிக்ஸ் நிறுவனம் மூலம் ஆங்காங்கே மிகப்பெரிய பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டன. அவற்றின்மீது ஏறி தெரு நாய்கள் உணவு சாப்பிட முடியாமல் தவித்தன. அவற்றிற்கு இது போன்ற குப்பையில் கிடக்கும் உணவுகள் மட்டும்தான் உணவு என்பதால், பல நாய்கள் உணவு கிடைக்காமல் பசியால் வாடி இறந்தன.

இவற்றைப் பார்த்த நான், மனவருத்தம் அடைந்து ஒரு முடிவெடுத்தேன்.என்னால் முடிந்த வரை உணவு சேகரித்து தெரு நாய்களுக்கு மதிய உணவு அளிக்கும் இந்த திட்டம் தோன்றியது.வேலை பார்க்கும் இடத்தில் மிச்சமாகிப் போன உணவுகளை சேகரித்து மதிய நேரத்தில் தெரு நாய்களுக்கு வழங்கி வருகிறேன்.

சில நாட்களில் உணவு கிடைக்காது.அப்போது, எனது கையில் உள்ள காசுக்கு பிரட், மற்றும் கறிக் கழிவுகளை வாங்கிப் போடுவேன்.கடந்த 10 ஆண்டுகளாக இந்த சேவையை மன நிறைவுடன் செய்து வருகிறேன்.

இவ்வாறு ஜெமினி கூறி பெருமைப்பட்டுக் கொண்டார்.



பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

கிடைத்த உணவைத் தானும் உண்டு மற்ற உயிர்களுக்கும் கொடுத்து உண்ணச் செய்வது தலையாய அறமாகும் என்று நூல்கள் கூறும்.

நன்றி:தினமலர்;1 -11 -2010

M.Jagadeesan
27-12-2010, 12:05 AM
எழுபது வயதான பங்கஜம் தன் மகனைப் பார்த்து,"சரவணா! எனக்குஉடம்புக்கு ரொம்பவும் முடியல! படுத்தா உக்கார முடியல, உக்காந்தாநிக்க முடியல! நின்னா நடக்க முடியல! கீழ தள்ளுது.டாக்டர பாத்தாதேவல! என்ன டாக்டர் கிட்டஅழச்சிட்டுப் போப்பா." என்று கேட்டாள்.

"அம்மா! ஆபீஸிலிருந்து வந்த பின்னாடி இன்னிக்கி சாயங்காலம் உன்னடாக்டர் கிட்ட அழச்சிட்டுப் போறேம்மா!" என்றான் சரவணன்.

மாலை ஆறு மணி. ஆபீஸிலிருந்து சரவணன் வந்தான்.டாக்டரிடம் போவதற்கு ரெடியாக இருந்தாள் பங்கஜம்.இருவரும் ஒரு ஆட்டோவைப்பிடித்துக் கொண்டு டாக்டரின் கிளினிக்கை அடைந்தார்கள்.

டாக்டர் பங்கஜத்தை செக்கப் செய்தபிறகு சரவணனைப் பார்த்து,"அம்மாவுக்கு ஒன்றுமில்லை!பிரஷர் அதிகமாக உள்ளது.மாத்திரைகள் எழுதித் தாரேன்.தொடர்ந்து சாப்பிடணும்;சாப்பாட்டில் உப்பைக் குறைச்சிக்கணும்;தினமும் அரைமணி நேரம் வாக்கிங் போகணும்.இன்னும் ஒரு மாசம்கழிச்சி என்ன வந்து பாருங்க!" என்று சொல்லி மாத்திரைகளை எழுதித்தந்தார்.

பங்கஜம் தொடர்ந்து மருந்துகளை சாப்பிட்டு வந்தாள்.பத்து நாட்களிலேயே நல்ல குணம் தெரிந்தது.ஓடி ஆடி வீட்டு வேலைகளைச்செய்தாள்.ஆனால் சரவணனுக்கு உடம்புக்கு வந்துவிட்டது.எதையும்சரியாகச் சாப்பிடுவதில்லை;இரவில் சரியாகத் தூங்குவதில்லை; அவன்முகத்தில் சிரிப்பைப் பார்த்தேவெகுநாளாயிற்று.ஆபீஸுக்கும் நேரத்திற்குச்செல்வதில்லை.பித்துப்பிடித்தவன்போலஇருந்தான்.உடம்பும்மெலிந்துவிட்டது.இப்படியேஒருமாதம்ஆயிற்று.இதையெல்லாம் கவனித்த பங்கஜம் தன்மகனைப் பார்த்து,"என்னப்பா சரவணன்! உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கே? ஒழுங்கா சாப்பிட்டாத்தானே உடம்புநல்லா இருக்கும்!ஆபீஸ்ல ஒழுங்காவேலைசெய்யமுடியும்! எப்பவும்கலகலன்னு சிரிச்சி பேசறவன் இப்படி உம்மணா மூஞ்ஞியாட்டம் இருக்கியே! இன்னிக்கி வா! டாக்டரைப் போய்ப் பார்க்கலாம்!என்று மகனிடம் சொன்னாள்.

"சரிம்மா! இன்னிக்கி சாயங்காலம் போலாம்!"

மாலை ஆறு மணிக்கு சரவணனை அழைத்துக்கொண்டு டாக்டரிடம்சென்றாள் பங்கஜம்.
"வாங்கம்மா!எப்படி இருக்கீங்க? மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடறீங்களா?"
"டாக்டர்! இப்ப நான் நல்லா இருக்கேன்.எனக்கு ஒன்னும் இல்ல! ஆனால்என் மகனுக்குத்தான் ஒரு மாசமா உடம்பு சரியில்ல எதையும் சரியாசாப்பிடறது இல்ல.சரியா தூங்கறது இல்ல!எதையோ பறி கொடுத்தவன்மாதிரி இருக்கான்!இப்பல்லாம் அவன் முகத்தில் சிரிப்பையே காணோம்.என்னன்னு கொஞ்ஞம் பாருங்க டாக்டர்!

டாக்டர் சரவணனை உள்ளே அழைத்துச் சென்றார்.பத்து நிமிடம் கழித்து டாக்டர் வெளியே வந்தார்.அவருக்குப் பின்னால் சரவணன்சிரித்துக் கொண்டே வெளியே வந்தான்.தன் மகன் சிரிப்பதைக் கண்டுபங்கஜம் மிகுந்த வியப்பு அடைந்தாள்.

"அம்மா! உங்க மகனுக்கு ஒன்னும் இல்ல! உங்க மகனுக்கு வந்திருக்கிறநோய் இந்த வயசுல எல்லாருக்கும் வர்ரதுதான்.அவருக்கு வந்திருக்கிறதுகாதல் நோய்! அந்த நோயை அவருக்குக் கொடுத்ததேநான்தான் .இப்பநானேஅதசரிபண்ணிட்டேன்.இனிமே உங்க மகன் ஒழுங்கா சாப்பிடுவாரு! ஒழுங்கா தூங்குவாரு! கவலைப் படாமே போய் வாங்க அத்தை!"என்று சொன்னாள் இருபத்தைந்து வயதான டாக்டர் அகல்யா.

"அத்தையா!" என்று சொல்லி மயக்கம் அடைந்தாள் பங்கஜம்.

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து.

என்பது குறள்.

கீதம்
27-12-2010, 04:58 AM
அழகான காதல் நாடகமொன்று அன்னை அறியாமலேயே அரங்கேறியதோ அம்மருத்துவர் மூலம்?

குறளுக்கேற்ற கதை. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
04-01-2011, 09:58 AM
விந்தையான தீ!
.......................

அது மார்கழி மாதம். கடுமையான குளிர் நிலவியது.விடியற்காலை நேரம். மக்கள்
ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள்.இந்தக் காட்சியை அரண்
மனையின் உப்பரிகையிலிருந்து அரசனும் அரசியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அரசி, அரசனைப் பார்த்து,"அன்பரே! நாமும் இதுபோலத் தீ மூட்டிக் குளிர் காயலாமா?
எனக்குக் குளிராக உள்ளது" என்று கேட்டாள்.

"அன்பே! நீயே தீயாக இருக்கும்போது இன்னொரு தீ நமக்கெதற்கு?"

"என்ன உளறுகிறீர்கள்? நான் எப்படித் தீயாவேன்?

"அன்பே! அவர்கள் குளிர்காய்கின்ற தீக்கும், உன்னுள் இருக்கின்ற தீக்கும் மிகுந்த
வேறுபாடு உள்ளது.அந்தத் தீயானது நெருங்கினால் சுடும்:விட்டு நீங்கினால் சுடாது.
ஆனால் உன்னுள் இருக்கின்ற தீ விந்தையான இயல்புடையது. நெருங்கினால் குளிர்
விக்கும்;விட்டு நீங்கினாலோ சுடும். இந்தத் தீயை எங்கிருந்து பெற்றாய்?"

"உம்மிடம் இருந்துதான்! இந்தத் தீயை மூட்டியதே நீர்தானே!"

"என்ன நானா? அப்படியானால் இந்தத் தீயை எவ்வாறு அணைப்பது?"

"அணைத்தால் அணையும்!"

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்என்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

கீதம்
04-01-2011, 10:35 PM
பெண் ஒரு தீயென்றே
பெண்ணொருத்தியிடம்
விந்தைபடப் பகன்ற குறளைப்
விளக்கத்துடன் பகிர்ந்ததற்கு நன்றி ஐயா.

M.Jagadeesan
05-01-2011, 01:11 AM
பெண் ஒரு தீயென்றே
பெண்ணொருத்தியிடம்
விந்தைபடப் பகன்ற குறளைப்
விளக்கத்துடன் பகிர்ந்ததற்கு நன்றி ஐயா.

பின்னூட்டத்திற்கு நன்றி!

M.Jagadeesan
31-01-2011, 12:37 AM
"ஏங்க! இங்க ஒரு நிமிஷம் வாங்க!" சமையலறையிலிருந்து மனைவி
அழைத்தாள்
"என்ன ஜானு?"
"இந்த பல்பு சரியா வெளிச்சம் தரல;இத மாத்திடுங்க"
"சமையலறையில் இருக்கறதால புகை படிஞ்சிருக்கு; ஒரு துணியால
நல்லா துடைச்சி போட்டோம்னா எல்லாம் சரியாயிடும்"

குண்டு பல்பைக் கழட்டி நன்றாகத் துடைத்த பின்பு மீண்டும் பல்பை மாட்டி எரிய விட்டேன்.கொஞ்சம் வெளிச்சம் அதிகமாக இருந்தது.

"என்னங்க இது?வெளிச்சம் கொஞ்சம் ஜாஸ்தியா வந்திருக்கு;ஆனா நம்ம
ஹால்ல இருக்குற குண்டுபல்பு வெளிச்சம் இதுக்கு இல்லயே!"

"ஜானு! இது 40 வாட் பல்பு; ஹால்ல இருக்குறது 60 வாட்.அதனால அதுல
வெளிச்சம் ஜாஸ்தியாத்தான் இருக்கும். 40 வாட் பல்ப எவ்வளவுதான் நாம
துடைச்சிப் போட்டாலும் அது 60 வாட் பல்பு வெளிச்சத்தைக் கொடுக்காது.
பல்பை செய்யும்போதே அப்படி செஞ்சிருக்காங்க!"

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.

பொருள்: நுட்பமான நூல்களை ஒருவன் எவ்வளவுதான் கற்றாலும் பிறக்கும் போது இருந்த அறிவே மிகுந்து நிற்கும்.

M.Jagadeesan
01-02-2011, 11:11 AM
இரவுமணி10இருக்கும்.படுக்கலாம்என்றுபடுக்கைஅறைக்குச்சென்றேன்.படுக்கை யெல்லாம் தூசி படிந்து அலங்கோலமாகக் காட்சிஅளித்தது.படுக்கை விரிப்பை வராந்தாவுக்கு எடுத்துச்சென்று தூசி தட்டினேன்.தூசித்துகள்கள் மூக்கிலே ஏற பலமாக ஹா..ச்,ஹா..ச் சென்றுஇருமுறை தும்மினேன்.

" நூறாண்டு வாழ்க!" என்று சொல்லி சிரித்துக்கொண்டே என்மனைவிஜோதி வந்தாள்.திடீரென்று அவள் முகம் கறுத்தது."ஆமாம்! யாராவது நினைத்தால்தானே தும்மல் வரும்? இந்த நேரத்தில் யார் உங்களை நினைத்துக் கொள்கிறார்கள்? உண்மையைச் சொல்லுங்கள்!" என்றாள்

"என் நண்பர்கள் யாராவது நினைக்கலாம்;அல்லது எனக்குக் கடன் கொடுத்
தவன் யாராவது கொடுத்தகடன் வருமா,வராதா? என்று நினைத்திருக்கலாம்."என்று சொன்னேன்.

நான் சொன்ன பதிலால் அவள் சமாதானம் அடையாமல்,"அவர்கள் ஏன்இந்த இரவு நேரத்தில் உங்களை நினைக்கப் போகிறார்கள்.உங்களோடுபணிபுரியும் எவளாவது நினைத்திருக்கலாம் அல்லவா?ஆண்களை எப்போதும் நம்ப முடியாது."என்று சொல்லிக் கண்ணைக் கசக்கினாள்.

"ஜோதி! யாராவது நம்மை நினைத்தால் நமக்குத் தும்மல் வரும் என்பது
ஒரு நம்பிக்கை! படுக்கையிலுள்ள தூசியைத் தட்டினேன்.அதனால் தும்மல்
வந்தது;இதையெல்லாம் பெரிதுபடுத்தாதே!" என்று நான் சொல்லி முடிப்ப
தற்குள் என் மனைவி பலமாக "ஆ...ச்"சென்று தும்மினாள்.தும்மியவள்
என்னை மிரள,மிரளப் பார்த்தாள்.

"பயப்படாதே! ஜோதி! நீ என்னை நினைத்தது போல, நான் உன்னை நினைக்க மாட்டேன்" என்று நான் சொன்னவுடன் அவள் கண்களிலிருந்து பொல
பொலவென்று நீர் கொட்டியது.அப்படியே என்மீது சாய்ந்து கொண்டாள்.

வழுத்தினாள் தும்மினே னாக அழித்துஅழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

பொருள்: நான் தும்மியவுடன் என்னை வாழ்த்தியவள், பிறகு யாரோ ஒரு
பெண் நினைத்ததால் தான் எனக்குத் தும்மல் வந்தது என்று சொல்லி
அழுதாள்.

கீதம்
03-02-2011, 11:48 PM
பெண்களுக்கு எப்பவுமே பொஸஸிவ்னஸ் (சரியான தமிழ்ப்பதம் என்ன?) அதிகம் என்பதை அந்தக்காலத்திலேயே கணித்து எழுதிவைத்திருக்கிறாரே வள்ளுவர்.

குறளை விளக்கும் குறும்புக்கதை அருமை. பாராட்டுகள் ஐயா.

ஜானகி
04-02-2011, 12:54 AM
உங்களது கதைகளை திருவள்ளுவரும் வாசுகிஅம்மையும் கூட, ரசித்துப் படித்து மகிழ்ந்துகொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன் !

M.Jagadeesan
04-02-2011, 02:02 AM
பாராட்டுதலுக்கு நன்றி கீதம்.

possasiveness=தன்வயப்படுத்துதல் என்பது சரியாக இருக்குமா?

M.Jagadeesan
04-02-2011, 02:03 AM
பாராட்டுக்கு நன்றி ஜானகி அவர்களே!

M.Jagadeesan
05-03-2011, 10:42 AM
அது ஒரு சோப்புக்கம்பெனி.அந்தக்கம்பெனியின்நிர்வாகஇயக்குநர்ஜான்டேவிட்.அந்தக் கம்பெனியின் உரிமையாளனும் அவன்தான்.அந்தக்கம்பெனியில் சுமார் 500 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.சோப்புசெய்வதற்கானமேம்பட்டதொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்காகவும்,இயந்திரங்களைவாங்குவதற்காகவும் ஜான்டேவிட்லண்டன் செல்ல வேண்டியிருந்தது.திரும்ப வருவதற்கு ஓர் ஆண்டு ஆகும்.அதுவரையில் கம்பெனியின் பொறுப்பை யாரிடம் விட்டுச்செல்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.

அந்தக் கம்பெனியின் மேலாளராக ஜோஸப் பணியாற்றி வந்தான்.முப்பது வயது இளைஞன். நேர்த்தியாக உடையணிவான்.அழகான தோற்றமுடையவன்.செய்யும் தொழிலில் மிகவும் கண்ணுங்கருத்துமாக இருப்பவன். நேரம் தவறாமல் கம்பெனிக்கு
வந்துவிடுவான்.தனக்குக் கீழே பணியாற்றுபவர்களிடம் மிகவும் கண்டிப்பாக இருப்
பான்.சிறு தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்துவிடுவான்.அவனைக்
கண்டாலே தொழிலாளர்கள் பயப்படுவார்கள்.

அந்தக் கம்பெனியின் இன்னொரு மேலாளராக வரதாச்சாரி பணியாற்றி வந்தார்.வயது
அறுபது. நெற்றி நிறைய நாமம் போட்டிருப்பார். கால் சற்று ஊனம்.வியாபாரத்தின்
எல்லா நெளிவு சுழிவுகளும் அவருக்குத் தெரியும்.மனிதாபிமானம் மிக்கவர்.தொழிலா
ளிகளிடம் இனிமையாகப் பழகுவார்.அவர்கள் வீட்டில் நல்லது, கெட்டது என்றால் தவ
றாமல் கலந்துகொள்வார்.அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் கடன் கொடுத்து உதவு
வார்.தொழிலாளிகள் வதாச்சாரியிடம் மிக்க அன்பு கொண்டிருந்தனர்.

இவ்விருவருடைய குணங்களையும் டேவிட் நன்கு அறிந்து வைத்திருந்தான்.முன்பு
ஒருமாதம் வெளி நாட்டிற்குச் சென்று இருந்தபோது கம்பெனியின் பொறுப்பை
ஜோஸப்பிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்று இருந்தான்.அப்போது நடைபெற்ற ஒரு
சம்பவம் டேவிட்டின் நெஞ்சில் நிழலாடியது.கம்பெனியில் பாண்டியன் என்ற ஒரு
ஊழியர் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.ஒரு நாள் பாண்டியன் வேலைசெய்து கொண்டிருந்தபோது வீட்டில் இருந்து அவனுக்கு அவனுடைய மனைவி போன் செய்
தாள்.குழந்தைக்கு உடல் நிலை சரியில்லையென்றும், உடனடியாக டாக்டரைப் பார்க்
கவேண்டும் என்றும் போன் செய்தாள்.பாண்டியன், ஜோஸப்பிடம் சென்று அரை நாள்
லீவு கொடுக்குமாறு கேட்டான். ஜோஸப் மறுத்துவிட்டான்.குழந்தைக்கு உடல் நலம்
சரியில்லாததால்,உடனடியாக டாக்டரைப் பார்க்கவேண்டும் என்று சொன்னான். அப்
போதும் ஜோஸப் லீவு கொடுக்க மறுத்துவிட்டான்.

பாண்டியன் குழந்தைக்கு உடனடியாக வைத்தியம் செய்யாததால், நிலைமை மோச
மாகி ஜன்னிகண்டு இறந்துவிட்டது.வெளி நாடு சென்று திரும்பிய டேவிட் இதைக்
கேட்டு மிகவும் வருத்தமடைந்தான்.ஜோஸப்பின் நடத்தைக்கு கண்டனம் தெரிவித்
தான்.பாண்டியன் குடும்பத்திற்கு 1 இலட்சம் நஷ்ட ஈடு கொடுத்தான்.இதையெல்லாம்
எண்ணிப்பார்த்த டேவிட் ஒரு முடிவுக்கு வந்தவனாக வரதாச்சாரியைக் கூப்பிட்டான்.

"மிஸ்டர் வரதாச்சாரி! நான் நாளைக்கு லண்டன் போவது உங்களுக்குத் தெரியும். நான் வருவதற்கு ஒரு வருடம் ஆகும்.கம்பெனியை உங்கள் பொறுப்பில் விட்டுச்
செல்கிறேன்.கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.இதோ அதற்கான ஆர்டர்" என்று
சொல்லி அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான்.

கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன
வினைபடு பாலாற் கொளல்.

பொருள்:கூரிய அம்பு பார்வைக்கு அழகாக இருந்தாலும், அதன் நோக்கம் கொடியது.
யாழ் வளைவாக இருந்தாலும் இனிய இசையைக் கொடுக்க வல்லது.அதுபோல
மனிதர்களை அவர்களின் புறத்தோற்றம் காணாது, அவர்களின் குணங்களைக்கண்டு
செயல்களை ஒப்படைக்கவேண்டும்

M.Jagadeesan
07-03-2011, 03:31 PM
எல்லோருக்கும் தெய்வம் துணை நிற்பது இல்லை.தன்னலம் கருதாது பொது நலம்
கருதி தொண்டுசெய்கிற அனைவருக்குமே தெய்வம் துணையாக நிற்கும். நன்றாகக்
கால் நீட்டிக்கூட படுக்க வசதியில்லாத எழைக்குடிசையில் பிறந்து வளர்ந்தவர் ஆபி
ரஹாம்லிங்கன். நிறவேற்றுமையைக் களைந்து அடிமைகளாய் விற்கப்படும் அவல
நிலையிலிருந்து நீக்ரோ இன மக்களை விடுவிக்கவேண்டும் என்ற எண்ணம் அவரது
உள்ளத்தில் எழுந்தவுடனேயே, தெய்வம் அவருக்காக வரிந்து கட்டிக்கொண்டு வேலை
செய்யத் தொடங்கி விட்டது.அவரை அமெரிக்காவின் அதிபராக்கி வெள்ளைமாளிகை
யில் உட்காரவைத்து,அவருக்கு நிழல்போல் நின்று தொண்டு செய்தது.

வழக்கறிஞர் தொழில் செய்து சம்பாதிப்பதற்காகத் தென்னாப்பிரிக்காவின் ஜொகன்ன
ஸ்பர்க் நகரை நோக்கிப் பயணம் செய்த வழியில்,கறுப்புக்கூலி என்று ஒரு வெள்ளை
யனால் ரயிலைவிட்டுக் கீழே தள்ளப்பட்டார் ஒரு நோஞ்ஞான் மனிதர்.பாரிஸ்டர் பட்
டம் பெற்ற தனக்கே,முதல் வகுப்பில் பயணம் செய்யப் பயணச்சீட்டு வைத்துள்ள
தனக்கே இந்தக் கதி என்றால் இங்குள்ள ஏழை இந்தியனின் கதி என்ன? என்ற ஆழ்ந்த
சிந்தனைக்குப் பின் ஒரு திடமான முடிவுக்கு வந்தார் அந்த நோஞ்ஞான் மனிதர்.
தெய்வம், அவரைத் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியருக்கு மட்டுமல்ல,இந்தி
யாவில் வாழ்ந்த இந்தியருக்கும் தந்தையாக்கி விடுதலை விளக்கை அவர் ஏற்றும்
வரையில் அவரது தொண்டுக்குத் துணை நின்றது. அவர்தாம் காந்தியடிகள்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

கீதம்
07-03-2011, 08:15 PM
சிந்தனையைத் தூண்டும் அற்புத உதாரணங்களுடன் குறள் விளக்கம் தருவதற்கு நன்றி ஐயா. தொடருங்கள், தொடர்ந்து வருகிறோம்.

M.Jagadeesan
07-03-2011, 10:28 PM
சிந்தனையைத் தூண்டும் அற்புத உதாரணங்களுடன் குறள் விளக்கம் தருவதற்கு நன்றி ஐயா. தொடருங்கள், தொடர்ந்து வருகிறோம்.

பாராட்டுக்களுக்கு நன்றி! கீதம்!

M.Jagadeesan
26-04-2011, 02:59 PM
வேலைக்காரி முனியம்மா, எஜமானி பங்கஜத்தின் முன்பாகத் தலையைச் சொரிந்துகொண்டு நின்றாள்.

" என்ன முனிமா? தலையைச் சொரிஞ்சிகிட்டு நிக்கறே?"

" எம் பொண்ணுக்கு உடம்பு சரியில்லம்மா! டாக்டர் கிட்ட காட்டணும். ஒரு 500 ரூவா கொடுத்தீங்கன்னா நல்லதும்மா. சம்பளத்துல பிடிச்சிக்குங்கம்மா!"

"என்ன முனிமா! தேர்தல்ல நிக்குற நம்ம கவுன்சிலர் கந்தசாமி, அவருக்கு ஓட்டுப் போடறதுக்காக நேத்து எல்லாத்துக்கும் ஆயிரம் ரூவா கொடுத்தாரே! அத நீ வாங்கலியா?"

" கொடுத்தாங்க! ஆனா நான் வாங்கல"

" ஏன்?"

" அம்மா! நம்ம கவுன்சிலர் கந்தசாமி அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாரு; இப்ப அவரு எப்படி இருக்கார்னு நம்ம எல்லாத்துக்கும் தெரியும். கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்துன்னு ஏகமா சொத்து சேத்துட்டாரு. ஜனங்க வாயக்கட்டி, வயித்தக்கட்டி சேத்த பணத்தைக் கொள்ளை அடிச்சி சேத்த சொத்து அது. அந்தப் பாவப்பட்ட பணத்துல எம் பொண்ணுக்கு வைத்தியம் பாக்க மனசு கேக்கல. அதான் வேண்டான்னு சொல்லிட்டேன்"

" அட போடி பைத்தியக்காரி! மீன் வித்த காசு நாறுமா? நாய் வித்த காசு குரைக்குமா? அப்படின்னு சொல்லுவாங்க! பெரிய தத்துவம் பேசறா பொழைக்கத் தெரியாதவ!" என்று சொல்லி பங்கஜம் தலையில் அடித்துக் கொண்டாள்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

கருத்து: நல்லது செய்வதாக இருந்தாலும் கூட, நேர்மையற்ற வழியில் சேர்க்கப்பட்ட செல்வத்தைப் பெறுவது முறையல்ல.

ஜானகி
26-04-2011, 04:39 PM
இன்று நடக்கும் முறைகேடுகளை அன்றே வள்ளுவர் ஊகித்துச் சொல்லிவிட்டார்.....காலத்திற்கேற்ற கதை விளக்கம்.

கீதம்
27-04-2011, 12:24 AM
வள்ளுவர் வாய்மொழியைப் பின்பற்றுபவருக்குப் பிழைக்கத்தெரியாதவர் என்ற பட்டம். பிழைக்கத்தெரியாவிடினும் இழுக்கடையா மனிதராயிருத்தல் நலமல்லவா?

நல்ல குறளும், நடைமுறைக் கூற்றும் மிக நன்று. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
27-04-2011, 12:27 AM
நன்றி கீதம்.

M.Jagadeesan
28-04-2011, 02:56 AM
காதல் நோய்
....................
அழுது அழுது காஞ்சனாவின் கண்கள் சிவந்திருந்தன. முகம் வீங்கிப்போய் இருந்தது.அம்மாவின் சொற்கள் ஈட்டிகளாக நெஞ்சில் பாய்ந்தன.

" இதோ பாரடி! அந்த மாடிவீட்டுக்காரங்க பரம்பரை பணக்காரங்க; நாம பரம ஏழைங்க; காதல் கத்திரிக்காய் எல்லாம் புத்தகத்துல படிக்கறதுக்கும்,சினிமாவுல பாக்குறதுக்குந் தாண்டி நல்லாயிருக்கும்; நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராதுடி; கால்வயித்துக்கு கஞ்சி குடிச்சாலும் மானத்தோட வாழ்ந்திட்டு இருக்கோம். அதுல மண் அள்ளி போட்டுராதடி.அந்தப் பையன மறந்துடு; நானே நல்ல பையனாப் பாத்து உனக்குக் கட்டி வக்கிறேன். என் வார்த்தைய மீறி ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணினேன்னு வச்சுக்கோ, அப்புறம் இந்த அம்மாவ நீ உசிரோட பாக்கமாட்டே!"

" என்ன மன்னிச்சிடம்மா! உன் வார்த்தைய மீறி நான் எதுவும் செய்யமாட்டேன்" என்று சொல்லி தன் காலில் விழப்போனத் தன் மகளைக் கட்டி அணைத்துக் கொண்டாள் முனியம்மா.

" சரி,சரி அழாதே! குடத்த எடுத்துக்கிட்டு ஆத்துக்குப்போய் தண்ணி கொண்டா; சமையல் பண்ணனும்."

" சரி அம்மா!" என்று சொல்லிய காஞ்சனா குடத்தை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றாள்.

ஆற்றில் இறங்கி குடத்தைக் கழுவிக்கொண்டு இருந்தாள் காஞ்சனா. சற்று தூரத்தில் இருந்த இரண்டு பெண்கள், காஞ்சனாவின் காதுபடவே பேசத் தொடங்கினர்.

" விமலா! தெரியுமா சேதி " என்றாள் கமலா.

" சொன்னாத்தானே தெரியும் " என்றாள் விமலா.

" வெளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கேக்குது "

" கொஞ்சம் புரியிறமாதிரி சொல்லடி "

" இவ கெட்ட கேட்டுக்கு மாடிவீட்டுப் பையனுக்கு வலை வீசியிருக்கா! " என்று காஞ்சனாவை ஜாடை காட்டிப் பேசினாள் கமலா.

" நமக்கு எதுக்குடி ஊர்வம்பு? எவ எக்கேடு கெட்டுப்போனா நமக்கென்ன?" என்றால் விமலா.

குடத்தில் நீரை மொண்டு இடுப்பில் வைத்துக்கொண்டு நடந்தாள் காஞ்சனா. கண்களில் வழிந்த நீரைக் கைகளால் துடைத்துக்கொண்டாள்.

ஊரார் பேசிய ஏச்சுக்களையும், அன்னை பேசிய பேச்சுக்களையும் மீறி மாடிவீட்டுப் பையனுடைய நினைவுகள், மனத்திரையில் மீண்டும் மீண்டும் வருவதைக் காஞ்சனாவால் தடுக்கமுடியவில்லை.

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்.

கருத்து: ஊரார் பேசுகின்ற பழிச்சொல் எருவாகவும், அன்னைசொல் நீராகவும் துனணநிற்க, காதல் பயிரானது செழித்து வளர்கிறது.

ஜானகி
28-04-2011, 11:22 AM
ஏப்ரல் 27..ஆம் தேதி இந்து பேப்பரில், மெட்ரோ பிளசில், ' பாதை ' எனும் இசைக் குழுவினர், திருக்குறள்களை, 100 விநாடிப் படமாக எடுக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். உங்களது கதைகள் அவர்களுக்குப் பயனாகலாம்..தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி...paadhai-band@gmail.com
நியோன் நகரம் வெளியிட்டவர்கள்...பாதை இசைக்குழுவினர்.

Nivas.T
28-04-2011, 12:03 PM
இப்படி ஒரு பயனுள்ள அழகான பதிவை இதுவரை நான் காணாமல் போனது மிகப்பெரிய பிழையே, இப்படி ஒரு திரியை தொடங்கி மிக அருமையாக திருக்குறள் கதைகளை தரும் ஜெகதீசன் ஐயா வை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்னிடம். இனி நானும் தொடர்ந்து வருகிறேன் உங்களோடு

மிக்க நன்றி ஐயா




பெண்களுக்கு எப்பவுமே பொஸஸிவ்னஸ் (சரியான தமிழ்ப்பதம் என்ன?) அதிகம் என்பதை அந்தக்காலத்திலேயே கணித்து எழுதிவைத்திருக்கிறாரே வள்ளுவர்.

குறளை விளக்கும் குறும்புக்கதை அருமை. பாராட்டுகள் ஐயா.


பாராட்டுதலுக்கு நன்றி கீதம்.

possasiveness=தன்வயப்படுத்துதல் என்பது சரியாக இருக்குமா?

பொசசிவ்நஸ் என்னும் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் பதம் " உடமையுணர்வு "

M.Jagadeesan
29-04-2011, 04:16 AM
ஜானகி அவர்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி!.

M.Jagadeesan
29-04-2011, 04:17 AM
பாராட்டுகளுக்கு நன்றி நிவாஸ்.

கீதம்
30-04-2011, 01:31 AM
பாராட்டுதலுக்கு நன்றி கீதம்.

possasiveness=தன்வயப்படுத்துதல் என்பது சரியாக இருக்குமா?




பொசசிவ்நஸ் என்னும் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் பதம் " உடமையுணர்வு "

தன்வயப்படுத்துதல், உடமையுணர்வு இரண்டுமே சரியான பொருளாகத் தோன்றினாலும், இன்னும் வலியுறுத்துவதுபோன்ற வார்த்தை இருந்தால் நலமென்று தோன்றுகிறது. கிடைக்கிறவரை இன்னும் முயற்சி செய்வோம். நன்றி ஜெகதீசன் ஐயா. நன்றி நிவாஸ்.

M.Jagadeesan
30-04-2011, 03:15 PM
அது ஓர் அழகிய தடாகம்.அந்தத் தடாகத்தில் தாமரையும்,அல்லியும்,குவளையும் பூத்துக் குலுங்கின.அருகருகே இருந்த அல்லியும்,தாமரையும் பேசிக்கொண்டன.

" தாமரை அக்கா! நேற்று இங்கு வந்து குளக்கரையில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தாயா?"

" பார்த்தேன்! அப்பப்பா! என்ன அழகு!! அவளைப் போன்ற அழகியை இதுவரையில் நான் பார்த்ததேயில்லை."

"மை தீட்டிய கண்களில்தான் எத்தனை கவர்ச்சி!'

" உண்மைதான் அல்லி! "கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான்" என்று கண்களைப் பற்றி வள்ளுவர் கூறியது உண்மைதான் என்று அவளுடைய கண்களைப் பார்த்தபிறகு தான் தெரிந்துகொண்டேன்."

"அவளுடைய கரிய விழிகளைப் பார்த்தபோது பழைய திரைப்படப்பாடல் ஒன்று என் நினைவுக்கு வந்தது அக்கா!"

"என்ன பாடல் அது?"

"இமையென்னும் சிறகை அடிக்கடி விரிக்கும்
இருவிழிக் கருவண்டு" என்பதுதான் அந்தப் பாடல்.

"ஆகா! அற்புதமான கற்பனை! அழகான உவமை!! அவளுடைய மருண்ட பார்வையைப் பார்க்கும்போது மான்விழி என்று சொல்லத் தோன்றுகிறது.துள்ளும் விழிகளைப் பார்க்கும்போது கயல்விழி என்று சொல்லத் தோன்றுகிறது."

"கொஞ்சம் வாயை மூடுகிறீர்களா?"என்ற அதட்டலான குரல்கேட்டு அல்லியும், தாமரையும் திரும்பிப் பார்த்தனர்.அங்கே குவளைமலர் கம்பீரமாக நின்றிருந்தது.

"அந்தப் பெண்ணுக்குக் குவளைமலர் போன்ற கண்கள் என்று சொன்னால் நீங்கள் குறைந்தா போய்விடுவீர்கள்? என் அழகைக் கண்டு உங்களுக்கெல்லாம் பொறாமை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்னைப் பெண்களின் கண்களுக்கு ஒப்பிட்டுப் பாடியுள்ளார். அந்தப் பாட்டைச் சொல்லவா?"

"என்ன பாடல் அது?"

"தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏந்தக்
குவளைக்கண் விழித்து நோக்க
தெண்டிரை எழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம் வீற்றிருக்கும் மாதோ.

என்பதுதான் அந்தப் பாடல். மருத நிலத்தைப் பெண்ணாக உருவகம் செய்து கம்பர் பாடிய இந்தப் பாடலில், "குவளைக்கண் விழித்து நோக்க" என்று பாடி என்னைப் பெருமைப் படுத்தியுள்ளார்."

அந்த சமயத்தில் நேற்றுவந்த அந்தப் பெண் குளக்கரையில் வந்து அமர்ந்தாள்.மூன்று பூக்களும் அவளுடைய கண்களையே பார்த்துக்கொண்டிருந்தன.வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன.சிறிது நேரத்தில் அப்பெண் எழுந்து போய்விட்டாள்.

"குவளை அக்கா! அவளுடைய கண்களைப் பார்த்தீர்களா?"

குவளை மலரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாமல் போகவே அல்லியும், தாமரையும் திரும்பிப் பார்த்தன.

அங்கே, அதுவரையில் நீண்டு நிமிர்ந்திருந்த குவளை மலரானது கூனிக் குருகிப்போய்
தலை குனிந்து தரையைப் பார்த்தபடி இருந்தது.

காணின் குவளைக் கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழைக்கண் ஒவ்வேம் என்று.

கருத்து: அவளுடையக் கண்களைப் பார்த்தால் குவளை மலரானது,"இவளுடைய கண்களுக்கு நாம் நிகராகமாட்டோம்" என்று கூறி வெட்கித் தலை குனியும்.

கீதம்
01-05-2011, 08:38 AM
அழகிய குறள்! அதனிலும் அழகியதாயொரு நிகழ்வின் விளக்கம். கூடவே இலவச இணைப்பு போல் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் பாடல். உங்கள் முயற்சியை எத்தனை பாராட்டினாலும் தகும். மகிழ்வோடு பாராட்டுகிறேன் ஐயா.

M.Jagadeesan
03-05-2011, 02:29 AM
கண்ணன் அலுவலகத்திற்குப் புறப்படும் வேளையில், மனைவி பத்மா அவனைப் பார்த்து,

" இன்னிக்கி கொஞ்சம் சீக்கிரம் வந்திருங்க! நாளைக்கி நம்ம ராணிக்குப் பிறந்தநாள்.கடையில அவளுக்கு ட்ரெஸ் எடுத்துகிட்டு அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு வந்திடுவோம். 4 மணிக்கெல்லாம் வந்திடுங்க!"

" சரி பத்மா!" என்று சொல்லிவிட்டுக் கண்ணன் அலுவலகத்திற்குக் கிளம்பிப் போய்விட்டான்.

மாலை 4 மணி. பத்மாவும், 5 வயதுக் குழந்தை ராணியும் கண்ணன் வருகைக்காகக் காத்திருந்தனர். பத்மா, கண்ணனுக்குப் போன் செய்தாள்.

" சரியா 5 மணிக்கு வந்திடறேன் பத்மா! நீயும், ராணியும் ரெடியா இருங்க!"

மணி 5 ஆயிற்று. கண்ணன் வரவில்லை. மீண்டும் போன் செய்தாள் பத்மா.

" ஆபீஸ்ல இன்னிக்கின்னு பார்த்து 2 பேர் லீவு போட்டுட்டாங்க. அவங்க வேலையும் சேர்த்து நான் செய்யவேண்டியிருக்கு. அதனாலதான் லேட்டு. சரியா 6 மணிக்கெல்லாம் வந்திடறேன்." என்றான் கண்ணன்.

மணி 6 ஆயிற்று. கண்ணன் வரவில்லை. பத்மா அவனுக்கு மீண்டும் போன் செய்யவில்லை. இது அவளுக்குப் பழகிப்போன விஷயம்.

இரவு 9 மணிக்கு கண்ணன் வீட்டிற்கு வந்தான். குழந்தை ராணி தூங்கிக்கொண்டு இருந்தாள். கண்ணனைப் பார்த்த ராணி எதுவும் பேசவில்லை.

" பத்மா.." என்று பேசவந்த கண்ணனை இடைமறித்து.

' நீங்கள் எதுவும் பேசவேண்டாம்; 24 மணி நேரமும் உங்க ஆபீஸையே கட்டிட்டு அழுங்க; எதுக்கு என்னக் கல்யாணம் பண்ணிகிட்டீங்க? அப்பா எப்பம்மா வருவார்னு
ராணி கேட்டுகிட்டே இருந்தா; பாவம் குழந்தை! அப்படியே தூங்கிப் போயிட்டா!' என்று சொல்லி கண்களைக் கசக்கிக் கொண்டே பத்மா உள்ளே சென்றுவிட்டாள்.

கடந்த ஒரு வாரமாக பத்மா கண்ணனிடம் எதுவும் பேசவில்லை. குழந்தை ராணி மூலமாக ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். கண்ணன் அலுவலகம் செல்லும்போது தன் அம்மாவின் போட்டாவைப் பார்த்து, "அம்மா! நான் ஆபீஸூக்குக் கிளம்பறேன்" என்று பத்மாவுக்குக் கேட்பதுபோலச் சொல்லுவான்.இந்த ஊமை நாடகம் எப்போது முடியும் என்று ராணி காத்துக்கொண்டு இருந்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.காலை 9 மணி இருக்கும். பத்மாவின் செல்போன் அலறியது. பத்மா எடுத்தாள்.

' பத்மா! நாந்தான் அப்பா பேசறேன். உன் தங்கை கிரிஜாவோட கல்யாணப் பத்திரிக்கையை வைப்பதற்காக நானும், உன் அம்மாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கு வர்றோம்." என்று பக்கத்து ஊரிலிருந்து பத்மாவின் அப்பா போன் செய்தார்.

உடனே பத்மா கண்ணனைப் பார்த்து," என்னங்க! அப்பாவும் அம்மாவும் கிரிஜாவோட கல்யாணப் பத்திரிக்கையை வைப்பதற்காக இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டுக்கு வராங்க; நீங்க கடைக்குப் போய் வாழை இலை வாங்கிட்டு வாங்க." என்று சொன்னாள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ராணி கை கொட்டி சிரித்தபடியே,'ஐய! அம்மா தோத்துட்டாங்க; அப்பாதான் ஜெயிச்சாரு!" என்று சொன்னாள்.

" என்னடி சொல்றே?"அதட்டலாய் கேட்டாள் பத்மா.

" நீதானே அப்பாகிட்ட மொதல்ல பேசினே? அதனால் நீ தோத்துப் போயிட்டே! அப்பா ஜெயிச்சுட்டாரு"

" யாரு ஜெயிச்சாங்க; யாரு தோத்தாங்கன்னு உங்க அப்பாகிட்டகேளு!" என்று சொல்லிவிட்டுக் கண்ணனைப் பார்த்து சிரித்தபடியே பத்மா சமையலறைக்குள் நுழைந்தாள்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலின் காணப் படும்.

கருத்து: கணவன், மனைவி இருவருள் ஊடலின் கண் யார் தோற்றாரோ அவரே வென்றவராவார்.அது அப்பொழுது அறியப்படாதது ஆயினும், பின்னர் புணர்ச்சியின் கண் அவரால் அறியப்படும்.

M.Jagadeesan
05-05-2011, 07:04 AM
அது ஓர் அடர்ந்த காடு. அந்தக் காட்டின் வழியே நானும் என் நண்பனும் சென்று கொண்டு இருந்தோம். வழியில் ஒரு குளத்தில் ஆடுகளும், மாடுகளும் நீர் அருந்திக் கொண்டு இருந்தன. வழி நடந்த களைப்பால், நானும், நண்பனும் குளக்கரையில் இருந்த ஒரு மரத்தின் கீழ், ஓய்வெடுப்பதற்காக அமர்ந்தோம்.

நீரைக்குடித்த ஆடு ஒன்று அங்கிருந்த பாறையின்மீது அமர்ந்து அசைபோட்டுக் கொண்டு இருந்தது. அடுத்த சில வினாடிகளில் அந்த இரங்கத்தக்க நிகழ்வு நடந்தது. பாறையோடு பாறையாகப் படுத்திருந்தது ஒரு மலைப்பாம்பு.பாறைக்கும், பாம்புக்கும் வேறுபாடு காண இயலாத ஆடு அந்தப்பாம்பின் மீது அமர்ந்து அசைபோட்டுக் கொண்டு இருந்தது. சரேலெனப் பாம்பு ஆட்டின்மீது பாய்ந்து அதன் தலையை விழுங்கிக்கொண்டு இருந்தது. தன்னை விடுவித்துக்கொள்ள ஆடு போராடிக்கொண்டு இருந்தது.ஆனால் முடியவில்லை. மெல்ல மெல்ல ஆடு பாம்பின் வாய்க்குள் போய்க்கொண்டு இருந்தது.உடனே நான் அந்த ஆட்டைக் காப்பாற்றுவதற்காகப் பாம்பின் அருகில் செல்ல முயற்சி செய்தேன்.என் நண்பன் என்னுடைய கையைப் பிடித்து இழுத்துப் போகாமல் என்னைத் தடுத்துவிட்டான்.

' வேண்டாம்! அதைத் தடுக்காதே! அதன் உணவை அது சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறது. நம்முடைய உணவை நாம் சாப்பிடும்போது யாராவது தடுத்தால் நாம் சும்மா இருப்போமா? பாவம்! இந்த இரைக்காக அந்தப் பாம்பு எவ்வளவு நேரம் காத்திருந்ததோ?"

" காத்திருந்ததா?"

" ஆம்! மலைப்பாம்புகள் இரையைத் தேடிச் செல்வதில்லை; ஓரிடத்தில் சுருண்டு படுத்திருக்கும். அது இருப்பதை அறியாத சில விலங்குகள் இவ்வாறு வந்து அதனிடம் மாட்டிக்கொள்ளும். இதை வடநூலார், "அஜகரவிருத்தி " என்பர். மனிதர்களுள்ளும் சிலர் இவ்வாறு உண்டு. துறவிகளும், சித்தர்களும் வீடுதோறும் சென்று இரந்து உண்ணமாட்டார்கள். அவர்கள் தெருவில் செல்லும்போது மக்களே அவர்களை நாடிச்சென்று அவர்களுக்கு உணவு கொடுப்பார்கள். இது " செல்விருந்து " எனப்படும்.வீடுதோறும் சென்று இரந்து உண்பவர்கள், "வருவிருந்து " எனப்படுவர்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

பொருள்:தன்னை நாடி வராத விருந்தினரை உண்பித்து, தன்னை நாடி வரும் விருந்தினருக்காகக் காத்திருப்பவன், வானத்திலுள்ள தேவர்களுக்கு நல்ல விருந்தாக அமைவான்.

M.Jagadeesan
17-05-2011, 08:57 AM
"காய்கறி வாங்கிட்டு வரும்போது அப்படியே ஒரு தர்பூசணி பழம் வாங்கிட்டு வாங்க! வெயிலுக்கு இதமா இருக்கும்." என்றால் என் மனைவி.

"வெயிலுக்கு இதமாத்தான் இருக்கும்; ஆனா அதுல இருக்குற கறுப்பு விதைகளை எடுத்துட்டு சாப்பிடணும்! அதுதான் கொஞ்சம் கஷ்டம்! முன்னாடியெல்லாம் திராட்சையில விதை இருக்கும்.அத சாப்பிடும்போது விதைய துப்பிட்டு சாப்பிடணும்.பிறகு Seedless Grapes..கண்டுபிடிச்சாங்க இப்ப நிம்மதியா சாப்பிட முடியுது. சீதாப்பழம் சாப்பிடறது ரொம்ப நியூசன்ஸ்! அதுல இருக்குற விதைய எடுத்துட்டு சாப்பிடறதுக்குல்ல பிராணனே போயிடும்! பழம்னா, உரிச்சோமா, சாப்பிட்டோமான்னு இருக்கணும். வாழைப்பழம் மாதிரி."

"அது கூட உரிச்சு சாப்பிடறது கொஞ்சம் கஷ்டம்தானே! யாராவது உரிச்சு கொடுத்தா வசதியா இருக்கும்! இல்லீங்களா?"

" என்ன*? கிண்டலா? என்னை வாழைப்பழ சோம்பேறின்னு சொல்றியா?"

"ஐயையோ! அப்படி நான் சொல்லலையே! எதையும் கஷ்டப்படாமெ அனுபவிக்கனும்னு நினைக்கிறீங்களே! அதைத்தான் சொன்னேன்!"

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.(1191)

பழத்தை சுவைக்கும்போது, இடையில் விதைகள் வருவது இடையூறாக இருக்கும்.கணவன் மனைவி இருவரும் உடல்,உள்ளம்,உயிர் என்னும் மூன்றாலும் ஒன்றுபட வேண்டும்.அப்படி ஒன்றுபடாத நிலையில் அவர்களை இணைத்து வைத்திருக்கும் கவர்ச்சி குறையும்.அதனால் மனவேறுபாடு தோன்றும்.அந்த வேறுபாடு புணர்ச்சி என்னும் கனியைச் சுவைக்கும்போது விதைகள் போல வந்து இடையூறு செய்யும்.

காழில் கனி= விதையில்லாத பழம்.

M.Jagadeesan
18-05-2011, 05:26 AM
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார்.அவர் ஒரு சிவபக்தர்.அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர்.மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து,"மரத்தடியில் பார்த்தீர்களா?" என்றாள்.

"பார்த்தேன்" என்றார் பரமன்.

"பார்த்தபிறகு சும்மா எப்படி போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்" என்றாள் அம்மை.

" அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன்.இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம்"

ஆனால் பார்வதி விடவில்லை.ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

"வணக்கம், முனிவரே!" என வணங்கினர் அம்மையும் அப்பனும்.

முனிவர் நிமிர்ந்து பார்த்தார்."அடடே! எம்பெருமானும் பெருமாட்டியுமா! வரணும் வரணும்..." என்று வரவேற்றார் முனிவர்.தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார்.அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு,"சரி, நாங்கள் விடை பெறுகிறோம்" என்றனர் அம்மையும் அப்பனும்.

"மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள், வணக்கம்" என்று சொல்லிவிட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.

அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார்."முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை.எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள்.கொடுக்கிறோம்" என்றார்,

முனிவர் சிரித்தார். "வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும்.வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்" என்று சொல்லிவிட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

அப்பனும் அம்மையும் விடவில்லை."ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்" என்று பிடிவாதமாய் நின்றனர்.

முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார்." நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போகவேண்டும்; அது போதும்" என்றார்.

இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர்.

"ஏற்கனவே ஊசிக்குப் பின்னால்தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தரவேண்டும்?"என்று அம்மை பணிவாய்க் கேட்டார்.

"அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே.இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தரவேண்டும்?"என்று கேட்டார் முனிவர்.

முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு," நாம் சரியாக நடந்துகொண்டால்
நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு பிறக்கிறது.இறை நம்பிக்கை இல்லாதவர்களும் சரியாக நடந்துகொண்டால் அதன் விளைவுகளும் சரியாக இருக்கும் என்பது மற்றொரு கருத்தாகும்.