PDA

View Full Version : காத(லிகள்)ல் படு(த்து)ம் பாடு..



PremM
03-11-2010, 05:54 AM
ஒரு மழை நாளில் பிறக்கின்றது இந்தக் கடிதம்..
நான் சுமந்த நம் காதல்,
கடிதமாய் இங்கே ஜனனம்..

வெளியே மழைத் துளி சொட்ட சொட்ட
யாருக்கோ எழுதப்படுகின்றது பூமியில் ஒரு கடிதம்..
உள்ளே பேனா மை சொட்ட சொட்ட
உனக்காய் நனைகிறது இந்தக் கடிதம்..

அரை நொடி போதும் உன்னிடம் சொல்லி விட,
அந்த அரை நொடியில் எங்கே ஒளித்து வைப்பது
எந்தன் பெண்மையையும்,நாணத்தையும்..

உன்னிடம் சொல்ல நினைக்கும் வார்தைகள் எல்லாம் ஏனோ,
தாயின் முந்தானைப் பற்றிக் கொண்டு நிற்க்கும் குழந்தை போல,
என் தொண்டைக் குழியில் மறைந்து நிற்க்கிறது..

நீ நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கையிலும்,
என்னைக் கடக்கையிலும்,
எப்படியோ என் விழிகளைக் கடத்திச் சென்று
உன் அருகில் பிணைக் கைதியாய் அமர்த்தி விடுகிறாய்..

நீ மற்ற பெண்களோடு சிரித்து பேசுவதை,
வெறித்து பார்க்கும் என் கண்கள்,
அப்போது விளங்கியது காதலிகள் படும் பாடு..

கவிதை ஒன்றை வாசித்து கைத்தட்டல் வாங்கினேன்..
ஓசை அடங்குமுன் உன் முகம் பார்த்தேன்,
நீ மட்டும் புன்னகைத்து விட்டு நகர்ந்தாய்,
வாசித்த கவிதை புதிராய் மாறி என்னிடமே திரும்பி வந்தது..

உன் ஆசைகள் வேண்டாமென உதறி எறிந்து
மறு நொடி உன்னைப் பார்க்கையில்,
எறிந்த ஆசைகளை தேடி எடுத்து முத்தமிட்டுக்கொள்வேன்..

உன் நினைவுகள் வேண்டாமென தொலைத்து விட்டு,
மறு நொடி உன்னைப் பார்க்கையில்,
இனிப்பைக் கண்ட எறும்புகளைப் போல,
உன் நினைவுகள் என்னை திண்ணத் தொடங்கிவிடும்..


ஒரு சித்திரம் போல் வாழ்கிறேன்,
யார் யாரோ வந்துச் செல்ல,
ஏதேதோ பேசிக் போக,
ஒன்றும் அறியாதவளாய்,
பகலென்றும் பாரமல்,
அந்த பவுர்னமி இரவில் உன் விரல் பிடித்து நடக்கிறேன்..


பகலில் விழித்தபடி உறங்குகிறேன்,
இரவில் உறங்கியபடி விழித்திருக்கிறேன்..
நிஜத்தை நிழல் என்றும்,நிழலை நிஜம் என்றும்
எனை நம்ப வைத்தாய்..

விதையாய் விழுந்து விட்ட உன்னைப் பற்றிய ரகசியங்கள்,
மரமாய் மாறி நிற்க்க,
சில நேரங்களில் கவிதையாய் மாறி உதிர்வதும் உண்டு
இதைப் போல..

பெண்ணின் கண்கள் சொல்லாத காதலை ஒன்றும்,
கடிதமோ,கவிதையோ சொல்லிவிடப் போவதில்லை,
தயக்கம் தொலைக்க துணைக்கு வரும் ஒர்..

வெடுக்கென்று கடிதத்தை பிடுங்கினாள் ஆர்த்தீ..

கடிதத்தை வாசித்தபடி,"ஏய் நல்லா இருக்குடி,எப்படியாது இன்னைகே முடிச்சுடேன்??
நான் நாளக்கி அவன் கிட்ட சொல்லிடலாம்னு இருக்கேன்"

"ம்ம் கண்டிப்பா" என தன் தவம் கலைத்து எழுந்தாள் பூவிழி..

"நீ எப்படி உன் ஆள் கிட்ட சொல்லப்போற??"தொடர்ந்தாள் ஆர்த்தீ..

புன்னகையை பதிலாய் தந்து,
தன் பூவிழிகளை ஜன்னல் வழியே மழையில் நனைத்துக் கொண்டிருந்தாள்..

வெளியே மழைத் துளி சொட்ட சொட்ட
யாருக்கோ எழுதப்பட்டுக் கொண்டிருந்தது பூமியில் ஒரு கடிதம்..

PremM
03-11-2010, 08:39 AM
தமிழ் மன்றத்தில் இது என் முதல் கவிதை,
பிழை இருந்தால் மன்னிக்கவும்.. - பிரேம்

ஆதி
03-11-2010, 09:54 AM
கவிதையில் ஒரு கடிதம்..

அரை நொடி போதும் உன்னிடம் சொல்லி விட,
அந்த அரை நொடியில் எங்கே ஒளித்து வைப்பது
எந்தன் பெண்மையையும்,நாணத்தையும்..

உன்னிடம் சொல்ல நினைக்கும் வார்தைகள் எல்லாம் ஏனோ,
தாயின் முந்தானைப் பற்றிக் கொண்டு நிற்க்கும் குழந்தை போல,
என் தொண்டைக் குழியில் மறைந்து நிற்க்கிறது..

நீ நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கையிலும்,
என்னைக் கடக்கையிலும்,
எப்படியோ என் விழிகளைக் கடத்திச் சென்று
உன் அருகில் பிணைக் கைதியாய் அமர்த்தி விடுகிறாய்..


இந்த வரிகளை மிக மிக ரசித்தேன்..

கவிதையை இன்னும் தட்டினால் அழகிய சிற்பமாகும்..

கவிதை அறுந்தறுந்திருப்பதாய் தோன்றுகிறது, தனித்தனிப்பாக்களாக்கினாலும் சிறப்பே..

சொற்செலவை குறைத்துக்கொள்ளுங்கள், கவிதை இன்னும் கூர்மையாக ஆகும்..

கவிதையின் முடிவு வரிகள் மனதில் சின்ன கனத்தைவிட்டுச் சென்றது..

ஆதி
03-11-2010, 09:55 AM
தமிழ் மன்றத்தில் இது என் முதல் கவிதை,
பிழை இருந்தால் மன்னிக்கவும்.. - பிரேம்

அறிமுகப்பகுதியில் உங்களை குறித்த அறிமுகத்தை தரலாமே பிரேம்...

PremM
04-11-2010, 06:08 AM
தங்கள் ரசனைக்கு மிக்க நன்றி ஆதன்..

அடுத்து வரும் கவிதைகளில்,கண்டிப்பாக சொற்செல்வை குறைத்துக் கொள்கிறேன்..


-பிரேம்

நாஞ்சில் த.க.ஜெய்
11-11-2010, 01:41 PM
அரை நொடி போதும் உன்னிடம் சொல்லி விட,
அந்த அரை நொடியில் எங்கே ஒளித்து வைப்பது
எந்தன் பெண்மையையும்,நாணத்தையும்..
மிகஅருமையான வரிகள் .தொடரட்டும் தங்கள் கவிதை பணி
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

பென்ஸ்
12-11-2010, 03:34 AM
நீண்ட கவிதைகள் என்னை கவர்வது இல்லை... அனால் இந்த கவிதை என்னை கடைசி வரி வரை கண் கூட சிமிட்ட விடாமல் அழத்து சென்றது....
நல்ல கவிதை கொடுத்தமைக்கு வாழ்த்துகள்....

நன்பரே ஒரு நல்ல பயனாளர் பெயரை மன்ற நிவாகியிடம் சொல்லுங்கள் அவர்கள் மாற்றி கொடுப்பார்கள்... தமிழ் மன்றத்தில் அழகாய் ஒரு வலம் வருவீர்கள் என்று இந்த முதல் கவிதையே கட்டியம் சொல்லுகிறது...

காதல் எத்தனை சுவையானது அல்லவா.... மழையின் மடியில் படுத்து கொண்டு காதலை கடிதத்தில் கொட்டுகிறாள் ... விழலுக்கு பாய்த்த நீரானாலும் மணலுக்கு தான் சென்றது....

காதலின் ஆழம் அழகாய் தெரிகிறது.... நாயகிக்கும், உங்களுக்கும் என் வாழ்த்துகள்...

PremM
14-11-2010, 05:01 PM
தங்கள் ரசனைக்கு நன்றி திரு.ஜெய்..

மிக்க நன்றி திரு,பென்ஸ் அவர்களே..
உங்களது கருத்துக்கள் என்னை எழுதத் தூண்டும்..

கண்டிப்பாக மன்றத்தில் என் பெயர் மாற்றம் செய்கிறேன்..