PDA

View Full Version : சத்தியமாம் !..... சாத்தியமா ?...ஜானகி
01-11-2010, 11:33 AM
செய்யும் செயலை சேவையெனும் யாகமாக்கி

சொல்லும் பொருளை மெய்யெனும் வேதமாக்கி

தனிமை இருளிலே மெளனமே துணையாக

மனமெனும் குகையிலே இறை ஒளி தேடுவாய் !


புலனைந்தும் உள்நோக்கி அடங்கி ஒடுங்க

மலமனைத்தும் கரைந்தோட சத்திய ஜோதி எழும்ப

தேக்கமறப் பாய்ந்திடும் சதானந்த வெள்ளத்திலே

நீக்கமற ஒளிரும் ஆத்ம தரிசனம் காண்பாய் !


பார்க்கும் பொருள் எல்லாம் நிறைவான பூரணமாகி

கேட்கும் ஒலியெல்லாம் ஓங்கார சப்தமாகி

தன்னில் உறையும் தன்னை உணர்வாய் !

இரண்டல்ல ! ஒன்றேயாம் ! அதுவும் நீயேயாம் !

வேதத்தின் வாதமிது ! சத்தியமாம் !

சாத்தியமா ? ? ?

கீதம்
01-11-2010, 11:48 AM
சாத்தியப்பட்டுவிட்டால்தான் நாமெல்லோரும் ஞானிகளாகிவிடுவோமே!

நல்லதொரு சிந்தனை! பாராட்டுகள் ஜானகி அவர்களே!

Ravee
01-11-2010, 12:06 PM
ஆஹா ஊரெல்லாம் இறைவனை தேடி என் உள்ளத்தில் காண வைத்தீர்கள் அக்கா .... அருமையான தேடல் ... படிப்படியாக மனிதனை உயர்த்தி இறைவனோடு இரண்டற கலந்து களிப்படைய செய்து விட்டீர்கள் ...:)

தாமரை
01-11-2010, 04:36 PM
இறைவன் ஆடும் கண்ணா மூச்சி ஆட்டத்தில்
கண்கள் கட்டப்பட்டு தேடிக் கொண்டிருக்கிறேன் அவனை

கையோ காலோ சட்டையின் நுனியோ
எதையாவது ஒன்றைத் தொட்டு
அவனை அவுட் ஆக்க (வெளிப்படுத்த)
தேடிக் கொண்டிருக்கிறேன்..

ஐம்புலனும் கூர்மையாய் அவனையே நோக்கி
ஆறாம் புலனில் தேடிக் கொண்டிருக்கின்றன..

தேடிக் கொண்டிருப்பது தெரியும் மட்டும்
ஆட்டம் தெரிந்து கொண்டே இருந்தது..

சோர்ந்து போகும் பொழுது
அவன் ஓசையோ, மணமோ அல்லது
கடந்து போகையில் உண்டாகும் காற்றின் ஸ்பரிசமோ
அவன் அருகில்தான் இருக்கிறான் என்பதை உணர்த்தி
தேடலைத் தொடரச் சொல்லும்..

அந்த ஒரு துளிக் கணத்தில்
மனம் சோர்ந்து உட்கார்ந்த பொழுது
மூச்சிழுத்தேன்.. விட்டேன்
அவனின் மணம் சுவாசிக்கப் பட்டது

எதோ ஒரு புலனின் பொத்தான் அழுத்தப்பட்டு
எங்கெங்கும் பிரகாசம் பரவியது..
மூச்சினால் அவனைத் தொட்டு விட்டேனென
மெல்லப் புரியத் தொடங்கியது..

எங்கும் இருப்பவனைத் தொட
எங்கேயும் செல்ல வேண்டாமே எனப்
புரியத் தொடங்கியது..

புலன்களைக் கூராக்கினேன்

சத்தியமா இது சாத்தியமா
கேள்விவியும் கேட்டது..

பதில் தேட அலையத் தோன்றவில்லை.
ஏனென்றால் புரிய ஆரம்பித்தது.
இரண்டும் அவனே.. !!

ஜானகி
02-11-2010, 05:41 AM
சாத்தியமும் அவனேயென்றால்

ஏக்கத்தின் தாக்கம், எதற்கு ?


சித்தமும், யதார்த்தமும் போடும்

யுத்தத்தின் முடிவு எப்போது ?

தாமரை
02-11-2010, 06:23 AM
தேடலின் தொடக்கமும்
தேடலின் எரிபொருளும்
தேடலின் வழித்துணையும்
தேடலின் இன்னும் அனைத்தும்
ஏக்கங்களில் இருந்தே
பிறப்பிக்கப்படுகின்றன..

ஏக்கத்திலிருந்து பல பாதைகள் தொடங்குகின்றன..
ஒவ்வொரு பாதையின் முடிவிலும்
இறைவன் காத்திருக்கிறான்..

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

ஏக்கத்தின் தாக்கம் தீருதல்
தேடல்களில் மாத்திரமே


தேடலுக்காகத்தான்
நாம் படைக்கப் பட்டிருக்கிறோம்.

தேடல்கள் உள்ளேயும் இருக்கலாம்
தேடல்கள் வெளியேயும் இருக்கலாம்.

வெளியே தேடும் பொழுது என்ன என்ன காண்கிறோமோ
அதையே உள்ளே தேடும் பொழுதும் காண்கிறோம்

உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அதே ஒன்று
நம்மில் நாமாக இருப்பதை அறியும் வரை
ஏக்கத்தின் தாக்கமும் தேடலும்
தொடர்ந்து கொண்டே இருக்கும்..

யதார்த்தங்கள் என்பவைகள்
எதோ அர்த்தங்கள் ஆகும்.

அந்த அர்த்தங்கள் புரியாமல்
இருக்கும் வரை
அவை யதார்த்தங்களாகவே
வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

சித்தமும் யதார்த்தமும்
என்றுமே
யுத்தம் கொண்டதில்லை..

சித்தம்தான் யதார்த்தங்களாக
வேடம் பூண்டு வந்து கொண்டிருக்கிறது..

கழித்துக் கொண்டே போய்
கடவுளைத் தேடுதல்

கூட்டிக் கொண்டே போய்
கடவுளைத் தேடுவது

பெருக்கிக் கொண்டே போய்
கட்வுளைத் தேடுவது

வகுத்துக் கொண்டே போய்
கடவுளைத் தேடுவது

எல்லாம் தெரிந்துதான்
பயணம் தொடங்க வேண்டும்
என்பது இல்லை.
இது இலக்கறியாப் பயணம்
பாதையிலே
பயணத்தை அறிந்து கொள்கிற
விசித்திரப் பயணம்

எவ்வழியில் சென்றாலும்
பூஜ்யமாகவும்
முடிவிலியாகவும்
எல்லாப் பக்கங்களிலும்
இறைவன் இருக்கிறான்
காத்துக் கொண்டு!!!:icon_b:

ஜானகி
02-11-2010, 07:21 AM
மிக்க நன்றி. புரிந்து கொள்ள முயலுகிறேன்

தேடல்களைத் தொடருகிறேன் விடியலை நோக்கி

கேள்விகளின் முற்றுப்புள்ளி பாதையிலே

தாமரை
02-11-2010, 07:28 AM
ஆச்சர்யக்குறி (!)
குனிந்து பார்த்தது (?)
கால்களின் அடியில்
முற்றுப்புள்ளி (.)

ஜானகி
02-11-2010, 07:33 AM
அருமை ! !

ரசிப்புத்தன்மையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி !....

ஆதவா
02-11-2010, 12:47 PM
தேடலின் தொடக்கமும்
தேடலின் எரிபொருளும்
தேடலின் வழித்துணையும்
தேடலின் இன்னும் அனைத்தும்
ஏக்கங்களில் இருந்தே
பிறப்பிக்கப்படுகின்றன..


அருமை அருமை!!!

மனிதகுலம் பிறந்ததே தேடலுக்காகத்தானே!!

நேற்று 2001: A Space Odyssey எனும் படம் பார்த்தேன். மனிதர்களின் அடுத்தடுத்த நகர்வை முதல் காட்சியில் (Dawn of the Man) அவ்வளவு பொறுமையாக அழகாகக் காட்டுவார்கள். அவனது தேடல் துவங்கப்படும் பொழுதே அவனுக்கான எதிர்ப்பும் துவங்கிவிடுகிறது.


தேடலின் இன்னும் அனைத்தும்
ஏக்கங்களில் இருந்தே
பிறப்பிக்கப்படுகின்றன.

உணவு, பாதுகாப்பு ஆகிய இரண்டும்தான் எல்லா உயிரினங்களின் முதல் எண்ணம். இவ்விரண்டும் இல்லையெனில் கடவுளே இல்லை!! பாதுகாப்புக்காக மனிதன் சக்தியை நம்பினான்... கடவுளைப் படைத்தான்.... தமிழன் அதற்கு உணவும் இட்டான்!! ஆனால் ஒவ்வொரு பிரார்த்தனைகளுக்குப் பின்னேயும் ஏக்கம் மட்டுமே நிறைந்திருக்கிறது!!

பின்னே, கணக்காய் கடவுளைத் தேடுவதும் அழகு!! அது பல அர்த்தங்களைத் தருகிறது!!

கூட்டலும் பெருக்கலும் நம்மிடையே நல்ல குணங்களையும் நண்பர்களையும்
கழித்தலும் வகுத்தலும் நம்மிடையே கெட்ட குணங்களையும் கெட்டவர்களையும்
பற்றி சொல்லுகிறது!!

கழித்தல் - தன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டே தேடுவது
கூட்டல் - தனது ஆசைகளைக்/வாழ்வை கூட்டிக் கொண்டே தேடுவது
பெருக்கல் - ஞானத்தைப் பெருக்கித் தேடுவது
வகுத்தல் - நமக்கு நம்மை வகுத்துத் தேடுவது

இந்த நாலும் இல்லையெனில் கணக்கு இல்லை,
சிலபேர் கணக்கில் கடவுள் இருக்கிறான் என்பார்கள்
கணக்குதானே இந்த உலகத்தின் எல்லா மூலைகளிலும் நிறைந்திருக்கிறது!!
கடவுளும் அப்படித்தானே?


எவ்வழியில் சென்றாலும்
பூஜ்யமாகவும்
முடிவிலியாகவும்
எல்லாப் பக்கங்களிலும்
இறைவன் இருக்கிறான்
காத்துக் கொண்டு!!

பிரபஞ்சம் பூஜ்யத்தில் ஆரம்பித்தது... முடிவிலியாக நீள்கிறது..
இறைவன் காத்துக் கொண்டிருப்பது....... நாம் அவனைத் தேடத்தானே?

அருமையான கவிதை அண்ணா!!

வானவர்கோன்
02-11-2010, 12:53 PM
ஆச்சர்யக்குறி (!)
குனிந்து பார்த்தது (?)
கால்களின் அடியில்
முற்றுப்புள்ளி (.)

அருமை.

தாமரை
06-11-2010, 04:23 AM
ஆச்சர்யக்குறி (!)
குனிந்து பார்த்தது (?)
கால்களின் அடியில்
முற்றுப்புள்ளி (.)

இக்கவிதையில் நான் ஒளிய வைத்திருந்த கருத்தை விளக்கி விடுகிறேன்.

ஆச்சர்யக்குறி என்பது கர்வம் என்ற உணர்வைக் குறிக்கும். கர்வம் கொண்டவன் தலை உயர்த்தி நிற்கிறான்.

கேள்விக்குறியோ தேடலைக் குறிக்கும். தேடல் உள்ளவன் குனிந்து தேடுகிறான்.

முடிவு என்னும் முற்றுப் புள்ளி, ஆச்சர்யக் குறிக்கு கீழேயும், கேள்விக்குறிக்கு கீழேயும் இருக்கத்தான் செய்கிறது. அனவரின் முடிவும் அவரவர் காலடிக்குக் கீழேயே இருக்கிறது..

தேடலில் இருக்கும், குனிய யோசிக்காத மனிதனுக்கு அந்த முடிவு தெரிகிறது. ஆனால் கர்வத்தில் தலை உயர்த்தி நிற்கும் மனிதனுக்கு தன் முடிவு தன் கால்களுக்கு அடியிலே இருப்பது தெரிவதில்லை.

முற்றுப் புள்ளி என்பதை மரணம், இறைவன் என்று எப்படி உருவகப்படுத்தினாலும் இந்தக் கவிதை பொருந்தும்.

இன்னொரு பார்வையில் சொல்லப் போனால்

உணர்வுகள் தேடினால் அதனிலேயே கிட்டும் தேடப்படும் பொருள்