PDA

View Full Version : கல்லாதான் ஒட்பம்.



M.Jagadeesan
31-10-2010, 02:52 PM
பள்ளி சென்று கல்லாதவன், மதி நுட்பம் உடையவனாக இருந்தாலும், அவனை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாது.

ஒரு சமயம் ஒரு மன்னன் ஒரு போட்டி வைத்தான்.நிறத்திலும்,உருவத்திலும் ஒத்த இரண்டு மாடுகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.ஒரு மாடு உண்மையான மாடு.மற்றொன்று போலி. போலியான மாடும்,உண்மையான மாட்டைப் போலவே அங்க அசைவுகளைக் கொண்டிருந்தது..போலியான மாடு எது என்று கண்டுபிடிக்க வேண்டும்.இதுதான் போட்டி.மாட்டைத் தொடக்கூடாது என்பது விதி.
போட்டியில் கலந்து கொண்ட யாராலும் போலியான மாட்டைக் கண்டுபிடிக்க இயலவில்லை.அப்போது ஒரு சிறுவன் மன்னனைப் பார்த்து,"மன்னா என்னால் போலியான மாட்டைக் கண்டுபிடிக்க இயலும்"-என்று சொன்னான்.அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். "பெரியவர்களாலேயே செய்யமுடியாத ஒன்றை சிறுவனாகிய உன்னால் எப்படிச் செய்ய முடியும்?'-என்று மன்னனும் கேட்டான்."மன்னா எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள், என்னால் முடியும்" என்று சிறுவன் மீண்டும் உறுதிபடச் சொன்னான்.
சிறுவனின் உறுதியைக் கண்ட மன்னனும்,"சரி, நீ போட்டியில் கலந்து கொள்ளலாம்" என்று சொன்னான்.அதற்குச் சிறுவன்,"நன்றி மன்னா, எனக்கு இரண்டு சிறிய கற்கள் வேண்டும்"-என்று கேட்டான்.அவ்வாறே இரண்டு கற்கள் சிறுவனிடம் கொடுக்கப்பட்டன.ஒரு கல்லை எடுத்து ஒரு மாட்டின் மேல் எறிந்தான்.கல் பட்ட இடத்தில் எந்த அசைவும் இல்லை.மற்றொரு மாட்டின் மீது மற்றொரு கல்லை எறிந்தான்.கல் பட்ட இடத்தை மட்டும் அந்த மாடு அசைத்துக் காட்டியது.அந்த மாடே உண்மையான மாடு என்று அந்த சிறுவன் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிசயித்தனர்.ஏனென்றால் அதுதான் உண்மையான மாடு.
அரசன் சிறுவனிடம் ,"எப்படி உண்மையான மாட்டைக் கண்டறிந்தாய்?"-எனக்கேட்க,"மன்னா நான் ஒரு இடையன். ஆடு, மாடுகளை மேய்ப்பவன்.தொட்ட இடத்தை அசைத்துக் காட்டும் தன்மை மாடுகளுக்கு உண்டு.போலி மாடுகளால் அவ்வாறு செய்ய இயலாது" என்று கூறினான்.

அவனது மதி நுட்பத்தைக் கண்டு வியந்த மன்னன்,"அமைச்சர்களே இவனது மதி நுட்பம் வியக்கத் தக்கதாய் உள்ளது.இவனது மதி நுட்பத்தை நாம் பயன் படுத்திக் கொள்ளவேண்டும்.இவனுக்கு அமைச்சரவையில் தக்க பதவி ஒன்றைக் கொடுக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.உங்களுடைய கருத்தைத் தெரிவியுங்கள்"-என்று கேட்டார். அதற்கு அமைச்சர்கள்,"ஆடு மாடுகளை மேய்க்கும் ஒரு சிறுவனுக்கு இருக்க வேண்டிய அறிவுதான் அவனிடத்தில் உள்ளது.மாடாளும் அறிவு நாடாள உதவாது.எனவே தங்களுடைய கருத்தை நாங்கள் ஏற்க இயலாது"-என்று கூறிவிட்டனர்.

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

என்பது குறள்.படிக்காதவனுடைய அறிவு எவ்வளவுதான் மேம்பட்டு இருந்தாலும், அறிவுடையவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது இக்குறளின் பொருள்.
எடிசன், ஜி.டி.நாயுடு போன்ற பெருமக்களை அறிவியல் அறிஞராக இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை.நியூட்டன்,ஆர்க்கிமிடிஸ் போன்ற பெரு மக்களையே அறிவியல் அறிஞராக இந்த உலகம் ஏற்றுக்கொண்டது.ஏனென்றால் பல கண்டு பிடிப்புகளுக்கு வழிகோலும் அறிவியல் விதி ஒன்றை அவர்கள் வகுத்துக் கொடுத்தார்கள்.

கீதம்
31-10-2010, 09:17 PM
அருமையான விளக்கம். பகிர்வுக்கு நன்றி, ஜெகதீசன் அவர்களே.

M.Jagadeesan
01-11-2010, 01:33 AM
அருமையான விளக்கம். பகிர்வுக்கு நன்றி, ஜெகதீசன் அவர்களே.

நன்றி கீதம் அவர்களே.