PDA

View Full Version : மரணம் ஒத்த நிகழ்வு !



ரசிகன்
30-10-2010, 11:49 AM
*

ஒரு மரணத்தை ஒத்த

நிகழ்வு என்னை சூழ்கிறது!


காலை நடந்தேறிவிட்டதொரு

சுப காரியத்தில்

என்னில் ஒரு பாதியை

அரை மனதோடு வாழ்த்தியாகி விட்டது!


அர்ச்சதைகளும்

மேள தாளங்களும்

என்னை முழுமையாய் மறக்க செய்திருந்தன

இந்த முழு பொழுதையும்...


கடந்து போன இரவுகளை விட

இவ்விரவு

சற்றே அசௌகரியமாய் அரங்கேறுகிறது...


மின் விசிறியின் சுழற்சிக்கு

முதல் காதல்

தாக்கு பிடிக்க இயலாது

தலை சுற்றி கொண்டிருக்கிறது....


தேகம் தவிர்த்து

உயிர் முழுதும் காதலித்த தருணங்கள்

அழ தொடங்குகின்றன...


வேண்டாம்..

இனி அழுது என்ன ஆகப்போகிறது?

என்னையே தேற்றி கொள்கிறேன்...


பயனிருப்பதான அறிகுறியில்லை...


இதயத்துடிப்பு அதிகரிக்கிறது...

வார்த்தைகளை பிடித்திழுக்கிறேன்...


உடல் வியர்க்கிறது...

நினைவுகளை அழுத்தி வைக்கிறேன்!


சாத்தப்பட்ட கதவுகளில்

பயம் தொற்றிக்கொள்வதும்


ஜன்னல் திரை மறைவில்

புழுக்கம் உளருவதுமாய்....


தனிமை கையோங்கிட

ஒரு வித

நடுக்கத்திலேயே இமைகள் அடைக்கிறேன்...!


ஒரு மரணத்தை ஒத்த

நிகழ்வு என்னை சூழ்ந்து கொள்கிறது!


-

ரசிகன்

ஆதவா
30-10-2010, 11:56 AM
வாருங்கள் ரசிகன்... உங்களைப் பற்றிய அறீமுகத்தை இங்கு தரலாமே!!

http://tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

(கவிதை குறித்து பிறகு விமர்சிக்கிறேன்!!)

வானவர்கோன்
30-10-2010, 12:08 PM
கவிதை அருமை, சொற்களை இணைக்க சில எழுத்துக்களைச் சேர்ப்பின் கவிதை அழகுறும்.

பூங்குழலி
30-10-2010, 12:13 PM
"மரணம் ஒத்த நிகழ்வு மீறி
மறு ஜனனம் கொள் என் தோழா
நீ வீழ எ(ண்ண)ன்ன - அவள்
ஒன்றே தான் உலகமா?
என வீறு கொள் என் தோழா"

பூமகள்
30-10-2010, 12:39 PM
மரணம் அத்தனை வலியுடையதாக இருக்குமா என்று பல நேரங்களில் நான் நினைப்பதுண்டு..

ஏனெனில் அதனை விட வலியான தருணங்கள் நம்மைச் சூழ்ந்த உலகில் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைக்கிறோம் இல்லையா??

இங்கே மரணத்தை ஒத்த நிகழ்வை வடித்து அந்தத் தேடலை உறுதியாக்கியுள்ளீர்கள்..

அருமை.. உணர்வுகளின் பிடியில் கவிதை அழகாகவே பயணிக்கிறது.. பூங்குழலியின் கவி வாசம் கவி நாயகரை ஆசுவாசப்படுத்துகிறது.. நம்மையும் தான். பாராட்டுகள் இருவருக்கும்.

--

பூமகள்
30-10-2010, 12:57 PM
காலை நடந்தேறிவிட்டதொரு

சுப காரியத்தில்

என்னில் ஒரு பாதியை

அரை மனதோடு வாழ்த்தியாகி விட்டது!


வாழ்த்த வந்த
உனைக் கண்டு
பாதியானது என் மீதியும்..


அர்ச்சதைகளும்

மேள தாளங்களும்

என்னை முழுமையாய் மறக்க செய்திருந்தன

இந்த முழு பொழுதையும்...அர்ச்சதை அரிசியும்..
தாளச் சத்தமும்
வசதியானது என்
விசும்பலுக்கு துணையாய்...

கடந்து போன இரவுகளை விட
இவ்விரவு
சற்றே அசௌகரியமாய் அரங்கேறுகிறது... கட்டப்பட்ட புதுமஞ்சள்
கயிறு வாசம்..
உன் வாசம் போக்கச் செய்ய
உழன்றுகொண்டிருந்தது என்னில்..


மின் விசிறியின் சுழற்சிக்கு
முதல் காதல்
தாக்கு பிடிக்க இயலாது
தலை சுற்றி கொண்டிருக்கிறது... . மாலைகளின் சுமை
மனச் சுமையோடு
போட்டியிட்டுத் தோற்கடித்துக் கொண்டிருந்தது..

தேகம் தவிர்த்து
உயிர் முழுதும் காதலித்த தருணங்கள்
அழ தொடங்குகின்றன...
வேண்டாம்..
இனி அழுது என்ன ஆகப்போகிறது?
என்னையே தேற்றி கொள்கிறேன்...
அழ கண்கள் மன்றாடுகின்றன..
இயலா சூழல் இம்சையாக்குகிறது..
துடிக்கும் சுடுபாறை மீனாய்
துவண்டு அழுகிறேன் மனதோடு..


பயனிருப்பதான அறிகுறியில்லை...
இதயத்துடிப்பு அதிகரிக்கிறது...
வார்த்தைகளை பிடித்திழுக்கிறேன்...


உடல் வியர்க்கிறது...

நினைவுகளை அழுத்தி வைக்கிறேன்!

சாத்தப்பட்ட கதவுகளில்

பயம் தொற்றிக்கொள்வதும்


ஜன்னல் திரை மறைவில்

புழுக்கம் உளருவதுமாய்.... நடுக்கமான நிமிடங்கள்
நெளிந்து நழுவ இயலா
மூச்சடைக்கும் அறையில்
நான் சிக்கித் தவிக்கிறேன்
கூண்டுக் கிளியாக..


தனிமை கையோங்கிட

ஒரு வித

நடுக்கத்திலேயே இமைகள் அடைக்கிறேன்...!


ஒரு மரணத்தை ஒத்த

நிகழ்வு என்னை சூழ்ந்து கொள்கிறது! உணர்வுகள் உறைக்காத ஓர் நிலையில்
இமை மூடுகிறேன்..

இறந்த என் உடலைப் பார்ப்பது போல்
எனை உற்றுப் பார்க்கிறது என் மனம்..

மரணத்தை ஒத்த
நிகழ்வில் மூழ்கித் தொலைந்திருந்தேன் அப்போது..!

--
அருமை ரசிகன். கவிதையை வெகுவாக ரசித்தேன்.:)

பூங்குழலி
30-10-2010, 01:39 PM
பூமகளின் எதிர் கவிதை பூமழை தூறல்.. வெகுவாய் ரசித்து படித்தேன் தோழி..

அமரன்
30-10-2010, 07:16 PM
மனசின் ஆட்சியில் அவள் இல்லத்தரசி..
இன்று முதல் அவள் இன்னோர் ஆட்சியில்..

மனசு அழுவது கவிதையில் தெறிக்கிறது..

மிக மிக எளிமையாக இருப்பது மட்டுமல்ல எளிதாகவும் ஆள்கிறது கவிதை, கருவையும் வாசகனையும்.

என்னைப் பொறுத்தமட்டில் மரணம் என்பது நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு காலம் தரும் பத்திரம்.. மரணம் நிகழும் தருணம் பட்டமளிப்பு விழா..

பாராட்டுகள் ரசிகன்.

தூக்கம்
மரணத்தின் ஒத்திகையாம்..
என் இன்றைய தூக்கம்
மரணத்தின் மறு வடிவம்..

நாளை நான் புதிய பிறவி.

கீதம்
30-10-2010, 11:37 PM
அனுபவித்த மரணவலியின் உச்சத்தை
அடுத்தவர் உணர்ந்திடச்செய்தல் இயலுமோ?
இயன்றிருக்கிறதே இக்கவியால்!
காதல் தந்த காயத்துக்கு
கவிதைப்பீலி சுகமாய் மருந்திடட்டும்!
காலத்தின் ஓட்டத்தில்
சோகங்கள் மறையட்டும்!

கீதம்
30-10-2010, 11:45 PM
வாழ்த்த வந்த
உனைக் கண்டு
பாதியானது என் மீதியும்..

அர்ச்சதை அரிசியும்..
தாளச் சத்தமும்
வசதியானது என்
விசும்பலுக்கு துணையாய்...
கட்டப்பட்ட புதுமஞ்சள்
கயிறு வாசம்..
உன் வாசம் போக்கச் செய்ய
உழன்றுகொண்டிருந்தது என்னில்..

மாலைகளின் சுமை
மனச் சுமையோடு
போட்டியிட்டுத் தோற்கடித்துக் கொண்டிருந்தது..
அழ கண்கள் மன்றாடுகின்றன..
இயலா சூழல் இம்சையாக்குகிறது..
துடிக்கும் சுடுபாறை மீனாய்
துவண்டு அழுகிறேன் மனதோடு..

நடுக்கமான நிமிடங்கள்
நெளிந்து நழுவ இயலா
மூச்சடைக்கும் அறையில்
நான் சிக்கித் தவிக்கிறேன்
கூண்டுக் கிளியாக..

உணர்வுகள் உறைக்காத ஓர் நிலையில்
இமை மூடுகிறேன்..

இறந்த என் உடலைப் பார்ப்பது போல்
எனை உற்றுப் பார்க்கிறது என் மனம்..

மரணத்தை ஒத்த
நிகழ்வில் மூழ்கித் தொலைந்திருந்தேன் அப்போது..!

--

பாதியின் மீதியிங்கு
பாதிப்பாதியாய் ஆனதை
பரிதவித்துச்சொல்லி
பதைப்புண்டாக்குகிறதே
பா(வா)ழும் மனங்களில்!

அ(தி)பாரம் பூமகள்!

பூமகள்
31-10-2010, 04:11 AM
ஒரு பாதி வலி அவர் சொல்ல..
மறு பாதி வலியை நானுணர்த்தினேன்..

முழுவலியும் உங்கள் நெஞ்சில்..

ஊக்கமளித்த இ-பண அன்பளிப்புக்கும் பாராட்டுக்கும்

நன்றிகள் கீதம் அக்கா...:)

சூறாவளி
31-10-2010, 04:27 AM
ஒரே வரியில் சொல்லணும்னா.. எல்லா வலிக்கும் ஒரே காரணம்தான்... எதிர்பார்ப்பு

சூறாவளி
31-10-2010, 04:31 AM
பூமகளின் எதிர் கவிதை பூமழை தூறல்.. வெகுவாய் ரசித்து படித்தேன் தோழி..

ரசித்துகிட்டே இருந்தா போதுமா...:confused: எங்களையும் ரசிக்க வைக்க புள்ளையார்சுழி போட்டு தொடங்குங்க...:icon_b::D

ரசிகன்
31-10-2010, 11:47 AM
வாருங்கள் ரசிகன்... உங்களைப் பற்றிய அறீமுகத்தை இங்கு தரலாமே!!

http://tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

(கவிதை குறித்து பிறகு விமர்சிக்கிறேன்!!)
ஆதவா அவர்களுக்கு என் நன்றிகள்! :)

ரசிகன்
31-10-2010, 11:50 AM
ஒரே வரியில் சொல்லணும்னா.. எல்லா வலிக்கும் ஒரே காரணம்தான்... எதிர்பார்ப்பு
சூறாவளி அவர்களுக்கு!

நன்றி!

நிச்சயம் அது எதிர்பார்ப்பால் வந்தவை தான்! கொஞ்சம் தவிர்க்க முடியாமல் போயிற்று! :)

ரசிகன்
31-10-2010, 11:53 AM
மனசின் ஆட்சியில் அவள் இல்லத்தரசி..
இன்று முதல் அவள் இன்னோர் ஆட்சியில்..

மனசு அழுவது கவிதையில் தெறிக்கிறது..

மிக மிக எளிமையாக இருப்பது மட்டுமல்ல எளிதாகவும் ஆள்கிறது கவிதை, கருவையும் வாசகனையும்.

என்னைப் பொறுத்தமட்டில் மரணம் என்பது நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு காலம் தரும் பத்திரம்.. மரணம் நிகழும் தருணம் பட்டமளிப்பு விழா..

பாராட்டுகள் ரசிகன்.

தூக்கம்
மரணத்தின் ஒத்திகையாம்..
என் இன்றைய தூக்கம்
மரணத்தின் மறு வடிவம்..

நாளை நான் புதிய பிறவி.
இவ்வாறான பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை என்பது தன் உண்மை... என் கவிதைக்கு இது அதிகப்படியான ஒரு ஊக்கம்... நன்றிகள் மட்டுமல்ல... கொஞ்சம் புன்னகையும் உங்களிடத்தில் விட்டு செல்கிறேன்! அன்பின் நன்றிகள்!

ரசிகன்
31-10-2010, 11:55 AM
கவிதை அருமை, சொற்களை இணைக்க சில எழுத்துக்களைச் சேர்ப்பின் கவிதை அழகுறும்.
வானவர்கோன்!

மிக்க நன்றி ஐயா! அடுத்த பதிவில் கவனம் செலுத்துகிறேன்!

ரசிகன்
31-10-2010, 11:58 AM
"மரணம் ஒத்த நிகழ்வு மீறி
மறு ஜனனம் கொள் என் தோழா
நீ வீழ எ(ண்ண)ன்ன - அவள்
ஒன்றே தான் உலகமா?
என வீறு கொள் என் தோழா"
பூங்குழலி!

மிக்க நன்றி! உங்கள் பின்னூட்டத்துக்கும் அன்புக்கும்! இவை என்னை ஏதேனும் ஒரு வகையில் பாதித்த ஒன்று தான்! அப்பாதிப்பு இன்று சிறிதளவிலும் இல்லை! நினைவுகளை கோர்த்து வைக்கிறேன்! நன்றி ! நன்றி!

ரசிகன்
31-10-2010, 12:02 PM
வாழ்த்த வந்த
உனைக் கண்டு
பாதியானது என் மீதியும்..

அர்ச்சதை அரிசியும்..
தாளச் சத்தமும்
வசதியானது என்
விசும்பலுக்கு துணையாய்...
கட்டப்பட்ட புதுமஞ்சள்
கயிறு வாசம்..
உன் வாசம் போக்கச் செய்ய
உழன்றுகொண்டிருந்தது என்னில்..

மாலைகளின் சுமை
மனச் சுமையோடு
போட்டியிட்டுத் தோற்கடித்துக் கொண்டிருந்தது..
அழ கண்கள் மன்றாடுகின்றன..
இயலா சூழல் இம்சையாக்குகிறது..
துடிக்கும் சுடுபாறை மீனாய்
துவண்டு அழுகிறேன் மனதோடு..

நடுக்கமான நிமிடங்கள்
நெளிந்து நழுவ இயலா
மூச்சடைக்கும் அறையில்
நான் சிக்கித் தவிக்கிறேன்
கூண்டுக் கிளியாக..

உணர்வுகள் உறைக்காத ஓர் நிலையில்
இமை மூடுகிறேன்..

இறந்த என் உடலைப் பார்ப்பது போல்
எனை உற்றுப் பார்க்கிறது என் மனம்..

மரணத்தை ஒத்த
நிகழ்வில் மூழ்கித் தொலைந்திருந்தேன் அப்போது..!

--
அருமை ரசிகன். கவிதையை வெகுவாக ரசித்தேன்.:)
நிச்சயம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை! வெகுவாய் ரசிக்கிறீர்கள்! உங்களின் பதில் கவிதை ஈனுடையதை முழுமையாய் ஆக்கிரமித்து விட்டது! ஒரு ஈடுபாடு அதிகரிக்கிறது இம்மன்றத்தில்... அன்பின் நன்றிகள்!

ரசிகன்
31-10-2010, 12:03 PM
அனுபவித்த மரணவலியின் உச்சத்தை
அடுத்தவர் உணர்ந்திடச்செய்தல் இயலுமோ?
இயன்றிருக்கிறதே இக்கவியால்!
காதல் தந்த காயத்துக்கு
கவிதைப்பீலி சுகமாய் மருந்திடட்டும்!
காலத்தின் ஓட்டத்தில்
சோகங்கள் மறையட்டும்!
கீதம்!

உங்கள் பின்னூட்டமே ஒரு மருந்தை போல தான் இருக்கிறது! நன்றி!

ஆதவா
01-11-2010, 07:57 AM
உண்மையிலேயே உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் பயப்படும் ஒரே விஷயம்... மரணம்...
மரணம் அத்தனை கொடுமையானதா?
ஒரேயொருவாய்ப்பு....
அனுபவித்து கவிதை எழுத முடியாது...

அவ்வப்போது அதற்கு ஒத்த நிகழ்வுகளை நாம் பார்த்துவிடுகிறோம். என்றாலும் மரணம் எனும் ஒரிஜினல் நிகழ்வைக் கண்டபிறகு?

கவிதையில் பால் வித்தியாசம் காண்பிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. இல்லையெனில் அது ஒருபால் சார்ந்து நிகழ்ந்திருப்பதாக எண்ணப்பட்டு மறுபாலினர் பார்வை வேறுவிதமாக மாறக்கூடும்.

சாத்தப்பட்ட கதவுகளில்
பயம் தொற்றிக்கொள்வதும்
ஜன்னல் திரை மறைவில்
புழுக்கம் உளருவதுமாய்..

அந்தந்த நிகழ்வுகளின் காரணிகள் அல்லது எண்ணங்களின் காரணிகள் அழகாக ஒன்றியிருக்கின்றன. குறிப்பாக ”ஜன்னல் திரைமறைவில் புழுக்கம் உளருவதாய்” வரி மிக அழகாக இருக்கிறது.. என்ன செய்வது, கண்ணீர் வரும் கண்களையும் ரசிக்கும் குணமாயிற்றே எனக்கு!! திருமணத்தில் நிகழும் இக்கவிதையின் நிகழ்வு, ஒன்றை ஆரம்பிப்பதாகவும் இன்னொன்றை முடிப்பதாகவும் இருக்கிறது, மரணம் சூழ்ந்த நாளில், பகல் பொழுதுகள் ஏதாவது ஒன்றை நிறைவேற்றிவிடுகின்றன.

மரணத்திலிருந்துதான் கடவுளே பிறந்தார். மரணத்துக்குப்பிறகு கடவுளை அடைவதாக நம்புகிறோம் இடைப்பட்ட வாழ்வில் மரணம் என்பது எல்லாருக்கும் ஒரு பேச்சாகத்தான் இருக்கிறது. மரணம் வென்றவர் எவருமில்லை... ஆகவே வீழ்ச்சியடையாத வெற்றியாளன் மரணம் மட்டுமே!! அதனோடு தொடர்பு கொண்டிருப்பதற்கு சோகம் எதற்கு?

பூமகளின் பதில்கவிதை, வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டெழுந்த மன்றத்தைப் பார்த்ததைப் போல இருந்தது. இருவரின் கவிதையை வைத்துப் பார்த்தால் பிரிவு என்பது அவர்களுக்குள் திணிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.... ஒரு காதலுறவின் மணத்திற்கு இன்னொரு காதலறவு சென்று வாழ்த்துவதைக் காட்டிலும் வேறெந்த காரணமும் வேண்டாம் அவர்களுக்குள் இருந்த உண்மையான காதலைக் குறித்து.....

வாழ்த்துக்கள் இருவருக்கும்.............

ரசிகன்
01-11-2010, 08:49 AM
கண்ணீர் வரும் கண்களையும் ரசிக்கும் குணமாயிற்றே எனக்கு!! //

நீங்கள் தான் ரசிகன் :)

இப்பின்னூட்டம் என் எண்ண அலைகளை கூர் தீட்டுகின்றன அடுத்த கவிதைக்கு :)

நன்றி நன்றி ஆதவா :)