PDA

View Full Version : பார்த்துப்பழகிய அதே.....



simariba
30-10-2010, 10:42 AM
பார்த்துப்பழகிய
அதே ஊர்

அணுஅணுவாய் ரசித்த
அதே இடங்கள்

ஒவ்வொரு மண்ணிலும்
கலந்திருக்கும்
என் அன்பு

உயர உயர
பறந்து சென்று
பறக்காமலே

பெரிய வட்டமாக
சுற்றி இறங்கும்
பிற்பகல் பறவை

எப்போதும் உயிருடன்
இருப்பதை
அறிவுறுத்திக்
கொண்டிருக்கும்
கடிகாரமுள் சத்தம்

என் அன்பு
என் கோபம்
என் அழுகை
என் வெறுப்பு
என் பதற்றம்
என் ஏமாற்றம்
எல்லாம் பார்த்தும்
எனை வெறுக்காத
என் வீடு

காய்கறியோ
கோலமாவோ
ப்லாஸ்டிக் பொருளோ
கூவி விற்கும்
வியாபாரியின் குரல்

காரைக்கால் வானொலி
நிலைய காலை
நேரப்பாடல்கள்

கூடவே
இப்போது நேரம்
காலை ---மணி -- நிமிடங்கள்
அறிவிப்பாளரின் குரல்

வாழ்க்கையின்
பாதியைத் தின்ற
பேருந்துக்காத்திருப்புகள்

தினம் தவிர்க்க
முடியாத
பேருந்துப்பயணங்கள்

வழி நெடுகிலும்
துணை வரும்
அரசலாறு...

பயிலுமிடத்தை
நெருங்கும்போது
காரணமின்றி
அதிகப்படும்
பதட்டம்

அன்பான ஆசிரியர்கள்
அழகான படிப்பு

எல்லாம்
அதிவேகமாய்
அன்னியப்படுத்தபட்ட
சிங்கப்பூர் சம்பந்தம்

முன்பெல்லாம்
இந்தியப்பயணத்தை
வெகுவாய்
எதிர்பார்த்திருந்த
மனம்

இத்தனை வருடங்களில்
நொந்து குழம்பி இனி
சென்றால் சுற்றுலா தான்
என்னும் நிலைக்கு
தெளிந்து
பக்குவப்பட்டுவிட்ட
அறிவு

காலத்தினூடே
ஓட கற்றுக்கொண்டால்

வாழ்க்கையே

எளிது! எளிது!
இனிது! இனிது!

inban
30-10-2010, 11:03 AM
உங்களின் கவிதை பொருளியல் வாழிவில் உள்ள
இருண்ட பிரதேசத்தில் அதற்கே உரித்தான வலியோடு பயணிக்கிறது . உண்மையில் சூழலுக்கு ஏற்றவாறு நம்மை தகவமைத்துக்கொள்வதில் உள்ள இயலாமை மனதை சுடுகிறது.

govindh
30-10-2010, 12:28 PM
காலத்தினூடே
ஓட கற்றுக்கொண்டால்...

வாழ்க்கையே-
எளிது! எளிது!
இனிது! இனிது!

உண்மை தான்...

அலுப்பு வரும்...
அதை நம்முடன்
அழைக்காமல்....
பயணிக்க வேண்டும்....

களைப்பு வரும்...
அதை நம்முடன்
சுமக்காமல்
பயணிக்க வேண்டும்....

பார்த்துப்பழகிய அதே.....
கவிக்குப் பாராட்டுக்கள்.

கீதம்
30-10-2010, 11:23 PM
ஆயாசமிகு வாழ்க்கையின்
அர்த்தம் சொல்லும் வார்த்தைகள்!
அழகாய் எடுத்தியம்பும்
வார்த்தைகளினூடே வழியும்
அயல்நாட்டு வாழ்வின் வலிகள்!

பாராட்டுகள் அபி.

simariba
29-01-2011, 02:00 AM
நன்றி கீதம்!

CEN Mark
29-01-2011, 02:45 AM
பார்த்துப்பழகிய
அதே ஊர்


இத்தனை வருடங்களில்
நொந்து குழம்பி இனி
சென்றால் சுற்றுலா தான்
என்னும் நிலைக்கு
தெளிந்து
பக்குவப்பட்டுவிட்ட
அறிவு

காலத்தினூடே
ஓட கற்றுக்கொண்டால்

வாழ்க்கையே

எளிது! எளிது!
இனிது! இனிது!

இத்தனையையும் ஞாபகப்படுத்திவிட்டு
கால ஓட்டத்தில் வாழ்க்கையை
இனிதாக்கிக் கொண்டமைக்கு வாழ்த்துக்கள்.
சில ஞாபகங்கள் கால ஓட்டத்தைக்கூட கிரங்கடித்துவிடும்.

உமாமீனா
10-02-2011, 06:27 AM
நிதர்சமான உண்மை

lenram80
10-02-2011, 12:26 PM
ஊர் நம்மை விட்டுவிடலாம்!
உறவு நம்மை விடுவதில்லை!

பழையவை கிளர்தலும்
அதை கவியாய் பகிர்வதும் - சுவை சுவை!

நல்ல கவிக்கு வாழ்த்துக்கள்!

simariba
03-04-2011, 01:38 PM
நன்றி CEN Mark!
நன்றி உமாமீனா!
நன்றி lenram80 !

அக்னி
06-04-2011, 02:57 PM
பட்டுத் திருப்பித் தெறிக்கும் ஏக்கங்கள்...

நம் நாட்டிலிருந்தபோது
ஏக்கங்கள் இருந்தனதான்,
இந்நாடுகள் மீது...

வாழ வந்தபின்னர்,
பெற்றவை வசதிகளாக
இழந்தவை வாழ்க்கையாக
ஏக்கங்கள் வலிகளாகின்றன...

இந்த வாழ்க்கையை விரும்பியவர்களே,
இங்கு வாழ்க்கையைத் தேடுகின்றோம்...

வாழ்க்கை..,
நம் நாட்டில் ஏங்கிக் காத்திருக்கின்றது,
நமக்காக...

எளிய வரிகளில், ஏங்கும் கவிதை நன்று...

இளசு
14-04-2011, 08:35 PM
பழைய நினைவீரம்
புதுச்சூழல் வெப்பத்தில் உலர
சிறகுகள் இலகுவாகும்
பயணமும் எளிதாகும்..

வலியது வாழ்வதில்லை..
மாறியதே வாழ்கிறது..

Its not the strongest that survives..
Its the adapting that survives..

--டார்வின் சொன்னதை அழகாய்ச் சொன்னீர்கள்.

வாழ்த்துகள்!