PDA

View Full Version : நண்பன்..........Nanban
18-11-2003, 02:26 PM
நண்பன்...........

அண்டை வீட்டை அறியாத
ஆப்பிரிக்க நாட்டு கறுப்பருடன்
ஆனந்த உரையாடல் செய்கிறேன்.

நள்ளிரவில் கொட்ட கொட்ட
விழித்திருப்பேன்.
பக்கத்து அறையில்
படுத்திருக்கும் பிள்ளைக்கு
முத்தம் வைக்க நேரமிருக்காது.

முகம் தெரியாதவன் புகழ்கிறான் -
என் முகமூடிகள் எல்லாம்
அவனுக்குத் தேவையற்ற கணக்கு..

நேருக்கு நேராய்ப் பார்ப்பவனும்
புகழ்கிறான் -
சிநேகமாய் முகமூடி
ஒவ்வொருவர் முகத்திலும்.

அவனும், நானும்
அவரவர் முகமூடியை
அவரவர் வீட்டில்
கழற்றி எறிந்ததும்
எகிறுகிறோம் -
'முட்டாப் பய,
என்ன நெனச்சிட்டு இருக்கான்,
என்னப் பத்தி'

நமக்கு
முகத்தையும்
முகமூடியையும்
பார்க்கவியலாத
தூரத்து மனிதன் தான்
நண்பனைத் தருகிறான்.......

Nanban
18-11-2003, 02:29 PM
இதே கவிதை நண்பர் இ.இசாக் அவர்களின் குருதிச் சுவட்டிலும் இருக்கின்றது......

நானே எழுதியது தான்.....

குழம்பி விட வேண்டாம்........

இ.இசாக்
18-11-2003, 02:37 PM
உள்ளபடியே
தூரத்து மனிதன் தான்
நண்பனாய் வருகிறான்.

நண்பனைத்தருகிறான். இது இயல்பு
இன்றைய வாழ்வும் அதுவே.!

rambal
18-11-2003, 06:09 PM
முகமுடிகள்
இல்லையென்றால்?
சிந்தித்துப் பார்க்கவே கொஞ்சம் திணறுகிறது..
முகமூடிகள் சில சமயங்களில் பாதுகாப்பை தந்தாலும்
மனசாட்சிப் பேயிடம் இருந்து தப்புவதெப்படி?

முத்து
18-11-2003, 07:22 PM
முகமூடி இல்லா மனிதன்
ஒரு கைப்பிடியில்லாக் கத்தி ....
முகமூடிகள் இல்லாவிட்டால்
அவன்
காயம்படுவது , படுத்துவது உறுதியே ....


மனிதர்களுக்கு அடுத்தவனின் உடல் எப்படி என்று தெரியாதா ..?
இருந்தும் ஆடை ஏன் ... ?
நிர்வாணம் புனிதமானது என்று கவிதையில் மட்டும்தான் சொல்லமுடியும் ...
நிஜ வாழ்வில் சாத்தியமா... ? நம்மால்தான் செய்ய முடியுமா ..?
அப்படிச் செய்தால் அது கற்கால வாழ்கைக்க்குத்
திரும்புவதென்று அடித்துச் சொல்வர் ...

ஆடை அணிந்த மனிதனுக்கே அலங்காரம் தேவையென்றால்...
அந்த கவனம் பழகுமுறையிலும், சொற்களிலும் தேவைதானே...

ஒரு வேளை
முகமூடி இல்லாத மனிதர்களிடம் சில நாட்கள்
பழகினாலே ....
அது வெறுத்து
நாம் விரும்பும் முகமூடி மனிதர்களை மனம் நாடும் ....

அணடைவீட்டுக்காரன் முதல்
சாட்டிங்கில் பார்க்கும் அயல்நாட்டுக்காரன் வரை
அனைவருக்கும் இது பொருந்தும் ....

அதனால்தானோ என்னவோ
இயற்கையே நமக்கு
முகமூடி கொடுத்திருக்கிறது என்பதுபோல் கூறுகிறார் ....
உளவியல் பிராய்டு .....

lavanya
18-11-2003, 08:22 PM
நல்ல கவிதை நண்பரே..... மிக ரசித்தேன் ...நிதர்சன வரிகள்....

சேரன்கயல்
19-11-2003, 04:09 AM
முகமூடிகள் தேவை தேவையில்லை என்று நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே நாம் தரித்துக்கொண்டுள்ள முகத்திற்குள்ளே இருக்கும் நம் நிஜம் அரிக்கத் துவங்கும்...முகமூடிகள் இல்லாமல் இருப்பது சாத்தியம் இல்லை...முகமூடியே இல்லை என்று சொல்லிக்கொள்வதும் எதற்கோ நாம் போடும் பொய் முகமே...
இந்த முகமூடிகள் நன்மைக்கா தீமைக்கா என்பது நம்மில்தான் இருக்கிறது...
இருப்பதை ஏற்பதிலான நமது இயலாமைதான் எல்லாவற்றிற்கும் காரணம்...

Mano.G.
19-11-2003, 05:01 AM
மனிதனின் மறுபக்கம் தான் அவனின் முகமூடி,
வெளிகாட்டும் முகம் ஒன்று
உள்ளுக்குள் உள்ள முகம் ஒன்று
இதனால் எவன் நண்பன் எவன் எதிரி
என்பதை அறிய முடியாத நாம்
ஆண்டவனே உன்படைப்பை என்ன சொல்வது

மனோ.ஜி

Nanban
19-11-2003, 05:10 AM
வாசித்து கருத்துச் சொன்ன இ.இசாக், rambal, முத்து, lavanya, சேரன்கயல், Mano.G., நண்பர்களுக்கு நன்றி.....

முகமூடிகள் அவசியம் என்பதை பலரும் உணர்ந்திருக்கிறோம்... என்ற கருத்து மீண்டும் வலுப் பெறுகிறது. ஆனால், அதை எப்படி உபயோகிப்பது என்பதில் தான் அதன் பயன்பாடு தெரியும்.......

இளசு
19-11-2003, 06:23 AM
நண்பனின் முத்திரை உள்ள கவிதை...
இனிய சேரன், அருமை நண்பர் மனோவின் அலசல்கள் அருமை.
மிகவும் கவர்வது தம்பி முத்துவின் பதில் பதிவுதான்...
பிரமிப்பு கூடிக்கொண்டே......................................
என் பாராட்டுகள் முத்து.

Nanban
19-11-2003, 08:33 AM
ilasu,விற்கு நன்றி.

முத்து, உளவியல் கோட்பாடுகளைப் பற்றி தான் படித்ததை, ஒரு தொடராக எழுதலாமே.......

இக்பால்
19-11-2003, 08:59 AM
முகமூடி போட்டுக் கொண்டே வாருங்கள்.

முகமூடி இல்லாமல் சகிக்கவில்லை.

உண்மை இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

-இக்பால்.

Nanban
19-11-2003, 09:08 AM
முகமூடி போட்டுக் கொண்டே வாருங்கள்.

முகமூடி இல்லாமல் சகிக்கவில்லை.

உண்மை இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

-இக்பால்.

எப்போதும் முகமூடி அணிந்தே தான் இருக்க வேண்டியிருக்கிறது. இந்த முகமூடி சகிக்கவில்லை என்றால், மற்றுமொரு முகமூடியைத் தான் அணிய வேண்டும்...... :twisted: :twisted: :twisted:

இக்பால்
19-11-2003, 09:12 AM
இப்பொழுது இப்படி பாடத் தோன்றுகிறது.

முகமுடி இல்லாத முகமொன்று வேண்டும்.
முழு அன்பு காட்டும் மனமொன்று வேண்டும்.

-இக்பால்.

Nanban
19-11-2003, 09:26 AM
இப்பொழுது இப்படி பாடத் தோன்றுகிறது.

முகமுடி இல்லாத முகமொன்று வேண்டும்.
முழு அன்பு காட்டும் மனமொன்று வேண்டும்.

-இக்பால்.

முகமூடியைப்
பார்த்தே
பழகிவிட்ட
ஊரில்
முகமூடியை
கழற்றிப் போட்டு
நடந்தேன்.

எல்லோரும்
உற்று உற்று
பார்த்தனர்.
கிசுகிசுப்பாய்
பேசிக் கொண்டனர்.

சிநேகமாய்ப்
புன்னகைத்தாலும்
என்ன விஷமம் இருக்கக் கூடும்
என்று தயங்கித் தயங்கி
பின்னே போயினர்.

சில சின்னக் குழந்தைகள்
பயந்து சிணுங்கின.
தாயின் முந்தானை சேலைக்குள்
முகத்தைப் புதைத்துக் கொண்டன.

சில வளர்ந்த பையன்கள்
ஓடிப்போய்
அழைத்து வந்தனர்
ஊரிலே வயதானப் பெரியவர்களை.

கண்ணை இடுக்கி
இமையின் மேல்
கை வைத்து
வெளிச்சம் தடுத்து
பார்த்தனர்...
யாரென்று பிடிபடுமா
என்று பார்த்தனர்.

முகமூடியற்ற
எனது பிரசன்னம்
அவர்களது கண்களை
கூசச் செய்தது.

முதுகுக்குப் பின்னால்
ஒளித்து வைத்திருந்த
முகமூடி இரவை
எடுத்து
மாட்டிக் கொண்டதும்
எல்லோர் முகத்திலும்
சூர்யப் புன்னகை...

'அட, நம்ம நிலா
வந்திருக்குது......'

இக்பால்
19-11-2003, 09:29 AM
ஆமாம்...ஆமாம்... அம்மண ஊரில் கோவனம் காட்டியவன்

பைத்தியக்காரன் தானே! -இக்பால்.

Nanban
19-11-2003, 09:34 AM
இப்பொழுது இப்படி பாடத் தோன்றுகிறது.

முகமுடி இல்லாத முகமொன்று வேண்டும்.
முழு அன்பு காட்டும் மனமொன்று வேண்டும்.

-இக்பால்.

காட்சி இங்கே, கவிதை எங்கே என்று நீங்கள் கொடுத்த தலைப்பில் என்னால் எழுத இயலவில்லை என்று வருத்தப்பட்டிருந்தேன். அதற்குப் பகரமாக, நீங்கள் கொடுத்த ஒரு எளிய காட்சிக்கு கவிதை எழுதிவிட்டேன். மனதில் நீண்ட காலம் இருந்த குறை ஒன்று அகலக் கண்டேன். அதிலும் இந்தக் கவிதை குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டு எழுதியதல்ல - என்று நீங்கள் அறிவீர்கள். உங்கள் பதிவிற்கு பத்தே நிமிடங்களில் பதிலாக எழுதியது. எழுதிய எனக்கு திருப்தி. உங்களுக்கு.......? மற்றவர்களுக்கு.......?

இக்பால்
19-11-2003, 09:43 AM
அது புரிந்துதான் அடுத்த சில வரிகளை

முள்ளில் மாட்டி தூண்டில் இட்டேன்.

மீன் இன்னும் அந்த இரையைப் பார்க்கவில்லை.

-இக்பால்.

Nanban
19-11-2003, 10:52 AM
அம்மண ஊரில் கோவனம் காட்டியவன்
பைத்தியக்காரன் தானே! -இக்பால்.

எல்லோரும் இயல்பாய்
அவரவர் காரியத்தைப்
பார்த்துக் கொண்டிருந்தனர் -
அவன் வந்து சேருமுன்னே.

வந்தவன் வேற்றுலகவாசி.
விநோத பழக்கங்கள்
வித்தியாச
வாழ்க்கைத் தேடல்கள்....

வந்தவனுக்கு
வரவேற்பு வைக்க
வாழ்த்திப் பாட
விருந்தொன்று தந்தனர் -
ஊர் மக்கள் கூடி.

வந்தவனுக்கு
வரவேற்பில்
விசித்திரமாகத் தோன்றியது
விருந்தின் வரிசையின்
வேறுபாடு.

வந்தவன்
வினவினான் -
ஏன் மேசை உணவில்லை
சில நண்பர்களுக்கு?

வந்து விழுந்தன
வகை வகையான
வாய்ப்பேச்சு....

நாகரீகம்
தொட்டிலில்
குழந்தையாய் கிடந்த
காலம் தொட்டு
கதை சொன்னனர்.

உலகெல்லாம்
வெள்ளையாய் போய்விட்டால்
வண்ணங்களுக்கு
வாழ்வு போய்விடுமே!
சப்பைக் கட்டும்
தொழிலில் சளைக்காதவர்கள்
சங்கடமின்றிப் பேசினர்
பெருமையுடன்.....

அறியாப் பொருள் மோகம்
அவர்கள் தலைக்கேறியது
அவனுக்குத் தெரிந்தது.

தன் உலகின் மேன்மை
தனக்கு உணவு தந்த
நன்மக்களும் பழகட்டும் என்றே
நன்று சொன்னான் -
எல்லோரும் ஒரு தரம்.
எங்கெங்கும் சமத்துவம்

பேசிமுடிக்கு முன்னரே
பேடிகள் வீசினர்
கல் ஒன்று.

போ, போய்விடு......

எல்லோரும் சமமானால்
எங்கள் கழிவுகளை
களைபவர் யார்?

கழிவுகள் களைவதனால்
கழிந்தவனாகிப் போவதில்லை
தொழிலால் இழிந்தவன் இல்லை
உயர்ந்தவன் தானுண்டு....

ஊர் கூடி தூற்றியது
'பையத்திக்காரனை விரட்டுங்கள்....'
வந்தவன் கலமேறி
காற்றில் கரைந்து போனான்.....

காலங்கள் சென்ற பின்னே
காகிதத்தில் எழுதப்பட்டன
இதிகாசங்கள்......
'விண்கலத்தில் வந்தான்
எங்கள் சாதி
அவதாரப் புருஷன்...
எங்கள் உணவு உண்டு
எங்களைப் பெருமைப் படுத்திப் போனான்'

பையத்திகாரப் பட்டம்
கமுக்கமாக மறைக்கப் பட்டது
சரித்திரத்தின் பக்கங்களில்.

Nanban
19-11-2003, 10:53 AM
அது புரிந்துதான் அடுத்த சில வரிகளை

முள்ளில் மாட்டி தூண்டில் இட்டேன்.

மீன் இன்னும் அந்த இரையைப் பார்க்கவில்லை.

-இக்பால்.

முள்ளோடு இரையையும் விழுங்கி விட்டது மீன்.

மீனுக்கு செரித்து விடும்......

கவலைப்படாதீர்கள்....

இக்பால்
19-11-2003, 10:59 AM
மீனுக்கு செரித்து விடும்.
அது சரிதான்.
என் பசிக்கு என்ன செய்வது இப்பொழுது?

முத்து
19-11-2003, 06:03 PM
ilasu,விற்கு நன்றி.

முத்து, உளவியல் கோட்பாடுகளைப் பற்றி தான் படித்ததை, ஒரு தொடராக எழுதலாமே.......

நன்றி ..
நண்பன் அவர்களுக்கு ...
நீங்கள் சொன்னதை முயற்சி செய்கிறேன் ...
நுனிப்புல் மேய்ந்தவன் எழுதுவதைவிட ஆழ்ந்து
கற்றவர் சொல்வது சிறப்பாக இருக்கும்...

அண்ணன் இளசு எழுதினால் இன்னும்
சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து ....

Nanban
19-11-2003, 06:46 PM
அண்ணன் இளசு எழுதினால் இன்னும்
சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து ....

இருவருக்குமே அந்தத் தகுதி உண்டு........

தெண்டுல்கர் அடித்தால் என்ன, சேவாக் அடித்தால் என்ன, மன்றத்திற்குத் தரமான படைப்புகள் வந்து சேரவேண்டும் தானே!

இ.இசாக்
20-11-2003, 02:50 PM
சில கவிதைகளை வாசித்து
ரசிக்கலாம்.
சில கவிதைகளை வாசித்து
நேசிக்கலாம்.
சில கவிதைகளை வாசித்து
யோசிக்கனும்.

இருதி வகை கவிதைகள் நம் நண்பன் அவர்களுடையது.
யோசிக்கிறேன்.

(முகமூடி வாழ்வின் பிரதானம் என நிறுவ முயல்வதை என்னால் ஏற்க இயலவில்லை........)

Nanban
20-11-2003, 03:07 PM
(முகமூடி வாழ்வின் பிரதானம் என நிறுவ முயல்வதை என்னால் ஏற்க இயலவில்லை........)

முகமூடிகள் வாழ்வின் பிரதானம் அல்ல - உண்மை. அவை இல்லாமல் வாழ உலகின் நல்ல, கெட்ட விமர்சனங்கள் பாதிக்காத வகையில் தங்களைப் பக்குவப்படுத்திக் கொண்ட, பற்றற்ற ஞானிகளால் தான் இயலும்.

இன்று வசவு செய்யும் ஒருத்தன் நாளை தேவைப்படும் பொழுது, முகமூடிகள் ஒன்றை அணிந்து கொண்டு தான் அவனைப் பார்க்க முடியும்.

அல்லது அவனுக்கு ஒன்று நம்மிடத்தில் தேவைப்படும் பொழுது, தர்ம, நியாயங்களை மறந்து விட்டு, அன்று அவன் செய்த தீங்கு தான் நமக்கு ஞாபகம் வருகிறது. அவனுக்கு தேவைப்படும் ஒன்று நியாயப்படி அவனுடையதாக இருந்து, அதை நிறைவேற்றும் சக்தி நம்மிடத்தில் இருந்தாலும், அவனின் தீங்கு செய்த பழைய முகத்தை அணிவித்துத் தான் பார்க்கிறோம். அல்லது உனக்குத் தேவையானது நிறைவேற்றும் சக்தி என்னிடத்தில் இல்லை என்ற முகமூடியை நாம் அணிந்து கொள்கிறோம். ஆமாம், முகமூடிகளை நாம் மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அதை நாம் பிறருக்கும் அணிவித்து, அந்த அனுமானத்திலே தான் அவனை நோக்குகிறோம்.

The first impression is the best impression என்ற சொற்றோடரே முகமூடிக்கு சாட்சி!

முகமூடி தேவையற்றது - idealistic situation
முகமூடி அணிந்து கொள்வது - realistic situation.

(ஆங்கிலத்தில் வார்த்தைகளுக்கு மன்னிக்கவும் - தமிழில் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்....)

இ.இசாக்
20-11-2003, 03:17 PM
விரிவாக விடையளித்த அன்பு நண்பன் அவர்களின் கடமையுணர்வுக்கு நன்றி.!