PDA

View Full Version : வழு தொடர்பாக...6



குணமதி
30-10-2010, 04:33 AM
மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி - 2


12. மரபுவழுவமைதி – செயப்படுபொருள் முதலியவற்றைக் கருத்தாவாகக் கூறுதல்
செயப்படுபொருளைச் செய்தது போல – கருத்தாவைப்போல வைத்து அதன்மேல் அக்கருத்தாவின் வினையை ஏற்றிச் கூறுதல் வழக்கிற்கு உரியதாகும்.
இம் மாடு யான் வாங்கியது; இச் சோறு காமராசர் கொடுத்தது;
இவ் உளி நான் செதுக்கியது.
இவ் வீடு பாவேந்தர் இருந்தது.
இத் தொழில் நீ செய்தது.

13. மரபு வழுவாமற் காத்தலும் மரபுவழுவமைதியும்
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறு அடைமொழிகளால் அடுக்கப்பட்ட சொற்கள் உலக வழக்கு, செய்யுள் வழக்கு ஆகிய இரண்டிடத்தும் இனமுள்ளனவாயும் இனமில்லனவாயும் வரும்.
இனமுள்ளன - இனமில்லன
நெய்க்குடம், பொருட்பெண்டிர் - உப்பளம் - பொருள்
குளநெல், காட்டாறு - ஊர்மன்றம் - இடம்
தைவிளக்கு, முந்நாட்பிறை - நாளரும்பு - காலம்
பூமரம், கலவமாமயில் இலைமரம் - சினை
செந்தாமரை, வெண்டாமரை - செம்போத்து - குணம்
ஊன்றுகோல், குடிக்கூலி - முழங்குகடல் - தொழில்
இனமுள்ளவற்றை அடை சேர்க்காது கூறின் குறித்த பொருள் விளங்காமல் பொதுவாய் இருக்கும்; உப்பளம் முதலியன அடை மொழி சேர்க்காமலும் பொருளை உணர்த்தும் இனமில்லன வற்றின் அடைமொழிகள் இயற்கை அடைமொழிகள் எனவும் கூறப்படுகின்றன
இனமுள்ளவற்றை அடைகொடுத்துக் கூறுதல் வழாநிலை ஆகும். இனமில்லனவற்றை அடைகொடுத்துக்கூறல் வழுவமைதி ஆகும்.

14. அடைமொழி மரபு வழுவாமற் காத்தல்
அடைமொழி இனத்தைத் தருவதோடு மட்டுமன்றி, அவ் இடத்திற்குப் பொருந்துமானால் இனமில்லாததையும் தரும்.
கோழி கூவிற்று என்றால் மற்ற பறவைகள் கூவவில்லை என்றும் பொருளைத் தருவதோடு பொழுது விடிந்தது என்ற பொருளும் பொருள்தருகிறது.
குடம் தூக்கிச் சென்றவன் வீழ்ந்தான் என்பதும் இன்னொரு எடுத்துக்காட்டு.

15. மரபு வழாநிலை மரபுவழுவமைதி – அடைமொழிகள் முதல்சினைகளை அடுத்து வருதல்
அடைமொழியும் ஒரு சினையும் ஒரு முதலுமாய் முறையே ஒன்றை ஒன்றுச் சிறப்பித்து வருதலும், இரண்டு அடைமொழி ஒரு முதலைச் சிறப்பித்து வருதலும் வழக்கமாகும். இரண்டு அடைமொழி ஒரு சினையைச் சிறப்பித்து வருதலும் இவ் வரம்பு கடந்து வருதலும் செய்யுளுக்கு உரிய வழக்கமாகும்.
1. வேல்கை முருகன்; செங்கால் நாரை; முழங்குதிரைக் கடல் – இவை ஓர் அடைமொழியும், ஒரு சினையும், ஒரு முதலுமாகி ஒன்றை ஒன்றுச் சிறப்பித்து வந்தன.
(வேல் – அடைமொழி, கை – சினை, முருகன் முதல்)
2. மனைச் சிறு கிணறு, சிறு கருங் காக்கை – இவற்றில் இரண்டு அடைமொழிகள் முதலைச் சிறப்பிக்கின்றன.
3. செய்யுள்: ’சிறு பைந் தூவி’, ‘கருநெடுங்கண்’ - இவற்றில் இரண்டு அடைமொழிகள் சினையைச் சிறப்பிக்கின்றன.
4. செய்யுள்: ‘பொருந்தோள் சிறு மருங்குல் பேரமர்க்கண் பேதை’
‘சிறு நுதல் பேரமர்க்கண் செய்யவாய் ஐயநுண்ணிடையாய்’ – இவை வரம்பு கடந்து வந்தன.
இவற்றில் முதலது மரபு வழுவாமற் காத்தலாகும்; மற்றை மூன்றும் மரபுவழுவமைதியாகும்.

16. இயற்கைப்பொருள் மரபுவழுவமைதி
இயற்கைப்பொருளை, ஆக்கமும் காரணமும் கொடுக்காமல் இத்தன்மையதென்று சொல்ல வேண்டும்.
(எ-டு) மெய் உள்ளது; பொய் இல்லாதது; நீர் தண்மையானது; பால் வெண்மையானது; பயிர் பசியது.
இயற்கைப்பொருளை இத்தன்மையது என்று வரும் வினையால் கூறுவதால், இது வழுவமைதி ஆயிற்று.

17. செயற்கைப்பொருள் மரபு வழாநிலை வழுவமைதி
செயற்கைப்பொருள், காரணச்சொல் முன்னும் ஆக்கச்சொல் பின்னுமாகவும், காரணச்சொல் தொக்கு நிற்க ஆக்கச் சொல்லுடனும், ஆக்கச்சொல் தொக்கு நிற்கக் காரணச் சொல்லுடனும், இவ் இருவகைச் சொல்லும் தொக்கு நிற்கவும் வரும்.
1. எரு இட்டு களைபறித்து நீர் பாய்ச்சியதால் பயிர் நல்லவாயின.
(முன் காரணச் சொல்லும் பின் ஆக்கச் சொல்லும் பெற்றது)
2. பயிர் நல்லவாயின – காரணச் சொல்லின்றி ஆக்கச் சொல் பெற்றது.
3. எரு இட்டு களைபறித்து நீர் பாய்ச்சியதால் பயிர் நல்ல – ஆக்கச் சொல்லின்றிக் காரணச்சொல் பெற்றது.
4. பயிர் நல்ல – காரணச்சொல், ஆக்கச்சொல் இரண்டும் தொக்கு நின்றன.
இவற்றுள், முதலாவது மரபு வழாமல் காத்தலும் மற்றை மூன்றும் மரபுவழுவமைதியும் ஆகும்.

18. விடை மரபு வழுவாமற்காத்தல்

தம்மிடத்து இல்லாத பொருளை இல்லையென்று சொல்லப் புகும்போது, வினவப்பட்டதற்கு இனமாய்த் தம்மிடத்து உள்ள பொருளைக் கூறி, அச் சொல்லைக்கொண்டு அதனை இல்லை என்று சொல்லியும், இருக்கிற பொருளாயின் இவ்வளவு உண்டென்றும் வினாவும் விடையுமாகிய சொல் சுருக்கம் கருதிச் சொல்லுவர்.
1.‘பயறு உள்ளதோ கடைக்காரரே!’ என்றவர்க்கு அது இல்லை என்பவர், ‘உழுந்து உண்டு’, ‘உழுந்தும் துவரையும் உண்டு’ என அதன் இனத்தைச் சொல்வர்.
இந்த இனமொழிகள், பயறு இல்லை எனும் விடைப் பொருளைத் தருவதுடன், மேலே ‘உழுந்து உள்ளதோ?’, ‘துவரை உள்ளதோ?’ என்னும் வினாக்களும், அவற்றின் விடைகளும் பெருகாமற் செய்தமை காண்க.
2.‘பயறு உள்ளதோ கடைக்காரரே!’ என்றவர்க்கு அது உண்டு என்பவர் ‘இரண்டு மூட்டை உண்டு’, ‘இருபத்தைந்து அயிரியெடை (கிலோ) உண்டு’ என அதன் அளவைச் சொல்வர்.
இந்த அளவைமொழிகள், பயறு உண்டு என்னும் விடைப் பொருளைத் தருவதுடன், மேலே ‘எவ்வளவு உண்டு?’ என்னும் வினாவும் அதற்கு விடையும் பெருகாமற் செய்தமை காண்க.

19. ஈ தா கொடு என்பன
ஈ என்பது இழிந்தவன் தன்னைவிட உயர்ந்தவனிடத்தில் ஒன்றை இரக்கும் போதும், தா என்பது ஒப்போன் தனக்கு ஒப்பானவனிடத்தில் ஒன்றை வேண்டும் போதும், கொடு என்பது உயர்ந்தவன் தன்னின் இழிந்தவனிடத்தில் ஒன்றைப் பெற விரும்பும் போதும் வரும்.
தந்தையே ஈ - இழிந்தோன் இரப்பு
தோழா தா – ஒப்போன் இரப்பு
மைந்தா கொடு – உயர்ந்தோன் இரப்பு

20. மரபுவழுவமைதி - குறிப்பாற் பொருள்தருதல்
வெளிப்படையால் அன்றிக் குறிப்பினால் பொருளறியப்படுகிற சொற்களும் சில உண்டு.
‘குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர்’ என்ற இடத்தில் கோழி எறிவரென்பது தலைமைப் பொருளாகாமல் பெருஞ்செல்வ வாழ்க்கையர் என்பது குறிப்பினால் உணரப்படுதல் காண்க.

21. மரபு வழாநிலை வழுவமைதி – அஃறிணையை உயர்திணைபோல வைத்துக் கூறுதல்
கேளாதவற்றைக் கேட்பவைபோலவும், பேசாதவற்றைப் பேசுபவைபோலவும் இயங்காதவற்றை இயங்குபவைபோலவும் (இவையல்லாத வேறு தொழில்களைச் செய்யாதவற்றைச்) செய்பவைபோலவும் அஃறிணையிடத்தும் சொல்லப்படும்.
1.’நன்னீரைவாழி அனிச்சமே’ – கேட்பதுபோலச் சொல்லப்பட்டது.
2. ’பகைமையைக்கண் உரைக்கும்’ – பேசுவதுபோலச் சொல்லப்பட்டது
3. ‘இவ்வழி அவ்வூர்க்குப்போகும்’ – இயங்குவதுபோலச் சொல்லப்பட்டது
4. ‘தன்னெஞ்சே தன்னைச்சுடும்’ – செய்வதுபோலச் சொல்லப்பட்டது

22. உருவகத்திலும் உவமையிலும் திணைகள் மாறிவருதல்
உருவக அணியிலும் உவமை அணியிலும் உயர்திணை அஃறிணைகளும் சினை முதல்களும் தம்முள் மாறிவருதலையும் இன்னும் சொல்லாது விடப்பட்டவற்றையும் பேணிக்கொள்க.
1.’அரசனாகிய அரிமாவிற்குப் பகைவர் கூட்டமாகிய யானைகள் அஞ்சி ஓடின’
என்று உருவகத்தில் உயர்திணை அஃறிணையோடு மயங்கியது. ‘கல்வி மங்கையை நல்லோர் விரும்புவர்’ என்று அஃறிணை உயர்திணையோடு மயங்கியது.
2.’அவனுக்குத் தம்பியர் இருவரும் இரண்டு தோள்கள்’ என்று உயர்திணை முதல் உயர்திணைச் சினையோடு மயங்கிற்று. ‘தோளாகிய மலை’ என்று உயர்திணைச் சினை அஃறிணை முதலோடு மயங்கியது.
3. ‘மயில்போலும் மங்கை’ என்று உவமையில் உயர்திணை அஃறிணையோடு மயங்கிற்று. ’நெற்பயிர்கள் கல்வியாளர்போல் வணங்கிக் காய்த்தன’ என உஃறிணை உயர்திணையோடு மயங்கிற்று.
4. ‘கயல்போலும் கண்’ என உயர்திணைச்சினை அஃறிணைமுதலோடு மயங்கிற்று. ‘தளிர்போலும் மேனி’ என உயர்திணமுதல் அஃறிணைச் சினையோடு மயங்கிற்று.
5. ‘இவன் சரசுவதிக்கு ஒப்பானவன்’ எனப்பால் மயங்கக்கூறுதலும், செங்கோல், வீரக்கழல் என்று ஒருபொருளின் தன்மையை வேறொரு பொருளின்மேல் வைத்துக்கூறுதலும், அரசு வேந்து அமைச்சு தூது ஒற்று என உயர்திணையை அஃறிணை வாய்பாட்டாற் கூறுதலும் பிறவும்.
--------------------------------------------------------------------------
உதவியவை:
1. பவணந்தியாரின் நன்னூல்.
2. பல்வேறு அறிஞரின் நன்னூல் உரைகள்.
உதவியார்க்கு மனமார்ந்த நன்றி.
--------------------------------------------------------------------------