PDA

View Full Version : வழு தொடர்பாக... - 5



குணமதி
29-10-2010, 10:28 PM
( அன்பார்ந்த தமிழ்(மன்ற)நெஞ்சங்களுக்கு,
கணிப்பொறி பழுதுற்றதாலும் அதனுடன் அகப்புறப் பணிச்சுமை
அழுத்தமும் சேர்ந்ததாலும் தமிழ்மன்றத்திற்கு வர இயலாநிலை
நேர்ந்தது. காலத்தாழ்த்தத்திற்குப் பொறுத்தாற்றவும். - கு.ம.)


மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி - 1


பல தலைமுறையாகத் தொடர்ந்து வரும் குலத்தொடர்ச்சி, கொடியும் மரமும் போல் நீண்டும் தொடர்ந்தும் இருத்தலால் அதனைக் கொடியென்றும், கொடிவழி என்றும் மரபு என்றும் கூறுவது வழக்கம். தொடர்ந்து வரும் பழக்க வழக்கங்களையும் சொல் வழங்கும் வகையையும் மரபு என்பதுண்டு.

1. மரபு
சொல் வழக்காற்றில், ஒரு பொருளை எச்சொல்லால் எவ்வாறு நம் முன்னோர் - உயர்ந்தோர் - வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவர் வழங்கியவாறு பயன்படுத்துவதே மரபு எனப்படும்.
எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே – என்பது நன்னூல் நூற்பா.
நாய் எழுப்பும் ஒலியைக் குரைத்தல் என்பது மரபு. மாந்தர் உரைப்பதைப் பேசுதல் என்பது மரபு.
நாய் பேசியது – இத்தொடர் மரபுக்கு மாறாக அமைந்துள்ளதால் மரபு வழுவாகும். நாய் குரைத்தது – என்பது மரபு வழா நிலை.
அறிஞர் ஒரு பொருளைக் கூறியவாறே கூறுவது மரபு எனப்பட்டது. அதற்குத் தக்கவாறு மொழியை வழங்குவது மரபு வழாநிலையாகும்.
குதிரைக்குட்டி, ஆட்டிடையன், யானைப்பிளிறல், முருங்கைக்கீரை, கோழிப் பண்ணை என்பவற்றை குதிரைக்கன்று, ஆட்டுப்பாகன், யானைக்கனைப்பு, முருங்கைஇலை, கோழித்தொழுவம் எனக் கூறுதல் மரபுப்பிழையாகும். மற்றவைகளும் இவ்வாறே.

2. பொதுவினை மரபு வழாநிலை

வெவ்வேறு வினைகளுக்குரிய பல பொருள்களையும் ஒருசேரத்தழுவி நிற்கின்ற ஒரு பொதுச்சொல்லும், வெவ்வேறு வினைக்கு உரிய பொருள்களை எண்ணி நிற்கும் பல சிறப்புச் சொற்களும் தமக்குள் ஒன்றற்கு உரிய சிறப்பு வினையை வேண்டாமல், எல்லாவற்றிற்கும் உரியதொரு பொது வினையைக் கொண்டு முடியும்
1.அணி என்பது கவிக்கப்படுவது கட்டப்படுவது இடப்படுவது பூணப்படுவது முதலியவற்றிற்கு எல்லாம் பொதுச்சொல்லாதலின் அதனை அணிந்தார் எனப் பொதுவினை கொடுத்துச் சொல்லவேண்டும்.
2. சிறப்புச்சொற்களை எண்ணும் பொழுது, முடியும் குழையும் கணையாழியும் அரைஞாணும் அணிந்தார் எனப் பொதுவினையால் முடிக்க வேண்டும்.

3. சிறப்புவினை மரபு வழாநிலை
வினையும் சார்பும் இனமும் இடமும் பொருந்திப் பொருள் விளங்காத பலபொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்லைச் சிறப்புச் சொல்லோடு கூட்டிச் சொல்ல வேண்டும்.
‘மா’ - என்பது மாமரம் வண்டு குதிரை திருமகள் எனப் பலபொருள் தரும் ஒரு சொல்.
1.மா பூத்தது – என்று சொல்லும்போது, மரம் என்று பூத்தது என்ற வினையால் விளக்கமாகும்.
மா வீழ் மலர் – என்ற இடத்தில் வண்டு என்று சார்பால் விளக்கமாகும்.
தேர் கரி மாக் காலாள் – என்று கூறுகையில் குதிரை என்பது இனத்தால் விளக்கமாகும்.
மா வாழ் மார்பன் – என்றவிடத்து, திருமகள் என்று இடத்தால் விளக்கமாகும்.
2.மா ஏறினான் – என்று சொல்லும்போது பொருள் புரியாததால், விளக்கமாகப் புரிவதற்காகப் ‘பாய்மா ஏறினான்’, ‘மாமரம் ஏறினான்’ எனச் சிறப்புச் சொல்லோடு சேர்த்துச் சொல்ல வேண்டும்.

4. தொடர்மொழிகள் ஒலிப்பு வேறுபாட்டால் பொருள் தெளிதல்
எழுத்து மாறாமல், பொருள் வேறுபடச் சொல்லும் சொற்றொடர்கள் சொல்லுகின்ற வகையினால் பொருள் விளக்கமாகும்.
செம்பொன்பதின்பலம் என்பதை, செம்பொன் பதின்பலம் என்று சொன்னால், செம்பொன் பத்துப்பலம் என்றும், செம்பு ஒன்பதின்பலம் என்றால், செம்பு ஒன்பது பலம் என்றும் விளங்கும்
புத்தியிலாதவன், புத்தியில் ஆதவன் - என்பது இன்னொரு எடுத்துக்காட்டாகும்.

5. மரபு வழாநிலையும் வழுவமைதியும்
ஒருபொருட் பன்மொழியை அறிவோம். ஒரு பொருளின் மேல் பல பெயர்கள் வருகின்றபோது அவற்றின் இறுதியில் பொருள் ஒன்றே என்பது தோன்ற ஒரு முடிக்கும் சொல் கொடுத்துக் கூறுவர். சில இடங்களில், பொருள் ஒன்றே என்று தெரியும் போது, தனித்தனி முடிக்கும் சொல் கொடுத்தும் கூறுவர்.
1. ஆசிரியர் மொழிஞாயிறு தேவநேயர் விளக்கினார்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவன்.
- இவை, இறுதியில் ஒரு வினையும் பெயரும் கொடுக்கப்பட்டன.
2. அன்னை மொழியே வாழ்கவே, அழகு மொழியே வாழ்கவே, முன்னை மொழியே வாழ்கவே, முழுசெம் மொழியே வாழ்கவே -என்பதில் அன்னை மொழி, அழகு மொழி, முன்னை மொழி, முழுசெம் மொழி என்பன தமிழ் என்பது தெரிய நின்றதனால் பெயர் தோறும் வாழ்க என ஒரு வினை தரப்பட்டது.

6. சிறப்புப்பெயர்களின் பின் இயற்பெயர் வருதல்
குறிஞ்சி முதலிய ஐவகைத் திணையும், நிலமும், குலமும், குடியும், உடைமையும், குணமும், தொழிலும், கல்வியும் சிறப்புப்பெயரொடு இயற்பெயரையும் ஏற்கும்போது, இயற்பெயர் பின்வருதலே சிறப்பு. (முன்வருவது வழுவமைதியாகும்)

பின் இயற்பெயர் - முன் இயற்பெயர்
குன்றவன் குமரன் - குமரன் குன்றவன் -திணை
சோழியன் சுடர்மணி - சுடர்மணி சோழியன் -நிலம்
பனவன் துரோணன் - துரோணன் பனவன் -குலம்
பாண்டியன் நெடுமாறன் - நெடுமாறன் பாண்டியன் -குடி
பொன்னன் நம்பி - நம்பி பொன்னன் -உடைமை
கரியன் கம்பன் - கம்பன் கரியன் -குணம்
நடையன் நல்லான் - நல்லான் நடையன் -தொழில்
ஆசிரியன் அமுதன் - அமுதன் ஆசிரியன் -கல்வி

7. சுட்டுப்பெயர் வருமிடம்
படர்க்கையில் உயர்திணை, அஃறிணை, விரவு(பொது)ப் பெயர்களோடு சுட்டுப்பெயர் சேரும்போது, வினையாகிய முடிக்குஞ்சொல் வருமாயின், அச்சுட்டுப்பெயர் பின்னே வரும்; முடிக்குஞ்சொல் பெயராக வருமாயின், அச் சுட்டுப்பெயர் முன்னேயோ பின்னேயோ வரும்.
எதுத்துக்காட்டு :
1. முடிக்குஞ்சொல் வினையாயின்...
செழியன் வந்தான், அவனுக்கு உணவிடுக
எருது வந்தது, அதற்குப் புல்லிடுக
சிவப்பன் வந்தான், அவனுக்கு உணவிடுக; சிவப்பன் வந்தது, அதற்குப் புல்லிடுக
2. முடிக்குஞ்சொல் பெயராயின்...
நம்பி அவன், அவன் நம்பி
குதிரை அது, அது குதிரை
சாத்தன் இவன் இது சாத்தன்

8. அடுக்குத்தொடர்
அடுக்குத் தொடர், அசைநிலைக்கு இரண்டும் விரைவு, கோவம், மகிழ்ச்சி, அச்சம், துன்பம் முதலிய பொருள்களின் நிலைக்கு இரண்டும் மூன்றும், இசைநிறைக்கு இரண்டும் மூன்றும் நான்குமாக அடுக்கி வரும்.
1.அன்றே அன்றே - அசைநிலை
2.உண்டேன் உண்டேன்; போ போ போ – விரைவு, பொருள்நிலை
எய் எய்; எறி எறி எறி - கோவம், பொருள்நிலை
வாழ்க வாழ்க; வருக வருக வருக - மகிழ்ச்சி, பொருள்நிலை
பாம்பு பாம்பு; தீத் தீத் தீ - அச்சம், பொருள்நிலை
உய்யேன் உய்யேன்; வாழேன் வாழேன் வாழேன் –துன்பம், பொ.நி.
3. “ஏ ஏ இவளொருத்தி பேடியோ”
“நல்குமே நல்குமே நல்குமே நாமகள்”
“பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ” – இவை இசைநிறை.
அடுக்குத்தொடர் இரட்டைக் குழந்தைகள் போல் வேறுபட்டுத் தனியே பொருள் தரும்.
ஒரு சொல்லைப் பலமுறை சொல்லுதல் வழுவாயினும் இன்ன இடங்களில் சொல்ல்லாமெனல் வழுவமைதியும் இந்த எல்லையை மீறக்கூடாதெனல் வழுவாமல் காத்தலுமாம்.

9. மரபுவழாநிலை: இரட்டைக்கிளவி
இரட்டைக்கிளவி அவ்விரட்டிப்பில் பிரிந்து தனித்து ஒலிப்பதில்லை.
குறுகுறு நடந்து; துடிதுடித்துத் துள்ளிவரும்
இரட்டைக்கிளவி இலையிரட்டையும் பூவிரட்டையும் போல வேறுபடாமல் ஒன்றுபட்டுத் தனியே பொருள் தராது. இரட்டைக்கிளவியில் இரண்டு தடவைக்குமேல் ஒலி அடுக்கி வராது.

10. மரபுவழுவமைதி- ஒருபொருள் குறித்துவரும் பலசொற்கள்
ஒரு பொருளின்மேல் பல பெயர் சொல்லும்போது அப்பொருளி னின்றும் பிரிதல் இல்லாதவற்றை நீக்காமற் கொள்ள வேண்டும்.
ஆசிரியர் மதுரைகிழார் தமிழண்ணல் வந்தார்.
‘தென்மொழி’ நிறுவுநர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் பேசினார்.
ஒருபொருளைக் குறித்து வருகின்ற பல சொற்கள், அவ்வாறு வருவதற்குக் காரணம் இல்லையானாலும், சிறந்து (செவிக்குச் சொல்லின்பம் தோன்ற) நிற்பதால் மரபுவழு என்று நீக்கப்படா.
மீமிசை ஞாயிறு; உயர்ந் தோங்கு பெருமலை; குழித் தாழ்ந்த கண்; வெங் கொடும் போர்.

11. மரபு வழுவாமற் காத்தல்- முற்றும்மை வேண்டும் இடம்
இவ்வளவென்று அளவறியப்பட்ட பொருளையும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளையும் முடிக்கும் சொல்லோடு சேர்த்துச் சொல்லும்போது, உம்மை சேர்த்துக் கூறல் மரபு.
1.தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்; இருவினையும் சேரா;
முத்தமிழும் வல்லார். – இவ்வளவென்று அறிந்த பொருள் முற்றும்மை பெற்றன.
2. முயற்கொம்பு வானப்பூ என்றும் இல்லை; ஒளிமுன் இருள் எங்கும் இல்லை. – உலகில் இல்லாப் பொருள்கள் முற்றும்மை பெற்றன.
3.கண் இரண்டும் குருடு; எருது இரண்டும் கிழம் – பெயர் கொண்டு முடியும்போது உம்மை பெற்றன.
ஐந்தலை நாகம், நான்மறை முதல்வர் என்ற இடங்களில்இவ்வளவு என்று அறிந்த பொருளாயினும் வினைப்படுத்திச் சொல்லாமையால் உம்மை பெறவில்லை.

(மரபு தொடரும்)

-------------------------------------------------------------------------

nambi
30-10-2010, 02:53 AM
மீண்டும் மன்றம் வந்து மரபு காத்த குணமதிக்கு நன்றி! அனைத்தும் அருமை!

(அங்கேயும் கணினி பழுதா? இப்பொழுது தான் இங்கு சீர் செய்தேன்)

அமரன்
30-10-2010, 08:35 PM
அமிழ்ந்து போக வேண்டிய பட்டியலில் வழுவமைதியும்..

குணமதி
02-11-2010, 01:33 AM
மீண்டும் மன்றம் வந்து மரபு காத்த குணமதிக்கு நன்றி! அனைத்தும் அருமை!

(அங்கேயும் கணினி பழுதா? இப்பொழுது தான் இங்கு சீர் செய்தேன்)

நன்றி நம்பி.

குணமதி
02-11-2010, 01:37 AM
அமிழ்ந்து போக வேண்டிய பட்டியலில் வழுவமைதியும்..

அமரன், பின்னூட்டத்திற்கு நன்றி!
எது அமிழ்ந்து போக வேண்டுமென்கிறீர்கள்?
மரபையா?
வழுவையா?
வழுவமைதியையா?

கீதம்
02-11-2010, 10:44 PM
தொடர்ந்து விளக்கம் தந்து கற்பிப்பதற்கு நன்றி குணமதி அவர்களே.

தாமரை
02-11-2010, 11:50 PM
அமரன், பின்னூட்டத்திற்கு நன்றி!
எது அமிழ்ந்து போக வேண்டுமென்கிறீர்கள்?
மரபையா?
வழுவையா?
வழுவமைதியையா?
அவர் சொன்னது இலக்கணம் என்ற சுவைக்கடலில் மூழ்கி முத்தெடுத்தலை.

மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உதாரணங்களுடன் விளக்குகிறீர்கள்.

தமிழ் இலக்கணம் ஒருவர் ஒருமுறைத் தெளிவாய்க் கற்றால், அவரின் சிந்தனைத் தெளிவு பன்மடங்கு உயர்ந்துவிடும். என்றுமே மறக்காது. சந்தேகங்களும் எழாது.

அந்த வகையில் உங்களது இந்தப் பணி மிகவும் போற்றுதலுக்குறியது.

பாராட்டுக்கள்!!

M.Jagadeesan
04-11-2010, 07:33 AM
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்.

பயனுள்ள சொற்களையே பேசவேண்டும்.பயனற்ற சொற்களைப் பேசக்கூடாது என்பது இக்குறளின் பொருள்.

"பயனுள்ள சொற்களையே பேசவேண்டும்"-என்று கூறிய பொழுதே "பயனற்ற சொற்களைப் பேசக்கூடாது"-என்ற கருத்து மறைந்து நிற்கிறது.எனவே வள்ளுவர்,மீண்டும்,"சொல்லற்க பயனிலாச் சொல்"என்று சொன்னது "கூறியது கூறல்"-என்ற குற்றத்தின் பாற் படாதா?

குணமதி
05-11-2010, 02:13 AM
அவர் சொன்னது இலக்கணம் என்ற சுவைக்கடலில் மூழ்கி முத்தெடுத்தலை.

மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உதாரணங்களுடன் விளக்குகிறீர்கள்.

தமிழ் இலக்கணம் ஒருவர் ஒருமுறைத் தெளிவாய்க் கற்றால், அவரின் சிந்தனைத் தெளிவு பன்மடங்கு உயர்ந்துவிடும். என்றுமே மறக்காது. சந்தேகங்களும் எழாது.

அந்த வகையில் உங்களது இந்தப் பணி மிகவும் போற்றுதலுக்குறியது.

பாராட்டுக்கள்!!

உங்களின் மேலான பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி.

குணமதி
05-11-2010, 02:19 AM
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்.

பயனுள்ள சொற்களையே பேசவேண்டும்.பயனற்ற சொற்களைப் பேசக்கூடாது என்பது இக்குறளின் பொருள்.

"பயனுள்ள சொற்களையே பேசவேண்டும்"-என்று கூறிய பொழுதே "பயனற்ற சொற்களைப் பேசக்கூடாது"-என்ற கருத்து மறைந்து நிற்கிறது.எனவே வள்ளுவர்,மீண்டும்,"சொல்லற்க பயனிலாச் சொல்"என்று சொன்னது "கூறியது கூறல்"-என்ற குற்றத்தின் பாற் படாதா?

பொருளை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் கூறியது அதை வலியுறுத்தற்காதலின், கூறியது கூறலன்று எனத் தேவநேயப்பாவாணர் தமிழ் மரபுரையில் விளக்கம் தருகிறார்.

நீங்கள் இந்த ஐயத்தை இங்கே எழுப்பியதற்கு ஏதேனும் காரணமிருப்பின் கூறும்படிக் கேட்டுக்கொள்கிறேன். என்னால் இயன்றவரை விளக்குவேன்.

M.Jagadeesan
05-11-2010, 03:41 AM
பொருளை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் கூறியது அதை வலியுறுத்தற்காதலின், கூறியது கூறலன்று எனத் தேவநேயப்பாவாணர் தமிழ் மரபுரையில் விளக்கம் தருகிறார்.

நீங்கள் இந்த ஐயத்தை இங்கே எழுப்பியதற்கு ஏதேனும் காரணமிருப்பின் கூறும்படிக் கேட்டுக்கொள்கிறேன். என்னால் இயன்றவரை விளக்குவேன்.

தமிழ் இலக்கணத்தில் தாங்கள் காட்டிவரும் ஆர்வத்தின் காரணமாகவே, இந்தக் கேள்வியை இங்கே எழுப்பினேன்.

குணமதி
05-11-2010, 03:02 PM
தமிழ் இலக்கணத்தில் தாங்கள் காட்டிவரும் ஆர்வத்தின் காரணமாகவே, இந்தக் கேள்வியை இங்கே எழுப்பினேன்.

மிக்க நன்றி.

ஆன்டனி ஜானி
05-11-2010, 06:26 PM
தமில் பாடம் கூட இப்படி நான் பள்ளிகூடத்துல படித்ததில்ளை அவ்வளவு அருமையாக விளக்கம் தந்து சொல்லிருகிறீர்கள் ரெம்பான,ரெம்பா நல்ல ஒரு விளக்கம் ரெம்ப நன்றி********

குணமதி
06-11-2010, 05:27 PM
தமிழில் பாடம் கூட இப்படி நான் பள்ளிகூடத்திலே படித்ததில்லை அவ்வளவு அருமையாக விளக்கம் தந்து சொல்லியிருக்கிறீர்கள் ரொம்ப,ரொம்ப நல்ல ஒரு விளக்கம் நிரம்ப நன்றி********

மிகவும் நன்றி.

ஜனகன்
06-11-2010, 10:58 PM
உங்கள் 5 திரிகளையும் பார்வையிட்டேன்.
மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
நல்ல முயற்சி. இந்தத்திரி இலக்கணம் கற்க விரும்பும் என்னைப்போன்ற பலருக்கும் உதவுவதாக அமையும் என்று நம்புகிறேன்.
நான் அறியாத பல இலக்கணங்களை அறிந்து கொண்டேன்.

உங்கள் இந்த முயற்சிக்கு மிகவும் நன்றி குணமதி அவர்களே.

குணமதி
07-11-2010, 03:30 AM
நன்றி ஜனகன்.
எந்தவகை வேறுபாடுமின்றி எல்லாரையும் பாராட்டி ஊக்கப்படுத்தும் நீங்கள், நீண்ட நாட்களாக இங்கு இல்லாத வெறுமையை என்போன்றோர் உணர்ந்திருந்தோம்.
உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மீண்டும் நன்றி.