PDA

View Full Version : மழைக்கு ஒதுங்கியவன்.



அமரன்
29-10-2010, 08:41 PM
ஊரின் வெளியே
தனிமைப்பட்டுக் கிடந்தது
வீடொன்று.

வீடும், வீடிருந்த வெளியும்
சூரிய வியர்வையில்
நனைந்து கொண்டிருந்தன.

வீட்டுத் தாழ்வாரத்தில்
ஒதுங்கினான் ஒருவன்
மழையில் நனையப் பிடியாமல்..

பிறை போல்
உடைக்கப்பட்டிருந்த சன்னலினூடு
வீட்டில் விழுந்தது
அவன் விழி.

வீட்டினுள்
தாறு மாறாய் ஓடியிருந்தது
பின்னப்பட்ட வலை
அறுந்து, காற்றிலலைந்து..

கூடவே
வலையை விட நைந்த நிலையில்
உருவமொன்று..

ஏதோ ஒரு உந்துதலில்
தூசி படிந்த கண்ணாடியில்
கைரேகை பதித்து விட்டு
மழையூடு பாய்ந்தான்
மழைக்கு ஒதுங்கிய அவன்..

கீதம்
30-10-2010, 12:30 AM
முன்னெப்போதோ பலராலும்
வீடென்று அறிப்பட்டிருந்ததும்
இப்போது மழைக்கொதுங்கவும்
கதியற்றுப்போனதுமான
இடிபாடுகளுக்கிடையில் ஊசலாடும்
இறுதிமூச்சை இழுத்துப்பிடித்தபடி
காலனின் வரவுநோக்கிக்
காத்திருந்த உயிரொன்று,
இம்முறையும் ஏமாந்துபோனது,
அலறியடித்து ஓடுபவனைக்கண்டு!

ஆதவா
30-10-2010, 08:56 AM
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் கவிதையைப் பார்க்கிறேன் அமரன்.

கண்முன்னே ஒரு நல்ல காட்சியை கொடுக்கிறீர்கள். ஆனால் ஒவ்வொன்றும் அருமையான உள்ளடக்கம் பொதிந்த படிமங்களாகவும் இருக்கின்றன.
தனக்குள்ளேயே பெய்யும் மழை என்ற கோணத்தில் வாசித்தேன். நிறைவாக இருக்கிறது.
மேலும் வலை என்பதை சிலந்தியின் வீடெனக் கொண்டு கண்டவனின் நுண்மையையும் பாராட்டுகிறேன்.

வீடு
சூரியவியர்வையில் நனைந்து.....
.............
மழையில் ஒதுங்கியவன்

என்று படிக்க சட்டென்று ஒட்டவில்லை... வேறெந்த அர்த்தமும் எடுத்துக் கொள்ளத் தோணவில்லை!

தொடர்கவே!



முன்னெப்போதோ பலராலும்
வீடென்று அறிப்பட்டிருந்ததும்
இப்போது மழைக்கொதுங்கவும்
கதியற்றுப்போனதுமான
இடிபாடுகளுக்கிடையில் ஊசலாடும்
இறுதிமூச்சை இழுத்துப்பிடித்தபடி
காலனின் வரவுநோக்கிக்
காத்திருந்த உயிரொன்று,
இம்முறையும் ஏமாந்துபோனது,
அலறியடித்து ஓடுபவனைக்கண்டு!

ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தை இன்னொரு கவிதையாலேயே கொடுக்கும் முறை நம் மன்றத்தில்தான் ஆரம்பமே... அதில் நீங்கள் பல இடங்களில் கொடுத்துவருகிறீர்கள் மாறுபட்ட கருத்துடன், மாறுபட்ட கோணத்துடன்....

ஒரேமூச்சில் வாசிக்கத்தகுந்த கவிதை. ஆனால் கருத்து மிகப்பிரமாதம்!!
கிராமத்தில் சில பெரிசுகள் கூறுவதுண்டு, ”எமப்பய வந்து தூக்கிட்டு போகாம இருக்கான் பாரேன்” என்று தனது வாழ்க்கை நிறைந்து நீண்டு கொண்டிருப்பதைக் கண்டு வருந்தி.....
சாவதற்கு பயப்படாதவன் வேறெதுக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை.

நீங்கள் இருவருமே உயிர் என்று சொல்லுவதால் இன்ன ரகத்தைச் சார்ந்தது என்று குறிப்பிடாமல் பொதுவாக இருக்கிறது. கவிதையின் விட்டத்தை பெரிதாக்கிப் படிக்க இந்தமாதிரி வார்த்தைகள் உதவுகின்றன!

தொடர்ந்து எழுதுங்கள் கீதம் அக்கா!! முன்பு ஓவியாக்கா தமிழ்மன்றத்தின் தூணாக இருந்தார்கள்.... இப்பொழுது அந்த இடத்தில் நீங்கள்!