PDA

View Full Version : மழைக்கொடை தந்தத் தமிழ்கொடை



தாமரை
29-10-2010, 11:09 AM
உழலும் உழவும் நலியும்
விழலும் அழியும் தழலும்
ஒழியும் கழலும் கழலும்
பிழியும் விழியும் வழியும்.

திருவும் உருவும் மருவும்
உருகும் உளமும் இறுகும்
அருகும் அருகும் கருகும்
பிறகும் பெருகும் சுடரும்.

நிறையும் குறையும் மறையும்
குறையும் இரையும் இறையும்
இறையும் அறையும் முறையும்
உறையும் கறையும் சிறையும்.

உருளும் உலகும் சுழலும்
அரளும் இருளும் புலரும்
ஒளிரும் கதிரும் மிளிரும்
திரளும் முகிலும் அருளும்.

மழையும் பொழியும் குழையும்
இலையும் கிளையும் தழையும்
விளையும் களையும் இழையும்
இழையும் வளையும் களையும்.

முதிரும் கதிரும் உதிரும்
உதறும் பதரும் சிதறும்
குதிரும் பதறும் கதறும்
சதிரும் புதிரும் அதிரும்.

ஒளியும் வளியும் உலவும்
கிளியும் பலவும் குலவும்
பொலிவும் களியும் பொழியும்
இழிவும் பழியும் கழியும்.

மனையும் துணையும் இணையும்
அணியும் மணியும் பிணையும்
பிணியும் வினையும் தணியும்
நினையும் பணியும் பணியும்.

வரவும் வரவும் பரவும்
கறுவும் உறவும் மறவும்
தரவும் பெறவும் விரவும்
பரிவும் பிறவும் திறவும்.

******************************************

என்னவோ தோன்றியது, எழுதிவிட்டேன். பொய்த்த மழைக்குப்பின்னும் பொழிந்த மழைக்குப்பின்னும் இல்லத்திலும் உள்ளத்திலும் நிகழும் நிகழ்வுகளை வடித்திருக்கிறேன். விளக்கம் அறிந்தவர்கள் விளக்கம் தர முன்வரலாம். குறையிருப்பினும் தயங்காமல் சொல்லுங்கள். விளங்காதவர்கள் சற்றுப் பொறுங்கள். பிறகு விளக்குகிறேன்.

இந்தக் கவிதை வடிவம் பல நாட்களாக என் மனதில் இருக்கிற ஒரு வடிவம். சொற்சிலம்பத்தின் அடுத்த படியாக நானும் சாம்பவியும் திட்டமிட்டு வைத்திருந்த வடிவம். இந்தத் திரியை நான் கடத்தி என் கட்டுப்பாட்டில் வைத்து விளக்கப் போகிறேன். புகுந்த வீட்டுக்கு மகளை அனுப்பி அங்கு மகள் சுகமாக இருக்கப் போகிற மகளை எண்ணி, சம்பந்திகளுடன் உரிமை கொண்டாடி மகிழ்கிற தாயாக கீதம் மகிழ்வாராக.

இதற்கு மேட்ரிக்ஸ் கவிதை வடிவம் என்று சொல்லலாம்.

உற்றவை கற்றவை
கற்றவை விற்றவை
விற்றவை மற்றவை
மற்றவை அற்றவை
அற்றவை வெற்றவை!

இந்தக் கவிதையை விளக்கி ஆரம்பிக்கிறேன்.

இது 5x2 மேட்ரிக்ஸ் வடிவம் ஆகும்.

இதன் நேரடிப் பொருளாக நான் கொடுத்திருந்தது

உற்றவை - அனுபவித்தவையே
கற்றவை - படித்தவை ஆகும்
கற்றவை - படித்தவற்றை
விற்றவை - விற்று, கற்றுக் கொடுத்து, மற்றவர்களுக்குக் கொடுக்கிறோம்
விற்றவை - நாம் அப்படிக் கொடுத்தவை எல்லாம்
மற்றவை - மற்றவர்களுக்குச் சொந்தமாகிறது
மற்றவை - மற்றவர்கள்
அற்றவை - அவற்றை அறியும் திறமில்லாதவர்களாக இருக்கின்றனர்
அற்றவை - அப்படிப்பட்ட அறியாமை நிலவும் அவை (திறம் அற்ற அவை)
வெற்றவை - (வெற்று அவை) காலியாகி விடுகிறது.. இங்கு யாரும் வந்து படிக்க மாட்டார்கள்.

இதில் இருமுறை வரும் சொற்களை ஒன்றாக்கினால்?



உற்றவை கற்றவை
கற்றவை விற்றவை
விற்றவை மற்றவை
மற்றவை அற்றவை
அற்றவை வெற்றவை

அனுபவங்களே பாடங்கள்..
மற்றவருக்குச் சொல்லும் உபதேசங்களோ ஒரு வியாபாரம்தான்.
அப்படிப் பிறர் அனுபவமின்றி விற்கும் போலி உபதேசங்கள் வெத்துவேட்டுதான் என்று பொருள் தரும்..

இன்னும் கொஞ்சம் மாற்றியும் பார்க்கலாம்.


உற்றவை கற்றவை கற்றவை
விற்றவை விற்றவை மற்றவை
மற்றவை அற்றவை அற்றவை
வெற்றவை!

இப்படி மூன்று மூன்றாகப் பிரிக்கலாம்..

அனுபவித்து தெரிந்து கொளலே பாடங்களாகும்..
விலைபோகும் மாந்தர்கள் தட்சணை வாங்கிக் கொண்டு சொல்லும் அறிவுரைகள் அப்படி ஆகாது
அந்த அறிவுரைகள் உள்நோக்கங்கள் இல்லாத தன்மை அற்றவை.
அவை வெறும் பேச்சுகள் மட்டுமே ஆகும்.

வரிகளின் முதல் வார்த்தைகள் மட்டுமே எடுத்தாலும் பொருள் தரும்.

வரிகளின் இரண்டாம் வார்த்தைகளை மட்டுமே எடுத்தாலும் பொருள் தரும்.

ஒவ்வொரு வரியும் தனிப் பொருளும் தரும்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் பல இணைப்புத் தானங்கள் கொடுப்பதால் உண்டாகும் மாயாஜாலம் இது.


இப்படி வார்த்தைகளைக் கட்டுதல் மூலம் பல பரிமாணங்களைக் காட்டக் கூடியவை மேட்ரிக்ஸ் கவிதைகள்.(ஆதன் இது மேல்நாட்டுப் பாணி அல்ல.. தமிழில் மட்டுமே சாத்தியம்) சாம்பவி இல்லாமல் போனதால் இதில் மேன்மேலும் பல கவிகள் படைக்க தூண்டுதல் இல்லாமல் போயிற்று.

சில ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இப்படி ஒரு கவிதையைக் காண்கிறேன்.


இப்படி ஒரு வடிவம் எதிர்காலத்தில் கொண்டாடப்படப் போகிறது என்பதற்கான அறிகுறிதான் ஒன்றுக்கு மேற்பட்டவர் மனதில் இது போன்ற வடிவம் தோன்றுவதன் பொருளாகும்.

இந்தக் கவிதையில் இப்படிச் சில வினோதங்களைக் கொண்டு வரமுடியாதுதான். ஆனால் இன்று இப்படி ஒரு கவிதை எழுதியதன் மூலம் கீதம் என் மனதில் ஒட்டடைப் படிந்து கிடந்த அந்த கவி வடிவத்தை தூசு தட்டி சுத்தம் செய்து நடு வீட்டில் வைத்திருக்கிறார். அவருக்கு இந்தக் கவிதையின் வீச்சினையும் அதன் பல சாத்தியக் கூறுகளையும் விளக்க வேண்டியதை என் கடமையாகக் கருதுவதால் இந்தத் திரியை இங்கே கடத்தி இருக்கிறேன். அனைத்து நண்பர்களும் மன்னிப்பீர்களாக.

கீழ்கண்ட கருத்துக்களைக் கவனியுங்கள்

இல்லாத ஒன்றையும் இருப்பதைப் போலவே
மனக்கண் முன்னால் மலரச் செய்தே
இருக்கிற ஒன்றையும் இல்லாததே போல்
மனத்தை விட்டு மறையச் செய்து,


- நாமக்கல் கவிஞர்...


ஒரு கவிதையை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் என்ன? உலகம் முழுக்க வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கவிதைக்கோட்பாடுகள் உருவாகியிருக்கின்றன. அனைத்தையும் எளிமையாகச் சுருக்கிப்பார்த்தோமென்றால் அடிப்படையில் மூன்று பொது அளவுகோல்களை முன்வைக்கலாம். 1. வடிவம் [ Form ] 2. தரிசனம் [Vision] 3.புதுமை. [Novelty]


- கனிமொழி

மேலே கண்ட மேற்கொள்களுக்கு பாரதி அவர்களுக்கு நன்றி.

நான் மன்றக்கவிகளுக்கு என்ற அதே திரியில் இட்ட கருத்து

கவிதையையும் கட்டுரை நாடகங்களையும் பிரிப்பது என்ன அப்படின்னு பார்த்தோம் என்றால் அது கட்டு.

கட்டமைப்பு. கவிதை ஒரு பூச்சரம் மாதிரி வார்த்தைகளைத் தொடுத்து செய்யும் ஆரம் மாதிரி. கருத்தாழம், நயம் மற்றும் சிருங்காரங்கள் செய்யப்படுவது கவிதை.


அப்படி அழகாகத் தொகுக்கப்பட்ட கவிதையைக் காணும் பொழுது மனம் துள்ளுவதை யாராலும் தடுக்கவியலாது.

மூன்று மூன்று வார்த்தைகளில் கட்டி காட்ட எண்ணியதைக் கவிதை முழுக்க கொண்டுவந்திருந்தால் அதன் சிறப்பு இன்னும் பன்மடங்கு கூடியிருக்கும். சில இடங்களில் இரட்டை வார்த்தைகளும் ஒரு இடத்தில் ஒற்றை வார்த்தையும் நின்று கொண்டிருக்கிறது.

கீதம் மனதில் வைத்து எழுதிய பொருளை அவர் விளக்கி இருக்கிறார். இதைப் படித்த உடனே விளங்கும் பொருளும் அதுதான். இரு காலங்களைக் காட்டுகிறார். ஒரு வறுமைக் காலம். ஒரு வளமைக் காலம். நிலவின் தேய்பிறை வளர்பிறை போல் இவை உண்டாக்கும் கோலங்களைக் காட்டி இருக்கிறார்.

கவிஞரின் உள்ளம் காட்டிய பொருளுரையை மனதில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் இனி ஒரு கற்பனை உலகத்தில் போய் வார்த்தைகளை பிய்த்துப் போட்டு புதுப்புது வடிவங்களைக் காணப்போகிறோம். இது இந்தக் கவிதையைக் குறித்தோ அல்லது கவிஞரைக் குறித்தோ சொல்லப்படும் விமர்சனம் அல்ல. :icon_ush::icon_ush::icon_ush::icon_ush:

தமிழின் அழகை, தமிழின் வீச்சை, தமிழின் ஆழங்களை, தமிழ் எப்படிப்பட்ட உன்னத மொழி என்பதைக் காட்ட இந்தக் கவிதை ஒரு கருவி. கவிஞர் சந்தோஷமாக ஒப்புக் கொண்டு விட்டார். அதனால் வாருங்கள் தமிழ்க் கடலில் முத்துக் குளிப்போம்.

பின்குறிப்பு : என்னைக் குறுக்குக் கேள்விகள் கேட்பதன் மூலம் என்னுடைய திறமைகளை நீங்கள் வளர்க்கிறீர்கள். என் மனதின் ஆழத்திற்குச் செல்ல நீங்கள் உதவுகிறீர்கள் என்றே நான் நினைக்கிறேன். அதனால் தைரியமாக குறுக்கிடுங்கள்.

பின்பின்குறிப்பு : அடுத்த வாரம் பகல்பொழுதுகளில் அதிகம் மன்றத்தில் உலவ மாட்டேன். தினம் ஒன்றிரண்டு பதிவுகளுக்கு மேல் எதிர்பார்க்காதீர்கள்.

கடைசிப் பின் குறிப்பு : சாம்பவி அவர்களை யாராவது அழைத்து வர முயற்சி செய்வீர்களா?:icon_b:

கீதம்
29-10-2010, 11:21 AM
இதைவிடவும் ஒரு படைப்பாளிக்கு என்ன அங்கீகாரம் பெரிதாய்க் கிடைத்துவிடமுடியும்?

தாராளமாய் என் கவிதைமகளை உங்கள் விமர்சனவீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன். சீதனம் (இ-பணம்) கொடுத்து என் மகளைக் கூட்டிச் செல்வதற்கு நானல்லவோ பெருமைப்படவேண்டும்!

தாமரை
29-10-2010, 12:52 PM
உழலும் உழவும் நலியும்
விழலும் அழியும் தழலும்
ஒழியும் கழலும் கழலும்
பிழியும் விழியும் வழியும்

உழலும் உழவும் நலியும் - எற்கனவே திணறிக்கொண்டிருக்கிற உழவுத்தொழில் மழையின்மையால் மேலும் நலிந்துவிடுகிறது.

விழலும் அழியும் - கவனிப்பாரின்றி வளர்ந்துநிற்கும் விழல் எனப்படும் புல்வகையும் கூட அழிந்துவிடுகிறது.

தழலும் ஒழியும் - வீட்டில் அடுப்பு எரிவது ஓய ஆரம்பிக்கிறது.

கழலும் கழலும் - உடல் மெலிவதால் கழல் எனப்படும் காலில் அணியப்படும் தண்டை கழன்றுவிழுகிறது அல்லது கொலுசு முதலான ஆபரணங்களும் கழற்றி விற்கப்பட்டு ஜீவனம் நடக்கிறது என்று இருபொருள் கொள்ளலாம்.

பிழியும் விழியும் வழியும் - விழிகள் பிழிந்து நீரை வழியவிடுகின்றன. அழுவதற்கும் சக்தியில்லை எனலாம்.

**************

உழு - என்ற வேர்ச் சொல்..

உழுதல், உழலுதல் என்று இருகிளைச் சொற்களாகப் பிரிகிறது. உழுதலின் போது நாம் மண்ணைக் கிளறி கஷ்டப்படுத்துகிறோம். உழலுதல் என்னும் பொழுது நாம் கஷ்டப்படுகிறோம்.

உழலும் உழவும் நலியும் - எற்கனவே திணறிக்கொண்டிருக்கிற உழவுத்தொழில் மழையின்மையால் மேலும் நலிந்துவிடுகிறது.

இந்த வரி தனியே நிற்கும் பொழுது மிக அழகாக இருக்கிறது. கவிதையிலும் மிக அழகாக இருக்கிறது.

ஆனால்....

கவிதையின் முழுப்பொருளையும் பாருங்கள்.. வண்டிச்சக்கரம் போன்ற உழவனின் வாழ்க்கை. கீழே போகிறது. மேலே வருகிறது. ஆக ஏற்கனவே நலிந்த போன என்ற வார்த்தை வரும்பொழுது.. இரு முனைகளுக்கும் உள்ள தொடர்பு அறுந்து போகிறது.

இந்தக் கவிதைக் கருவில் இருக்கும் சிறப்பு

பொய்த்த மழைக்குப்பின்னும் பொழிந்த மழைக்குப்பின்னும் இருக்கும் இரு பக்கங்கள்..

மழை பொய்ப்பதும் - மழை பொழிவதும் மாறி மாறி வரும் காலச்சக்கரத்தில். எனவே ஏற்கன்வே நலிந்த என்று சொல்வதால் வளமாக் இருந்து நலிவது என்ற முற்காலம் அறுந்து சக்கரம் வடிவை இழந்து விடுகிறது.

இந்த பத்தியில்

உழலும் உழவும் நலியும்
விழலும் அழியும்
தழலும் ஒழியும்
கழலும் கழலும்
பிழியும் விழியும் வழியும்.

என்று அமைந்திருக்கிறது. இதை ஒழுங்கு படுத்தி

உழலும் உழவும் - உழவுத்தொழில் மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளாகும்
நலியும் விழலும் - களைகள் கூட சத்தின்றி நலிந்து விடும். ஆடு மாடு மேய்ச்சலுக்குக் கூட ஆகாது.
அழியும் தழலும் - மனதில் இருக்கும் முன்னேற வேண்டும் என்ற கனல் கூட அழியத் தொடங்கி விடும். வீட்டில் எரியும் கனலும் அணைந்து விடும்,
கழலும் கழலும் - உடல் மெலிவதால் கழல் எனப்படும் காலில் அணியப்படும் தண்டை கழன்றுவிழுகிறது
கழியும் அழியும் - அவை காலத்தை கழிப்பதற்காக அடகு வைக்கப்பட்டு அழிந்து போகும்..
விழியும் வழியும் - விழிகளும் கண்ணீரால் நிரம்பி வழியும்

என்று அடுக்கி சொற்கட்டினால் விட்டுப் போன அந்த முடிவுக்கும் தொடக்கத்திற்கும் உள்ள பிணைப்பை உறுதி செய்யலாம்.

உழலும் உழவும் நலியும்
விழலும் அழியும் தழலும்
ஒழியும் கழலும் கழலும்
பிழியும் விழியும் வழியும்

என்பதை மாற்றாமல் பொருள் கொள்ளுதலை மாற்றியதால், காலச் சக்கரத்தில் பஞ்சமும் - வளமும் மாறி மாறி வருவதைக் காட்டுகிறோம் அல்லவா. அதுதான் நீங்கள் காணாத நான் கண்டச் சிறப்பு. நீங்கள் அறியாததையும் கவிதைக்குள் இருந்ததற்குக் காரணம் என்ன?

காரணம் எத்தனை வார்த்தைகளை இணைப்பது, எப்படி இணைப்பது என்பதை இரசிகர்களின் கையில் கொடுத்து விட்டதாகும். இந்தப் பொருள் தவறு, அந்தப் பொருள் இல்லை என்று ஒரு வரையறையை வைத்துக் கொள்ளாமல் வார்த்தைகளை நெகிழ்வுடன் பொருத்தி இருப்பது இந்தக் காவிதையின் மிகச் சிறந்தச் சிறப்பாகும்.


இதை இன்னும் எளிதாக


உழலும் உழலும் கழலும்
கழலும் விழலும் அழியும்
பிழியும் விழியும் வழியும்

என்றும் சொல்லலாம்.

இங்கே பாருங்கள் ஒரே வார்த்தைதான். உழல் என்பது உழுதலையும் கஷ்டப்படுவதையும் குறிக்கும்.

கழல் என்பது சிலம்பினையும் குறிக்கும், கழன்று போதலையும் குறிக்கும்
இந்த ஒன்பது வார்த்தைகள் மேட்ரிக்ஸாக அமைந்து விடும்.

உழலும் அழியும் பிழியும்
உழலும் கழலும் விழியும்
கழலும் அழியும் வழியும்

இப்படி எழுதினாலும் பொருள் வருவதை கவனிக்கலாம்.

உழும் தொழில் அழிந்து போகும் அது நம் மனதைப் பிழியும்
துன்பத்திற்கு ஆளான களைகள் கூட கண்விழிக்காது..
காலில் அணிந்த அணிகலன்கள் கூட அழிந்து விடும். வாழும் வழியும் அழிந்து விடும் என்றே அதே பொருளை வேறு கோணத்தில் இது தரும்

இப்படி எழுதுவதுதான் மேட்ரிக்ஸ் கவிதை என்று எனக்குள் ஒரு இலக்கணம் வகுத்து வைத்திருக்கிறேன். அதைப் பொருத்த சிறந்த உதாரணமாக இந்தக் கவிதை அமைந்து விட்டது.

அடுத்த பத்தி பிறகு.....

ஆதி
29-10-2010, 05:42 PM
கழலுக்கு இன்னும் சில அர்த்தங்களும் உண்டு அண்ணா

அழுதல், கழனி, நெகிழ்தல், உதர்தல் இப்படி..

தொடருங்கள் அண்ணா...

தாமரை
29-10-2010, 06:01 PM
கருக் கொள்வது என்பது நிமிட நேர உணர்ச்சிகள். ஆனால் அதைக் கவிதையாய் பிரசவிப்பது என்பது பல நாட்கள் அக்கருவை உள்ளுக்குள் வளர்த்து உருவாக்கி வெளிப்படுத்தல் என்பது தாயாகும் இன்பத்தை நல்கும்.

அவசர யுகத்தில் நினைத்ததை உடனே சொல்லவேண்டும் அதை ஒரு தாக்கத்துடன் சொல்ல வேண்டும் என்பதற்காக நாம் சில பல புதிய கவிதை வடிவுகளைக் கைகொள்ள ஆரம்பித்தோம். அவற்றை உபயோகிக்கும் அதே நேரத்தில் ஆத்ம திருப்திக்காக மொழிவளம் கூடிய கவிதைகளை படைப்பதையும், நம் மொழி வளத்தின் முழு வீச்சினையும் அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்வதற்குமான ஆக்கங்களை உண்டாக்கி அதன் சூட்சமங்களையும் தெளிவாக்கி சென்றால் மட்டுமே நம் மொழி வளரும் என்று தீர்க்கமாக நம்புகிறேன்.

அந்த வகையில் மூன்று சீர்களுடன் அளவடியில் "உம்" விகுதியை இணைத்து, புளிமா என்ற அசையை மட்டும் கொண்டு பிணைத்திருக்கிறீர்கள்.

புளிமா புளிமா என முழுக்க முழுக்க இயற்சீர் வெண்டளை விரவி இருக்கிறது. ஒரு அடியில் இவ்வாறு அடி முழுதும் இயற்சீர் வெண்டளையால் ஆகியிருப்பதால் இது இயற்றளை வெள்ளடி.

இந்த தளை வெண்பாவிற்கே உரிய ஒன்றாகும்.

உங்கள் அடுத்த பத்தி

திருவும் உருவும் மருவும்
உருகும் உளமும் இறுகும்
அருகும் அருகும் கருகும்
பிறகும் பெருகும் சுடரும்.

இருந்த சேமிப்பும், உடல் வனப்பும் நாளடைவில் தேய்ந்து உருமாறிவிடுகின்றன.

இரக்க மனங்களும் வறுமையின் காரணமாய் இறுகிவிடுகின்றன.

கிளைத்து வளரும் அருகம்புல் கூட வெப்பத்தால் கருகி அழியும் அளவு வறட்சி.

இந்த அளவு வந்தபின்னும் சூரியனின் உக்கிரம் தணிந்தபாடில்லை.

முதல் விருத்தம் எழுதிய பின்னர் எழுதிய இந்த நான்கு வரிகளில் அமைப்பு வசப்பட ஆரம்பித்து விட்டிருக்கிறது.. ஒவ்வொரு வரிக்கும் பொருளும் அந்தப் பொருளை அடுக்கும் விதமும் இங்கே கைவசப் பட ஆரம்பித்திருக்கிறது.

திருவும் உருவும் மருவும் - பணம் படைத்தவர்கள் பிறர் தன்னிடம் கடன் கேட்டுவிடக் கூடாதே எனப் பரதேசி வேஷம் போட் ஆரம்பித்து விடுவார்கள் என்று நான் பொருள்கொள்ளவே விழைகிறேன். கண்ணீர் வற்றிக் கழல் கழன்ற பின்னால் செல்வம் மறையும் என்பது வரிசை மாறிப் போகிறது அல்லவா? கழலும் கழலும் முதல் விருத்தத்தில் வந்து விட்டதால் சொல்லும் வரிசை மாறிப் போகாமலிருக்க இதுதான் சரியான அர்த்தமாக இருக்கும்.


உருகும் உளமும் இறுகும் -
இரக்க மனங்களும் வறுமையின் காரணமாய் இறுகிவிடுகின்றன. இப்பொழுது இந்த விருத்தத்தின் முதல் அடியும் இரண்டாம் அடியும் அழகாய் பொருந்துவதைக் கவனியுங்கள். அதாவது செல்வந்தர்கள் வேஷம் போடுகின்றனர். இரக்கம் மிகுந்த வறியவர்களின் உள்ளமும் இறுகிக் கல்லாகி விடுகிறது.

அருகும் அருகும் கருகும்

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க”
புதுமணை புகுவிழாக்களில் திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை பார்த்திருப்பீர்கள். அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும்.

அப்படிப்பட்ட அருகம் புல் அருகிப் போகும். அதாவது காணக்கிடைக்காது போகும். காணக்கிடைக்கும் ஒன்றிரண்டு புல்லும் கருகிப் போய் இருக்கும்..

பிறகும் பெருகும் சுடரும்

இப்படி அனைத்தும் கருகிய பின்னரும் வெயிலின் கடுமை ஏறிக்கொண்டே போகும்.. (பிறகும் பெருகும் என்பதை இப்படித்தான் சொல்லவேண்டும். குறைந்த பாடில்லை என்றுச் சொல்லக் கூடாது)

இந்த விருத்தம் பொருத்த வரையில் வார்த்தைகள் வடிவாய் வந்து அமர்ந்திருக்கின்றன. அக்காவின் பார்வைக்கும் என் பார்வைக்கும் சற்றே வித்தியாசம் உண்டு.. வார்த்தைகளில் மாற்றமில்லை... :icon_b:

கீதம்
29-10-2010, 10:14 PM
பிரமித்துப்போனேன். உங்கள் பார்வை வெகு அழகு. நானும் ஒரு வெண்பா முயன்றிருக்கிறேன் என்பதை உங்களால் அறிய முடிந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஆலயமொன்றின் வாயிலில் நின்று ஒரே கோணத்திலேயே பார்த்து ரசித்துக்கொண்டிருந்த என்னை மட்டுமல்ல, வாசகர்கள் அனைவரையும் வெவ்வேறு கோணங்களில் நிறுத்தி நுண்ணிய வர்ணனைகள் தந்து ரசிக்கச்செய்கிறீர்கள். மிக்க நன்றி, தாமரை அவர்களே.

தாமரை
30-10-2010, 02:07 AM
மறுபடி ஆரம்பிச்ச இடத்துக்கே கொஞ்சம் போவோம்..

இந்த ஒரே விகுதியில் வார்த்தைகளை முடிக்கும் பாடல்கள் நமக்குத் தெரிந்ததுதான்..

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்

எனறு கவிய்ரசர் எளிதாக்கிய ஒன்று

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

இங்கேதான் எத்தனை வாய்கள்? (ஆய்கள்???:sprachlos020:)

இதே அடிப்படையைக் கொண்டு நம் மன்றக் கண்மணி கவிச்சமரில் எழுதிய ஒரு குறுங்கவிதை

எழிலிலி இழியழி
கனவிலி கனலிலி
மதுவிழி மதுவிலி
மதுவழி மனவலி
இலியொழி இழிவொழி
கதிவழி கரவொலி!

இது இப்படி என்றால் ஆங்கிலத்தில் பாலிண்ட்ரோம் என்று சொல்லும் முன்னிருந்து படித்தாலும் பின்னிருந்து படித்தாலும் ஒரே பொருள் தருவதை திருஞான சம்பந்தர் எப்படி எடுத்தாண்டிருக்கிறார் பாருங்கள்.. இதை மாலைமாற்று என்பது தமிழ்ப் பெயர்.

யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா,

யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மாயாழீ! காமா! காண் நாகா!
காணா காமா! காழீயா! மா மாயா! நீ, மா மாயா! 1



யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா,

யாகா! யாழீ! காயா! காதா! யார் ஆர் ஆ தாய் ஆயாய்!
ஆயா! தார் ஆர் ஆயா! தாக ஆயா! காழீயா! கா, யா! 2



தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா,

தாவா மூவா தாசா! காழீ நாதா! நீ யாமா! மா!
மா மா யாநீ! தான ஆழீ! காசா! தா! வா! மூ வாதா! 3



நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

நீவா வாயா! கா யாழீ! கா, வா, வான் நோ வாராமே!
மேரா, வான் நோவாவா! காழீயா! காயா! வா வா, நீ!4



யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா,

யா காலா! மேயா! காழீயா! மேதாவீ! தாய், ஆவீ!
வீயாதா! வீ தாம் மே யாழீ! கா, யாம் மேல் ஆகு ஆயா! 5



மேலாபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே,

மேலே போகாமே, தேழீ, காலாலே கால் ஆனாயே!
ஏல் நால் ஆகி ஆல் ஏலா! காழீ தே! மேகா! போலேமே? 6


நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ,

நீயா மானீ! ஏயா மாதா! ஏழீ! கா,தானே!
நே தாநீ! காழீ வேதா! மாயாயே நீ, மாய் ஆநீ? 7



நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே,

நே(அ)ணவர் ஆ விழ யா (ஆ)சை இழியே! வேக (அ)தள் ஏரி! அளாய உழி கா!
காழிஉளாய்! அரு இளவு ஏது அ(ஏ)கவே; ஏழிசை யாழ இராவணனே. 8



காலேமேலே காலிகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காலிகாலே மேலேகா,

காலே மேலே காண் நீ காழீ! காலே! மாலே! மே பூ
பூமேல் ஏ(ய்), மாலே, காழீ! காண்! ஈ, காலே! மேலே கா! 9



வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே
தேரகளோடம ணே நினையே யேயொழிகாவண மேயுரிவே.

வேரியும் ஏண் நவ காழியொயே! ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே;
தேர(ர்)களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி! கா வணமே உரிவே. 10



நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே,

நேர் அகழ் ஆம் இதய ஆசு ஆழி! தாய் ஏல் நன் நீயே; நன் நூள்! ஆய் உழி கா!
காழி உளாந் இன் நையே நினையே, தாழ்இசையா, தமிழ்ஆகரனே. 11

இப்படி தமிழில் உள்ள நுட்பங்கள் இருக்கே அப்பப்பா, கணக்கில் அடங்காது.

இந்த மேட்ரிக்ஸ் கவிதை வடிவம் இருக்கே அதை எங்கே பிடித்தேன் தெரியுமா?

சிவாஜி வாயிலிருந்துதான்.

சிவாஜி, உடனே ஆச்சர்யப்பட வேண்டாம்...

சி வா ஜி
வா யி லே
ஜி லே பி

க ர டி
ர யி ல்
டி ல் லி

இப்போ ஞாபகம் வருதா? சின்ன வயசில் நாம் விளையாடிய விளையாட்டு.. மேஜிக் ஸ்கொயர்ஸ் என்று எண்களை வைத்து விளையாடும் விளையாட்டு...

எதுவுமே புதுசு இல்லை என்றுச் சொல்வதும் இதனால்தான்..


சரி இனி அடுத்த விருத்தம் செல்வோம்...


நிறையும் குறையும் மறையும்
குறையும் இரையும் இறையும்
இறையும் அறையும் முறையும்
உறையும் கறையும் சிறையும்.

நிறையும் குறையும் மறையும் - குடும்பத்தினரிடம் இருந்த நிறைவான நற்குணங்கள் யாவும் குறையத்துவங்கி நாளடைவில் மறைந்தேவிடுகின்றன.

குறையும் இரையும் இறையும் - பசியால் வாடும் நிலையில், கடவுளின் மீதான நம்பிக்கையும் குறையத்தொடங்குகிறது.

இறையும் அறையும் முறையும் - வீட்டில் தகராறுகளும், குற்றச்சாட்டுகளும் எங்கும் எவர்மீதும் இறைந்துகிடக்கின்றன.

உறையும் கறையும் சிறையும் - மனதில் கறைபடிந்து, அவரவர் தனிமைச்சிறையில் அடைபட்டதுபோல் ஒருவருடன் ஒருவர் முகம் கொடுத்துப்பேசாமல் இருக்கின்றனர்.


இந்தப் பாடலில் கருத்து வேறுபாடில்லை (ஓஹோ அதான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தமிழைப் பத்து பெரிய லெக்சர் அடிச்சீங்களான்னு கேட்கக் கூடாது..

பொருளில் மாற்றம் கிடையாது. ஆனால் வார்த்தைகளை அடுக்கியதில் கொஞ்சம் சீர் செய்யலாம் என்று நினைக்கிறேன்...

நிறையும் குறையும் மறையும் - 1,2,3
குறையும் இரையும் இறையும் - 3,2,1
இறையும் அறையும் முறையும் 3,1,2
உறையும் கறையும் சிறையும் 3,1,2

அதாவது வார்த்தைகள் அடுக்கப்பட்ட முறையை எண்களால் குறித்திருக்கிறேன்..

இதை எதாவது ஒரு சீர்வடிவில்

1,2,3 - 1,2,3 - 1,2,3 - 1,2,3 என்றோ

1,2,3 - 2,3,1 - 3,1,2 - 1,2,3 என்றோ

1,2,3 - 3,2,1 - 1,2,3 - 3,2,1 என்றோ

ஒரு சீராக அடுக்கும் பொழுது அழகாக சீராகப் பின்னப்பட்ட கதம்பம் போல வடிவம் பெரும்.

தலைமுடி இருக்கே.. உணர்வில்லா ஒன்று.. மக்கள் துச்சமாக மதிக்கும் ஒன்று. அதையே நாம் எவ்வளவு அலங்காரங்கள் செய்து கொள்கிறோம். எத்தனை விதவிதமாக அலங்காரம் செய்கிறோம்.

ஆனால் கவிதைக்கு அப்படி அலங்காரங்கள் செய்வதை பலர் தேவையற்ற ஒன்றாகக் கருதுகின்றனர். அது தவறாகும்.

கருத்தால் மட்டுமல்ல
கட்டமைப்பும் கொண்டுதான் சிறந்த கவிதைகளை உருவாக்க முடியும். கவிதைக்கு கருத்தும் அழகும் இரு கண்கள்...:icon_b::icon_b::icon_b::icon_b:

தொடரும்

ஆதவா
30-10-2010, 04:03 AM
நான் தெரியாம வந்துட்டேன்னு நினைக்கிறேன்.!! :D

இதைப் படிக்க எனக்கு அவகாசம் வேணும்! :cool:

சிவா.ஜி
30-10-2010, 04:04 PM
அருமையான அலசல். ஆனா...கிடைக்கிற சொற்ப நேரத்துல இவ்ளோ பெரிய பதிவை படிக்க முடியல. இன்னும் மூணு நாள்தானே....வீட்டுக்குப் போய் நிதானமா படிக்கிறேன்.

எப்படியானாலும்....அற்புதமான கவிதைக்கு மகுடம் சூட்டியதைப் போன்ற அலசல் பதிவு.

வாழ்த்துக்கள் கவி கீதத்திற்கும், ரசனைவேந்தன் தாமரைக்கும்.

mania
31-10-2010, 02:23 AM
தாமரை.... இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் உங்கூட டூ......:rolleyes:
பின்ன என்னங்க.......தெரியாத்தனமா இந்த பதிவு பக்கம் வந்திட்டேன்.....பின்னூட்டம் போட தெரியலை......சுத்தமா ஒன்னும் புரியவும் இல்லை......தாமரையிடமிருந்து (வலமிருந்துன்னும் வைச்சிக்கலாம்) ஃபோன் வரும்...."என்ன ஒன்னுமே சொல்லாம போயிட்டீங்கன்னு".....:D:D அதான்.........எஸ்கேப்பு........:D:D. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது ......பிச்சிரிக்காரு......
ஆச்சர்யத்துடன்
மணியா....:D:D

தாமரை
31-10-2010, 02:35 AM
உருளும் உலகும் சுழலும் - உலகம் சுழன்றுகொண்டிருப்பதால் காலமாற்றம் ஏற்படுகிறது.


உலகம் சுழல்வதால் இரவு-பகல் என்கிற காலமாற்றம் ஏற்படுகிறது. அதே உலகம் சூரியனைச் சுற்றுவதால் பருவ மாற்றம் ஏற்படுகிறது. சும்மா சுற்றுவதால் மட்டுமல்ல.. சற்றுச் சாய்வாக நீள்வட்டப் பாதையில்...

மூன்றுவார்த்தைகளில் இதைச் சொல்லணும்..

உருளும் என்பதைச் சுற்றும் என்று சொல்லி இருக்கலாமோ என எண்ணலாம். ஆனால் உருளும் என்பதும் ஒரு சரியான வார்த்தைதான். சூரியனைச் சுற்றி பார்த்தோமானால் ஒரு தளத்தில் உருளுவது போலத்தான் கிரகங்கள் சுற்றுகின்றன. அவற்றிற்கென்று வகுக்கப்பட்ட சுற்றுப் பாதை இருக்கிறது.. அதில் உருண்டுதான் சுற்றுகின்றன சூரியனை...

சுற்றுதல் என்றுச் சொல்லுவதை விட உருளுதல் என்றுச் சொல்லுவதுச் சிறப்பானது ஏன் என்று கேட்டால், எந்த வடிவப் பொருளாக இருந்தாலும் சுற்றி விட்டால் சுழலும். ஆனால் வட்ட வடிவான பொருட்களே உருளமுடியும். பேரண்டத்தில் எங்கே பார்த்தாலும் வட்ட வடிவமே பிரதானமாகத் தெரிகிறது. காலம் கூட அப்படியே வட்டவடிவமாகவே தெரிகிறது..உருள்வதற்கு தரையின் மீது எப்போதும் உடல் பட்டுக் கொண்டே இருப்பது போல உலகம் உருள இறைவன் - இயற்கை நியதி என்ற ஒரு தரை எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு பகுதி ,மட்டுமே அதன் மீது படாமல் காலத்திற்கேற்ப அடுத்தடுத்த பகுதிகள் அதன் மீது பட்டுச் செல்வதால் உருளுதல் என்பது மிகவும் அர்த்தம் பொதிந்த வார்த்தையாகும்.


அரளும் இருளும் புலரும் - பயமுறுத்திக்கொண்டிருந்த இருள் விலகி பொழுது புலர்கிறது. இது வரவிருக்கும் விடிவுகாலத்துக்கான குறியீடு.

போனவரியில் இருந்ததிற்கும் இந்த வரியில் இருப்பதிற்கும் வித்தியாசம் இருக்கிறது.. ஏன்னா அங்கே உருளும் உலகும் சுழலும் அப்படின்னு சொன்னப்ப மூன்று தனித்தன்மை பொதிந்த வார்த்தைகள் அவை. அதனால் அவை வரிசை மாறிப் போனாலும் அர்த்தம் மிளிரும்.

இருள் புலர்வதில்லை. பொழுதுதான் அக்கா புலரும். இருள் விலகும், வெளிரும்... அரளும் என்றால் பயமுறுத்தும் என்று அர்த்தமல்ல பயப்படும் என்று பொருள்.

இருளும் அரளும் புலரும் என்று மாற்றிப்பாருங்கள். காலம் மாறுவதால் இருள் பயந்து விலக பொழுது புலரும் என்று பொருள் வரும்.


ஒளிரும் கதிரும் மிளிரும் - சூரியன் இப்போதும் ஒளிர்கிறது. ஆனால் அதில் ஒரு மிளிர்வு தென்படுகிறது.

கதிரவன் காலையில் ஒளிர்கிறான்.. மிளிர்கிறான் என்கிறீர்கள். சரியான விஷயம்தான், ஆனால் அந்தக் கதிரவன் கடலில் இருந்து தன் கதிர்கரங்களால் நீரைச் சுட்டு ஆவியாக்கி மேகம் உண்டாக்குகிறான் அல்லவா/ அந்த நிகழ்வைச் சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பைச் சேர்த்திருக்கும். கடலை என்னன்னு சொல்லலாம்? கடல்னே சொல்லலாம்..

கதிரும் கடலும் குலவும்

என்று போட்டோமென்றால் மேகம் எப்படி உண்டானது என்பதை கொண்டு வந்து விடுகிறோம். சூரியன் மிளிர்வாகத் தெரிவது மழை விட்ட பின் அக்கா, மழை வருவதற்கு முன்னே அவன் எரிகிறான் அல்லவா?



திரளும் முகிலும் அருளும் - இம்முறை மேகங்கள் திரண்டு, அருள்பாலிக்க வருகின்றன.

கதிரவனும் கடலும் குலவியதாலே மேகங்கள் திரள்கின்றன. அந்த மேகங்கள் மழையை அருளுகின்றன, என்று இப்போது "நச்" என்று கருத்துகள் பொருந்துவதைப் பாருங்கள்.. மிளிரும் சூரியனை இழந்து விட்டோமே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. அதைப் பின்னால் பார்க்கலாம். அந்த வார்த்தை கண்டிப்பாக வேறிடத்தில் பொருந்தும்..


வர்ட்டா!!!

Ravee
31-10-2010, 02:50 AM
இப்படி ஒரு பிள்ளையை பெற்று எப்ப பேர் வைக்க உங்களிடம் தரப்போறேன் என்ற கவலை வந்துருச்சி அண்ணா .... :frown: :frown: :D

தாமரை
31-10-2010, 04:50 AM
இப்படி ஒரு பிள்ளையை பெற்று எப்ப பேர் வைக்க உங்களிடம் தரப்போறேன் என்ற கவலை வந்துருச்சி அண்ணா .... :frown: :frown: :D

போச்சுடா... நான் நர்சரி ஸ்கூல் ஆரம்பிக்கணும் போல இருக்கே!!!:D:D:D

தாமரை
31-10-2010, 11:24 AM
மழையும் பொழியும் குழையும் - மழை பொழிகிறது, இதுவரை இறுகிக்கிடந்த மண் குழையத்தொடங்குகிறது.

மழை பொழிந்தால் நிலம் குழைகிறது. அன்பு பொழிந்தால் மனையாள் குழைகிறாள்.. இந்த மூணு வார்த்தைகளில் ஆனந்த வாழ்வின் அடிநாதம் அடங்கிக் கிடக்கிறது. மழை பொழியும் மண்குழையும் என்பதை இங்கு தெளிவாக வேறுபடுத்திக் காட்ட முடியாமல் போய்விட்டிருக்கிறது. அதை அடுத்த வரிகளில் ஈடுசெய்திருக்க வேண்டும் நீங்கள்...

பார்க்கலாம்.


இலையும் கிளையும் தழையும் - காய்ந்திருந்த மரஞ்செடிகள் துளிர்க்கின்றன.

அடுத்த வரியோ இலை கிளைகளைப் பற்றிப் பேசப் போய்விடுகிறது.. பூமி குழைந்ததோடு சரி... மரங்கள் ஏற்கனவே வளர்ந்தவை. மழையில் இலை துளிர்த்து தழைப்பது சட்டென நடந்து விடுகிறது. ஆகவே இதை அடுத்ததாய் எழுத வேண்டிய அவசியம் வந்து விடுகிறது. மண்ணும் மனமும் மட்டுமே குழையும் என்பதால் பூமி என்பதை நாமாக எடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்

விளையும் - பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

களையும் இழையும் - கூடவே களைகளும் வளர்கின்றன.

இங்கும் ஒரு சின்ன தடுமாற்றம் காணப்படுகின்றது. விளையும் களையும் இழையும். களையும் இழையும் சரி.. ஆனால் விளையும் என்பதை பயிர்கள் விளையும் என்பதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனென்றால் விளையும் என்பது செய்வினை. விளைவிக்கப்படுகினறன என்பது செயப்பாட்டு வினை.

இந்தச் சின்ன சிக்கலை நீக்க விளைச்சலையும் களையையும் பிரிக்க வேண்டும்.

விளையும் இழையும் களையும்

என்று வரிசை மாற்றினால் விளவது விளைச்சல், இழைவது களைகள் எனத் தெளிவு வரும்.


இழையும் வளையும் களையும் – அக்களைகளை, வளையல்கள் இழையும் கரங்கள் அதாவது பெண்கள் களைகின்றனர்.


இலக்கியத்தரம் வாய்ந்த வரி இது.. இழையும் வளையும் களையும்.. அது விவசாயமானாலும் சரி.. குடும்ப வாழ்க்கை ஆனாலும் சரி.. இது மிகப் பொருள் மிகுந்த வரி...

இதைப் பார்க்கும் பொழுது

இழையும் விளையும் களையும்
இழையும் வளையும் களையும்

என்று சொல்லி இருந்தால் இன்னும் இன்பமாக இருக்குமோ எனத் தோன்றுகிறது.

விளை என்பதை இளைஞன் என்றும் வளை என்பதை வளையலணிந்த பெண்ணாகவும் கொண்டு மகிழவும் தோன்றும்.. :)




முதிரும் கதிரும் உதிரும் - அமோக விளைச்சலால் கதிர்கள் நன்கு வளர்ந்து முற்றி உதிரத் தொடங்குகின்றன.

சென்ற கண்ணியும் இந்தக் கண்ணியும் இதை வாழ்வியல் கவிதையாக சிலேடையில் அர்த்தம் கொள்ளத்தக்க கவிதையாக மாற்றும் சாத்தியக் கூறு இருப்பதை அழகாகக் காட்டுகின்றன.

அங்கே விளைச்சல் - வாழ்க்கை, இங்கே அறுவடை - அனுபவம்..

இந்தச் சாத்தியக்கூறு கண்ணுக்குத் தெரிவதால் கவிதையை - உழவுக்கும் வாழ்க்கைக்கும் இடைப்பட்ட ஒரு சிலேடையாக்க இயலும் என்பது அழகாகவே தெரிகிறது..

அதற்கு கவிதை எங்கே தொடங்க வேண்டும்?

கதிரும் கடலும் குலவும்...

ஆமாம்.. சூரியன் நமது அப்பா, கடல் நமது தாய்..

அவர்கள் குலவலில் தோன்றிய அன்பு மழை... உழுத நிலம்.. பயிராய் மக்கள்.. களையாய் தீயநட்பு.. அழகாக பொருந்தி வரும். வறண்ட காலம் அன்பு வற்றிப் போன முதுமைக் காலமாய் மாறிவிடுமல்லவா..

முதிர்ந்த கதிர்கள் களத்திலடிக்கப்பட நெல்மணிகள் உதிர்கின்றன. வளர்ந்த ஆண்மகன் மணம் என்னும் களத்தில் அடிக்கப்பட அங்கும் மணிகள் உதிர்கின்றன.. (ஹிஹி)



உதறும் பதரும் சிதறும் - தூற்றி உதற, பதர்கள் காற்றில் சிதறி வெளியேறுகின்றன.


பாருங்க. கல்யாணம் ஆன பின்னால் உபயோகமில்லா நட்புகள் குறைந்து போகின்றன. மனைவியைப் பார்த்தாலே உதறி அந்த நட்புகளை உதறுகிறோம். என்னமா ஒத்துப் போகுது பாருங்கள். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்றுச் சும்மாவா சொன்னார்கள்.

குதிரும் பதறும் கதறும் - தானியங்களை சேமிக்கும் குதிரானது இவ்வளவு தானியங்களையும் தன்னுள் அடக்கமுடியுமா என்று பதறுகிறது. இருந்தும் அது கதறக் கதற, கழுத்துவரை நிரப்பப்படுகிறது.

சரியா பிடிச்சிட்டீங்க. மனுஷன் கல்யாணத்துக்கு அப்புறம் குதிர் மாதிரிதான் குண்டாகிடறான், சரியாகப் பொருந்துகிறது,,

சதிரும் புதிரும் அதிரும் - ஆட்டபாட்டங்களும் வேடிக்கைப் பேச்சுகளும் எங்கும் அதிரச்செய்கின்றன.


சதி(ர்)- மனைவி, புதிர்(பதி)-கணவன்.. இதுக்கு மேல அர்த்தம் சொல்லணுமா என்ன?

இந்த இரு கண்ணிகளிலும் அழகாக விளைச்சலையும் அதன் விளைவையும் அழகாக சொல்லி இருப்பதோடு இதை எப்படி வாழ்க்கையோடு இணைக்கலாம் என்பதையும் கோடி காட்டி இருக்கீங்க. (உங்களுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ)

முதலில் சொன்ன மாதிரி தொடக்கத்தையும் முடிவையும் இணைக்கிற மாதிரிக் காட்டுவதால் வாழ்க்கைச் சக்கரத்தையும் இந்தக் கவிதையில் காட்டும் வாய்ப்பு இருக்கிறது.

தொடரும்

கீதம்
31-10-2010, 08:53 PM
இல்லை...இல்லை எனக்குத் தெரிந்து இந்தத் தவறைச் செய்யவே இல்லை.:lachen001:

என்ன அழகாய்க் கோர்த்திணைத்து மாலையாக்குகிறீகள்,நான் இறைத்த முத்துக்களை! இப்போதுதான் அணியத் தகுந்ததாகிறது மாலை!

இப்படியும் பொருள் கொள்ளமுடியும் என்று விளங்குவதுடன் எந்தெந்த வார்த்தைகளை எங்கெங்கு இணைத்தால் எப்படிப் பொருள் வேறுபடும் என்பதையும் அறியமுடிகிறது. என் நன்றியும், பாராட்டுகளும், தாமரை அவர்களே.

வானவர்கோன்
31-10-2010, 09:42 PM
தற்கால அர்த்தமற்ற எழுத்துக் கோர்வைக்குள் காத்திரமான கவிதைகளும் பிரசவமாகின்றன, அவற்றில் "மழைக் கொடைத் தந்தத் தமிழ்க்கொடை"யின்
முதிரும் கதிரும் உதிரும்
உதறும் பதரும் சிதறும்
குதிரும் பதறும் கதறும்
சதிரும் புதிரும் அதிரும்.
இவ் வரிகள் வைர வரிகள்.

மழைக்கொடைத் தந்தத் தமிழ்க்கொடை எனும் தலைப்பில் மழைக்கொடை(த்) தந்த(த்) தமிழ்க்கொடை எங்கோ இடிக்கின்றது.

கவிஞருக்குப் பாராட்டுக்கள்.

தாமரை
01-11-2010, 02:56 AM
´போன பதிகத்தில் குதிருக்கு ஏன் ஆணைச் சொன்னீர்க்ள் மனைவிதானே குண்டாகிறாள் என்று சிலர் அழைத்துச் சந்தேகம் கேட்டார்கள்.

மக்கா நல்லா கவனிக்கணும் நீங்க.. என்னென்ன நடக்குதுன்னு..


குதிரும் பதறும் கதறும் - தானியங்களை சேமிக்கும் குதிரானது இவ்வளவு தானியங்களையும் தன்னுள் அடக்கமுடியுமா என்று பதறுகிறது. இருந்தும் அது கதறக் கதற, கழுத்துவரை நிரப்பப்படுகிறது.



மனைவி சமைச்சது நல்லா இல்லைன்னாலும் நல்லா இருக்குன்னு சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் கணவனுக்கு. நல்லா இல்லைன்னு சொல்லிட்டா இரண்டு வாரத்துக்கு முகத்தைத் தூக்கி வச்சிப்பாங்க.

நல்லா இருக்குன்னு சொல்லிட்டா, இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க என்ற கவனிப்பு வேற. இல்லம்மா சாப்பிட இடமில்லைன்னு சொன்னா, அப்ப சாப்பாடு நல்லா இருக்குன்னு பொய்தானே சொன்னீங்க என்று அழுகை.. இதைச் சமாளிக்க எத்தனை நாள் ஆகுமோ..

அது மட்டுமா நல்லா இருக்கு என்று மனசைச் சந்தோசப்படுத்திய ஒரே குற்றத்துக்காக அதே பதார்த்தத்தை அதே சுவையில் சமைத்து அதைத் திணிப்பார்கள். இப்போ உண்மையைச் சொன்னா, உங்களுக்கு என் மீது இருந்த அன்பு, காதல், பாசம் இன்ன பிற அத்தனையும் போயிடுச்சி.. அதான் நான் எத்தனை ருசியா(???) சமைச்சாலும் உங்களுக்குப் பிடிக்காமல் போகுது என்று ஒரே அழுகை வேறு. ஒரே ஒரு பொய் சொல்லப் போய் வாழ்க்கை முழுக்க இப்படி அல்லல் பட்டு, உணவைப் பார்த்த்துமே பதறி, அங்கே சொல்ல முடியாமல் வெளியே வந்துக் கதறி...


குதிர் எனக்கு இதைக் கொடுங்கள் எனக் கேட்பதில்ல. அது தேமேன்னு உட்கார்ந்திருக்கும். சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்கிற கணவர்களும் அப்படித்தான்.

சரி அடுத்த பதிகம் செல்வோம்.


ஒளியும் வளியும் உலவும் - இதமான ஒளியும் இளந்தென்றல் காற்றும் உலவுகிறது.

திருமணத்திற்குப் பின் புதிய தேஜஸ் வரும். வாழ்க்கையில் இதமானத் தென்றல் வீசும். அதுவரைக்கும் சரி. நம் விவசாயத்தை பார்த்தால் அறுவடைக்காலம் தை மாதம். அப்போது குளிர்காலம். அதன் பின் வீசுவது குளிர்காற்று. தென்றல் காற்று அல்ல. இந்தக் குளிர் காற்று வடக்கில் இருந்து வீசுவதால் வாடைக்காற்று எனப்படும், வாடைக் காற்று உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாதே அம்மணி. இயற்கையைச் சரியாகப் படம் பிடிக்க வேண்டுமல்லவா? காலைப் பனி, அதைக் கதிர்க் கரங்களால் களையும் சூரியன் அல்லவா இங்கு தேவை.

மிளிரும் கதிரும் ஞாபகம் இருக்குதில்லையா? அதை இங்கே கொடுக்கலாம். காரணம், சூரியன் மிகச்சிறந்த விளைச்சலைக் காண்கிறான் அல்லவா? குதிர்கள் நிரம்பி வழிகின்றன. எனவே அவனுக்கு ஒரு கர்வமும் இருக்கும். கண்ணாடியைத் துடைத்து விட்டு கீதம் அக்காவின் மார்க் ஷீட்டைப் பார்க்கும் அவரின் அப்பாவைப் போல பெருமிதத்துடம் சூரியன் பனித்திரையைக் கதிர் கரங்களால் துடைத்துவிட்டு தன்னால் விளைந்ததைக் கண்டு மிளிர்கிறான் என்றுக் காட்டி இருந்தால் அது இயற்கையோடு ஒன்றி இருந்திருக்கும் என்பது என்கருத்து. சூரிய ஒளிபட்டு பனித்துளி மிளிர்கிறது.. சூரியனும் மிளிர்கிறது என்று சொல்லலாமா?

கதிரும் பனியும் மிளிரும் - ஒரு வார்த்தை அதிகமாகுதே பின்னால் இதைப் பார்ப்போம்.

கிளியும் பலவும் குலவும் - கிளிகளும், பலவிதப் பறவைகளும் கொஞ்சிப் பேசிக் குலவுகின்றன.

சாப்பாட்டுப் பிரச்சனை தீர்ந்தாச்சி.. இங்கே குளிர் காலம் என்பதால் துருவப் பகுதியில் பனி மூடியதால் பல வகைப் பறவைகள் இங்கே வரும்.


பொலிவும் களியும் பொழியும் - எங்கும் அழகும், ஆனந்தமும் நிறைந்திருக்கிறது.



இழிவும் பழியும் கழியும் - கீழான செய்கைகளும், குற்றப்பேச்சுகளும் மறைந்துவிடுகின்றன.

மீதமுள்ள இரண்டு வரிகளும் அப்படியே இருக்கட்டும்.

இது எப்படி மனித வாழ்க்கைக்குப் பொருந்து எனப் பார்ப்போம்.


கதிரும் பனியும் மிளிரும்

கதிர் என்பது தகப்பன். பனி என்பது தாய். இருவரும் புரிதல் வாழ்க்கையில் மிளிரத் தொடங்குகிறார்கள்

கிளியும் பலவும் குலவும்..

கிளிகள் - குழந்தைகள்... பல குழந்தைகள் பிறந்து குலவுவார்கள்..

பொலிவும் களியும் பொழியும் -

இதனால் குடும்பம் ஆனந்தச் சங்கமமாக, நல்லதொரு பல்கலைக் கழகமாக மாறிப் பொலிவு பெற ஆனந்த மழை பொழியும்..


இழிவும் பழியும் கழியும் -

இது சற்று முரணாக வரியாக இருந்தாலும் .... பொறுப்புள்ள குடும்பத் தலைவன் - தலைவி ஆன பின்பு முன்பு அறியாமல் செய்த பல தவறுகளால் உண்டான தறுதலை, தண்டச்சோறு இப்படியான பல பட்டங்கள் கழிவதை எடுத்துக் கொள்ளலாம்.

[COLOR="Blue"]மனையும் துணையும் இணையும் - இதுவரை பிணக்கிட்டிருந்த மனையாளும் அவள் துணைவனும் ஒன்றுபடுகின்றனர்.

மனையும் துணையும் இணையும் என்பதை மனைவியும் துணைவனும் ஒன்றுபடுகின்றனர் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் உழைக்கத் தொடங்கிய உடனே ஒன்று பட்டிருப்பார்கள்.

மனை என்றால் மனைவி மட்டுமல்ல... குடும்பத்தினர் - உறவினர் என்றும் பொருள்.. துணை என்றால் கணவன் அல்ல.. நண்பர்கள். எனவே இதை உறவினர்களும் நண்பர்களும் இப்பொழுது நம்மோடு வந்து சேர்ந்து கொள்வார்கள் என்றுச் சொல்லலாம். இது விவசாயம்

அதே போல் சந்தோஷமான குடும்பம் அமைந்த பின்னே, வீடு நிலம் போன்றவற்றை வாங்குகிறோம் அல்லவா? அது வாழ்வியல்..

அப்படியானால் துணை என்றால் என்ன?

வீட்டிற்குத் துணை செய்யும் அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள். அதாவது வீடு, நிலம், கட்டில்கள், மெத்தைகள், தொலைக்காட்சி, வாஷுங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் இப்படி எல்லாவற்றையும் வாங்குதலைக் குறிக்கும்..

அணியும் மணியும் பிணையும் - இழந்திருந்த ஆடை அணிகலன்கள் வாங்கப்படுகின்றன.

இரண்டிலும் இங்கே ஒரே அர்த்தம் தான்,

பிணியும் வினையும் தணியும் - உடல்நோவும், மனநோவும் குணமாக்கப்படுகின்றன.

பிணி சரி. ஆனால் இங்கே வினை சரியா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. மன வருத்தங்கள் வினையா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.

அதே சமயம் இல்லற வாழ்க்கையில் காணும் பொழுது..

பிணிகள் வரும், தொழில் குறையும் என்பது போன்ற அர்த்தம் வருகிறது. வினையும் என்பதை வலியும் என்று நேரடியாக மாற்றினால் இந்த தவறான பொருள்கொள்ளுதல் இருக்காது.

நினையும் பணியும் பணியும் - நினைக்கும் எல்லாக்காரியங்களும் நிறைவேறுகின்றன.

இது சரியாக இருக்கிறது. மிகத் தெளிவாக இருக்கிறது..

வரவும் வரவும் பரவும்
கறுவும் உறவும் மறவும்
தரவும் பெறவும் விரவும்
பரிவும் பிறவும் திறவும்.

வரவும் வரவும் பரவும் - வருவாய் பெருகவும் விருந்தினர் வரவும் பெருகுகிறது.

விவசாயத்திற்கான பொருளும் வாழ்வியலுக்கான பொருளும் இங்கே ஒன்றுதான். அங்கேயும் இங்கேயும் வருமானமும், உறவினர்கள் வருகையும் பெருகுகிறது..

கறுவும் உறவும் மறவும் - பகையாயிருந்த உறவுகளும் அதை மறந்து உறவாடுகிறது.

விவசாயத்தில் நல்ல விளைச்சல் உண்டானால் எல்லோர் மனமும் நிறைந்திருப்பதால் பகைகள் மாறிவிடும்,

காதல் மணம் அல்லது நம் வீட்டில் பெண்ணெடுக்க வில்லை போன்ற பல மனத்தாங்கல்கள் திருமணம் நடந்த போது உருவாகி இருக்கலாம். அததனையும் மாறி விடும்.

தரவும் பெறவும் விரவும் - செழிப்புடன் இருப்பதால் பெண் தரவும் பெண் எடுக்கவும் முன்வருகின்றனர். அல்லது சிறிய அளவில் எதையேனும் தந்து பெரிய அளவில் பொருள் பெற்றுச் செல்கின்றனர். அல்லது செலவு தரவும் வரவு பெறவும் வருகின்றனர். மூன்று பொருள் கொள்ளலாம்.

பாருங்க.. நம் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்வதைக் கூட இங்கே சொல்லி இருக்கீங்க...

பரிவும் பிறவும் திறவும் - அதனால் இதுவரை
இல்லாத பரிவு போன்ற பல புதிய விஷயங்களை மனந்திறந்துகாட்டுகின்றனர்.

இப்போ பாட்டி தாத்தா ஆகறோம் நல்ல பேரக் குழந்தைகள். மனம் பரிவால் நிரம்புகிறது, பொருள் சேர்த்தல், குடும்பம் என்பதைத் தாண்டி ஆன்மீகம், பொதுத் தொண்டு இப்படிப் பல புதிய எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன,,


உழலும் உழவும் நலியும்
விழலும் அழியும் தழலும்
ஒழியும் கழலும் கழலும்
பிழியும் விழியும் வழியும்.

திருவும் உருவும் மருவும்
உருகும் உளமும் இறுகும்
அருகும் அருகும் கருகும்
பிறகும் பெருகும் சுடரும்.

நிறையும் குறையும் மறையும்
குறையும் இரையும் இறையும்
இறையும் அறையும் முறையும்
உறையும் கறையும் சிறையும்.

இப்போது மேலே இருக்கும் மூன்று பதிகங்களை வாழ்வியலாய்ப் பார்ப்போம். இவை முதுமையைக் குறிப்பன.

உழலும் உழலும் நலியும் - இதுவரை நாம் பல விஷயங்களுக்காக உழன்று வந்திருப்போம். அப்படி இனிக் கஷ்டப்படவேண்டியதில்ல. மன உழற்சிகள் குறையும். ஏனென்றால் ஆன்மீக வழியில் பயணம் ஆரம்பித்து விட்டது..

விழலும் அழியும் - நம்மிடம் இருந்த தேவையற்ற வேண்டாத எண்ண்ங்கள், ஆசைகள் விழல் போன்றவை அவையும் அழியும்.

தழலும் ஒழியும் - ஆசைத் தீ அணையும்

கழலும் கழலும் - நம் அடியும் இறைவன் அடியை நோக்கும்

பிழியும் விழியும் வழியும் - நம்முடைய விழிகள் நற்கதி வேண்டி அழும். நம்முடைய கடை வழி தேற்றத்தை எண்ணி மனமும் பிழியும்.

திருவும் உருவும் மருவும்

நம்முடைய செல்வம், மதிப்பு, உருவம் எல்லாம் மாறத் தொடங்கும்...

உருகும் உளமும் இறுகும்

மனம் உருகும்.. இறைவனைத் துதித்து. அதே மனம் இறுதிக் காலத்தை எதிர் கொள்ளும் வலிமையயும் பெறும்.

அருகும் அருகும் கருகும்

இந்தக் காலக் கட்டத்தில் அதிசயமாகத் தோன்றும் சில ஆசைகள் நிறைவேறாது அவை கருகிவிடும்.

அல்லது புல்லாய் பூமியில் உதித்த இந்த உடலும் இறந்த பின் தீயிடப்பட்டுக் கருகும். மானிடராதல் அரிது என்று ஔவை சொன்னார். அதனால் மனிதப் பிறவியை அரிதானப் பிறவி - அருகு என்றுச் சொல்லலாம். அப்படி அரிதாகக் கிடைத்த மானிட உடல் அருகிக் கருகும்.. இறந்தவுடன் எரிக்கப்பட்டு விடும்.
"

பிறகும் பெருகும் சுடரும்.

அப்படி இருந்தாலும் ஞானச் சுடர் பெருகும், அல்லது உடலை எரித்த பின்னும் நம்முடைய புகழ் பெருகும்,,,

இப்படி விவசாயத்தையும் வாழ்வியலையும் அழகாக இந்தக் கவிதையில் இணைக்கலாம் அக்கா.

இப்பொழுது புரிந்திருக்குமே ஏன் உடனே நான் இ-பணம் பரிசளித்தேன், ஏன் உங்கள் விளக்கத்திற்காகக் காத்திருந்தேன் என.

கவிதையை இந்த அளவிற்கு பதம் பதமாக பிரித்துப் பார்த்து கருத்துச் சொல்ல அனுமதித்து அதையும் இரசித்து ஊக்கம் கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி..

இந்தக் கவிதை விளக்கத்தின் போது தெரியாமல் என்னுடன் தொலைபேசியில் உரையாடி என் விளக்கங்களைச் சகித்துக் கொண்ட ஆதன், இரவி ஆகியோருக்கும் எனது நன்றி..

தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டேன் என்று சொன்னாலும், இரசித்தேன் என்று சொன்ன தலைக்கும் நன்றி..

இதைப் பொறுமையாய் படிக்கும் அனைவருக்கும் நன்றி.

அக்கா, கலையக்கா வந்தால் இரவி மாதிரியே புலம்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

வர்ட்டா!!!

ஹி ஹி இதை விமர்சனப் போட்டிக்கு நகர்த்திடச் சொல்லலாமா?

தாமரை
01-11-2010, 03:58 AM
இல்லை...இல்லை எனக்குத் தெரிந்து இந்தத் தவறைச் செய்யவே இல்லை.:lachen001:

என்ன அழகாய்க் கோர்த்திணைத்து மாலையாக்குகிறீகள்,நான் இறைத்த முத்துக்களை! இப்போதுதான் அணியத் தகுந்ததாகிறது மாலை!

இப்படியும் பொருள் கொள்ளமுடியும் என்று விளங்குவதுடன் எந்தெந்த வார்த்தைகளை எங்கெங்கு இணைத்தால் எப்படிப் பொருள் வேறுபடும் என்பதையும் அறியமுடிகிறது. என் நன்றியும், பாராட்டுகளும், தாமரை அவர்களே.

சமையலும் கவிதையும் ஒன்று.

சமையலில் நமக்கு இட்பொருட்களின் குணம், சுவை, பதம் இப்படு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். அவற்றைச் சரியாக விகிதங்களில் சரியான பதங்களில் கூட்டி சுவையூட்டுகிறோம். இதைச் சுவைப்பவர் நாக்கும், மூக்கும், விழியும்,உடலும் மனமும் நம் அடிமை.

அது போல சொற்களின் குணம், சுவை, பொருள், சேர்க்கப் படவேண்டிய இடம் இப்படி பல உண்டு. நல்ல கவிதைச் சமையல்காரர் இப்படிச் சொல்லின் குணம், பதம், சுவை அறிவதனால் சரியான வார்த்தைகளை அங்கு அடிமையாகத காதும் இங்கு நமது அடிமை ஆகிவிடுகிறது..

முத்துக்களின் தரமே மாலையின் தரமாகிறது. இல்லையா? வரிசை பிறழ்ந்த சில முத்துக்களை அடையாளம் காட்டி நேர்த்தி செய்யும் ஒரு தர ஆய்வாளன் பணி மட்டுமே இது. முத்துக்களைக் கண்டவரும் கோர்த்தவரும் நீங்கள் மட்டுமே!!!

உங்கள் மனம் ஒரு கவிதையை எழுதி முடிக்கும் வரை ஒரு கருத்தை மட்டுமே சிந்திப்பதாக. எழுதி முற்றிலும் முடித்து ஒரு முறை சரி பார்த்த பிறகு நகாசு வேலைகளைக் கவனிக்கவும். அப்படித்தான் கவிதைகளை மெருகேற்ற இயலும். இல்லையென்றால் சொல்ல வந்ததை சொல்ல முடியாது.

இன்னும் பல முத்துமாலைகள் உருப்பெறட்டும் என்று வாழ்த்துகிறேன்,

தாமரை
01-11-2010, 07:02 AM
மிச்சமிருக்கும் நாலு வரிகளுக்கு வாழ்வியல் விளக்கம் தரணுமே.. அவைதானே கவிதையை முழுமையாக்கும்..

மனிதன் இறந்துவிட்டான். புகழுடம்பு எய்தி விட்டான்..

காலம் நிற்குமா? நிற்காத அல்லவா.. காலம் போய்க் கொண்டே இருக்கிறது.


உருளும் உலகும் சுழலும் - உலகம் சுழன்றுகொண்டிருப்பதால் காலமாற்றம் ஏற்படுகிறது.


அரளும் இருளும் புலரும் - பயமுறுத்திக்கொண்டிருந்த இருள் விலகி பொழுது புலர்கிறது. இது வரவிருக்கும் விடிவுகாலத்துக்கான குறியீடு.

ஒரு தலைவன் இரந்து போனதால் உண்டான இருள் விலக ஆரம்பிக்கும்..
காரணம் அடுத்த தலைவன் உருவாகிறான்.. அடுத்த தலைமுறை வருகிறது..

கதிரும் கடலும் குலவும்

மீண்டும் ஆரம்பத்தில் இருந்து மறுபடி கவிதை ஆரம்பிக்கிறது இங்கே...

ஆதவா
01-11-2010, 08:14 AM
ஒரு தலைவன் இரந்து போனதால் உண்டான இருள் விலக ஆரம்பிக்கும்..
காரணம் அடுத்த தலைவன் உருவாகிறான்.. அடுத்த தலைமுறை வருகிறது..

கதிரும் கடலும் குலவும்

மீண்டும் ஆரம்பத்தில் இருந்து மறுபடி கவிதை ஆரம்பிக்கிறது இங்கே...


இதைத்தானே மாலை என்று சொன்னீர்கள்.....
ஆரம்ப இடத்திலேயே முடிவு வருவது!!!

ஒரு கவிதைக்கு எப்பொழுது உன்னதமடைகிறது? அது அதற்குள்ளே இருக்கும் அல்லது மறைந்து கிடக்கும் உண்மைகளை அதற்கே தெரியாமல் வெளியே கொண்டுவந்து சுவைக்கும் பொழுதே.... அவரையை சாப்பிடுவது நல்லது.... அதைவிட ருசியானது அவரைக்கொட்டை! அதற்கு அவரையைப் பிரிக்கவேண்டும்!! (கவிதையும் சமையலும் ஒன்று என்று சொன்னீர்களல்லவா,, ஏதோ நம்மளால முடிஞ்சது)

கவிதை முழுக்க ”உம்” விகுதி, தாமரை அண்ணாவின் விளக்கத்தில் நம்மை “உம்” போட்டு கேட்கச் சொல்லுகிறது.. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்!!!

சாம்பவிப் பாட்டி இதைப் படித்தால் நிச்சயம் மகிழ்வார்கள்!!

தாமரை
01-11-2010, 08:29 AM
அப்பப்போ சில முந்திரக் கொட்டைகளைப் போல சில கவிதைகளில் கருத்து வெளியே தெரியும். சில இடங்களில் மாங்கொட்டைகளைப் போல் உள்ளேயும் இருக்கலாம்.. பலாக் கொட்டை போல பொருள்தெரியவே போராட வேண்டிய இடங்களிலும் இப்படி இன்னொரு கருத்து ஒழிந்துதான் இருக்கும்.

நீங்க உம், உம் என்று கேட்கிற ஆளில்லையே.. ஆ! என்று பாராட்டுகிற ஆளாச்சே..

ஏன்னா உம் + ஆ = உம்மா ஆச்சே!!!

கண்டிப்பா இப்படி ஆரோக்யமாக தமிழ் இலக்கிய உலகம் இருந்தால் தமிழ் அம்மாவின் உம்மா அத்தனைப் பேருக்குமே கிடைக்கும். :lachen001::lachen001::lachen001::lachen001:

ஆதவா
01-11-2010, 11:16 AM
அப்பப்போ சில முந்திரக் கொட்டைகளைப் போல சில கவிதைகளில் கருத்து வெளியே தெரியும். சில இடங்களில் மாங்கொட்டைகளைப் போல் உள்ளேயும் இருக்கலாம்.. பலாக் கொட்டை போல பொருள்தெரியவே போராட வேண்டிய இடங்களிலும் இப்படி இன்னொரு கருத்து ஒழிந்துதான் இருக்கும்.

நீங்க உம், உம் என்று கேட்கிற ஆளில்லையே.. ஆ! என்று பாராட்டுகிற ஆளாச்சே..

ஏன்னா உம் + ஆ = உம்மா ஆச்சே!!!

கண்டிப்பா இப்படி ஆரோக்யமாக தமிழ் இலக்கிய உலகம் இருந்தால் தமிழ் அம்மாவின் உம்மா அத்தனைப் பேருக்குமே கிடைக்கும். :lachen001::lachen001::lachen001::lachen001:

ஹாஹா.....
சிலபேர் தமிழம்மாகிட்ட சண்டை போடறதே குறின்னு இருக்காங்களே!!!
(கருத்தை ஒழிச்சுட்டீங்களே!!!)

கீதம்
07-11-2010, 11:19 PM
காதல், திருமணம், குடும்பம், முதுமை, ஆன்மீகம் என்று வாழ்வியல் பொருளை என் வார்த்தைகளுக்குக் கொடுத்து வளம் பெற வைத்துவிட்டீர்கள்.

எழுதும்போது இப்படிதான் எழுதவேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. சில இடங்களில் தடுமாறினேன் என்பது உண்மை.

அரளும் இருளும் என்ற இடத்தில் நீங்கள் சொன்னது போல் அரளும் என்றால் பயப்படும் என்ற பொருள் வருவதை உணர்ந்தும் வேறு எப்படியும் எழுதத்தோன்றாமல் அதையே எழுதினேன்.

ஒரு குடியானவனின் வாழ்வைப் பிரதிபலிக்கும் வரிகள் ஒரு குடும்பஸ்தனின் வாழ்வையும் பிரதிபலிப்பதை உங்கள் வரிகள் மூலமே கண்டுகொண்டேன். அதிலும் பல இடங்களில் உங்கள் விளக்கங்களை ரசித்தேன்.

குறிப்பாக,

உதறும் பதரும் சிதறும்

குதிரும் பதறும் கதறும்

இவ்வரிகளுக்கான விளக்கம் படித்து வாய்விட்டுச் சிரித்தேன்.

மனையும் துணையும் இணையும்

இவ்வரியில் மனை, துணை இவற்றுக்கான விளக்கம் கண்டு வியந்தேன்.

ஆரம்ப வரிகள் அனைத்தையும் ஆன்மீகத்துடன் தொடர்பு படுத்தியமை கண்டு சிலிர்த்தேன்.

பல வகையிலும் என்னைப் பரந்து யோசிக்கவைத்த விளக்கங்கள்!

ஒரு வார்த்தையை, வரியை எப்படியும் பொருள் கொள்ளலாம் எனத்தெளிவித்த உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றியும், பாராட்டும் தாமரை அவர்களே.

மகாகவி காளிதாஸ் திரைப்படத்தில் வரும் போட்டி அளவுக்கு மோசம் இல்லை என்றாலும் கவிதையைப் பற்றிய என் பார்வை பதித்த வட்டம் மிகக் குறுகியது. அதை விட்டு வெளியில் அழைத்துவந்த உங்களுக்கு என் நன்றி.

தாமரை
08-11-2010, 02:55 AM
உங்கள் பார்வைக்கு

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=343473#post343473

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=343045&postcount=4

மொழிநயம் - உபயோகிக்கப் படும் வார்த்தைகளின் பொருள்நயம், வளமை, பொருத்தம், சிக்கனம்...

கவிதைகளை எழுதி முடித்த பின் எழுத்துப்பிழைகளைக் களைவது போல... மொழிநல ஆய்வும் செய்தால்.. கவிதைகளின் தரம் பன்மடங்கு உயரும்..

வளர வளர நமக்கு இந்தப் பொறுப்பும் கூடுகிறது.. வார்த்தைக் கருவூலங்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றின் மதிப்பையும் புரிந்து கொள்ளுங்கள்.. அதற்கு செய்யுள்களை விட விளக்க உரைகளை ஆழமாகப் படித்து, இன்னும் என்ன இருக்கிறது என ஆராயத் தொடங்குங்கள். கவிதைகளாக வாழ்ந்து பாருங்கள் மனதில்..


தினசரி தியானம் இந்த வகையில் எனக்குக் கிடைத்த நல்ல வரப்பிரசாதம். இது போன்ற பல கவிதைகளும் அவ்வாறே..

எப்படி அறையில் இருந்த கணினி அரையில் அடங்குகிறதோ அப்படி.. வளம் வளர வளர வடிவங்கள் குறுகத் தொடங்கும்... :D:D:D:D:D

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி
குறுகத் தரித்தக் குறள்

போல

பல நூற்றாண்டுகள் உங்கள் படைப்புகள் வாழட்டும். :):):)

என்னைப் போல பலர் வந்து அவற்றை வாய்பிளந்து ஆச்சர்யமாய் ஆராயட்டும்.:):):)