PDA

View Full Version : பிரம்படி

கீதம்
27-10-2010, 03:25 AM
"அம்மு...நீ பெரியவளானதும் என்னவேலைக்குப் போவே?"

"டீ…….ச்சர் வேலைக்கு!"

"அப்படியாடி? என் செல்லத்துக்கு பாடம் நடத்துறது அவ்வளவு இஷ்டமா?"

"இல்ல பாட்டி, அப்பதானே எல்லாரையும் அடிக்கமுடியும்? எங்க மோகனா டீச்சரப் பாத்தாலே எல்லாரும் நடுங்குவோம். அதுமாதிரி எல்லாரும் என்னப் பாத்து பயப்படணும்"

"எனக்கு இப்பவே பயமா இருக்கே... அம்மு டீச்சர் வராங்க....அம்மு டீச்சர் வராங்க..."

பயந்து நடுங்குவதுபோல் திலகவதி பாவனை செய்ய மகிழ்ச்சியில் துள்ளினாள் சஞ்சிதா.

"பாட்டீ.... நான் அம்மு டீச்சர் இல்ல.... சஞ்சிதா டிச்சர்!"

சொல்லிவிட்டு, தன் பச்சரிசிப் பற்கள் தெரியச் சிரித்தாள்.

"ம்! எல்லாரும் உக்காருங்க. க்ளாஸ் ஆரம்பிச்சிடுச்சி. ஷ்ஷ்...... யாரும் சத்தம்போடக்கூடாது. சத்தம் போட்டீங்க.... ஒரே அடிதான்.”

கையிலிருந்த ஸ்கேலால் தன் குட்டி மேசையைத் தட்டினாள். சஞ்சிதாவின் வகுப்பறை, பொம்மை மாணவர்களால் நிறைந்திருந்தது. மாணவர்களில் ஒருத்தியாக திலகவதியும் அமர்ந்திருந்தாள். தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கைகட்டி வாய்ப்பொத்தியிருந்தாள்.

“சத்தம் போட மாட்டோம் டீச்சர்!"

"சரி, எல்லாரும் சொல்லுங்க. ஏ....”

"ஏ...."

"பீ"..."

"பீ...."

“சீ....”

“சீ...”

"அம்மா.... கீர வேணுமா....?"

வாசலிலிருந்து கீரைக்காரி அழைப்பு விடுக்க.... திலகவதி பேத்தியைக் கெஞ்சினாள்,

"அம்மு... கொஞ்சம் பர்மிஷன் குடுடா.... நான் போய் கீர வாங்கிட்டு வந்து பாடம் படிக்கிறேன்"

"என் பேரு அம்மு கெடையாது. சஞ்சிதா. நான் இப்ப டீச்சர். அதனால.... எக்ஸ்க்யூஸ்மீ டீச்சர்னு கேட்டுட்டு போங்க.....ஸாரி...ஸாரி.....போ....திலகவதி!"

"எக்ஸ்யூஸ்மீ டீச்சர்……தாங்க்யூ டீச்சர்."

திலகவதி விட்டால் போதுமென்று வாசல்நோக்கி ஓடினாள்.

"ஏம்மா..... மருமவ இல்லையா?"

கீரைக்காரி கேட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை. வாசுகி வந்தால் கொடுத்ததை வாய்பேசாமல் வாங்கிச்செல்வாள். இந்தம்மாள் என்றால் எல்லாவற்றிலும் சொத்தை சொள்ளை என்று சொல்லி போட்டுப் புரட்டி எடுத்துவிடும். இன்னும் நாலு தெரு போகவேண்டிய கீரை. அதற்குள் கைபட்டு வாடி வதங்கிவிடும்.

"ஏண்டியம்மா.... மருமவ கையாலதான் போணி பண்ணுவீங்களோ?"

"அட... போணியெல்லாம் ஆயிப்போச்சிம்மா... சும்மா கேட்டேன்."

"பாரு, மணி பத்தாவுது! மகாராணி இப்பதான் குளிக்கப்போயிருக்கா. வீடான வீட்டுல ஒரு கட்டுக்கழுத்தி குளிக்கிற நேரத்தப் பாரு.... அந்தக்காலத்தில என்னை நாலு மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டு பச்சத்தண்ணியில குளிக்கச் சொல்லுவாங்க என் மாமியாரு. இவ எல்லாம் என் மாமியார்கிட்ட இருந்திருக்கணும், இவ பண்ற கூத்துக்கு நாறடிச்சிடுவாங்க."

‘ம்க்கூம், இங்க மட்டும் என்ன வாழுதாம். மருமக குளிக்கிறத ஊருக்கே தம்பட்டம் போட்டு நாறடிக்கலையாக்கும்... இது என்னமோ யோக்கியம் மாதிரி பேசுது....' முணுமுணுத்துக்கொண்டாள் கீரைக்காரி.

"என்னடி முணுமுணுப்பு?"

"ஒண்ணுமில்லம்மா.... காசு தரியா....கணக்கு வச்சிக்கவா?"

"கணக்கு வச்சிக்கோ.... அடுத்தவாரம் தீத்திடறேன்"

கையில் இரண்டு கட்டு முளைக்கீரையுடன் உள்ளே வந்தவளை சஞ்சிதா பிடித்துக்கொண்டாள்.

"பாட்டீ... வாங்க... வெளையாடலாம்"

"பாட்டி இந்தக் கீரையை ஆஞ்சு வச்சிட்டு வரேன், அதுவரைக்கும் நீ வேற வெளையாட்டு வெளையாடுவியாம். என் செல்லமில்ல....."

"முடியாது... வந்துதான் ஆவணும்..."

"ஏன்டி உனக்கு இன்னைக்கு லீவு வுட்டுத் தொலைச்சாங்க?"

"உங்க கூட வெளையாடதான்." நமட்டுச்சிரிப்புடன் சொன்னவளைப் பார்க்க திலகவதிக்கும் சிரிப்பு வந்தது.

"என் செல்லக்குட்டி பாட்டி சொன்னாக் கேக்குமாம். பாட்டிக்கு இப்ப இன்டெர்வல். கொஞ்சநேரம் கழிச்சி பாட்டி வந்து கிளாஸ்ல உக்காந்துக்குவேன். அதுவரைக்கும் டீச்சர் வேற வேல பாப்பீங்களாம். சரியா?"

"சரி..." ஏமாற்றத்தை முகம் அப்பட்டமாய்க் காட்ட அங்கிருந்து அரைமனதுடன் போனாள்.

"நான் வந்திட்டேன், அத்தே.... நீங்க போங்க.... நான் பாத்துக்கறேன்..."

குளித்துமுடித்து புதுமலரென வந்துநின்ற வாசுகியைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி,

"இந்தப்பொடவ எப்ப எடுத்தது?" என்றாள்.

"போனதடவ அம்மாவீட்டுக்குப் போனப்ப அம்மா எடுத்துக்கொடுத்தாங்கன்னு சொல்லி ரெண்டு பொடவ காட்டினேனே, அத்தே.... ஞாபகம் இல்ல... அதில ஒண்ணு இது!"

"என்னமோ சொல்ற! எதக் கேட்டாலும் அம்மா எடுத்துக்குடுத்தது.... அப்பா எடுத்துக்குடுத்ததுங்கறே... உண்மயிலேயே அதையெல்லாம் அவுங்கதான் எடுத்துக்குடுத்தாங்களாங்குறது அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்."

வாசுகிக்கு உதடு துடித்தது.

‘சரியான அம்மாகோண்டுவைப் பெத்துவச்சிகிட்டு சந்தேகத்தப்பாரேன். இதுவரைக்கும் எனக்கு அவரா ஒரு புடவ எடுத்துக்கொடுத்திருக்காரா? தீபாவளி பொங்கல்னா கூட இவங்கதான் செலக்ட் பண்ணுவாங்க. இந்த லட்சணத்தில பிள்ளை ரகசியமா எடுத்துக்கொடுத்திருப்பானோன்னு சந்தேகம் வேற... நல்ல ஆளுதான்’

மனதுக்குள் குமைந்தபடியே சமையலைப் பார்க்கப்போனாள்.

***********************************

"என்னடி ரசம் இது? உப்புசப்பு இல்லாம இருக்கு"

"நல்லாதான அத்தே இருக்கு? பாப்பாவுக்கு பிசையும்போது ஒருவாய் போட்டுப்பாத்தேனே! சரியாதானே இருந்துது?"

"நல்லா வாயாடு. எட்டு வருஷம் ஆயிப்போச்சு, இன்னும் ஒரு ரசம் வக்கத் துப்பில்ல. என்னத்ததான் உங்கம்மா உனக்கு கத்துக்குடுத்தாங்களோ....."

வாசுகி எதுவும் சொல்லாமல் மெளனமாய் நின்றாள். என்ன சொல்வது? அவர்கள் வாய்க்கு நன்றாக இல்லைபோலிருக்கிறது. அதற்கு தான் என்ன பண்ணமுடியும்?

மருமகளின் மெளனம் தன்னை அலட்சியப்படுத்துவதுபோல் தோன்ற, திலகவதிக்கு கோபம் இன்னும் ஏறியது.

"ஊமக்கோட்டன் மாதிரி நில்லு. வாயத்தொறந்து பதில் பேசுடி"

"என்னை என்ன சொல்லச் சொல்றீங்க? பதில் சொன்னா வாயாடுறேன்னு சொல்றீங்க. பதில் சொல்லாம இருந்தா திமிரா இருக்கேங்கறீங்க. எதைச் செய்தாலும் குத்தம்னா நான் என்னதான் பண்ண?" கழிவிரக்கத்தால் கண்களில் சட்டென்று குளம் கட்டியது.

"அம்மா தாயே...இப்ப உன்ன என்ன பண்ணிட்டேன்? இப்படி ஆர்ப்பாட்டம் பண்றே? நீயெல்லாம் என் மாமியார்கிட்ட இருக்கணும். புள்ளத்தாச்சியா இருக்கும்போது ஒரு தடவ வத்தக்கொழம்பு வச்சேன். புளி கொஞ்சம் கூடுதலாப் போட்டுட்டேன் போல. என் மாமியாருக்கு வந்துச்சே கோவம். ஏண்டி உனக்கு மசக்கையா... வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் மசக்கையா? புளிப்பு வாயில வக்கமுடியலன்னு சொல்லி அப்படியே சட்டியோட கீழ கவுத்தாங்கபாரு... என்னால் ஜென்மத்துக்கும் மறக்கமுடியாது. அன்னைக்கெல்லாம் எப்படி கதறிக் கதறி அழுதேன் தெரியுமா? உன்னையெல்லாம் அப்படியாடி படுத்தறேன்? ஒரு ரசம் வக்கத் தெரியலையேன்னு கேட்டா கண்ணீர் வடிச்சி மாய்மாலம் பண்றே?"

"பாட்டீ, ஏன் பாட்டி அம்மாவ அழவக்கிறீங்க?" இடுப்பில் கைவைத்தபடி பெரியமனுஷிபோல் கேள்வி கேட்கும் சஞ்சிதாவைப் பார்க்கப் பற்றிக்கொண்டு வந்தது.

"ஆமாம்டி, ஆமாம், உங்கம்மாவ நான் தான் அழவுடுறேன். முணுக்குன்னா கண்ணால கொட்டுறா. யாராச்சும் பாத்தாங்கன்னா நான் தான் இவள படாதபாடு படுத்தறேன்னு நினைப்பாங்க. நீ ஒருத்தி சாட்சி போதும். வர சனிக்கெழமை உங்கப்பன் வருவான், அவன்கிட்டயும் சொல்லு... பாட்டி படு பாதகி, ராட்சசி, அம்மாவப் போட்டு படுத்தறான்னு. அவனும் என்ன வீட்ட விட்டு தொரத்திடுவான். நீங்க எல்லாரும் சந்தோஷமா இருங்க."

"இப்ப எதுக்கு குழந்தைகிட்ட இந்தப்பேச்செல்லாம் பேசுறீங்க? அப்படியே நானோ குழந்தையோ உங்களைப்பத்தி எதுவும் சொன்னாலும் உங்க பிள்ள என்னைதான் திட்டுவாரு, அம்மாகிட்ட ஒழுங்கா நடந்துக்க தெரியலைன்னு. அவர் வரதே வாரத்தில் ரெண்டுநாள். அதிலயும் பிரச்சனை அது இதுன்னா இந்தப்பக்கமே வரமாட்டார்."

"புரிஞ்சி நடந்தா சரி."

"பாட்டி...வாங்க...டீச்சர் விளையாட்டு விளையாடலாம்."

"கெடக்கிறது கெடக்கட்டும், கெழவனத் தூக்கி மனயில வையிங்கறமாதிரி இவ ஒருத்தி....! போடி...போய் சொப்புவச்சி வெளயாடு. அப்புறமா டீச்சர் வெளயாட்டு வெளயாடலாம்."

"போங்க பாட்டி... நீங்க நல்லா பொய் சொல்லுறீங்க... இனிமே உங்க கூட வெளயாடவே மாட்டேன்."

************************************

மறுநாள் மாலை அழுதுவீங்கிய கண்களுடன் வேனை விட்டிறங்கிய சஞ்சிதாவைப் பார்த்து அதிர்ந்துபோயினர் திலகவதியும், வாசுகியும்.

"என்னம்மா....என்னாச்சு?" பதறினாள் திலகவதி.

"பாட்டீ..... நான் பேசவே இல்ல பாட்டி, மத்தவங்க பேசினதுக்கு எனக்கும் சேத்து அடி கொடுத்திட்டாங்க, மோகனா டீச்சர்."

"நான் பேசலைன்னு நீ சொல்லவேண்டியதுதானடா..."

"அதச் சொன்னதுக்குதான் இன்னும் ஒரு அடி கூட போட்டாங்க..."

சிவந்த ரோஜாவின் இதழ்வடியும் பனிநீரைப்போல் சஞ்சிதாவின் கன்னத்தில் நீர் முத்துகள் உருண்டு சிதறின.

"ஏ....வாசுகி, என்ன சும்மா பாத்துகிட்டு நிக்கிற... ஸ்கூல் ஹெச். எம்முக்கு போனப் போடு.... அந்த ராட்சசிய உண்டு இல்லன்னு பண்ணிடறேன்"

"வேண்டாம் அத்தே... போன்ல பேசினா பிரச்சனையாயிடும். நாளைக்கு நானே நேரில் போய்ப் பாத்துப் பேசுறேன். எந்த இடத்திலடா அடிச்சாங்க?"

சஞ்சிதா சாக்ஸை அவிழ்த்துக் காண்பிக்க, கெண்டைக்காலில் சிவந்து தடித்த வரிகள் மோகனா டீச்சரின் ஆக்ரோஷத்தை பறைசாற்றின.

வாசுகி மருந்திட்டாள். திலகவதி ஆத்திரம் அடங்காதவளாக, அந்த மோகனாங்கியோட கையை முறிச்சி அடுப்பில வக்க... அவ வீட்டில இடிவிழ... என்று சரமாரியாக சபித்துக்கொண்டிருந்தாள்.

"பாட்டீ..... நான்…… டீச்சராயீ....." முடிக்குமுன் திலகவதி இடைமறித்துச் சொன்னாள்.

"நீ டீச்சராயீ…….. எல்லாரையும் நீயும் நல்லா அடிக்கலாம், கவலப்படாதடா கண்ணு..."

"இல்ல பாட்டீ.... நான் டீச்சராயி யாரையும் அடிக்கமாட்டேன் பாட்டி. எனக்கு ஒருத்தங்க கஷ்டம் குடுத்தாங்கன்னா அதே கஷ்டத்த நானும் மத்தவங்களுக்கு குடுக்கலாமா? அது தப்புதானே பாட்டீ? நான் கட்டாயம் டீச்சராவேன், ஆனா எங்க மோகனா டீச்சர் மாதிரியில்ல, பக்கத்து கிளாஸ் கிரிஜா டீச்சர் மாதிரி. யாருமே அவங்களப் பாத்து பயப்படமாட்டாங்க. எல்லாருக்கும் அவங்கள ரொம்பப்பிடிக்கும். எங்க டீச்சர் பண்ணின தப்ப நான் என் ஸ்டூடன்ஸுக்கு பண்ணவே மாட்டேன். நான் சொல்றது சரிதானே பாட்டி?"

பதில் சொல்லமுடியாமல் திணறிய மாமியாரைப் பரிதாபமாகவும், பாட்டியிடமிருந்து பதில் வராது எனத்தெரியாமல் ஆர்வத்துடன் காத்திருக்கும் தன் சின்னஞ்சிறு மகளைப் பெருமையாகவும் பார்த்துப் புன்னகைத்தாள் வாசுகி.

ஆதவா
27-10-2010, 07:29 AM
ஒரு குழந்தை.... அறிவுக் குழந்தை... இப்படி பேசுமா என்று யோசித்தாலும், ஏன் இப்படியும் பேசாது என்றும் எடுத்துக்கொண்டால்.....

அம்முவைப் போன்று சிறுவயதில் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு ”படி, படி... இல்லாட்டி அடி... அடி...” என்று தரையைத் தட்டியது ஞாபகத்திற்கு வருகிறது. இப்போதும் கூட பல குழந்தைகள் தங்களை அச்சமயத்தில் ஆசிரியராக்கி மாணவர்களை அடிக்கப் பார்க்கின்றன. ஆசிரியர்கள் குழந்தைகளின் மனதில் எப்படியெல்லாம் தங்கிவிடுகிறார்கள் என்பது குழந்தை கடைசியில் சொல்லும் வரிகளில் தெரிகிறது. மாமியார் என்பவள் சற்று ரஃப் ஆக இருக்கிறாள் என்றாலும் குழந்தையின் இந்த பேச்சுக்கு ”உங்கம்மா மாதிரியே வாய் உனக்கு” என்று சொல்லிவிட்டு போய்விடக்கூடும். அது சமாளிஃபிகேஷன். பிறகு சிந்திப்பாள். அல்லது உடனேயே சிந்திப்பதாக இருந்தாலும் மாமியார் தன் வழக்கத்திலிருந்து துளியும் மாறமாட்டாள்!! ஊப்ஸ்... பாவம் வள்ளுவன் காதலி!!

கதையின் போக்கை உரையாடல்களாலே நிர்மாணிக்கின்றன. ஒன்றிரண்டு உரையாடல்களற்ற வரிகளையும் உரையாடல்களாகவே மாற்றியிருக்கலாம். பாதி கதை வரையிலும் புதுமையாகவே இருந்தது... அதன் பின்னர் முடிவு வரையிலும் எதிர்பார்த்து ஏமாந்தேன். கதையின் முடிவு பாதி வழியிலேயே தெரிந்துவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம்!!

அந்த கடைசி பத்தி..... பாட்டியிடமிருந்து குழந்தை பதில் எதிர்பார்த்திருக்கவேண்டும்!!!

நல்ல கதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி!

பூமகள்
28-10-2010, 06:20 AM
எதார்த்தம் நிறைந்து வழிகிறது மாமியார் மருமகள் பேச்சு வார்த்தையில்..

நூற்றில் தொன்ணூறு சதத்துக்கும் மேல் "அம்மாகோண்டு"-வாகத் தான் இருக்கிறார்கள் மணமான மகன்கள்.. வயதான காலத்தில் தன் பிடி விடுத்தால் துரத்தப்படுவோமோ என்ற பயம் காரணமாக வரும் பிரச்சனைகளே அதிகம்..

சின்ன விசயங்களுக்கெல்லாம் என்னைப் பாக்க மாட்டீங்க.. துரத்திடுவீங்க போன்ற பாதுகாப்பின்மை பெரும் பிரச்சனைகளைக் கிளப்பி விடுகிறது வீட்டில்..

தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று சொல்லி வைத்தவர்கள்.. தான் பெற்ற துன்பம் என்ற சொல்லவே இல்லை..

ஆனால், மாமியார்களுக்கு மட்டும் தான் வாழ்ந்த வாழ்க்கையை ஒவ்வொரு அணுவிலும் தன் மருமகள் வாழ்க்கையோடு ஒப்பீடு நடத்தி வெகுண்டெழுவது நடந்த வண்ணமே உள்ளது.. இது காரில் செல்பவரைப் பார்த்து பைக்கில் செல்பவர் கொள்ளும் பொறாமைத் தீ போன்றதா அல்லது தன்னை விட தன் மருமகள் தன் வீட்டில் பெயர் பெற்று எல்லாராலும் பாராட்டப்படக் கூடாது என்பதாலா...

கதையில் நான் கண்ட உட்க்கருத்துகள் பல. இறுதியில் குழந்தையின் வாக்கு பிரம்படியானாலும்... வலித்தால் தானே திருத்தம் வரும்.. வலிக்குமா என்பது கேள்விக் குறியே..

இன்னா செய்தாரை ஒருத்தல் அவன்நாண
நன்னயம் செய்து விடல்..

செய்வார்களா?? செய்பவர்களும் நம்மைச் சுற்றி இருக்கவே செய்கிறார்கள்.

பாராட்டுகள் கீதமக்கா... குழந்தையின் இறுதி வசனத்தில் இன்னும் கவனம் செதுக்கியிருக்கலாம்.. உங்க டச் அங்கே மிஸ்ஸிங்.. அவசரமாக எழுதிப் பதித்துவிட்டீர்களோ??

தாமரை
28-10-2010, 06:33 AM
அக்கா உங்க கதையில் மாமியாருக்குச் சப்போர்ட்டா சில விஷயங்களை யோசிக்கிறேன்.

பார்த்தீங்கன்னா, குழந்தைக்கு உதாரணமா ஒரு நல்ல டீச்சர், ஒரு அடிக்கிற டீச்சர் இருக்காங்க.

ஆனா மாமியாருக்கு உதாரணமா ஒரு நல்ல மாமியார் ஒரு கண்டிப்பான மாமியார்னு இரண்டு பேர் இல்லையே.

விக்ரம் (நம்ம மன்ற உறுப்பினர் - நடிகர் இல்லை) தாயா தாரமா கணவன் நிலை எப்படி இருக்க வேண்டும் என்ற திரியில் சொல்லி இருப்பாரு..

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=423562&postcount=20

நல்ல மருமகள்கள் இருக்கிறார்கள்
உ.ம் எங்கம்மாகிட்ட கேட்டா என் சகோதரிகள் (அவங்க மாமியாருக்கு) நல்ல மருமகள்கள் என்றும் தனக்கு வாய்ச்சது சரியில்லைனு சொல்வாங்க.

நல்ல மாமியார்களும் இருக்கிறார்கள்

உ.ம் என் சகோதரிகள்கிட்ட கேட்டா என் அம்மா (என் மனைவிக்கு மாமியார்) நல்ல மாமியாருக்கு உதாரணம் என்பார்கள், தனக்கு வாய்ச்ச மாமியார் தான் அரக்கி என்பார்கள்.

ஆனால் அந்த மாமியார்களும் மருமகள்களும் அப்படித்தானே. அதனால் மனதுக்கு இதம் தருகிற உதாரணங்களை உண்டாக்கி வளர்த்துக் கொண்டே போவதில்தான் சூட்சமம் இருக்கு...

தன்னுயிர்க் கின்னா தானறிவான் என்கொலோ
மண்ணுயிர்க் கின்னா செயல்.

வள்ளுவர் சொன்னதில் கொஞ்சம் தப்பு செய்திட்டார், ன் க்குப் பதிலா ர் போட்டிருந்தா ஒரு வேளை எடுத்துச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றும்.

கதையை முடிக்க சிம்பிளான வழி பாட்டிகிட்ட இந்தக் குறளை சொல்லிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கலாம். அந்தச் சின்னக் குழந்தை பெரிய வசனத்தைப் பேசினது கொஞ்சம் நாடகத்தனமா மாறிடுச்சி..

சீக்கிரம் மாமியாராகி உதாரணம் படையுங்கள்... :D:D:D:D

பூமகள்
28-10-2010, 06:39 AM
"அம்மாக்கோண்டு"களின் தலைவர் வந்து மாமியாருக்கு(அம்மா) சப்போர்ட் செய்ஞ்சிட்டாங்க பாருங்க.. :D:D

அம்மா என நினைக்க, அழைக்க, நடத்த நாங்க ரெடி..:)
பொண்ணாக நினைக்க மாமியார்கள் ரெடியா?? :redface:

தாமரை
28-10-2010, 08:19 AM
"அம்மாக்கோண்டு"களின் தலைவர் வந்து மாமியாருக்கு(அம்மா) சப்போர்ட் செய்ஞ்சிட்டாங்க பாருங்க.. :D:D

அம்மா என நினைக்க, அழைக்க, நடத்த நாங்க ரெடி..:)
பொண்ணாக நினைக்க மாமியார்கள் ரெடியா?? :redface:

இரண்டுமே பெண்கள் சமாச்சாரம்.. :icon_b:

govindh
28-10-2010, 08:49 AM
பிரம்படி....
பிரமாதமான அடி...

பாராட்டுக்கள்.

பென்ஸ்
28-10-2010, 02:56 PM
கீதம்... நல்ல அடி...
என்ன பன்ன பாருங்க மனது ஒரு காம்பிளக்ஸ் சிஸ்டம்... நாம பார்த்து கேட்டு அனுபவித்து வரும் விடயங்கள் நமது செயலை தீர்மானிக்கின்றன... அதில் பாருங்க சக்த்தியும் கட்டுபாடும் நமக்கு இருக்க வேண்டும் என்று எல்லா ஜீவஙளும் விருப்பபடும், அப்படி இருக்கிறவங்களையும் நமக்கு பிடிக்கும்... அந்த குழந்தைக்கு கூட... மோகனா மாதிரி ஆகனும்... அவர் அடித்து காயபடுத்தியதால்... ஒரு வெறுப்பு.... ஆனால் கிரிஜா டீச்சர் கண்டிப்பு இல்லாமல் இருந்தாலும் இப்போது ஒப்பிடும் போது.. அவர் நல்லவர்....

சக்த்தியும் கட்டுபாடும்... மாமியார் மருமகள் மத்தியில்... இதில் பாவங்கள் பூ சொல்லும் "அம்மாக்கோண்டு"கள்... இவர்கள் கம்பை கையில் எடுத்தால் , இருவருக்கும் கெட்டவர்களாக இருந்து கொண்டு மன நிம்மதியோடு இருக்க வாய்ப்பிருக்கிறது.... அப்படி இல்லாத போது சக்த்தியும் கட்டுபாடும் கொண்டு வர இவர்கள் அடுத்தவர்களின் மென்மையை பயன் படுத்துவாற்கள்... அதன் காப்பாற்றி கொள்ல தன் நியாயங்களை முன் வைப்பார்கள்....

இந்த சிக்கலான சீழ்நிலைகளை அழகாக கதையில் சொல்லி .. அழகு... அப்படியே மாமியார் தன் தவறை உணர்ந்து வருந்தியதை பார்த்து புன்னகைக்கும் மருகளிடம் இருக்கும் சந்தோசம்... அப்படியே உங்கள் கைகள் வழியாக கதையில்... நீங்களும் ஒரு மருமகளா???

பூமகள்
28-10-2010, 03:03 PM
பென்ஸ் அண்ணா,

கீதமக்கா.. ஒருவேளை, மருமகளாக இப்போது இருந்தாலும் கூட வருங்கால மாமியார்கள் தானே??

எல்லா பெண்களும் அந்த நிலையைத்(மருமகள்) தாண்டாமல் இந்த நிலையை(மாமியார்) அடைய முடியாது அல்லவா??

எழுத்துப் பிழையில் மாமியாரையும் மருமகளையும் நல்லாவே பயன்படுத்தி வாறிவிட்டீர்களண்ணா...
மென்மையை பயன் படுத்துவாற்கள்.

ஆன்டனி ஜானி
28-10-2010, 03:27 PM
:icon_ush: னாம் மற்றவர்களை அடிபோம் அதே அடி நம்மை நாம் அடிது பார்த்தால் அந்த அடியின் வலி எவ்வளவு என்று நாம் உணர முடிம் :icon_ush:

சிவா.ஜி
28-10-2010, 04:46 PM
பெரும்பாலான மாமியார்கள் திலகவதிகளைப் போலிருந்தாலும், சில மாமியார்கள்....அம்முவைப்போல...தனக்கு நேர்ந்தது தன் மருமகளுக்கு நேரக்கூடாது என நினைத்து அதன்படியே இருக்கவும் செய்கிறார்கள்.
இப்பல்லாம் பெரும்பாலும்...மாமியார் மருமகள் உறவு நல்லாவே இருக்கிறமாதிரிதான் தோணுது.

கதை நல்லாருக்கும்மா. உங்க பலமே எந்தப் பாத்திரத்தைக் கையாண்டாலும்..அதற்கேற்ற எதார்த்த உரையாடல்களை தருவதுதான். இந்தக் கதையிலும் அது தெரிகிறது.

சின்னக் குழந்தையை வெச்சுக் கதையை முடிக்க நினைக்கும்போது...இப்படி பெரியமனுஷிப் பேச்சை தவிர்க்க முடிவதில்லை. கே. பாலசந்தர் படங்கள்ல நிறைய அப்படித்தான் இருக்கும்.

வாழ்த்துக்கள்ம்மா.

கீதம்
29-10-2010, 01:02 AM
ஒரு குழந்தை.... அறிவுக் குழந்தை... இப்படி பேசுமா என்று யோசித்தாலும், ஏன் இப்படியும் பேசாது என்றும் எடுத்துக்கொண்டால்.....

கதையின் போக்கை உரையாடல்களாலே நிர்மாணிக்கின்றன. ஒன்றிரண்டு உரையாடல்களற்ற வரிகளையும் உரையாடல்களாகவே மாற்றியிருக்கலாம். பாதி கதை வரையிலும் புதுமையாகவே இருந்தது... அதன் பின்னர் முடிவு வரையிலும் எதிர்பார்த்து ஏமாந்தேன். கதையின் முடிவு பாதி வழியிலேயே தெரிந்துவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம்!!

அந்த கடைசி பத்தி..... பாட்டியிடமிருந்து குழந்தை பதில் எதிர்பார்த்திருக்கவேண்டும்!!!

நல்ல கதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி!

இந்தக்காலக்குழந்தைகள் நன்றாகவே பேசுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே அம்மு பாட்டியிடம் அப்படி சொல்வதாக எழுதியிருந்தேன்.

விமர்சனத்துக்கு நன்றி ஆதவா.

கீதம்
29-10-2010, 01:08 AM
எதார்த்தம் நிறைந்து வழிகிறது மாமியார் மருமகள் பேச்சு வார்த்தையில்..

நூற்றில் தொன்ணூறு சதத்துக்கும் மேல் "அம்மாகோண்டு"-வாகத் தான் இருக்கிறார்கள் மணமான மகன்கள்.. வயதான காலத்தில் தன் பிடி விடுத்தால் துரத்தப்படுவோமோ என்ற பயம் காரணமாக வரும் பிரச்சனைகளே அதிகம்..

சின்ன விசயங்களுக்கெல்லாம் என்னைப் பாக்க மாட்டீங்க.. துரத்திடுவீங்க போன்ற பாதுகாப்பின்மை பெரும் பிரச்சனைகளைக் கிளப்பி விடுகிறது வீட்டில்..

தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று சொல்லி வைத்தவர்கள்.. தான் பெற்ற துன்பம் என்ற சொல்லவே இல்லை..

ஆனால், மாமியார்களுக்கு மட்டும் தான் வாழ்ந்த வாழ்க்கையை ஒவ்வொரு அணுவிலும் தன் மருமகள் வாழ்க்கையோடு ஒப்பீடு நடத்தி வெகுண்டெழுவது நடந்த வண்ணமே உள்ளது.. இது காரில் செல்பவரைப் பார்த்து பைக்கில் செல்பவர் கொள்ளும் பொறாமைத் தீ போன்றதா அல்லது தன்னை விட தன் மருமகள் தன் வீட்டில் பெயர் பெற்று எல்லாராலும் பாராட்டப்படக் கூடாது என்பதாலா...

கதையில் நான் கண்ட உட்க்கருத்துகள் பல. இறுதியில் குழந்தையின் வாக்கு பிரம்படியானாலும்... வலித்தால் தானே திருத்தம் வரும்.. வலிக்குமா என்பது கேள்விக் குறியே..

இன்னா செய்தாரை ஒருத்தல் அவன்நாண
நன்னயம் செய்து விடல்..

செய்வார்களா?? செய்பவர்களும் நம்மைச் சுற்றி இருக்கவே செய்கிறார்கள்.

பாராட்டுகள் கீதமக்கா... குழந்தையின் இறுதி வசனத்தில் இன்னும் கவனம் செதுக்கியிருக்கலாம்.. உங்க டச் அங்கே மிஸ்ஸிங்.. அவசரமாக எழுதிப் பதித்துவிட்டீர்களோ??

இந்த மாமியார் மருமகள் பிரச்சனை காலம்காலமாக பல வீடுகளில் நடப்பது. இதை ஒரு கதையில் மாற்றிவிட முடியாது என்பதை நாம் அனைவருமே அறிவோம். ஆனால் வளரும் தலைமுறையாவது அந்த மனப்போக்கிலிருந்து விடுபடவேண்டும் என்ற ஆதங்கம் இருந்தது. அதுதான் அம்முவின் பாத்திரம். திலகவதி திருந்தப்போவதில்லை. ஆனால் இன்றைக்கு மருமகளாய் இருக்கும் வாசுகி நாளை இதே தவறை செய்யாமல் இருக்க யோசிக்கலாம் அல்லவா?

குழந்தை என்பதால் அதிக அழுத்தமான வசனம் கொடுக்கவில்லை. மற்றபடி வெகுநாட்களாய் மனதில் ஊறிய கருதான் இது.

பாராட்டுக்கு நன்றி பூமகள்.

கீதம்
29-10-2010, 01:18 AM
அக்கா உங்க கதையில் மாமியாருக்குச் சப்போர்ட்டா சில விஷயங்களை யோசிக்கிறேன்.

பார்த்தீங்கன்னா, குழந்தைக்கு உதாரணமா ஒரு நல்ல டீச்சர், ஒரு அடிக்கிற டீச்சர் இருக்காங்க.

ஆனா மாமியாருக்கு உதாரணமா ஒரு நல்ல மாமியார் ஒரு கண்டிப்பான மாமியார்னு இரண்டு பேர் இல்லையே.

விக்ரம் (நம்ம மன்ற உறுப்பினர் - நடிகர் இல்லை) தாயா தாரமா கணவன் நிலை எப்படி இருக்க வேண்டும் என்ற திரியில் சொல்லி இருப்பாரு..

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=423562&postcount=20

நல்ல மருமகள்கள் இருக்கிறார்கள்
உ.ம் எங்கம்மாகிட்ட கேட்டா என் சகோதரிகள் (அவங்க மாமியாருக்கு) நல்ல மருமகள்கள் என்றும் தனக்கு வாய்ச்சது சரியில்லைனு சொல்வாங்க.

நல்ல மாமியார்களும் இருக்கிறார்கள்

உ.ம் என் சகோதரிகள்கிட்ட கேட்டா என் அம்மா (என் மனைவிக்கு மாமியார்) நல்ல மாமியாருக்கு உதாரணம் என்பார்கள், தனக்கு வாய்ச்ச மாமியார் தான் அரக்கி என்பார்கள்.

ஆனால் அந்த மாமியார்களும் மருமகள்களும் அப்படித்தானே. அதனால் மனதுக்கு இதம் தருகிற உதாரணங்களை உண்டாக்கி வளர்த்துக் கொண்டே போவதில்தான் சூட்சமம் இருக்கு...

தன்னுயிர்க் கின்னா தானறிவான் என்கொலோ
மண்ணுயிர்க் கின்னா செயல்.

வள்ளுவர் சொன்னதில் கொஞ்சம் தப்பு செய்திட்டார், ன் க்குப் பதிலா ர் போட்டிருந்தா ஒரு வேளை எடுத்துச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றும்.

கதையை முடிக்க சிம்பிளான வழி பாட்டிகிட்ட இந்தக் குறளை சொல்லிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கலாம். அந்தச் சின்னக் குழந்தை பெரிய வசனத்தைப் பேசினது கொஞ்சம் நாடகத்தனமா மாறிடுச்சி..

சீக்கிரம் மாமியாராகி உதாரணம் படையுங்கள்... :D:D:D:D

நிறையமுறை நிறையபேரால் அலசப்பட்ட பிரச்சனைதான் இது என்றபோதும் தனிப்பட்ட முறையில் நாம் ஒவ்வொருவரும் இதற்கு முயற்சி எடுத்தாலே போதுமானது என்பது என் கருத்து.

எனக்கும் என் நாத்தனார்களுக்கும் உள்ள உறவை அனைவருமே அறிவீர்கள். என் தம்பி மனைவிக்கும் எனக்குமான உறவும் அப்படியே...

என் அம்மாவை மாற்ற என்னால் முடியவில்லை. என் அம்மாவின் பக்கம் தவறு இருக்கும்பட்சத்தில் அவரது சார்பாக என் தம்பி மனைவியிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் தம்பி மனைவிக்கு ஆதரவாக அம்மாவிடம் பேசி எடுத்துரைக்கிறேன்.

நாத்தனாரை அக்காவென்று அழைத்து சகோதரிபோல் பார்க்கும் வழக்கத்தை எங்கள் வீடுகளில் பின்பற்றுகிறோம்.

அடுத்த தலைமுறையாவது இதுபோல் மாமியார் நாத்தனார் பிரச்சனைகள் இன்றி நல்லதொரு உறவுடன் வாழவேண்டும் என்று நினைக்கிறேன்.

என் மருமகளிடமும் நல்ல மாமியாராய் நடந்துகொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.:icon_b:

கீதம்
29-10-2010, 01:25 AM
பிரம்படி....
பிரமாதமான அடி...

பாராட்டுக்கள்.

நன்றி, கோவிந்த்.

வேலைப்பளுவோ? முன்புபோல் தொடர்ச்சியாய் வருவதில்லையே?

கீதம்
29-10-2010, 01:35 AM
கீதம்... நல்ல அடி...
என்ன பன்ன பாருங்க மனது ஒரு காம்பிளக்ஸ் சிஸ்டம்... நாம பார்த்து கேட்டு அனுபவித்து வரும் விடயங்கள் நமது செயலை தீர்மானிக்கின்றன... அதில் பாருங்க சக்த்தியும் கட்டுபாடும் நமக்கு இருக்க வேண்டும் என்று எல்லா ஜீவஙளும் விருப்பபடும், அப்படி இருக்கிறவங்களையும் நமக்கு பிடிக்கும்... அந்த குழந்தைக்கு கூட... மோகனா மாதிரி ஆகனும்... அவர் அடித்து காயபடுத்தியதால்... ஒரு வெறுப்பு.... ஆனால் கிரிஜா டீச்சர் கண்டிப்பு இல்லாமல் இருந்தாலும் இப்போது ஒப்பிடும் போது.. அவர் நல்லவர்....

சக்த்தியும் கட்டுபாடும்... மாமியார் மருமகள் மத்தியில்... இதில் பாவங்கள் பூ சொல்லும் "அம்மாக்கோண்டு"கள்... இவர்கள் கம்பை கையில் எடுத்தால் , இருவருக்கும் கெட்டவர்களாக இருந்து கொண்டு மன நிம்மதியோடு இருக்க வாய்ப்பிருக்கிறது.... அப்படி இல்லாத போது சக்த்தியும் கட்டுபாடும் கொண்டு வர இவர்கள் அடுத்தவர்களின் மென்மையை பயன் படுத்துவாற்கள்... அதன் காப்பாற்றி கொள்ல தன் நியாயங்களை முன் வைப்பார்கள்....

இந்த சிக்கலான சீழ்நிலைகளை அழகாக கதையில் சொல்லி .. அழகு... அப்படியே மாமியார் தன் தவறை உணர்ந்து வருந்தியதை பார்த்து புன்னகைக்கும் மருகளிடம் இருக்கும் சந்தோசம்... அப்படியே உங்கள் கைகள் வழியாக கதையில்... நீங்களும் ஒரு மருமகளா???

நான் இன்றைய மருமகள், நாளைய மாமியார்.:icon_b:

இன்றைய பொறுப்பை இனிதே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். நாளைய பொறுப்பையும் நல்லமுறையில் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உங்கள் விமர்சனப்பின்னூட்டத்துக்கு நன்றி பென்ஸ் அவர்களே.

nambi
29-10-2010, 04:57 AM
காலாங்காலமாக இல்லங்களில் நடந்து வரும் பனிப்போருக்கு மனமாற்றம் தான் தீர்வு.... எனபது போன்ற முடிவுகளுடன் கதையின் மூலம் அறிவித்திருக்கும் பாணி அருமை...

பகிர்வுக்கு நன்றி!
...................................................

ஆனால், மாமியார்களுக்கு மட்டும் தான் வாழ்ந்த வாழ்க்கையை ஒவ்வொரு அணுவிலும் தன் மருமகள் வாழ்க்கையோடு ஒப்பீடு நடத்தி வெகுண்டெழுவது நடந்த வண்ணமே உள்ளது.. இது காரில் செல்பவரைப் பார்த்து பைக்கில் செல்பவர் கொள்ளும் பொறாமைத் தீ போன்றதா அல்லது தன்னை விட தன் மருமகள் தன் வீட்டில் பெயர் பெற்று எல்லாராலும் பாராட்டப்படக் கூடாது என்பதாலா...

நடந்து போகிறவர் மிதிவண்டி ஒட்டுபவரை பார்த்து பெறாமை போய், மிதிவண்டி இருசக்கர வாகனம் ஒட்டுபவரை பார்த்து பொறாமை பட்டது போய்.... இப்போது காரில் போகிறவரை பார்த்து இப்போது இருசக்கர வாகனத்தில் போகிறவர் காட்டும் பொறாமையாக மாறியிருக்கிறது... இன்னும் இது (காரிலிருந்து) விமானம், ஹெலிகாப்டர் என்று கூட மாறும்...(மாமியார் மருமகள்....இல்லப் பிரச்சினைகளும் இப்படி பல பரிணாமங்களைத்தான் எடுத்து தொடர்ந்து இருந்து கொண்டுதான் வருகிறது...இன்னும் முடிவுற்ற பாடில்லை...)

இங்கு நான்குசக்கர வாகனம் ஒட்டுகிறவர் ''தனக்கு மட்டும் தான் சாலை என்று தானே''.....''நான் தான் அதிக வரி கட்டுகிறேன்'' என்று மார் த்ட்டி கொண்டு இருக்கின்ற ''பத்தடி'' சாலையில் ஒன்றிற்கு இணையாக பக்கவாட்டில் (இரே சமயத்தில் இருகார்கள்) வாகனம் ஒட்டிகொண்டு நடைபாதையில் செல்பவர்களுக்கும் வழிவிடாமல், மிதிவண்டி ஒட்டுகிறவர்களுக்கும் வழிவிடாமல், இருசக்கர வாகன ஒட்டுனர்களுக்கும் வழிவிடாமல் மொத்த சாலையையும் அடைத்து கொண்டு போதாக்குறைக்கு உள்ளே மியுசிக் சிஸ்டம் வைத்து பாடல்களை ரசித்து கொண்டு, எவன்? எக்கேடு கெட்டால் நமக்கென்ன? என்று போக்குவரத்து நெரிசலில் பலரை சிக்கவைத்து வேடிக்கை பார்க்கும் நான்கு சக்கர கனவான்களை (மிக அதிகமான கனவான்கள்) பார்த்து பொறாமை படாமல் என்ன? செய்வார்கள் பாவம்....?:D
(இதனால் உயிர் காக்கும் அவசர ஊர்திகள் கூட செல்ல முடிவதில்லை....காரில் போகிறவர் இந்த நிலையை அடையும் பொழுது (இந்த ஊர்தி
யில் போகும் பொழுது) தான் உணர்வார் இல்லை அவரது உறவுகள் உணரும்)

(ஒரு நான்கு சக்கர வாகனம் குறைந்த பட்சம் இரண்டு இரு சக்கரம் மற்றும் நான்கு மிதிவண்டிகள் செல்லக்கூடிய இடத்தினை ஆக்கிரமித்து கொள்கிறது...இதில் இரு நான்கு சக்கர வாகனங்கள் இணையாக சென்றால் எப்படி?:D)

இங்கே நான்கு சக்கர வாகனமாக மாமியாரும், மருமகளும், நாத்தானார், மருமகன், மகன்...என இருக்கலாம், இரு சக்கரவாகனமாக மருமகள் மாமியார்...... என இருவரும் இருக்கலாம்....அதற்கு மேலான உறவுகளாகவும் இருக்கலாம்....:D

கார் நிறுத்த இடமில்லாமல் அடுத்த வீட்டின் வாயிலருகே சகட்டுமேனிக்கு நிறுத்திவைத்து விட்டு கவலைப்படாமல் இருக்கும் இம்மாதிரி கனவான்களை பார்த்து யார் தான்? பொறாமை படமாட்டார்கள். அடுத்தவர் பற்றி கவலைப்படுபவராயிருந்தால் காரை நிறுத்த இடம் பார்த்துவிட்டுதானே காரை வாங்கியிருக்கவேண்டும். வீடு எங்கோ? இருக்கும்..... கார் நிறுத்துவது எங்கேயோ? இருக்கும்.

(அதுவும் ஒரு வீட்டில் நான்கு பேருக்கும் நான்கு கார்கள் அதுவும் நிறுத்துவதற்கு இடமில்லாமல்..... ஒரு காரிலேயே நான்கு பேர் போகமுடியும்)... நடந்து செல்வதற்கே வழிவிடாமல் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வது,..... குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது எதிரே வரும் வாகனம் வருவது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாகி குழந்தைகள் உழிரிழக்கின்ற அளவுக்கு நிறுத்துவது, ( விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது).....

..... அதுவும் இப்படி வீதி வளைவில் நிறுத்திவிட்டு உயிர்ச்சேதம் ஆகின்ற அளவுக்கு சாலையை மறைத்து கொண்டு வாகனத்தை நிறுத்தியிருக்கும் மனிதநேயமற்ற கனவான்களை பற்றி பொறாமை படாமல் என்ன செய்வது? வேறொன்று படவேண்டும் ஆனால் அவர்களுக்கு பொறாமைத்தானேப் படுகிறது.:D அதைத்தவிர வேறென்ன செய்ய முடிகிறது அவர்களால்...?:D

இதைக்குறிப்பிட்டவுடன் எனக்கு இவைகளை வைத்து ஒப்பிடவேண்டும் என்று தோன்றியது. இரண்டுமே அன்றாடம் காணுகின்ற அவலங்கள் அல்லவா?

Akila.R.D
29-10-2010, 04:51 PM
கதையை படித்ததும் சின்ன வயசுல கையில குச்சி வெச்சுட்டு பக்கத்து வீட்டு குழந்தைங்களை மிரட்டுனதுதான் நினைவுக்கு வருது...

சஞ்ஜனா ரொம்ப புத்திசாலி பொண்ணா இருக்கா...

நல்லா இருக்கு அக்கா....
நீங்க எத்தனை கதை எழுதுனாலும் படிக்க காத்துட்டு இருக்கோம்..

Ravee
30-10-2010, 01:56 PM
வழக்கமான அக்காவின் சரளமான நடை , இதைதான் சொல்லப்போகிறோம் என்று தெளிவாக கதையை கொண்டு போய் இருக்கிறீர்கள். என்ன எல்லோரும் வீடுகளில் பார்க்கும் பிரச்சனை என்பதால் முடிவை கணித்து இருப்பார்கள் .... ஆனால் மாமியார் மனம் மாறினார் என்பது தமிழ் சினிமா முடிவு.... ம்ம் பேத்தியே பாட்டியாகும் போதும் இந்த வழக்கம் தொடரத்தான் செய்கிறது அக்கா .... வேலைக்கு போகும் மாமியார்கள்களிடம் கொஞ்சம் மாற்றம் இருக்கும். வீட்டிலேயே இருக்கும் மாமியார்கள் உரிமை பிரச்சனை எழுப்பத்தான் செய்வார்கள்.....:lachen001:

அமரன்
30-10-2010, 08:30 PM
அட போங்கப்பா.. இப்படி எழுதி எழுதியே எண்ணெயை ஊற்றிக்கொண்டிருக்கிறோம்.. என்று அவ்வவ்வப்போது சலிப்புத் தட்டும். ஆனாலும் எழுதியே ஆகனும் என்று கட்டாயம் கதவைத் தட்டும்.

அந்தக்காலத்தில் அப்படி இருந்தார்கள், இந்தக் காலத்தில் எப்படி இருக்கிறோம் எனும்படியாக ஏங்க வைக்கும் ஆக்கங்களே ஆக்கங்களை ஆக்கும்.

அக்கா இனிமேல் அப்படியான ஆக்கங்களை ஆக்குங்கள்.

மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏற்படும் சண்டை தாய்க்கும் மகளுக்கும் ஏற்படுவதில்லை.

யாரோ ஒருவர் வைச்ச மா நமக்குப் பழம் தருவதைப் போல நாம் கட்டும் மணி நாளைக்கு ஆலயத்தில் ஒலிக்கட்டுமே..

கீதம்
02-11-2010, 10:13 PM
காலாங்காலமாக இல்லங்களில் நடந்து வரும் பனிப்போருக்கு மனமாற்றம் தான் தீர்வு.... எனபது போன்ற முடிவுகளுடன் கதையின் மூலம் அறிவித்திருக்கும் பாணி அருமை...

பகிர்வுக்கு நன்றி!
...................................................

நன்றி நம்பி அவர்களே!

இருசக்கர, நாற்சக்கர வாகனங்களின் சாலை ஆக்கிரமிப்பு பற்றிய விளக்கம் யோசிக்கவைத்தது.

கீதம்
02-11-2010, 10:15 PM
கதையை படித்ததும் சின்ன வயசுல கையில குச்சி வெச்சுட்டு பக்கத்து வீட்டு குழந்தைங்களை மிரட்டுனதுதான் நினைவுக்கு வருது...

சஞ்ஜனா ரொம்ப புத்திசாலி பொண்ணா இருக்கா...

நல்லா இருக்கு அக்கா....
நீங்க எத்தனை கதை எழுதுனாலும் படிக்க காத்துட்டு இருக்கோம்..

நன்றி அகிலா. உங்களைப்போன்றவர்கள் தரும் ஊக்கப் பின்னூட்டமே அடுத்த கதை எழுதும் ஆர்வத்துக்கு முன்னூட்டம். :icon_b:

கீதம்
02-11-2010, 10:23 PM
வழக்கமான அக்காவின் சரளமான நடை , இதைதான் சொல்லப்போகிறோம் என்று தெளிவாக கதையை கொண்டு போய் இருக்கிறீர்கள். என்ன எல்லோரும் வீடுகளில் பார்க்கும் பிரச்சனை என்பதால் முடிவை கணித்து இருப்பார்கள் .... ஆனால் மாமியார் மனம் மாறினார் என்பது தமிழ் சினிமா முடிவு.... ம்ம் பேத்தியே பாட்டியாகும் போதும் இந்த வழக்கம் தொடரத்தான் செய்கிறது அக்கா .... வேலைக்கு போகும் மாமியார்கள்களிடம் கொஞ்சம் மாற்றம் இருக்கும். வீட்டிலேயே இருக்கும் மாமியார்கள் உரிமை பிரச்சனை எழுப்பத்தான் செய்வார்கள்.....:lachen001:

ரவி, உங்களைப்போல்தான் பலரும் மாமியார் மனம் மாறிவிட்டதாக நான் எழுதியிருப்பதாக நினைக்கிறார்கள். உண்மையில் திலகவதி பேத்தியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். அதன் தொடர்ச்சியாக ஆதவா சொன்னதைப்போல், 'அம்மாவைப் போலவே வாய்!' என்று நொடித்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டுப் போகலாம். அல்லது அந்த நிகழ்வுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக்கொள்ள முயலலாம். அதுவரை வாசுகி பொறுமை காக்கவேண்டும். அவர் இறங்கிவரும்போது இவள் எகிறினால் மீண்டும் பழைய கதைதான்!

விமர்சனத்துக்கு நன்றி ரவி.

கீதம்
02-11-2010, 10:26 PM
அட போங்கப்பா.. இப்படி எழுதி எழுதியே எண்ணெயை ஊற்றிக்கொண்டிருக்கிறோம்.. என்று அவ்வவ்வப்போது சலிப்புத் தட்டும். ஆனாலும் எழுதியே ஆகனும் என்று கட்டாயம் கதவைத் தட்டும்.

அந்தக்காலத்தில் அப்படி இருந்தார்கள், இந்தக் காலத்தில் எப்படி இருக்கிறோம் எனும்படியாக ஏங்க வைக்கும் ஆக்கங்களே ஆக்கங்களை ஆக்கும்.

அக்கா இனிமேல் அப்படியான ஆக்கங்களை ஆக்குங்கள்.

மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏற்படும் சண்டை தாய்க்கும் மகளுக்கும் ஏற்படுவதில்லை.

யாரோ ஒருவர் வைச்ச மா நமக்குப் பழம் தருவதைப் போல நாம் கட்டும் மணி நாளைக்கு ஆலயத்தில் ஒலிக்கட்டுமே..

உங்கள் ஆதங்கமே என்னுடையதும். அதனால்தான் வளரும் தலைமுறையிடமாவது அந்த மாற்றத்தைக் கொண்டுவர இப்படி எழுதினேன். விமர்சனத்துக்கு நன்றி, அமரன்.

M.Jagadeesan
03-11-2010, 05:32 AM
கதையில் உரையாடல்கள் இயல்பாக இருக்கின்றன நாவல் எழுதுவதற்குரிய தகுதியும், திறமையும் உன்னிடம் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.முயற்சிக்கவும்.வாழ்த்துக்கள்.

கீதம்
03-11-2010, 10:34 PM
கதையில் உரையாடல்கள் இயல்பாக இருக்கின்றன நாவல் எழுதுவதற்குரிய தகுதியும், திறமையும் உன்னிடம் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.முயற்சிக்கவும்.வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி, ஐயா. நிச்சயம் முயல்கிறேன்.

மதி
05-11-2010, 02:39 PM
வழக்கமா எல்லா கதைகளையும் அன்றே படிச்சிடுவேன்.. இப்போ கொஞ்ச நாளா நிறைய பாக்கி இருக்கு..

எனக்கென்னவோ இது அடிக்கடி படிக்கற ஒரு விஷயமாவே போனதுனால கதைக்களன்ல எதுவும் புதுமையா தெரியல. உரையாடல்கள் தவிர கதையின் போக்கு ஒரு மாதிரி அனுமானிக்க கூடியதா இருந்தது..!! உங்ககிட்ட இருக்கும் எதிர்ப்பார்ப்பு வேற.. இன்னும்.. இன்னும்..நிறைய.. புதுசா..

ஒருவேளை இப்போ நான் பொறுமையா படிக்கிற நிலைமையில் இல்லையோ. ?

கீதம்
07-11-2010, 09:00 PM

உங்களுடைய ரசிப்புத்திறன் உயர்ந்துவிட்டதென்று நினைக்கிறேன். அதற்கு என் கதைகள் பொருந்தவில்லையோ? என்ன செய்வது? படிப்படியாகத்தானே ஏறிவரவேண்டும்? :)

வித்தியாசமான பின்னூட்டம், என்னை நிறைய யோசிக்கவைத்துள்ளது. உங்கள் எதிர்பார்ப்பை கூடியவிரைவில் நிறைவேற்ற முயல்கிறேன், மதி.

என் எழுத்துகள் பற்றி என்னை மறு ஆய்வு செய்யவைத்ததற்கு நன்றி, மதி.:icon_b:

சூறாவளி
21-11-2010, 04:33 PM
வழக்கமா கீதம் கதையில் ஒருவித செண்டிமெண்ட் (நான் படித்த கதைகளில்) தாக்கம் அதிகமாய் இருக்கும்.. அதற்க்கெல்லாம் நான் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால் என்னை அடிக்க ஒடி வந்துடுவாங்க..:) ஆதலால் பல கதைகளுக்கு மெளனமாய் வெற்றிடமாய் கருத்தை பதிந்து விட்டே செல்கிறேன்..:icon_ush:

ஆனால் இப்போதுதான் முற்றிலும் மாறுபட்ட, மாமியார் மருமகள் உரையாடல்களுடன், குழந்தையை வைத்து அழகான அருமையான விழிப்புணர்வு பாடம் நடத்தி விட்டிர்கள், சிறுவயதில் வார நாளிதழில் படித்து ரசித்த காட்சிகளை மீண்டும் மனதில் கொண்டு வந்து, சிறப்பான கதையம்சம் கொண்டு படைத்து விட்டிர்கள்..

பாராட்டுக்கள்..:icon_b:

கீதம்
21-11-2010, 11:15 PM

ஒவ்வொருவர் ரசனையும் ஒவ்வொரு மாதிரி. உங்கள் ரசனைக்கும் எதிர்பார்ப்புக்கும் தக்கபடி இக்கதை அமைந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி சூறாவளி அவர்களே.

எந்தக்கதையாயிருப்பினும் உங்களுக்குத் தோன்றுவதை தாராளமாக பின்னூட்டமிடலாம். அது எழுத்தாளரின் தரத்தை மேம்படுத்த பலவகையிலும் உதவும். எனவே தயங்காமல் கருத்துப் பதியுங்கள். யாரும் அடிக்கவரமாட்டார்கள்.:lachen001: