PDA

View Full Version : காத்திருத்தல்..............



Nanban
17-11-2003, 01:50 PM
காத்திருத்தல்.........

சுவராஸ்யமானது - காத்திருத்தல்.
சுகமானதும் கூட.
சமயத்தில்
பிரசவிப்பதைப் போன்ற
வேதனையையும் தரக்கூடும்.
வாழ்வை
சுவராஸ்யமாக்குவது கூட
காத்திருத்தல் தான்........

எனது முதல் காத்திருத்தலை
நான் இன்னமும் மறக்கவில்லை....
காக்கிப் புறாவின்
சைக்கிள் மணி ஒலிக்கு
காத்திருந்த தவத்தை.......

காத்திருத்தல் ஒரு தவம்.
காத்திருத்தல் ஒரு முயற்சி.

புதிய புதிய தவங்கள்
புதிய புதிய முயற்சிகள்
இன்றும் உண்டு.
புதிய புதிய உலகங்களில்
ஓடி ஜெயிக்க
புதிய முயற்சிகள்
காத்திருக்கின்றன.

நீண்டு கொண்டே போகும்
எனது காத்திருத்தல்கள்......

'ஏதோ வண்டி ஓடுது '
காத்திருத்தலைப் புரியாத
சோம்பேறிகளின் வாழ்க்கை
அசுவராஸ்யமாய்
தூங்கிக் கொண்டிருக்கையில்,
வண்டி ஓடுவதாக
அவர்களது கணக்கு...


காத்திருந்து போராடிய
ஒன்று கிடைத்ததும் -
காத்திருத்தலை மறந்து
வெற்றிடத்தில் வீழ்ந்தால்,
மெளனங்கள் கூட
இரைச்சலாகிப் போகும் -
ஓய்வு கூட
சோம்பல் நோயாகிப் போகும்.

காத்திருங்கள் -
இரைக்காகக் காத்திருக்கும்
மிருகமாய் காத்திருங்கள்.
வனவிலங்கு அறியும்,
பசியின் காத்திருத்தலில் தோற்றால்
நிச்சய மரணம் தானென்று.

நானும் காத்திருக்கிறேன் -
ஜெயிப்பதற்கு
எதுவுமே இல்லையென்றால்,
அட,
குறைந்த பட்சம்
ஒரு நல்ல மரணத்திற்காவது....

என் வண்டி
சுவராஸ்யமாகத் தான்
ஓடிக் கொண்டிருக்கிறது........

முத்து
17-11-2003, 05:09 PM
காத்திருத்தல் ஒரு சுகமே ..
அதிலும் முதலில் நீங்கள் கடிதத்துக்காய் ( காதல்..? :wink: )
காத்திருந்ததைப் பற்றிச் சொல்லவா வேண்டும் .. ?
காத்திருத்தலும் , தேடலும் வாழ்வை இயக்கும் சக்திகள் ...
அருமையான கவிதை தந்த நண்பன் அவர்களுக்கு நன்றிகள் ...

இளசு
17-11-2003, 05:10 PM
வெந்ததைத் தின்று
விதி வந்தால் போவோம் என்று
திண்ணையில் முடங்குவோரை நோக்கி
சொடுக்கி இருக்கிறீர்கள் சாட்டையை...

தீர்க்கக் கனவு - அதை நோக்கி
தீவிர திட்டமிட்ட உழைப்பு நடை....

ஆனை வேட்டைக்குப் போகச்சொன்ன அய்யனும்
கனவு மெய்ப்படச்சொன்ன மீசையும்
இத்தலைமுறைக்கு செய்கையால் விளக்கும் கலாமும்
வரிசையாய் வந்துபோகிறார்கள்.....

நண்பனின் உத்வேகக் கவிதைக்கு
என் உற்சாகப் பாராட்டுகள்.

rambal
17-11-2003, 06:15 PM
காத்திருக்கலாம்தான்
இனி செய்வதற்கு ஒன்றும்
இல்லை எனும் பொழுது
மரணத்திற்கு..

காத்திருக்கலாம்தான்
பட்டுத்தாவணி தாமதாய் வந்தாலும்
கிடைக்கப் போகும்
முத்தத்திற்கு..

காத்திருக்கலாம்தான்
வேலைக்கான நேர்முகத்தேர்வு
தாமதமாய் வந்தாலும்
கிடைக்கப்போகும் வேலைக்காக..

தேர்வு முடிந்ததும் வரப்போகும்
முடிவிற்காகவும்
முதல் தேதி சம்பளத்திற்காகவும்தான்..

காத்திருக்கலாம்தான்
விதை விதைக்க
நாள் பார்த்துவிட்டு
மழைக்காக..

காத்திருக்கலாம்தான்
பத்துமாதம் சுமந்தவள்
சரியாய் பெற்றெடுப்பாளா என்பதற்காக
மருத்துவமனை வராந்தாவில்..

காத்திருத்தல் ஒரு தவம்..
காத்திருத்தல் ஒரு சுகம்..
காத்திருத்தல் ஒரு முயற்சி..
காத்திருத்தல் ஒரு அவஸ்தை..

Nanban
17-11-2003, 06:29 PM
காத்திருக்கலாம்தான்
பத்துமாதம் சுமந்தவள்
சரியாய் பெற்றெடுப்பாளா என்பதற்காக




ஒவ்வொரு வரியாக scrolling செய்து வாசித்துக் கொண்டே வரும் பொழுது, மேற்கண்ட இடம் வந்ததும் அடுத்த வரியாக 'கர்ப்பதினுள் குழந்தையாக' என்று திருத்தி வாசித்தேன்......

கற்பனைகளத் தூண்டும் வரிகள்......

rambal
17-11-2003, 06:43 PM
அட! நீங்கள் சொல்வது போலக் கூட வைத்துக் கொள்ளலாம்..
கவிதைகள் என்பது அவரவர் பார்வையில் புதுப் புது வரிகளை தூண்ட வேண்டும்..
உங்கள் கவிதை பார்த்து இன்ஸ்பையர் ஆகித்தான் பதில் கவிதை எழுதினேன்..
இப்போது மீண்டும் என் கவிதை பார்த்து நீங்கள்..

Nanban
20-11-2003, 01:29 PM
காத்திருத்தல் சுகம் தான் -
முடிவில் நினைத்தது
கை கூடும்
என்னும் பொழுதில்......

புத்தர் காத்திருந்தார் -
ஞானம் பெற்றார்.

காந்தி காத்திருந்தார் -
விடுதலை வாங்கித் தந்தார்.

நீங்களும் நானும்
காத்திருந்து
எதை வாங்கப் போகிறோம் ?

நிச்சயமற்ற
காத்திருத்தல்
நரகத்தின்
முன்மாதிரி வரைவு -
பணமற்ற மனிதர்களுக்கு!

காசிருந்தால்
காத்திருப்புகள்
தேவையில்லை -
காதலிலும்,
இறைவன் தரிசிப்பிலும்,
வேலை தேடலிலும்.

Nanban
20-11-2003, 01:31 PM
காத்திருந்த பின்னர்
களைப்பு நீங்க
நீ வரும் வேளையில்
எனக்கும்
வந்தது வாய்ப்பு...

அன்று நான் -
இன்று நீ
என காத்திருப்புகள்
மாலை நேர நிழலாய்
நீண்டு கொண்டிருக்கும்....

இருவரும் ஓய்ந்த
ஒரு வேளையில்
காத்திருப்போம்
இருவரும் இணைந்து -
கரை கடந்து போன
குஞ்சுகள்
நீந்திக் கரையேறி
வரும் வரை....

இ.இசாக்
20-11-2003, 01:40 PM
காத்திருக்கவேண்டிதான் இருக்கிறது
இது போன்ற
சிந்தனையை தூண்டும் கவிதைகளை
வாசிக்க
உணர

Nanban
20-11-2003, 02:36 PM
மீண்டும் நன்றி இசாக் அவர்களே......