PDA

View Full Version : ழானின் கடிதம்

சொ.ஞானசம்பந்தன்
24-10-2010, 06:20 AM
(போல் ஃபெவால் (1817-1887) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் இச் சிறு கதை மிகப் பழையதாயினும் நம் நாட்டு சூழலுக்கு இன்னமும் பொருந்துவதால் மொழிபெயர்த்தேன். நேற்றுதான் முடித்தேன். சூடாக வழ்ங்குகிறேன்.)

ழானுக்கு ஆறு வயது.முழங்கால் கிழிந்த கால்சட்டை போட்டிருந்த அவனது சுருள் சுருளான பொன்னிற முடி இரண்டு அழகிகளின் தலைகளுக்கு விக் ஆக மாறுவதற்குப் போதிய அளவு அடர்த்தியாயும் அபரிமிதமாயும் இருந்தது அவனது விசால நீல விழிகள் ஏற்கனவே எவ்வளவோ அழுதிருந்த போதிலும் முறுவலிப்பதற்கு இன்னமும் சில சமயம் முயன்றன.அவனது மற்ற உடைகள் கிழிந்து தொங்கிய சட்டை, வலக்காலில் சிறுமிக்கான செருப்பு, இடக்காலில் மாணவன் போடும் செருப்பு, இரண்டுமே அளவு மீறி நீளம், அளவு மீறி அகலம், அந்தோ, துளைகள் நிரம்பியனவாய், முன்பக்கந் தூக்கிக்கொண்டு, பின்புறம் குதி இல்லாமல்..

அதோடு குளிரும் பசியும். ஏனெனில் அது ஒரு குளிர்கால மாலை. மத்தியானத்திலிருந்து பட்டினி. இப்போதுதான் ஒரு கடிதம் எழுத அவனுக்குத் தோன்றிற்று.

அந்த சிறுவன் ழான் படிக்கவோ எழுதவோ அறியாமல் எப்படி எழுதினான் கடிதம் என்பது சொல்ல வேண்டிய பாக்கி.
அங்கே தெருக் கோடியில் எழுதுகிற கடை இருந்தது.எழுதுபவர் வயதான முன்னாள் போர்வீரர், நல்லவர், மத அனுஷ்டானம் அதிகம் இல்லாதவர்,வசதி குறைந்தவர், காப்பகத்தில் இடம் பெறுவதற்குப் போதுமான ஊனமடையாத துரதிர்ஷ்டசாலி.
புகைக் குழாய் பிடித்தவாறு வாடிக்கையாளரை எதிர்பார்த்து அவர் அமர்ந்திருந்ததைக் கடையின் தெளிவற்ற கண்ணாடி வழியாய் ழான் கண்டான்.

நுழைந்து, “வணக்கம்.ஒரு கடிதம் எழுத வந்திருக்கிறேன்” என்றான்.

“பத்து காசு” எனப் பதில் சொன்னார் புவேன்.

தொப்பி இல்லாமையால் அதை நீக்க இயலாவிடினும் ழான் மரியாதையுடன், “அப்படியானால், மன்னியுங்கள்” என்று சொல்லிவிட்டு வெளியே போகக் கதவைத் திறந்தான். ஆனால் புவேனுக்கு அவனைப் பிடித்திருந்தமையால் கேட்டார்:

“பட்டாளத்துக்காரர் மகனா நீ, சின்ன பையா?”

“இல்லை. நான் அம்மா பிள்ளை. அவள் தனியாக இருக்கிறாள்”

“அப்படியா? புரிகிறது.அதோடு உன்னிடம் காசு இல்லை.”

“ஆமாம்.ஒரு காசுகூட இல்லை.”

“உன் அம்மாவிடமுந்தானே? அதுதான் தெரிகிறதே. சூப் வைக்கிறதற்குக் கடிதம். சரியா?”

“ஆமாம்.அதற்காகவேதான்,”

“சரி. பத்து வரியும் அரைத் தாளும். இதனாலே குறைந்து போய்விடமாட்டேன்.”

புவேன் தாளை ஒழுங்கு பண்ணி மையில் இறகை நனைத்துத் தம் அழகிய கையெழுத்தில் “பாரீஸ், 17 ஜனவரி 1857” என்று எழுதினார். அதனடியில் ,திரு என்று தொடங்கிவிட்டுக் கேட்டார்:

“அவர் பெயர் என்ன, குட்டி பையா?”

“எவர் பெயர்?”

“அதுதான். அய்யா பெயர்.”

“எந்த அய்யா?”

“சூப் தரக்கூடியவர்.”

இப்போது ழானுக்குப் புரிந்தது.

“அவர் அய்யா அல்ல.”

அட, அப்படியானால் பெண்ணா?”

“ஆமாம்...இல்லை... அதாவது...”

” என்ன இது? யாருக்குக் கடிதம் எழுத வேண்டும் என்பது கூடத் தெரியாதா?”

“ ஓ, தெரியும்.”

“சொல்லேன் அதை. சீக்கிரம்.”

சிறுவனின் முகம் சிவந்தது. பிரச்சினை என்னவென்றால் இந்த மாதிரி செய்தியை அன்னிய மனிதரிடம் சொல்வது சரியல்ல என்பதே. இருந்தாலும் முழுத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, “புனித கன்னிக்குத் தான் கடிதம் அனுப்ப விரும்புகிறேன்” என்றான்.
புவேன் சிரிக்கவில்லை. இறகை வைத்துவிட்டு வாயிலிருந்து புகைக் குழாயை அகற்றினார்.

கடுங் குரலில், “பயலே, வயதான பட்டாளத்தானைக் கிண்டல் பண்ண உனக்கு எண்ணமில்லை என நினைக்கிறேன். நீ ரொம்பப் பொடியனாய் இருப்பதால் உன்னை அடிக்காமல் விடுகிறேன், ஓடிப் போய்விடு”என்றார்.

ழான் போவதற்குத் திரும்பினான். ஆனால் மென்மையான அவனை இப்படி விரட்டுவதற்கு அவர் கழிவிரங்கினார்.

"இந்தப் பாரீசில் வறுமை இருந்துகொண்டுதான் இருக்கிறது. உன் பெயர் என்ன?” என்றார்.

“ழான்”

“என்ன ழான்?”

“ழான் மட்டும்.”

கண்களில் நீர் முட்டப் பெரியவர் தோளைக் குலுக்கினார்.

“உன் புனித கன்னிக்கு என்ன சொல்லவேண்டும் என்று விரும்புகிறாய்?”

“அம்மா நான்கு மணி முதல் தூங்குகிறாள்.என்னால் எழுப்ப முடியவில்லை.புனித கன்னி தன் நல்ல மனத்தால் எழுப்பிவிட வேண்டும் என்று சொல்ல விரும்புகிறேன்.”

முதிய பட்டாளத்தாரின் இதயம் அழுத்திற்று. ஏனென்றால் நிலைமையைப் புரிந்துகொள்ளும் அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இருந்தாலும் மேலுங் கேட்டார்:

“சூப்பைப் பற்றி எதுவோ சொன்னாயே?”

“ஆம்.அது தேவைப்படுகிறது. தூங்குவதற்கு முன்னால் அம்மா கடைசி ரொட்டித் துண்டை எனக்குக் கொடுத்துவிட்டாள்.”

“அவள்? அவள் என்ன சாப்பிட்டாள்?”

“பசி இல்லை என்று இரண்டு நாளாய் சொல்லிக்கொண்டிருந்தாள்.”

“நீ என்ன செய்தாய் அவளை எழுப்புவதற்கு?”

“எப்போதும் போலத்தான். முத்தமிட்டேன்”

”மூச்சு விட்டாளா?”

ழான் புன்னகைத்தான். முறுவல் அவனுக்கு அழகு தந்தது.

“தெரியாது. மூச்சு எப்போதும் விடுவோம் தானே?”

புவேன் தலையைத் திருப்பிக்கொண்டார்.கன்னங்களில் வழிந்த இரு பெருந் துளிகளை ழான் பார்த்துவிடக் கூடாதே என்று அச்சம். பையனின் கேள்விக்கு விடை கூறாமல் சிறிது நடுங்கிய குரலில், “முத்தமிட்ட போது நீ எதையும் கவனிக்கவில்லையா?” என்று கேட்டார்.

'' கவனித்தேன்.உடம்பு சில்லென்றிருந்தது. எங்கள் வீட்டில் அவ்வளவு குளிர.”

புவேன் சிந்தித்தார்: நன்றாக சாப்பிடுகிற, குடிக்கிற நான் பணக்காரர்கள்மீது பொறாமைப்பட்டேனே? இதோ ஒருத்தி இறந்திருக்கிறாள் பசியால்! பசியினால்!”

சிறுவனைத் தூக்கி மடியில் இருத்திக்கொண்டு கனிவுடன் கூறினார்:

“சின்ன பிள்ளே, கடிதம் எழுதியாயிற்று.போய் சேர்ந்தும்விட்டது. உன் தாயாரிடம் என்னை அழைத்துப் போ.”

“போகிறேன். ஆனால் நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று வியப்புடன் கேட்டான் சிறுவன்.

”நான் அழவில்லை” என்று சொல்லிக்கொண்டெ அவனை முத்தமிட்டார் மூச்சு முட்டும்படியும் அவனைக் கண்ணீரால் குளிப்பாட்டியபடியும்.”உனக்குத் தெரியுமா நான் உன் அப்பவாய் இருந்தால் உன்னை எப்படி நேசிப்பேனோ அப்படி நேசிக்கிறேன் என்று?
எனக்கும் அம்மா இருந்தாள். ரொம்ப காலத்துக்கு முன்னெ. கட்டிலில் கிடந்தவள் கடைசியாக” புவேன், ”நேர்மையாயும் நல்ல கிறித்துவனாயும் இரு” என்று சொன்னாள். உன் மூலமாய் அவளை இப்போது நான் பார்க்கிறேன்”

அவர் எழுந்தார்.சிறுவனை மார்புடன் அணைத்துக்கொண்டு கண்ணுக்குப் புலப்படாத யாருடனோ பேசுவது போலக் கூறினார்:

“பாரம்மா, பார்.மகிழ்ச்சி அடை. நீ எங்கு இருக்கிறாயோ அங்கு வர விரும்புகிறேன். அதுவரை இவன் என்னுடன் இருப்பான். ஏனெனில் இவனது வினோதக் கடிதம் எழுதப்படாமல் போயினும் இரட்டைப் பலன் அளித்துவிட்டது: இவனுக்குத் தந்தை, எனக்கு இதயம்.

-----------------------------------

Narathar
24-10-2010, 06:59 AM
மனது கனக்கவைத்து கண்ணீர்த்துளிகளை எட்டிப்பார்க்க வைத்த கதை!
ழானின் கடிதம் எழுதப்படாமலேயே அதற்குரிய காரியங்களை சாதித்துக்கொண்டதில் மகிழ்ச்சி,
அருமையாக மொழி பெயர்த்திருந்தீர்கள்.........
பகிர்ந்து கொண்டமைக்கு மனம் நிறைந்த நன்றிகலந்த பாராட்டுக்கள்

M.Jagadeesan
24-10-2010, 07:19 AM
உருக்கமான கதை.பாராட்டுக்கள்.நம் மண்ணுக்கு ஏற்றவாறு பெயர்களை மாற்றித் தந்திருக்கலாம்.

பாரதி
24-10-2010, 07:47 AM
ழான்.... பசியும் ஏழ்மையும் எங்கும் நிறைந்திருக்கின்றன போலும்.

சென்ற நூற்றாண்டு கதையை அழகுற மாற்றித் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

கீதம்
29-10-2010, 07:29 AM
சிறுவன் ழானைக் கண்முன் நிறுத்தி நம் பரிதாபத்தைச் சம்பாதித்துக்கொள்கின்றன, வறுமையின் கொடுமையை சித்தரிக்கும் உரையாடல்கள்.

அருமையான மொழிபெயர்ப்புக்கு பாராட்டுகள்.

சொ.ஞானசம்பந்தன்
29-10-2010, 10:03 AM
மனது கனக்கவைத்து கண்ணீர்த்துளிகளை எட்டிப்பார்க்க வைத்த கதை!
ழானின் கடிதம் எழுதப்படாமலேயே அதற்குரிய காரியங்களை சாதித்துக்கொண்டதில் மகிழ்ச்சி,
அருமையாக மொழி பெயர்த்திருந்தீர்கள்.........
பகிர்ந்து கொண்டமைக்கு மனம் நிறைந்த நன்றிகலந்த பாராட்டுக்கள்

விரிவான விமர்சனத்துக்கு உளமார்ந்த நன்றி

சொ.ஞானசம்பந்தன்
29-10-2010, 10:04 AM
சிறுவன் ழானைக் கண்முன் நிறுத்தி நம் பரிதாபத்தைச் சம்பாதித்துக்கொள்கின்றன, வறுமையின் கொடுமையை சித்தரிக்கும் உரையாடல்கள்.

அருமையான மொழிபெயர்ப்புக்கு பாராட்டுகள்.

பாராட்டுக்கு மிகுந்த நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
29-10-2010, 10:05 AM
ழான்.... பசியும் ஏழ்மையும் எங்கும் நிறைந்திருக்கின்றன போலும்.

சென்ற நூற்றாண்டு கதையை அழகுற மாற்றித் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

பாராட்டுக்கு மிகுந்த நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
29-10-2010, 10:07 AM
உருக்கமான கதை.பாராட்டுக்கள்.நம் மண்ணுக்கு ஏற்றவாறு பெயர்களை மாற்றித் தந்திருக்கலாம்.

பாராட்டுக்கு நன்றி. பெயர்களை மாற்றுவது சிறந்த மொழிபெயர்ப்பு ஆகாது.

அக்னி
06-12-2011, 11:04 AM
மனம் கனத்துப் போவதைத் தடுக்கமுடியவில்லை...

பல புள்ளிகளை இணைத்துப் போவதால், இக்கதை படமாய்க் கண்முன்னே விரிகின்றது...
தாய்மையின் மேன்மையும், வறுமையும் கொடுமையும் மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

நன்றி சொ.ஞா. ஐயா... உங்கள் பணி தொடரட்டும்...

Nivas.T
06-12-2011, 12:33 PM
மிக அருமையான கதை

புவேன் போல் மனிதர்கள், இரக்கமுள்ள மனிதர்கள் இப்பொழுது தேடினாலும் கிடைப்பதில்லை

கடினப்பட்டு மொழிப்பெயர்த்து வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா

சொ.ஞானசம்பந்தன்
30-04-2012, 08:16 AM
மனம் கனத்துப் போவதைத் தடுக்கமுடியவில்லை...

பல புள்ளிகளை இணைத்துப் போவதால், இக்கதை படமாய்க் கண்முன்னே விரிகின்றது...
தாய்மையின் மேன்மையும், வறுமையும் கொடுமையும் மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

நன்றி சொ.ஞா. ஐயா... உங்கள் பணி தொடரட்டும்...
பாராட்டுக்கு மிக்க நன்றி .

அன்புரசிகன்
01-05-2012, 02:06 AM
...
உங்களது பதிலினால் கண்ணில் பட்டது திரி. மனதை ஆழமாக வாட்டும் கரு. வாழ்த்துக்கள் ஐயா.

இராஜேஸ்வரன்
01-05-2012, 02:08 AM
“பாரம்மா, பார்.மகிழ்ச்சி அடை. நீ எங்கு இருக்கிறாயோ அங்கு வர விரும்புகிறேன். அதுவரை இவன் என்னுடன் இருப்பான். ஏனெனில் இவனது வினோதக் கடிதம் எழுதப்படாமல் போயினும் இரட்டைப் பலன் அளித்துவிட்டது: இவனுக்குத் தந்தை, எனக்கு இதயம்.

மனதை தொட்ட ஒரு கதை. நீங்கள் சொன்னது போலவே இது பிரெஞ்சு கதையாக இருந்தாலும் நம் நாட்டு சூழலுக்கு போருத்தமான கதைதான். அருமை.

மொழிபெயர்த்து பதித்த உங்களுக்கு மிகுந்த நன்றி.

jayanth
01-05-2012, 04:38 AM
மனதை நெகிழ வைத்த கதை...

கலையரசி
01-05-2012, 05:58 AM
கடைசி ரொட்டித் துண்டைக் குழந்தைக்குக் கொடுத்து விட்டு உயிர் துறக்கும் தாய்மை, அம்மா இறந்ததைக் கூட அறியாத சின்னஞ்சிறு மழலை, அநாதை சிறுவனைத் தன் மகனாக ஏற்றுக்கொள்ளும் இரக்க உள்ளம் கொண்ட பட்டாளத்துக்காரர் என அனைவருமே மனதில் நிற்கிறார்கள். படிக்கும் போது கண்ணீர் பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அருமையான மொழியாக்கம். பிரெஞ்சுக் கதையைச் சுவை குன்றாமல் படிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
01-05-2012, 06:56 AM
...
உங்களது பதிலினால் கண்ணில் பட்டது திரி. மனதை ஆழமாக வாட்டும் கரு. வாழ்த்துக்கள் ஐயா.
வாழ்த்துக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
01-05-2012, 06:57 AM
கடைசி ரொட்டித் துண்டைக் குழந்தைக்குக் கொடுத்து விட்டு உயிர் துறக்கும் தாய்மை, அம்மா இறந்ததைக் கூட அறியாத சின்னஞ்சிறு மழலை, அநாதை சிறுவனைத் தன் மகனாக ஏற்றுக்கொள்ளும் இரக்க உள்ளம் கொண்ட பட்டாளத்துக்காரர் என அனைவருமே மனதில் நிற்கிறார்கள். படிக்கும் போது கண்ணீர் பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அருமையான மொழியாக்கம். பிரெஞ்சுக் கதையைச் சுவை குன்றாமல் படிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி.
விரிவான விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
01-05-2012, 06:59 AM
மிக அருமையான கதை

புவேன் போல் மனிதர்கள், இரக்கமுள்ள மனிதர்கள் இப்பொழுது தேடினாலும் கிடைப்பதில்லை

கடினப்பட்டு மொழிப்பெயர்த்து வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா
பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .