PDA

View Full Version : மீட்டெடுத்து தொலைதல்



சசிதரன்
17-10-2010, 04:00 PM
அவன் கவிதைகள் கொண்டே
அவன் விவரிக்கபட்டான்.
அவனுடைய வார்த்தைகளுக்குள்
அவன் வாழ்க்கையை பொருத்தினர்.

காதல் குறித்து சிலாகித்தபோதும்
அதன் வலி சொல்லி கதறிய போதும்
அவை அவனுடையதெனவே கூறினர்.
யாவும் கற்பனையே என்றவன் சொன்னதை
யாரும் ஏற்பதாய் இல்லை.

தனிமை குறித்த கவிதைகளில்
உறங்காமல் கழித்த இரவுகள்
அவனுடையதெனவே பிரகடனப்படுத்தப்பட்டது.
தனித்த இரவுகளின் அழுகுரல்
அவன் அறையிலிருந்தே கேட்பதாக
அழுத்தமாய் நம்பினர்.
யாவும் கற்பனையே என்றவன் சொன்னதை
யாரும் ஏற்பதாய் இல்லை.

கவிதைகளுக்குள் சிறைபட தொடங்கியவன்
தன்னை மீட்டெடுக்கும் பொருட்டு
ஒரு மரணக் கவிதையை எழுதிய நாளில்
அவன் இறந்து போனதாய்
உலகெங்கும் அறிவிக்கப்பட்டது.
இம்முறை அவனிடம் இருந்து
எந்த மறுப்பும் இல்லை.

சிவா.ஜி
17-10-2010, 04:35 PM
பலசமயங்களில் இப்படி நேர்வதுண்டு. கற்பனையென கதறினாலும்...கண்டுகொள்ள யாருமிருப்பதில்லை...அதன் தொடர்ச்சியாய்...கவிஞனே...அந்தக் கற்பனை உலகத்துக்குள் தன்னை ஆழ்த்திக்கொண்டுவிடுகிறான்.

இன்னும் பல அர்த்தங்களை இந்தக் கவிதைக் கொண்டிருக்கும். எனக்கு விளங்கிய வரையில் இவ்வளவுதான் தெரிந்தது. வாழ்த்துக்கள் சசி.

சசிதரன்
08-11-2010, 12:43 PM
மிக்க நன்றி அண்ணா... :)

வானவர்கோன்
08-11-2010, 03:54 PM
நடக்குமென்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும்!