PDA

View Full Version : தூர்வாரப்போனவள்கீதம்
17-10-2010, 06:39 AM
உன் மெளனக்கிணற்றின் ஆழமறியாமலும்
அவ்வாழத்தில் புதையுண்டிருக்கும்
பொருட்கள் பற்றிய விவரமறியாமலும்
தூர்வாரத் துணிந்தது எத்தனைத் தவறென்று
இறங்கியபின்னரே உணர்கிறேன்!

உன்னிடம் பகிரப்பட்ட என்
கனவுகளும், நம்பிக்கைகளும்
என்றாவது நிறைவேற்றுவாயென்று
ஒப்படைக்கப்பட்டிருந்த என் ஆசைகளும்
தம் வனப்பிழந்து வடிவம் குலைந்து
மேலும் மேலும் அழுத்தம் பெற்று
சேற்றுக்குள் முங்கி மூச்சுமுட்டிக்கிடக்கின்றன.

அவை எழுப்பிய அலறல்கள் யாவும்
அக்கிணற்றின் அடியாழத்திலேயே
எதிரொலிக்கப்பட்டு அவற்றையே
வந்தடைந்துவிட்டிருந்தபோதிலும்.
தம் நம்பிக்கைகளைக் கைவிட்டுவிடாமல்
மீட்பனின் வருகைக்காக காத்திருக்கின்ற
அவை எழுப்பிய ஈனசுரங்களைக்கொண்டு
அவற்றை அடையாளங்காண்கிறேன்!

இற்றுத் துருப்பிடித்தநிலையிலிருந்தும்
நேற்றுவரை நேசமிறைத்துக்கொண்டிருந்த,
சற்றுமுன் சகதிக்குள் அறுந்துவிழுந்துவிட்ட
நம் காதற்சகடை கண்ணில்பட்டபோதும்,
அலட்சியப்படுத்தி மேலேறுகிறேன்,
அளவிலா என் அற்புதங்களை மட்டுமேந்தி!

பென்ஸ்
18-11-2010, 10:54 PM
ஹா... எப்போதும் நீ என் கனவுகளை காப்பாற்றவில்லை..
நீ எனக்கு செவி சாய்க்கவில்லை...
என் கனவுகள் உன்னில் புதைக்க பட்டன...
என்று அடுத்தவர்களையே குறை கூறி பழகி போனோம்...
அது தானே எளிதானது...

கவிதையின் நாயகி/நாயகன் (தலைப்பு பெண்மையில் என்றாலும்) உணர்வுகளுக்கு டிபன்ஸ் செய்யும் பாவம் அவருக்கு அவரே வெட்டும் குழி...

காதலில், "நாம்" என்று இருக்கும் மனுடர்கள், பிரிவில் நான் என்று மாறி விடுவதாலா இந்த நிலை..???

தூர்வாருவது பற்றி மீராவின் கவிதை ஒன்று மன்றத்தில் இருந்தது

Ravee
18-11-2010, 11:40 PM
அவை எழுப்பிய அலறல்கள் யாவும்
அக்கிணற்றின் அடியாழத்திலேயே
எதிரொலிக்கப்பட்டு அவற்றையே
வந்தடைந்துவிட்டிருந்தபோதிலும்.
தம் நம்பிக்கைகளைக் கைவிட்டுவிடாமல்
மீட்பனின் வருகைக்காக காத்திருக்கின்ற
அவை எழுப்பிய ஈனசுரங்களைக்கொண்டு
அவற்றை அடையாளங்காண்கிறேன்!

நம் காதற்சகடை கண்ணில்பட்டபோதும்,
அலட்சியப்படுத்தி மேலேறுகிறேன்,
அளவிலா என் அற்புதங்களை மட்டுமேந்தி!


ஆழமாக காயப்பட்ட வலி வரிகளில் ....கவிதையின் இறுதி வரிகளில் நம்பிக்கை தெரிகிறது .... வலிகளை சொன்னவிதம் வலிமை அக்கா .....

ஆதவா
19-11-2010, 03:25 AM
கவிதையை முன்பே படித்துவிட்டிருந்தேன்.... தாமரை அண்ணா “போட்டியில்” போட்டு புரட்டி எடுத்ததைவிட நான் என்ன சொல்ல???

சூறாவளி
19-11-2010, 06:38 AM
வரிகள் ரசனையாக இருந்தது படிக்க மட்டுமே...!!!

அர்த்தங்கள் !!!! ==== பாகற்காயின் குணம் கசப்புதானே...!!:icon_ush:

அக்னி
22-11-2010, 02:10 PM
தெளிவான சுரப்பாகத்தானே இருந்தது கிணறு...

தூர்வார வேண்டிய அளவுக்கு
பாழ்பட்டுப் போனதன் காரணம்
தெரியவில்லையா...

உன் கனவுகள்,
உன் நம்பிக்கைகள்,
உன் ஆசைகள்...

இதில் எங்கே இருக்கின்றது என்/நம் உறவு
என்பதைத் தேடித்தானே இன்றளவும் முக்குளிக்கிக்கின்றேன்...

கலங்கல் வெளித்தெரிவது,
என் தேடலின் மும்முரத்தின் வெளிப்பாடு...

தூர் வாரத் தேவையில்லை...
என் முட்டும் மூச்சுக்கு
உன் ஒரு வாய் மூச்சுத்தான் தேவை...

கீதம்
22-11-2010, 10:28 PM
இங்கே தூர்வாரப்பட்டது
அவனின் மெளனக்கிணறேயன்றி
மனக்கிணறு அன்று.

மெளனக்கிணறு மெல்ல மெல்ல
மரணக்கிணறாய் மாறாதிருக்கவே
தூர்வாரத் துடித்தது அவள் மனம்.

அட, ஆடவனுக்கு ஆதரவாய்
இத்தனைக் குரல்களா?
அங்கேயும் என்றாவது ஓர்நாள்
தூர்வாருதல் குறித்து பேசப்பட்டிருக்குமோ,
துயரமனங்களின் சார்பாய்?

பின்னூட்டமிட்ட பென்ஸ் அவர்கள், ரவி, ஆதவா, சூறாவளி அவர்கள், அக்னி அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

அக்னி
24-11-2010, 10:41 AM
சுயஒளிர்வும் அதன் பிரதிபலிப்பும்
ஆணுக்கும் பெண்ணுக்குமே பிரித்தளிக்கப்பட்டுள்ளன.

பெண் ஒளிர்ந்தால் ஆண் பிரதிபலிப்பதும்
ஆண் ஒளிர்ந்தால் பெண் பிரதிபலிப்பதுமான சமன்பாட்டில்,
ஒரு பக்கம் குலைந்தாலும்
மௌனக்கிணற்றைத் தூர்வாரவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடும்.

இதில் ஆடவரோ பெண்டிரோ என்ற பேதமில்லை.
இருவருக்குமே பொதுவானது.

நிற்க,

இங்கே தூர்வாரப்பட்டது
அவனின் மெளனக்கிணறேயன்றி
மனக்கிணறு அன்று.
இது எனக்காகக் குறிப்பிடப்பட்டிருந்தால், நான் மனம் பற்றிச் சொல்லவில்லை.
எனக்காகக் குறிப்பிடாவிட்டாலும் கூட, எனது பின்னூட்டத்தின் கலங்கல் எனக்குத் தெரிகின்றது.

எதிர்பார்ப்பின் அழுத்தத்தில்
இயல்பு மாறி மௌனம் இயல்பானால்,
தீர்வின் தேடல் விரக்தியையே கண்டடையும்.

புரிதல், பகிர்தல்
இத் தூர்வாரவேண்டிய தேவையை இல்லாதொழித்துவிடும்...

CEN Mark
29-01-2011, 07:03 AM
[QUOTE=கீதம்;495986]உன் மெளனக்கிணற்றின்
புதையுண்டிருக்கும்.......

போட்டியில் பங்குபெற்ற கவி என்றறிந்தேன்.
அனுபவக்கவியாய் இல்லாமல்
இருக்க வேண்டுகிறேன்.

உங்கள்
கனவுகளும், நம்பிக்கைகளும்
என்றாவது நிறைவேறும்.
நம்பிக்கைகளைக் கைவிட்டுவிடாமல்
மீட்பனின் வருகைக்காக காத்திராமல்
மேலேறுங்கள்.

கீதம்
29-01-2011, 07:12 AM
விமர்சனத்துக்கு நன்றி சென்மார்க் அவர்களே. ஆதவா அவர்கள் நடத்திய விமர்சனப்போட்டிக்காக தாமரை அவர்கள் இக்கவிதையை எடுத்துக்கொண்டு அங்குலம் அங்குலமாக விமர்சித்துப் பெருமைப்படுத்தினார். உங்கள் பார்வைக்காக இதோ (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=496129&postcount=18) அந்த விமர்சனம்.

கலாசுரன்
07-02-2011, 03:59 AM
இற்றுத் துருப்பிடித்தநிலையிலிருந்தும்
நேற்றுவரை நேசமிறைத்துக்கொண்டிருந்த,
சற்றுமுன் சகதிக்குள் அறுந்துவிழுந்துவிட்ட
நம் காதற்சகடை கண்ணில்பட்டபோதும்,
அலட்சியப்படுத்தி மேலேறுகிறேன்,

மிகவும் அடர்த்தியான விளக்கங்கள் கொண்ட வார்த்தைக் கோட்பாடு ...!!

மிகவும் நன்றாக படிமப்படுத்திய வரிகள் ..

வாழ்த்துக்கள் ..:)

sakthim
07-02-2011, 10:08 AM
மிகுந்த வலியுடன் பின்ன பட்ட கவிதை.

ஒவ்வொரு வார்தைகளும் ஓராயிரம் விளக்கங்கள் கொடுக்கின்றன.

வாழ்துகள்.

ஜானகி
07-02-2011, 10:14 AM
கன்னத்தில் அறைவது போன்ற வரிகள் ! தூர்வாரும் பணி வெற்றிகரமாக முடிந்ததற்குச் சாட்சி...அந்தக் கடைசி வரிகள்....சபாஷ் !

கீதம்
07-02-2011, 07:29 PM
இற்றுத் துருப்பிடித்தநிலையிலிருந்தும்
நேற்றுவரை நேசமிறைத்துக்கொண்டிருந்த,
சற்றுமுன் சகதிக்குள் அறுந்துவிழுந்துவிட்ட
நம் காதற்சகடை கண்ணில்பட்டபோதும்,
அலட்சியப்படுத்தி மேலேறுகிறேன்,

மிகவும் அடர்த்தியான விளக்கங்கள் கொண்ட வார்த்தைக் கோட்பாடு ...!!

மிகவும் நன்றாக படிமப்படுத்திய வரிகள் ..

வாழ்த்துக்கள் ..:)

கவிதாசுரனிடமிருந்து பாராட்டு வாங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி. மிகவும் நன்றி கலாசுரன் அவர்களே.

கீதம்
07-02-2011, 07:30 PM
மிகுந்த வலியுடன் பின்ன பட்ட கவிதை.

ஒவ்வொரு வார்தைகளும் ஓராயிரம் விளக்கங்கள் கொடுக்கின்றன.

வாழ்துகள்.

பின்னூட்டத்துக்கு நன்றி sakthim அவர்களே.

கீதம்
07-02-2011, 07:31 PM
கன்னத்தில் அறைவது போன்ற வரிகள் ! தூர்வாரும் பணி வெற்றிகரமாக முடிந்ததற்குச் சாட்சி...அந்தக் கடைசி வரிகள்....சபாஷ் !

ரசித்துப் பராட்டிய உங்களுக்கு என் நன்றி ஜானகி அவர்களே.