PDA

View Full Version : எந்திரன் பற்றி அறிவோமா..?



கலைவேந்தன்
15-10-2010, 07:32 AM
எந்திரன் பற்றி அறிவோமா..?

எந்திரன் என்றதும் சங்கர் - ரஜினி - கலாநிதி மாறன் கூட்டணியில் அமைந்த ஐஸ்வர்யாராயின் அழகுத்தேரோட்டமான ஏ ஆர் ரஹ்மானின் இசையில் முழங்கிய எந்திரன் திரைப்படம் பற்றிய ஆராய்ச்சி என்று எண்ணி ஆவலோடு வந்திருக்கும் என் நண்பர்கள் என்னை மன்னிக்கவும்.

இணையத்தில் ரோபோட்களைப் பற்றி தேடுகையில் தமிழில் விக்கிபீடியாவின் தொழில்நுட்ப மொழிமாற்றத்தைத் தவிர எங்குமே தகவல்கள் கிடைக்காத நிலையில் தமிழில் நாம் ஏன் தொகுத்து வழங்கக்கூடாது என்ற எனது முயற்சியின் காரணமாக ரோபோட்களின் (தமிழில் எந்திரன்) தோற்றம் மற்றும் அடிப்படை விவரங்களைப் பற்றிய கட்டுரையே இது.


தமிழில் இதைப்பற்றிய அறிவையும் விவரங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் சுஜாதா தான் என்று ஆணித்தரமாகக்கூறலாம். அவரது அறிவியல் சார்ந்த கதைகளிலும் தொடர்கதைகளிலும் ரோபாட்களுக்கு இணையான தமிழாக அவர் பயன்படுத்தியது இயந்திரா என்னும் சொல்லை. இயந்திரமயமான மனிதர்கள் என்னும் அடிப்படை ரோபோட்களை இயந்திரா என்று அவர் குறிப்பிட்டது மிகப்பொருத்தம் தான்.

ரோபோட் என்ற சொல்லின மூலம்

ரோபோட் (ROBOT) என்ற சொல் முதன் முதலில் கையாளப்பட்டது 1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பராகுவே நாட்டில் அரங்கேறிய ஒரு நாடகத்தில் தான். செக்கோஸ் நாட்டின் நாடக எழுத்தாளர் கரேல் ஷ்பெக் (Karel Capek) எழுதிய நாடகம் R.U.R. (Rossum's Universal Robots) . செக்கோஸ் மொழியில் வேலைக்காரன் என்னும் பொருளில் அமைந்த சொல்லில் இருந்து ரோபோட் என்னும் சொல் உருவானது‘
http://www.robotics.utexas.edu/rrg/images/learn_more/history/karel_capek.jpg

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/87/Capek_play.jpg/220px-Capek_play.jpg
A scene from Karel Čapek's 1920 play R.U.R. (Rossum's Universal Robots), showing three robots


அந்த புரட்சிகரமான நாடகத்தில் அவர் மனிதர்களுக்கு உதவும் எந்திர மனிதர்களின் பயன்களைப்பற்றி கூறியதோடு அதனால் சமூகத்தில் நேர்ந்த வேலையில்லாத் தன்மை சமுதாய குழப்பங்கள் ஆகியவற்றைக் கூறி இருந்தார்.

ஆனால் அதற்கும் முன்பே கிரேக்கர்கள் காலத்தில் கிறிஸ்துக்கு முன் 270 ஆம் ஆண்டில் ஷெஷிபஸ் (Ctesibus ) என்னும் கிரேக்கப்பொறியாளர் அசையும் செயற்கை உறுப்புக்களையும் தண்ணீர் கடிகாரங்களையும் உருவாக்கி தானியங்கும் எந்திரங்களை அறிமுகப்படுத்தி இருந்தார் என்பதை வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
1818 ஆம் ஆண்டில் மேரி ஷெல்லி (Mary Shelle) என்பவர் தாம் எழுதிய ஃப்ரான்க்கன்ஸ்டீன் என்னும் கதையில் டாக்டர் ஃப்ரான்க்கன்ஸ்டீன் என்பவர் பயங்கரமான செயற்கை இயந்திரத்தை உருவாக்கியதாக எழுதியுள்ளார். இவை எல்லாம் செயற்கை எந்திரன்களின் உருவாக்கத்திற்கு வழிகோலியது என்றால் மிகையில்லை.

தமிழக வரலாற்றில் எந்திரன்கள்.

பழங்காலப்போரில் பலவகை யவன இயந்திரங்கள் கல்லெறி கவணைகள் அம்பெறி எந்திரங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன என்பதை சங்க நூல்களில் இருந்து நாம் அறிய முடிகிறது.

’’அரணத்தே நிகழும் போரில் பல்வகைப் போர்ப்பொறிகள் பயன்படுதல் குறிக்கப்படுதலும் (27) // யவனர் இயற்றிய பல பொறிகள் மற்றும் எந்திரம் (பெரும் கல்லெறி கவண், வெப்பம் ஏற்றின எண்ணெய், நெடுதூரம் கணை ஏவும் வில்) வஞ்சனை பலவும் அமைந்த, இடங்கர் உள்ளடக்கிய புறம்சூழ் கிடங்கு, தோட்டிமுள் பதித்த காவற்காடு, பதணம், ஏப்புழை, ஞாயில், எழு, சீப்பு இவை அமையப்பெற்ற வாயிலங கோபுரம் இவை கொண்டு தண்டு கொண்டு வந்த மாற்றாரை எதிர் கொள்ளுதல் பற்றி நச்சினார் தம் தொல். பொருள் புறத்திணை இயல் சூத் 65) உரை விளக்கத்தில் காட்டுபவைதனை கண்டுகொள்க.
தகடூர் யாத்திரையில் "மறனுடைய மறவர்" என்னும் பொன்முடியார்
பாடலிலும் இவை நிரல்படுத்தப்பட்டுள்ளமை காண்க //’’

’’வெஞ்சின வேந்தன் எயில்கோள் விரும்பியக்கால்
அஞ்சி ஒதுங்காதார் யார்யாவர் - மஞ்சுசூழ்
வான்தோய் புரிசை பொறியும் அடங்கின
ஆன்றோர் அடக்கம்போல் ஆங்கு
பெரும்பொருள்விளக்கம் (பொருள்-74 எயில் கோடல்-9) 1299’’

கரிகால் வளவனின் போர்முறையில் இந்த வகை யவன எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு நமக்கு கூறுகிறது. மேலும் அக்காலத்தில் கட்டப்பட்ட பெரும் கோயில்கள் கோபுரங்களில் உச்சிக்கு கற்களைக்கொண்டு செல்ல எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இவை மூலம் எந்திரன்களின் கருத்து ( கான்செப்ட்) பழந்தமிழர்காலத்திலேயே இருந்துள்ளமை புலப்படுகிறது.


அடுத்து வரும் பகுதியில்ரோபோவின் தந்தையைப்பற்றியும் மேலும் அதிக விவரங்களையும் காண்போம்.