PDA

View Full Version : வீட்டுக்கு வரச் சொல்லுங்க



த.ஜார்ஜ்
11-10-2010, 04:02 PM
அல்போன்ஸ்க்கு கல்யாணம் ஆனபோது ‘சாகப் போற வயசில இவனுக்கு இது தேவையா?’ என்றுதான் அலுவலகத்தில் பேச்சு அடிபட்டது.

மனுசனுக்கு ஐம்பது வயதிருக்கும். தலையில் முக்கால் வழுக்கை. பின் மண்டையிலிருந்து முடியையிழுத்து முன்னுக்கு கொண்டு வந்திருப்பார். குட்டை கத்தரிக்காய் மாதிரி இருப்பார். அதிகாரிகளிடம் பணிவு காட்ட இன்னும் குனிவார். எழுத்து படிக்க தடித்த லென்ஸ் கண்ணாடி போட்டிருப்பார்.

ஊரிலுள்ள புறம்போக்கு நிலத்தையெல்லாம் வளைத்துப் போட்டு கள்ளிச் செடியை நட்டு வேலி உண்டாக்கி சில நாள் விடுவார். பிரச்சனை எதுவும் இல்லை என்றதும் அதில் மரச்சீனி நட்டு போடுவார். பிறகு அங்கே மறைவாய் ஒரு குடிசை போடுவார். பின்னொரு நாளில் யாராவது ஒரு பெண்ணுடன் அங்கே வந்து சல்லாபிப்பார்.

அப்படிப் பட்ட மனுசனுக்கு கல்யாணம் என்றால்....

“அது கல்யாணம் இல்லப்பா.. போய் மாட்டிகிட்டது. ஊர்காரனுக மிரட்டி கட்டி வச்சதாம்ல. ” பிரான்சிஸ் விசயத்தைப் போட்டு உடைத்தான். ஆக மனுசன் குடும்பஸ்தன் ஆனது சில நாள் நகைச்சுவையாய் கிசுகிசுக்கும் செய்தியாகிப் பொனது அலுவலகத்தில்..

கோயில் திருவிழா சமயத்தில் மனைவியுடன் வீட்டுக்கு வந்திருந்தார். கேட்டில் வந்து நின்ற போது எனக்கு அடையாளமே தெரியவில்லை. முழுக்க மொட்டை போட்டு மீசை மழித்திருந்தார். யாரோ பிச்சைக்காரன் என்றுதான் நினைத்தேன்.

பெயர் சொல்லிக் கூப்பிட்டதும்தான் உற்றுப் பார்த்தேன்.. கிட்டே போனபோது குடித்திருக்கிற வாசம் வீசியது.

“கோயிலுக்கு வந்தேன். அப்படியே பார்த்திட்டு போலாம்னு....”

உள்ளே அமர வைத்தேன். அவர் மனைவியும் இவரை மாதிரியே குட்டையாக இருந்தாள். இவர் சொன்ன இடத்தில் உட்கார்ந்தாள். தொடைக்கிடையே கையைச் செருகிக்கொண்டு சிரித்தபடியே இருந்தாள்.

குளிர் பானம் குடித்து விட்டு எழுந்து உள்ளே போக எத்தனித்தவளை இழுத்து முன்னறைக்கு கொண்டு வந்து உட்கார வைத்தார். இவர் முறைப்புக்கு, அவள் மேலும் சிரித்தாள்.

‘சரி கிளம்புறோம்’ என்றபடி சட்டென்று புறப்பட்டார்.

அடுத்த சில தினத்தில் மாரடைப்பில் ஆள் போயே விட்டார்..

ஆறேழு மாதங்களுக்குப் பின் ஒரு நாள் அவர் மனைவி அலுவலகம் வந்தாள். என் முன்னால் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார்.

‘என்ன’ என்றேன்.
‘என் வீட்டுக்காரரை பாக்கணும்’ என்றாள்.
எனக்கு திகைப்பாயிருந்தது.
‘அவரு ஒழுங்கா வேலைக்கு வராரா. வந்தா வீட்டுக்கு வரச் சொல்லுங்க.’

கையில் பிளாஸ்டிக் பை வைத்திருந்தாள். பழைய துணிகள், காகிதங்கள் என்று அதில் நிரம்பியிருந்தன.

‘பணமெல்லாம் இங்க வச்சிருக்காருன்னு சொன்னார் ..எடுத்திட்டு வரச் சொல்லுங்க. நான் வரட்டா?’

பதிலை எதிர்பாராமல் பையை தூக்கிகொண்டு விறுவிறுவென நடந்து போனாள்..

சிவா.ஜி
11-10-2010, 04:25 PM
அடக்கடவுளே....என்னக் கொடுமை இது....புருஷன் செத்துப் போனது கூடத் தெரியாம ஆறு மாசமா இருந்திருக்காங்களே....பாவம். அப்பக்கூட நின்னு எந்த விஷயத்தையும் கேக்காம கிளம்பிப் போயிருக்காங்க...

நிஜமாவே வித்தியாசமான அனுபவம்தான்.

(அதென்ன ஜார்ஜ்...உங்களைக் குறிப் பார்த்து இந்த மாதிரி மனுஷங்க வராங்க.....)

ரங்கராஜன்
11-10-2010, 04:46 PM
மனம் கனத்து விட்டது....

என்ன சொல்வது என்றே தெரியவில்லை... பாவம்.....

மதி
11-10-2010, 05:14 PM
கொடுமைதான் சார்...

பாரதி
11-10-2010, 05:40 PM
ஒரு படைப்பை படித்தோமென்றால் சில விநாடிகளாவது அது நம்மை உள்ளிழுத்துச்செல்ல வேண்டும்.

பலருக்கு நகைச்சுவையாகத் தெரிந்த அல்போன்ஸின் மரணம் அவரது துணைவியாரை எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று விளங்குகிறது.

மனதை அரைத்த கதை. நன்றி நண்பரே.

சூறாவளி
11-10-2010, 07:38 PM
எனக்கு தோணுது.. அவர் திருமணம் செய்த பெண் புத்தி குறைவான பெண் அதாவது என்ன நடந்தது எனகூட அறிய முடியாமல் புத்தி சுபாவீனம் குறைந்த பெண்ணாக இருக்கலாம் என நினைக்கிறேன்...

இக்கதையில் என் மனவோட்டம் அப்படிதான் நினைக்க தோணுது..

கீதம்
12-10-2010, 01:31 AM
மனம் கனக்கவைத்த நிகழ்வு. அப்பெண் இயல்பிலேயே புத்தி சுவாதீனமற்றவளா? அல்லது கணவர் இறந்ததால் அப்படி ஆனாளா? எப்படியிருப்பினும் அவள் நிலை பரிதாபத்துக்குரியது.

விகடன்
12-10-2010, 05:41 AM
துணைவியாரிற்கு தெரியாமலேயே அவரது இறுதிச்சடங்கு செய்யப்பட்டுவிட்டதா ஜார்ஜ்?

நீங்கள் ஏன் அல்போன்ஸ் இறந்த விடயத்தை அவர்களுக்கு சொல்லவில்லை?

அல்லது அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டதா?

எப்படியிருந்தாலும் பரிதாபப்படவேண்டிய விடயந்தான்.

Mano.G.
12-10-2010, 06:11 AM
ஜார்ஜ் இது உண்மை சம்பவமா??

இது உண்மையாக இருந்தால் அல்போன்ஸோவை
பார்த்து சிரித்தவர்களுக்கு இது ஒரு
படிப்பினையாக இருத்தல் வேண்டும்

நாம் எந்த மனிதனையும் தாழ்வாக
நினைக்க கூடாது , அவர் அவருக்கு
சோதனைகளுக்கும் சாதனைகளுக்கும்
அவர் அவரே பொருப்பு.

இருந்தாலும் இக்கதையில் வரும் அந்த
பெண்ணுக்கு இந்த சந்தர்பவாதிகள்
உலகத்தில் கடவுளே காப்பாற்ற வேண்டும்

அன்புரசிகன்
12-10-2010, 08:07 AM
என்னால் ரசிக்க இயலவில்லை... இவ்வளவு பாதிப்பு கொடுத்தவர் நிச்சயம் குறிப்பிடத்தக்கவர்.

த.ஜார்ஜ்
12-10-2010, 10:39 AM
இது உண்மையான சம்பவமே.
மன நோய் பாதிக்கப்பட்டிருந்ததால் திருமணமே ஆகாமலிருந்த பெண்ணிடம் இவர் போய் மாட்டிக்கொண்டது உண்மைதான்.
பிறகு பொறுப்புடன் குடும்பம் நடத்தினார்தான்.மூன்று குழந்தைகள் வேறு.

அவர் போன பின்
நமது நண்பர்கள் உதவியுடன் குழந்தைகள் பாதுகாப்பான இல்லங்களில் அனுமதிக்கப்பட்டு படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த பெண் சில காலம் சகோதரன் வீட்டில் இருந்திருக்கிறார்.இபோது விசாரிக்கையில் தகவலில்லை.தேடுவாருமில்லை.அவள் சகோதரர்களுக்கு சொத்தை பங்கு போட்டு கொள்வதற்கே நேரம் போதவில்லை என்று கேள்வி.

விகடன்
12-10-2010, 11:09 AM
மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் அவரின் பெயரை சொல்லிக்கொள்ள சந்ததி இருப்பதை இட்டு மகிழ்ச்சிதான். ஆனால் அந்த பிள்ளைகள் அநாதைகளாக்கப்பட்டுவிட்டதை நினைத்தால் கவலைதான் மீதம்.

நீங்களும் உங்கள் நண்பர்களும் உங்களால் முடிந்த உதவியை வழங்கியிருக்கிறீர்கள்.
இதுவே பெரிய விடயம்.

அமரன்
12-10-2010, 07:24 PM
மூளை வளர்ச்சி குன்றிய அவளிடம் ’போய்க்’ கட்டின்னார் என சொல்லாமல் விட்டிருக்கலாம் ஜார்ஜ்.

தகாதவனாக இருந்தாலும் தப்பைச் சரி செய்ய முயன்ற இடத்தில் மதிக்கத் தோன்றுது.

ஆதவா
13-10-2010, 05:01 AM
நம் வாழ்க்கையில் நடக்கும் இம்மாதிரியான விஷயங்கள் நம்மை எவ்வளவு தூரம் செதுக்குகின்றன!!!
சம்பவம் ஒரு குறுங்கதையைப் போன்று இருக்கிறது.

நமது மோசமான சமுதாயத்தில் பெண்களுக்கான அச்சுறுத்தல் மிகவும் அதிகம்.. அதிலும் மனநலம் குன்றியிருந்தால்???
நல்லவேலையாக, பாதுகாப்பான இல்லத்தில் இருப்பது ஆரோக்கியமான செய்தி!!

பூமகள்
13-10-2010, 06:27 AM
தவறான பாதையில் போய், இறுதியில் ஒரு பேதைப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து, வாழ்ந்தும் இருக்கும் அவர் பற்றி நல்லதாகவே நினைப்போமே. இறந்தவர் பற்றி தவறாகக் கூறும் பழக்கம் நம் ஊரில் இல்லையல்லவா??

குழந்தைகள் நல்லபடி இருப்பது ஆறுதல்.. ஆயினும், பேதையம்மா எங்கு அலைகிறாரோ என்று உறுத்துகிறது மனம்..

கனத்த பதிவு.. வழக்கம் போல், நகைச்சுவையான பதிவென எண்ணிய எனக்கு இப்பதிவு வலியைக் கொடுத்திருக்கிறது.

த.ஜார்ஜ்
13-10-2010, 08:38 AM
அவர் குடும்பம் நடத்தினார் என்பது சரிதான். ஆனால் திருந்தினார் என்பதாக கொள்ளமுடியாது. அந்த பெண்வழியாக வந்த குடும்ப சொத்துதான் அவரோடு இணைந்திருக்க வைத்திருந்தது. கூடவே அவள் சகோதரர்களின் மிரட்டலும்.

xavier_raja
19-10-2010, 01:30 PM
இதில் யார் பக்கம் தவறு இருக்கிறது என்று தெரியவில்லை.. ஆனாலும் மனது என்னவோ பாரமாகி விட்டது படித்து முடித்தவுடன்..