PDA

View Full Version : பழைய டைரியும் அதில் காணப்படும் குறிப்புகளும்.. (கவிதைத் தொகுப்பு)



rambal
16-11-2003, 05:47 AM
பழைய டைரியும் அதில் காணப்படும் குறிப்புகளும்..

பழைய டைரி..
பழைய நியாபகங்கள்..
கிடைக்குமா எனக்கு
அந்த தும்பி பிடித்துக் கொண்டு திரிந்த
சிறுவனின் மகிழ்ச்சி?

ஒருவேளை
நான் மரிப்பதற்கு முன் என்றோ
இறந்து போன
அந்தச் சிறுவனைப் பற்றி
இப்பொது நான்
அதிகம் கவலைப்படுவதில்லை..

மரத்தில் இருந்து
ஒரு இலை நழுவி
விழுவது போல்
அந்த சிறுவனும்
நழுவியிருக்கலாம்..

காலத்தைக் கடக்கும்
எந்திரம் மட்டும்
எனக்குக் கிடைக்குமானால்
சிறகை பிய்த்தெறிந்த
அந்த பட்டாம்பூச்சியிடம்
மன்னிப்புக் கேட்க வேண்டும்..

பழைய டைரியில்
வார்த்தைகள் மட்டும்
எஞ்சியிருக்க
மரித்துப் போயினர்
ஒரு சிறுவனும்..
ஒரு பட்டாம்பூச்சியும்...

இக்பால்
16-11-2003, 05:57 AM
ராம்பால் தம்பிக்கு முதலில் வணக்கம். அப்புறம் எங்கே அந்த தொடர்கதை?
நான் காணவில்லை பகுதியில் உங்களை விளம்பரப்படுத்தியதுதான் நீங்கள்
காணாமல் போனதற்கு காரணம் என்றால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நாட்குறிப்பு திடீரென்று வர என்ன காரணம். எதுவும் தவறு செய்து
விட்டீர்களா? யார் மனதையும் புண்படுத்தி விட்டீர்களா? மற்றபடி ஒரு
கவிதையாக இது அருமை. பாராட்டுக்கள்.-அன்புடன் அண்ணா.

rambal
16-11-2003, 06:00 AM
அந்தத் தொடர்கதையை நேற்று முதல் மீண்டும் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்..
நீங்கள் தான் இன்னும் பார்க்கவில்லை என்று நினைக்கிறென்..
மற்றபடி, வேலைப்பளு இருந்த காரணத்தினால்தான் மன்றப்பக்கம் வரமுடியவில்லை..
உங்கள் நல்ல மனதிற்கு என் நன்றி..
இந்தக் கவிதையைப் பற்றி நண்பன் கண்டிப்பாக விளக்கம் கொடுப்பார்.
இல்லையெனில் நாளை நான் கொடுக்கிறேன்..

இக்பால்
16-11-2003, 06:12 AM
தம்பி ... தொடர்ச்சி வெளி வந்து விட்டதா? உடனே போய் பார்க்கிறேன்.
இரண்டு நாள் வாரவிடுமுறையில் இருந்தேன். அதுதான் பார்க்கவில்லை.
நண்பன் நிச்சயமாக தெரிந்திருக்கும் பட்சத்தில் விளக்கம் சொல்வார்.
பதிலுக்கு நன்றி தம்பி. -அன்புடன் அண்ணா.

Emperor
16-11-2003, 06:27 AM
நீண்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ண்ட இடைவெளிக்கு பின் வந்த நமது நன்பர் ராம்பால் அவர்களின் டைரிகுறிப்பு அருமை அருமை
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த ரம்பால் அவர்களே, வாழ்த்துக்கள்

rambal
16-11-2003, 09:11 AM
தொடரும் அடுத்த கவிதை...


இடமாற்றங்களில்
சொல்லப்படும்
புதிய கட்டுக் கதைகள்...

நடந்தேறிய சாதாரண
சம்பவங்கள் கூட
சுவாரஸ்யமாய்..

அசிங்கங்கள்
மறைக்கப்பட்டு
பொய்யான புனிதம் மட்டும்
சொல்லப்படும்...

மனசாட்சிக்கு பயந்து எழுதிவைத்த
ஆபாசங்களும், அவலங்களும்
பழைய டைரியில்
சாசுவதமாய் ஒரு மூலையில்...

இக்பால்
16-11-2003, 09:12 AM
எனக்கு எப்பவும் ராம்பால், எம்பரர் ஒரு சின்னக் குழப்பம்.
யார் யாரென்று! இப்பொழுதெல்லாம் கொஞ்சம் முன்னேற்றம்.
-அன்புடன் அண்ணா.

இக்பால்
16-11-2003, 09:45 AM
சுவாரஸ்யமாய்த்தான் போகிறது. ஆனால் யார் மனதையும் புண்படுத்திவிடக்
கூடாது. இரண்டாவது கவிதையில் ஒரு பயங்கரமான உண்மையைச் சொல்லி
இருக்கிறீர்கள். இந்த மாதிரி கருவில் நிறைய திரைப்படங்கள் வந்து
இருக்கிறது. உண்மையிலும் நிறைய மனிதர்கள் இருக்கலாம்.
கவிதைக்கு பாராட்டுத் தெரிவித்து தொடர வாழ்த்துக்கள்.
-அன்புடன் அண்ணா.

rambal
16-11-2003, 10:03 AM
அது பத்து ஆண்டுகளுக்கு
முந்தைய சம்பவங்களை
சுமந்து கொண்டிருக்கும்
சுமைதாங்கி..

பக்கங்கள் புரட்டுகையில்
விதவையாய் ஒரு பக்கம்..
வார்த்தைகள்
ஏதுமற்ற அநாதரவாய்..

அந்த நாளில்
என்னவெல்லாம் நடந்திருக்கக்கூடும்?

கண்டிப்பாக நட்சத்திரத்திற்கு
வால் முளைத்திருக்காது..

எலக்ட்ரானை விட சிறிய குவார்க்குகள்
பிரளயம் ஏற்படுத்தியிருக்காது..

பிரபஞ்சத்துளி ஏதும்
பூமிக்கு வந்திருக்காது..

அமாவசையோ பௌர்ணமியோ
கிடையாது..

முதல் முத்தம்
கடைசி பப்
இழுத்த நாளாக இருக்காது..

பின் ஏன் வெள்ளையாய்?

அநேகமாய் அன்று
எல்லா இயக்கங்களும் வழக்கம்போலவே
நடந்திருக்கலாம்..

எல்லாநாளும் போலவே அந்த நாளும்..

வேறு என்ன பெரிதாய் இருக்கப்போகிறது
எதுவும் எழுதாமல் விட்டுப்போன
அந்த தேதியில்...

இக்பால்
16-11-2003, 10:07 AM
மருத்துவமனையில் படுக்கையில் சுயநினைவு இல்லாமல் இருந்திருப்பாரோ?

முத்து
16-11-2003, 04:57 PM
ராம்பால் அவர்களே ...
தொடர்ந்து திடீரென நிறைய எழுதிவிட்டீர்கள் ...
படித்துமுடிக்கவே சிலகாலம் ஆகும்போல் இருக்கிறது ...
அப்புறம் புரிய ? ....

ஒரு இலக்கியப் பாடல் நினைவுக்கு வருகிறது ...
அது குண்டல்கேசியா... அல்லது வளையாபதியிலா என்று நினைவில்லை ...
பாடலின் சாராம்சம் இதுதான் ....

ஓ... மனிதனே ...
இன்று மொத்தமாய் இறந்த அவனுக்காய் ஏன் அழுகிறாய் .. ?
பிஞ்சுக் குழந்தை இறந்து பாலகனாய் ஆனது ..
பாலகன் இறந்து காளையானான் ..
காளை இறந்து இன்னொருவன் ..
இப்படி தினம் தினம் இறந்தவனுக்காய் அழாதபோது
இப்போது மட்டும் நீ ஏன் அழுகிறாய் .... ?

இவ்வாறு வரும் அப்பாடல் ....


இங்கே ..
ஒரு பழைய டைரி வருத்தப்படுகிறது ...
பாலகனுக்காய் மட்டுமல்லாமல் ..
அவன் பிய்த்தெறிந்த பட்டாம்பூச்சியின் இறகுகளுக்காகவும் ..

பட்டாம்பூச்சி என்பது பார்த்து ரசிக்கமட்டுமே ...
அதன் இறகுகள் அவை பறக்க மட்டுமே ...
என்றாலும் அது பாலகனுக்குத் தெரியுமா என்ன .. ?
தெரிந்தாலும் புரியாத வயது அது ..

அப்பாலகனும் இறந்தபின்னர் ..
மென் வண்ணத்துப் பூச்சியிடம் பாலகனுக்காய்
யார் யாரிடம் மன்னிப்புக் கேட்பது .. ?
நான் கேட்டாலும் நீங்கள் கேட்டாலும் ஒன்றுதானே ..

rambal
16-11-2003, 05:06 PM
கவிதைக்கு விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி..
நண்பன் செய்வார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் நீங்கள்
கொடுத்துவிட்டீர்கள்..
நன்றி.. நன்றி..

lavanya
16-11-2003, 06:57 PM
ராம்பாலின் கவிதை வரிகள் அற்புதம்....மீண்டு(ம்) தொடங்கியிருப்பதற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....

இளசு
16-11-2003, 09:19 PM
தமிழ்மன்றம் மீண்டும் களைகட்ட ஆரம்பித்துவிட்டது.
இளவல் ராம்பாலின் வருகையால்...

தரமான கவிதைகளின் வற்றா ஊற்றே வருக....
தடைபட்ட காலங்கள் போதும், இனி தொடர்ந்து தருக...
அண்ணனின் வாழ்த்துகள்...


(தம்பி முத்து - அறிவில் எனக்கு அண்ணன் ஆகும் வண்ணம்
அவர் பதிவுகளில் ஒரு பக்குவம் - முதிர்ச்சி காண்கிறேன்.
கண்டு மிக மிக மகிழ்ச்சி கொள்கிறேன்..)

இக்பால்
17-11-2003, 10:49 AM
எங்கே உனது(உங்கள்) அடுத்த குறிப்பு(கவிதை) ?

Nanban
17-11-2003, 01:37 PM
சற்று ஓய்வெடுத்து திரும்பு முன் பல பதிவுகள்... கவிதைப் பதிவுகள்...... எங்கே சற்றே தொய்வு விழுகிறதோ என்று நினைத்திருந்த பொழுது, ராம்பால் புது மழையாக வந்து விட்டார். பெருவெள்ளமாக இனி கவிதைப் பக்கம் செழிக்கும்.......

முத்து எழுதிய விளக்கம் அருமை..... செய்த தவறுகளுக்கெல்லாம் பின்னோக்கி சென்று தவறு என்று மன்னிப்பு கேட்க வேண்டுமானால், கால யந்திரம் கூட உபயோகப்படாது. மேலும், பின்னோக்கி சென்று மன்னிப்புகள் கேட்பதை விட அவற்றை இன்று நினைத்து வருந்திவிட்டு, மேற்கொண்டு அவ்விதம் நடக்காமல் இருக்காமல் பார்த்ததுக் கொள்ளலாம்.....

வார்த்தைகள் இருக்கின்றன - சிறுவனும் பட்டாம்பூச்சியும் மரித்து விட்டனர் என்ற பொழுதிலே, தவறு செய்தவனும், பாதிக்கப் பட்டவனும், இல்லாமல் போய் விட்ட நிலையில், நினைவுகள் வார்த்தை கூடுகளாக நிற்கின்றன - செய்த தவறின் பரிமாணங்களை உணர்த்தியவாறு -

எனக்குப் பிடித்த வரிகள்

மரத்தில் இருந்து
ஒரு இலை நழுவி
விழுவது போல்
அந்த சிறுவனும்
நழுவியிருக்கலாம்..

சிறு வயதில், தவறு செய்து விட்டு, பின்னர் அது தவறு என்று உணர்ந்ததும், மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்து, அறியா பிள்ளையாக, வேறிடத்தில் அமர்ந்து கொள்வதும் - சிறு குழந்தையின் செயலை லகுவாக படம் பிடிக்கிறது - ராம்பாலின் கவிதை காமிரா. மேலும் ஒரு சிறப்பு, அத்தகைய தவறுகளை மீண்டும் செய்ய அந்த சிறுவன் தயங்குவான். அது தான் உதிர்ந்த இலை...... மீண்டும் மரம் ஏறி ஒட்டிக் கொள்ளதல்லவா அந்த இலை.....

rambal
17-11-2003, 06:25 PM
இரு பக்கங்களுக்கிடையில்
ரோஜா ஒன்று
உலர்ந்து போயிருந்தது..

பக்கங்கள் காய்ந்து போன
ரோஜாவின் வாசத்தை
சுமந்து கொண்டிருந்தது..

குறிப்புகள் ஏதுமற்று
வெறுமையாய் இருந்தன
பக்கங்கள்..

குறிப்புகள்
என்னவாயிருக்கும் என்று
குழம்பியது மனசு..

குறிப்புகளாக
காய்ந்த ரோஜாவும்
வாசனையும்
சாசுவதமாக...

Nanban
17-11-2003, 06:33 PM
காய்ந்து சருகாக
அல்ல
கருப்பு வெளுப்பு
நினைவுகளாக
மலரின் மரணம்.....

நாசி மட்டும் பார்க்கும்
பழைய நினைவுகளை...

பலமுறை சுகித்து அறிந்த பசுமையான இன்பம்.......

மீண்டும் ஒருமுறை அந்த மகானுபவம்........

பாராட்டுகள், ராம்பால் அவர்களே......

(இன்று வெளியான கவிதைகளையும், பதியப்பட்ட நேரத்தையும் யாராவது பார்த்தால், இது என்ன chat roomஆ என நினைத்து விடுவார்கள்......)

முத்து
17-11-2003, 06:39 PM
நுகர மட்டுமே தெரிந்த
நாசி பார்க்கும் அதிசயம் ...
அற்புதம் .... ஆனந்தம்.. !

rambal
17-11-2003, 06:40 PM
உண்மையைச் சொல்லப் போனால்,
பழைய டைரியும் அதில் காணப்படும் குறிப்புகளும்
என்று இல்லை.. பழைய டைரிக்குறிப்புகள் என்றுதான் ஆரம்பத்தில்
தலைப்பிட்டிருந்தேன்..
அதன் சாராம்சமாக ஒரு கவிதை எழுதினேன்..
குறிப்புகள் என்று தலைப்பிட்டுவிட்டு ஒரு கவிதை மட்டும் கொடுத்தால்
நன்றாக இருக்காது என்று எண்ணினேன்..
அதன்பின்புதான் பலபொருளில் கவிதை எழுதுவதை விட ஒரு பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு
அதைப் பற்றி மட்டுமே கவிதை எழுதினால் எனும் எண்ணம் வந்தது..
அதன் விளைவுதான் இந்தத் தொகுப்பு ஆரம்பமான கதை..
முதல் கவிதைக்கு முத்துவும், நண்பனும் விளக்கம் கொடுத்திருந்தீர்கள்..
இருவரும் சரியான விளக்கமே கொடுத்திருந்தீர்கள்...
காலத்தை கடப்பதெப்படி என்று எனக்குள் பல நாட்களாக கேள்வி உண்டு..
அப்படி கடக்கமுடியுமானால்?
இதைப்பற்றி வேறு ஒரு கவிதை மற்றொரு சமயம் தருகிறேன்..
விஞ்ஞானத்திற்கே குழப்பத்தை உண்டு பண்ணும் இந்தக் கேள்வி
என்னுள் பல நாட்கள் அரித்துக்கொண்டிருந்தது..
இந்த கணம் நான் இங்கு இயங்குகிறேன் என்பதே உண்மை..
நேற்று நான் வாழ்ந்தேன் எனும் பொழுதே நேற்றைய மனிதன் நான் இல்லை..
அதற்கான சாட்சிகளும் இல்லை.. முடிந்தால் நேற்று என்பதை இன்று என் முன் நிறுத்துங்கள்..
அந்தச் சிறுவனும் அப்படித்தான்.. என்னில் இருந்து ஒரு இலை போல் நழுவிவிட்டான்..
அந்தச் சிறுவன் இறந்துவிட்டான்..
அவன் பிய்த்தெறிந்த பட்டாம்பூச்சியும்..
வேண்டுமானால், காலத்தைக் கடக்க முடியுமானால் மீண்டும் அந்த சிறுவனாக மாறி
அந்த பட்டாம்பூச்சியிடம் மன்னிப்பு கேட்கலாம் என்பதாக செல்கிறது கவிதை..

நன்றி...
ஊக்கமளிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்...

Nanban
17-11-2003, 06:56 PM
அதன்பின்புதான் பலபொருளில் கவிதை எழுதுவதை விட ஒரு பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு
அதைப் பற்றி மட்டுமே கவிதை எழுதினால் எனும் எண்ணம் வந்தது..


எல்லோருமே ஒரு குறிப்பிட்ட கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை ஒட்டி கவிதை எழுதுவதைப் பார்த்ததும் தான் நானும் தொடங்கினேன் - தேடல்கள் தலைப்பை.........

இறைவனைத் தேடி சந்தேகங்களும், விளக்கங்களுமாய் அலை பாய்ந்து கொண்டிருக்கும் என் மனதில் தோன்றியவை ஒரே இடத்தில்.......

மற்ற கரு தனிக் கவிதைகளாக......

lavanya
18-11-2003, 07:13 PM
ராம்பால்ஜி தொடரட்டும் உங்கள் டைரி குறிப்புகள். நிறைய
டைரிகளில் காய்ந்த ரோஜா....நிறைய டைரிகளில் குட்டி போடுவதற்காக வைக்கப்பட்ட மயிலிறகுகள்.....

ம்....நன்றி ராம்பால்ஜி கடந்த கால நினைவுகளை தொட்டு
எழுப்பியமைக்கு!

Nanban
19-11-2003, 04:24 AM
கவிதைக்கு விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி.. (முத்து...)
நண்பன் செய்வார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் நீங்கள்
கொடுத்துவிட்டீர்கள்..
நன்றி.. நன்றி..

முத்துவிற்கு நல்ல கவிதை ரசனி உண்டு என்பது எனக்குத் தெரியும். அவர் பட்டாம்பூச்சிக் கவிதை ஒன்றை தந்திருக்கிறார்...... ஆங்கிலத்தில் எழுதும் இந்தியக் கவிஞர்கள் என்ற தலைப்பில். மொழி பெயர்ப்பு தான் என்றாலும், நல்ல கவிதை உணர்வு இல்லாமல் செய்து விட முடியாது.

நல்ல வாசகத் திறமை இருக்கிறது. அத்துடன் நிறுத்திக் கொள்ளக் கூடாது என்பது எனது வேண்டுகோள். வாசித்து, வாசித்து பின்னர் எழுதத் தொடங்கவேண்டும். அது தான் மேலும், மேலும் வாசிக்கத் தூண்டும்.

ஆக, முத்துவிற்கு ஒரு வேண்டுகோள் - எழுதுங்கள் - கவிதைகளை. வாசியுங்கள், மேலும், மேலும் கவிதைகள் எழுதுவதற்கு......

இளசு
19-11-2003, 05:42 AM
நண்பனின் கருத்தை பலமாய் ஆமோதிக்கிறேன்.
அண்மையில் முத்துவின் பதிவுகள்
என்னை ஆட்கொண்டுவிட்டன.

முத்து
19-11-2003, 04:55 PM
நன்றிகள் பலப்பல நண்பன் அவர்களுக்கும் , அண்ணன் இளசுவுக்கும் ...
....முயற்சி செய்கிறேன் ....

rambal
20-11-2003, 04:18 AM
குறிப்பு:
14-06-1993
இன்று அவளைப் பார்த்தேன்.. ஒரு தேவதைக்குரிய அம்சத்தோடு அவள் இருந்தாள்.

பின் குறிப்பு:
குறிப்பு அவ்வளவுதான். அப்போது அநேகமாக என் வயது ஒரு பதினைந்து அல்லது பதினாறு இருக்கும்.
இப்படி ஒற்றை வரியை வைத்துக் கொண்டு என்ன செய்ய?


காணும் பெண்கள்
எல்லாம் தேவதையின்
வாரிசுகள்

ராஜகுமாரனை தரிசிக்க
வரிசை வரிசையாக
வந்து போகின்றனர் தேவதைகள்
மங்கலான கனவுகளில்..

இரவுகளில் கற்பனை
செய்து கொள்வதற்காக
பகலில்
பேருந்து நிலையத்தில்
தேவதைகள்
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்..

தினம் ஒரு தேவதையோடு
சல்லாபம் முடிந்த பின்
அடுத்த தேவதைக்காய்
காத்திருக்கும் இரவு..

காணும் பெண்கள்
எல்லாம் தேவதையின்
வாரிசுகள் என்று
எண்ணும் வயது...

rambal
08-04-2004, 04:48 PM
மீண்டும் பழைய டைரிக்குறிப்புகளை இங்கு கண்டதும்
கடந்த காலத்திற்கு சென்று விட்ட பிரமை...
தொடர்வேன்...

kavitha
19-05-2004, 03:39 AM
ஒருவேளை
நான் மரிப்பதற்கு முன் என்றோ
இறந்து போன
அந்தச் சிறுவனைப் பற்றி
இப்பொது நான்
அதிகம் கவலைப்படுவதில்லை..


இது தாங்கள் எழுதிய பழைய (டைரி) கவிதை; இதேபோல் ஒரு கவிதை நீங்கள் சமீபத்தில் அளித்த ஜென் கவிதை தொகுப்பிலும் உள்ளது!
என்னே ஆச்சரியம்!!


Posted: Sat Feb 14, 2004 7:58 pm Post subject:

--------------------------------------------------------------------------------

வாழ்வு பறிபோனதற்குத்
துக்கித்திருப்பேன்,
ஏற்கனவே
நான் இறந்துவிட்டேனென
அறியாமலிருந்தால்.

எழுதியவர்: ஒட்டா டோக்கன்.