PDA

View Full Version : மின்னஞ்சல் கதைகள் : 13 - நிலாவும் நானும்



பாரதி
05-10-2010, 05:51 AM
மின்னஞ்சல் கதைகள் - 13
நிலாவும் நானும்



"இராஜேஷ்....... இராஜேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்......."

சட்டுன்னு முழிப்பு வந்துச்சு எனக்கு.

"இராஜேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்................"

என் பொண்டாட்டி கத்துற சத்தம்.
என்ன ஆச்சு அவளுக்கு...? எப்போதைக்கும் சத்தம் போடுறதே வேல அவளுக்கு.
தூங்கறப்ப கூட நிம்மதியா இருக்க முடியலயே.
எனக்கு கோவமா வந்துச்சு.
போர்வைய தூக்கிப்போட்டுட்டு எந்திரிச்சேன்.

"இராஜேஷ்ஷ்ஷ்....."

"இந்தா வரேன் மீரா.... என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி கத்தறே...?"

வேகமா படியில எறங்கி வந்தேன்.

மீரா ஊட்டி விட்டுகிட்டு இருந்தா. நிலா - என்னோட ஏழு வயசுப்பொண்ணு.

ரெண்டு பேரும் சந்தோசமா டிவிய பார்த்துகிட்டு இருந்தாங்க.

எனக்கு ஒண்ணும் புரியல. ஏதோ நடந்திருக்கும்னு ஓடி வந்தா.... இங்கே எதுவுமே நடந்ததா தெரியலயே... எல்லாம் அதது இடத்துல இருக்கு.

புரியாம ரெண்டு பேரையும் பாத்தேன். மீரா என்னப் பாத்து லேசா சிரிச்சா. இப்ப எனக்கு குழப்பம் கூடிப்போச்சு. என்ன நடக்குது இங்க..? கனவு காணுறேனா..?

"மீரா...."

"சொல்லுங்க இராஜேஷ்..."

"என்னய கூப்பிட்ட.... இல்ல... கத்துன...!"

"ஆமா... நீங்க சொல்றது சரிதான்!"

"எல்லாம் சரியாத்தான இருக்கு.... ஏன் அப்படி கத்துன..?"

"ஏன்னா இப்ப எட்டு மணியாகப் போகுது!"

அவ என்ன சொல்றான்னே எனக்கு சரியா விளங்கல. சும்மா விளையாடுறாளோ..? எட்டு மணியானதுக்கா இதெல்லாம்..? நான் ஆபிஸுக்கு ஒம்போது மணிக்கு போனா போதுமே..?

"சரி. எட்டு மணியாகப்போகுது. அதனாலென்ன....?"

"இராஜேஷ்..... மறந்துட்டேன்னு எங்கிட்ட சொல்லாதீங்க. இன்னைக்கு தேதி 27"

"27....? என்ன 27?

"நெனவில்லேன்னு எங்கிட்டே சொல்லாதீங்க"

என்னய கொல்ற மாதிரி மீரா பாத்தா. இன்னைக்கு அவளோட பொறந்த நாளோ..? இல்லையே... வருசக்கடைசியிலதான அவளுக்கு பொறந்த நாளு வரும். அப்போ நிலாவோட பொறந்த நாளா..? இல்ல.. போன மாசம்தானே கொண்டாடுனோம்.ம்ம்ம்ம்... ஆ... ஒரு வேள கல்யாண நாளா இருக்குமோ..?

"ஹைய்யோ.... மீரா... நம்மோட கல்யாண நாள நான் எப்படி மறப்பேன்..?"

"என்னது....? பொறந்த நாளா.....????"

அப்போ இன்னைக்கு கல்யாண நாளு கிடையாதுன்னு தெளிவாயிடுச்சு. 27...? 27ன்னா என்னா..? இராஜேஷ்.... கண்டுபுடிடா... நல்லா யோசி.....ம்ம்... எதுவும் என் மண்டைக்கு தட்டுப்படலை. என்னோட பொண்ணப்பாத்தேன் ஏதாவது க்ளூ கிடைக்குமான்னு. அவ அவளோட மூஞ்சிய திருப்பிகிட்டா. இந்த பொம்பளைங்களே இப்படித்தானோ.. நேரடியா எதையும் எப்பவும் ஏன் சொல்றதில்ல. எனக்கு இருக்குற வேலையில எனக்கு எப்படி இந்த தேதி எல்லாம் நெனவுக்கு இருக்கும்..? நான் ஏதாவது சொன்னா மீரா சண்ட போட ஆரம்பிச்சுடுவா.. ஒம்போது மணிக்கு ஆபிஸில மீட்டிங்க மிஸ் பண்ண வேண்டியதிருக்கும். முழு நாளும் வேஸ்டாப் போயிரும். அதனால மீராகிட்ட சரண்டர் ஆயிடலாம்னு முடிவு செஞ்சேன்.

"மீரா.... மன்னிச்சுக்கோ... எனக்கு நெனவில்ல. இருமலுக்குன்னு டானிக் சாப்பிடேனா.... ஏதோ ஆயிருச்சு. என்னோட நெனவு சக்தி கொறஞ்சுகிட்டே வருது போல.... ம்ம்.. இன்னைக்கு என்ன.?"

மீரா என்னோட சால்ஜாப்ப ஏத்துக்குற மாதிரியே தெரியல.

"ப்ளீஸ் மீரா... என்னான்னு சொல்லு"... கெஞ்சுற மாதிரி கேட்டேன்.

"இராஜேஷ்... நெஜமாவே ஒங்களுக்கு எதுவும் நினைவில் இல்லையா..?"

என்னோட தலய இடதும் வலதுமா ஆட்டுனேன். என்னோட மூஞ்சிய அம்னீசியா வந்த நோயாளி மாதிரி வச்சுக்க முயற்சி பண்ணேன்.

"இராஜேஷ்.... நிலாவோட ஸ்கூல்ல அனுவல் டே செலிபரேசன்ல இன்னைக்கு 'அப்பாக்கள் தினம்'. நான் ஒங்ககிட்ட மூணு வாரமா சொல்லிகிட்டு இருக்கேன். இப்ப எனக்கு தெரியாதுன்னு சொல்லாதீங்க. நிலாவோட இன்னைக்கு அவ ஸ்கூலுக்கு போறேன்னு பிராமிஸ் பண்ணி இருக்கீங்க."

நான் அந்த மாதிரி எதுவும் சொன்ன மாதிரி நினைவுக்கே வரல.." மீரா... நான் அப்படி சொன்னேனா..?"

"ஆமா.... நீங்க சொன்னீங்க."

"எப்ப அந்த ஃபங்ஷன் ஆரம்பிக்குது?"

"எட்டரை மணிக்கு ஆரம்பிச்சு ஒரு மணிக்கு முடியுது."

அடக்கடவுளே... ஒம்போது மணிக்கு எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. எப்படி அட்டெண்ட் பண்ணுவேன்..?

"மீரா... நேத்தே என்கிட்ட இத சொல்லி இருக்கலாமில்ல..?"

"நான் சொல்லலியா...? நல்லா இருக்கே கத! ஒங்க ஆபிஸுக்கு ஃபோன் பண்ணி சொல்லல..? சாயந்திரம் பெட்டுக்கு போறதுக்கு முன்னாடி சொல்லல..?"

நான் சரியா கேக்கல போலிருக்கு... இல்ல... என்னோட ஞாபக மறதியா இருக்கும்... எப்படியோ போகட்டும்.

"மீரா... இதுக்கு நீ போகக்கூடாதா....? நான்தான் போகணுமா..?"

"இராஜேஷ்..... இது 'அப்பாக்கள் தினம்'. அப்பா...........க்கள் தினம்"

"ஆமால்ல.... ஆனா..."

" என்ன ஆனா....?"

".....வேற நாளா இருந்தா பரவால்ல..."

"என்னது...? ஸ்கூல் பங்ஷன போஸ்ட்போன் பண்ணச் சொல்றீங்களா..?"

"இல்ல.. அப்படியில்ல...... நான் என்ன சொல்ல வரேன்னா....."

"என்ன சொல்ல வர்றீங்க... சொல்லுங்க இராஜேஷ் சொல்லுங்க.... நிலாவுக்கு பண்ண பிராமிஸ விட்டுட்டு அவள டிஸப்பாயிண்ட் பண்ணப்போறீங்களா..?"

எதுவுமே தோணாம அப்படியே நின்னேன். மகள பாத்தேன். நல்லா டிரெஸ் பண்ணி போறதுக்கு ரெடியா இருந்தா. எப்ப வேணாலும் அழறதுக்கு ரெடியா இருக்குறது போல தெரிஞ்சது. மீராவப் பாத்தேன். அப்படியே என்ன எரிக்கிற மாதிரி பாத்தா. ஒரு செகண்ட் எல்லாத்தையும் கணக்கு போட்டு பாத்தேன். மீட்டிங் முக்கியம். அத நிச்சயம் மிஸ் பண்ணமுடியாது. அரை நாள்ங்கிறது ரொம்ப ஜாஸ்தி. நெறய விசயம் நடக்காம போயிடும். நிலாவோட போகலன்னா மீராவ பாக்க முடியாது. மீட்டிங்க வேணும்னா ஒரு ஒன் ஹவர் போஸ்ட்போன் பண்ணிட வேண்டியதுதான்; பேருக்கு ஃபங்ஷன்ல தலய காமிச்சுட்டு ஆபிஸுக்கு எஸ்கேப் ஆயிட வேண்டியதுதான்.

"மீரா... நான் ஸ்கூலுக்குப் போறேன். ஆனா ஒரு மணி நேரம் மட்டும்தான் இருப்பேன்..."

"இல்ல..... நீங்க அப்படி.........."

மீரா சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடி நிலா ஓடி வந்து சொன்னா.." தேங்க்ஸ் டாடி. ஒரு மணி நேரம்.. அம்மா... ஒரு மணி நேரம் போதும்மா. சண்ட போடாதீங்க ப்ளீஸ்.. அப்பா... சீக்கிரம் ரெடியாகுங்க..."

"ஒங்களுக்கு அவளோட ஸ்கூல் பேரு தெரியுமா..? எந்த வழியில போகணும்னு தெரியுமா..? இல்ல.. அதையும் நான்தான் சொல்லணுமா...?" கோவத்தோட மீரா கேட்டுட்டு ரூமை விட்டுப் போனா.

அவசர அவசரமா ரெடியானேன். மேனேஜரை கூப்பிட்டு என்னோட பொண்ண ஸ்கூல்ல விட்டுட்டு வரேன்னும் அதனால மீட்டிங்க பத்து மணிக்கு வச்சுக்கலாம்னும் சொன்னேன்.

நிலாவ கூப்பிட்டுட்டு அவ ஸ்கூலுக்குப் போனேன். அவ ஸ்கூலுக்கு போறது இது ரெண்டாவது தடவ. மொத தடவ ஸ்கூலுக்கு வெளிய அவள ட்ராப் பண்ணிட்டுப் போயிருக்கேன். ஸ்கூலுக்குள்ளப் போறது இதுதான் மொத தடவ.

ஸ்கூல்ல பெரிய பிளேகிரவுண்ட் இருந்துச்சு. கொழந்தங்க விளையாடுற மாதிரி சின்ன பார்க்கும் இருந்துச்சு. டெம்பரரி ஸ்டால்ஸ் கொஞ்சம் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. நிறைய குழந்தைங்க அவங்க அப்பாக்களோட இங்கயும் அங்கயும் போயிட்டு வந்திட்டு இருந்தாங்க.

யாரோ என் கைய தொடுற மாதிரி இருந்துச்சு.

சுருட்டை முடியோட அழகா சிரிச்சுகிட்டே ஒரு கொழந்த "நீங்கதான் நெலாவோட அப்பாவா...?" அப்படீன்னு கேட்டா.

"ஆமா... இவருதான் என்னோட டாடி.." நிலா சொன்னா. அவ கொரல்ல அப்படி ஒரு உற்சாகம். இன்னும் கொஞ்சம் கொழந்தைங்க எல்லாம் ஓடி வந்தாங்க. நிலா அவங்க எல்லாரையும் இண்ட்ரடியூஸ் பண்ணா.

"டாடி... இது ரோஹித், இது ஜாஹீர், அனிஸ், சில்வியா, திவ்யா..."

எல்லோருக்கும் 'ஹாய்' சொன்னேன்.

"டாடி.. டாடி... ஜாஹீர்தான் என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்". அந்த அழகான பையனப்பாத்து சிரிச்சேன்.

"அங்கிள். உங்களுக்கு நெறய வேல இருக்கு. ஒங்களால வர முடியாதுன்னு நெலா சொன்னா. அவளும் இன்னைக்கு வரமாட்டேன்னு சொன்னா.. உங்களுக்கு இன்னைக்கு வேலை இல்லதானே அங்கிள்..?" அப்படீன்னு ஜாஹீர் கேட்டான்.

எனக்கு என்னமோ மாதிரி இருந்துச்சு. "இல்ல ஜாஹீர். இன்னைக்கு எனக்கு வேல இல்ல" அப்படீன்னு சொன்னேன்.

"டாடி. கேம்ஸ் விளையாட கூப்புடுறாங்க.."

ஜாஹீர் ஓடி அவனோட அப்பாகிட்ட சேந்துகிட்டான். அங்கே இருந்து எனக்கும் நிலாவுக்கும் கைய காமிச்சான்.

நிலாவோட கைய புடிச்சுகிட்டு ஸ்டேஜுக்குப் போனேன். அங்க மொத கேம் பத்தி சொல்லிகிட்டிருந்தாங்க. அப்பாக்க கையில் அவங்க கொழந்தைங்களப் பத்தி கேள்வி இருக்குற தாள கொடுப்பாங்களாம். அப்பாக்கள் அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் எழுதணுமாம். அத கொழந்தைகளோட வெரிஃபை செய்வாங்களாம்.

நிலா ரொம்ப உற்சாகமா இருந்தா. எப்போ போட்டிக்கு போவோம் அப்படீங்கிற மாதிரி ஆர்வம் அவகிட்ட இருந்தது. நான் அவள நல்லாப் பாத்தேன். திடீர்ன்னு எனக்கு அவகிட்ட இருந்து ரொம்ப விலகிப் போனது போல தோணிச்சு. அப்போதான் எம்மகளப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது அப்படீங்கிற நெஜம் சுட்டுச்சு.

"நிலாக்குட்டி... நாம அடுத்த விளையாட்டுல சேரலாம்மா..வந்து......இந்த விளையாட்டு....."

நிலா அப்படியே என்ன ஊடுருவிப் பாத்தா. அவ அழப்போறா.. இல்ல கத்தப்போறா... இல்ல வேற ஏதாவது செய்யப்போறான்னு நெனச்சேன். அவ ஒன்னுமே சொல்லாம அவளோட ஜீன்ஸ் பேன்ட்டிலிருந்து ஒரு சின்ன பேப்பர எடுத்து எங்கிட்ட கொடுத்தா.

ஓண்ணும் புரியாம மெதுவா அந்த பேப்பரை விரிச்சுப்பாத்தேன்.

"என்னுடைய பெயர் நிலா. என்னுடைய பிறந்த நாள் மார்ச் 21. எனக்கு ஏழு வயதாகிறது. எனக்கு பட்டாம்பூச்சி, சூப்பர் மேன், டயரி மில்க், பெயிண்டிங், டான்சிங் எல்லாம் பிடிக்கும். நான் ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்ட் ஏ செக் ஷனில் படிக்கிறேன். எனக்கு டோரா, மாம்பழம், ஆப்பிள், ஃபிரைட் ரைஸ் பிடிக்கும். எனக்கு வாழைப்பழம் பிடிக்காது. நான் பூஸ்ட் குடிப்பேன். எனக்கு மஞ்சள் நிறம்னா பிடிக்கும். எனக்கு செல்லப்பேரு "தேனு"..... இப்படியே அந்த லிஸ்ட் பெரிசா இருந்துச்சு. அங்கங்க சின்ன சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட...

நிலாவப்பாத்தேன். "டாடி... அதப்படிங்க. அவங்க இந்த கேம்ம வச்சிருப்பாங்கன்னு எனக்குத் தெரியும். அதனால ஒங்ககிட்ட கொடுக்குறதுக்காக ரெண்டு நாளக்கி முன்னாடியே நான் எழுதி வச்சிட்டேன். என்னப் பத்தி ஏதாவது கேட்டிருந்தாங்கன்னா எழுத ஒங்களுக்கு ஈஸியா இருக்கும். படிச்சுட்டு நீங்க ஸ்டேஜுக்குப் போங்க டாடி" அப்படீன்னு சொன்னா.

எம் பொண்ணு எழுதி இருந்ததுல நெறய விசயம் எனக்குத் தெரியாது. எனக்கு தொண்டையில ஏதோ கட்டி அடைக்கிற மாதிரி இருந்துச்சு. ஸ்டேஜுக்குப் போய் கொஸ்டின் சீட்ட வாங்குனேன். நிலா ஏற்கனவே எனக்கு எல்லாத்தையும் எழுதிக்கொடுத்திருந்த படிச்சதால... அந்த கேள்விகள் எல்லாத்துக்கும் பதில் எழுதுனேன். அப்புறமா அவங்க நிலாவ ஸ்டேஜுக்கு வரச்சொன்னாங்க. அவகிட்ட கேள்விகள கேட்டாங்க. எங்களுக்கு ரெண்டாவது ஹையெஸ்ட் மார்க் கெடச்சது!

நிலா ஓடி வந்து அப்படியே என்ன கட்டி புடிச்சுகிட்டா.

ஒரு பொம்மை கிடாரை பரிசா கொடுத்தாங்க. எல்லோரும் எங்கள கன்கிராஜுலேட் பண்ணாங்க.

அந்த கேம்ல ஜெயிச்சாலும் கூட தோத்தவனாதான் எனக்கு தோணிச்சு. நான் அதுக்கு தகுதியானவனில்லன்னு எனக்குத் தெரியும். என்னோட கொழந்தையப் பத்தி எதுவும் எனக்குத் தெரியலயே..

நிலாவுக்கு ஒரே சந்தோசம். கிடார ஜாஹூர்கிட்ட காட்டும் போது ஒரே பெருமை.

என்ன கொழந்த இவ..? அவங்கப்பனப்பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டு, அவன கை விட்டுறக்கூடாதுன்னு, எழுதி எப்படியெல்லாம் ப்ரிபேர் செஞ்சி வச்சிருக்கா..! என்னோட நெஞ்சும் ரொம்ப பாரமான மாதிரி இருந்துச்சு. அவளோட கூந்தல மெல்ல கோதி விட்டேன். என்னோட பொண்ணுதான் எவ்ளோ அழகு... எவ்வளவு அழகான கண்ணு... றெக்கை மாத்திரம் இருந்தா அப்படியே தேவதைதான்.

இத்தன வருசமா நான் அவள சரியா கவனிச்சதே இல்ல. அழகான கண்ணு மாதிரியே சிரிக்கும் போது விழும் குழியும்.... மீரா மாதிரியே... உதடு என்ன மாதிரி இருக்குதோ..? எப்படி நான் இதுவரைக்கும் இதையெல்லாம் கவனிக்காம மிஸ் பண்ணுனேன்?

நிலா என்னை ஸ்டாலுக்கு கூப்பிட்டுட்டுப் போனா. பலூன்.... அப்புறம் கொறிக்கிறதுக்குன்னு அவளுக்கும் ஜாஹீருக்கும் வாங்குனா. அடுத்து வரப்போற கேம் பத்தி அவ பேசிகிட்டு இருந்தா. திடீர்ன்னு என்னோட மொபைல் ரிங் அடிச்சது.

ஓ..... மணி பத்தாயிடிச்சு. நான் நிலாவப்பாத்தேன். அவ மொகம் கொஞ்சம் கொஞ்சமா கருக்க ஆரம்பிச்சது.

அப்செட் ஆன நிலா "டாடி..இப்ப நீங்க போகணுமா..?" அப்படீன்னு கேட்டா.

என்னோட மொபைல பாத்தேன். என்னோட மேனேஜர்தான் கால் பண்ணி இருக்காரு. பத்து மணி ஆகிருச்சு. நிலாவப்பாத்தேன். சுத்தியும் பாத்தேன். எல்லாக்கொழந்தைகளும் அவங்க அப்பாக்களோட சந்தோசமாக இருந்தாங்க.

என்னோட ஸ்கூல் நாள நினச்சுப்பாத்தேன். என்னோட அப்பா எல்லா அனுவல் டே, ஸ்போர்ட்ஸ் டேக்கு எல்லாம் வந்து நாள் பூரா என்கூட உக்காந்து என்ன உற்சாகப்படுத்திகிட்டே இருப்பாரு. ஒவ்வொரு நாளும் காலையில ஸ்கூல என்ன விட்டதுக்கு பின்னாடியும் என்னோட கிளாஸுக்குப் போறதுக்கு வரைக்கும் கேட் பக்கத்துலேயே இருந்து பாப்பாரு. சாயந்திரம் என்னை அவரோட சைக்கிள்ல கூட்டிட்டு வரப்ப அன்னைக்கு ஸ்கூல்ல நடந்த எல்லா கதையையும் அவர்கிட்டே சொல்லிகிட்டே வருவேன்.ம்ம்...

நிலாவப்பாத்தேன். எங்கிட்ட சொல்றதுக்காக என்னோட பொண்ணு எத்தன கதைகள அவ நெஞ்சுக்குள்ளே வச்சுருக்காளோ.. தெரியலையே..? இத்தனை வருசத்துல ஒரு பொண் கொழந்தைய பெத்ததுக்குப் பின்னாடி நான் எவ்வளவு நேரம் அவளுக்கு ஒதுக்கி இருப்பேன்..?

நிலாவ பக்கத்துல இழுத்து, அவ நெத்தியில லேசா முத்தம் வச்சு.."இல்லம்மா.. டாடி இன்னைக்கு வேலைக்குப் போகல. நான் இங்கதான் இருப்பேன். நாம ரெண்டு பேரும் எல்லா கேம்ஸையும் விளையாடலாம். நாள் முழுக்க... ஓக்கேவா...?" அப்படீன்னேன்.

"நெஜமாவா டாடி..?" நம்ப முடியாம கேட்டா நிலா.

"ஆமாடி தங்கம்"

"தேங்க்யூ டாடி"... என் கன்னத்துல முத்தம் கொடுத்துட்டு அவளோட பிரண்ட்ஸ்கிட்டே ஓடுனா.

பள்ளிக்கூடம் ஏதாவது புதுப்புது விசயங்களா கத்து கொடுத்துகிட்டேதான் இருக்கு. இந்த தடவ வாழ்க்கையோட அருமையான தத்துவத்தை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கு. என்னோட மேனேஜரைக் கூப்பிட்டு, இன்னைக்கு மகளோட கண்டிப்பா இருக்க வேண்டிய அவசியம் இருக்கு அப்படீங்கிறதால ஆபிஸ் வர முடியாது அப்படீங்கிற சொன்னேன். எல்லாத்தையும் நாளைக்குப் பாத்துக்கலாம். இந்த உலகத்துல யாரையும் விட, நான் நிலாவோட அவசியம் இருக்கணும்கிறத அவர் கண்டிப்பா புரிஞ்சிப்பார்ன்னு நம்புனேன்.

லேசான மனசோட எந்திரிச்சேன். நிலாகிட்ட ஓடிப்போயி, அவளத்தூக்கி, அப்படியே தட்டாமாலை சுத்துனேன்.

மத்தாப்பூ தெறிக்கிற மாதிரி அவ கலகலன்னு சிரிச்சா.

தொண்டையில அடச்சிருந்த கட்டி மெதுவா கரையற மாதிரி எனக்குத் தோணுச்சு.


---------------------------------------


கதையின் மூலம் : தெரியவில்லை.
நன்றி: மூல ஆங்கிலக் கதை ஆசிரியருக்கும், மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கும்.

விகடன்
05-10-2010, 06:46 AM
மனதைக்கனக்க வைக்கும் கதைதான். விரும்பிப்படித்தேன். சிங்கிலா இருக்கும் நான் படிக்கையிலேயே இப்படி இருக்கிறது என்றால், குடும்பத்துடன் பெண் குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் ஒருவர் அலுவலக வேலையால் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை இழந்தவர் படிக்கையில் எப்படியிருந்திருக்கும். கட்டாயம் குற்ற உணர்ச்சி அடித்தொண்டையை அடைத்திருக்கும்.

Akila.R.D
05-10-2010, 07:52 AM
இந்தக்கதையை ஆங்கிலக்தில் படித்துள்ளேன்...

தமிழில் படிக்கும்போது மனதை மேலும் கனக்க வைக்கிறது...

நன்றி பாரதி...

செல்வா
05-10-2010, 09:54 AM
மனதைக் கனக்கவைத்த கதை...
அருமையான மொழிபெயர்ப்பு
பகிர்ந்தமைக்கு நன்றிகள் அண்ணா.!

அன்புரசிகன்
05-10-2010, 10:52 AM
நிலா அப்படியே என்ன ஊடுருவிப் பாத்தா. அவ அழப்போறா.. இல்ல கத்தப்போறா... இல்ல வேற ஏதாவது செய்யப்போறான்னு நெனச்சேன். அவ ஒன்னுமே சொல்லாம அவளோட ஜீன்ஸ் பேன்ட்டிலிருந்து ஒரு சின்ன பேப்பர எடுத்து எங்கிட்ட கொடுத்தா.

ஓண்ணும் புரியாம மெதுவா அந்த பேப்பரை விரிச்சுப்பாத்தேன்.

"என்னுடைய பெயர் நிலா. என்னுடைய பிறந்த நாள் மார்ச் 21. எனக்கு ஏழு வயதாகிறது. எனக்கு பட்டாம்பூச்சி, சூப்பர் மேன், டயரி மில்க், பெயிண்டிங், டான்சிங் எல்லாம் பிடிக்கும். நான் ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்ட் ஏ செக் ஷனில் படிக்கிறேன். எனக்கு டோரா, மாம்பழம், ஆப்பிள், ஃபிரைட் ரைஸ் பிடிக்கும். எனக்கு வாழைப்பழம் பிடிக்காது. நான் பூஸ்ட் குடிப்பேன். எனக்கு மஞ்சள் நிறம்னா பிடிக்கும். எனக்கு செல்லப்பேரு "தேனு"..... இப்படியே அந்த லிஸ்ட் பெரிசா இருந்துச்சு. அங்கங்க சின்ன சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட...

இந்த வரிகளை படிக்கும் போது கண்கள் கலங்கிவிட்டன. எனக்கும் தொண்டையில் ஏதோ சிக்கியது போல் உணர்வு. விராடன் கூறியது போல் அந்த இடத்தை அடையான எமக்கே இப்படி என்றால் அந்த தந்தைக்கு எப்படி இருந்திருக்கும்.

உருக்கமான கதை. சிரத்தை எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி - வாழ்த்துக்கள்.

பாரதி
05-10-2010, 02:25 PM
மனதைக்கனக்க வைக்கும் கதைதான். விரும்பிப்படித்தேன். சிங்கிளா இருக்கும் நான் படிக்கையிலேயே இப்படி இருக்கிறது என்றால், குடும்பத்துடன் பெண் குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் ஒருவர் அலுவலக வேலையால் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை இழந்தவர் படிக்கையில் எப்படியிருந்திருக்கும். கட்டாயம் குற்ற உணர்ச்சி அடித்தொண்டையை அடைத்திருக்கும்.
நன்றி விராடன். முதல் முறை படிக்கையிலேயே என்னை மிகவும் கவர்ந்ததாலேயே தமிழாக்கினேன். உங்களையும் கவர்ந்திருக்கிறதெனில் அதற்கு முழுக் காரணம் மூல ஆசிரியரே.


இந்தக்கதையை ஆங்கிலத்தில் படித்துள்ளேன்...

தமிழில் படிக்கும்போது மனதை மேலும் கனக்க வைக்கிறது...


பின்னூட்டத்திற்கு நன்றி அகிலா. மேலும் ஊக்கத்தை தருகிறது.


மனதைக் கனக்கவைத்த கதை...
அருமையான மொழிபெயர்ப்பு.

காலத்தில் தவறவிடும் எதையும் நினைத்துப்பார்த்தால் மனம் கனக்கவே செய்யும். பின்னூட்டத்திற்கு நன்றி செல்வா.


இந்த வரிகளை படிக்கும் போது கண்கள் கலங்கிவிட்டன. எனக்கும் தொண்டையில் ஏதோ சிக்கியது போல் உணர்வு. விராடன் கூறியது போல் அந்த இடத்தை அடையாத எமக்கே இப்படி என்றால் அந்த தந்தைக்கு எப்படி இருந்திருக்கும்.

உருக்கமான கதை.

என்னைக்கவர்ந்த கதை உங்களையும் கவர்ந்ததில் மகிழ்ச்சி அன்பு. உங்கள் பாராட்டு மூல ஆசிரியரையே சாரும்.

பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி.