PDA

View Full Version : முடிவிலி..(Infinity) நாவல்.. அத்யாயம் 11 (தொடர்கிறது..)



rambal
14-11-2003, 12:57 PM
முடிவிலி..(Infinity) நாவல்.. அத்யாயம் 11

மதுரையில் சங்கர் இருந்ததற்கான அடையாளங்கள் சிறிது கூட இல்லை..
ஆனால், அவனது முன்னாள் காதலி இருக்கும் இடம் பற்றிய விபரம் தெரிந்து அவளைச் சந்தித்தேன்..
அவள் கூறிய விபரங்கள் பின் வருமாறு..

- சங்கருக்கும் எனக்கும் இரண்டு ஆண்டுகள் வித்யாசம்.. நான் அவனை விட மூத்தவள்..
இருந்த போதும் நாங்கள் காதலித்தோம்..

- ஒரு விதமான ஈர்ப்பில் ஆரம்பித்து அதன்பின் காதலாக மலர்ந்தது...

- ஈர்ப்பு ஆரம்பித்த காலகட்டத்தில் நான் பத்தாம் வகுப்பும் அவன் எட்டாவதும் படித்துக் கொண்டிருந்தோம்..

- அப்போது அவன் என்னை விட சிறியவன் என்ற விஷயம் எனக்குத் தெரியாது..

- அதன் பின் அவன் பத்தாவது படிக்கும் பொழுது அவன் காதலை என்னிடம் சொன்னான்..

- அதன்பின் நான் என் காதலை சொல்ல ஆறுமாதகாலம் ஆனது..

- அந்த இடைப்பட்ட காலத்தில் நான் அவனைப் பற்றி விசாரித்தேன்..

- அவன் அம்மாவிற்காக ஏங்கிக் கொண்டிருந்த விஷயம் அப்போதுதான் எனக்குத் தெரிந்தது..

- அவனது அப்பா, அம்மா இருவருமே வெளிநாட்டில் இருக்கிறார்கள்... இவன் தனியாக இருந்தான்..

- இறுதியாக நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம்..

- அவன் ப்ளஸ் ஒன் படிக்கும் பொழுது அவனது பள்ளித் தகறாரில் வேறு யாரையோ தாக்க வந்த கும்பல் தவறுதலாக
இவனைத் தாக்கிவிட.. அன்று அந்த காட்சியை என் அப்பா பார்த்துவிட்டார்..
அவனை ஒரு பொறுக்கியாக அவர் தவறாக எண்ணி விட்டார்.. அதன்பின் அவனை பார்ப்பதை நிறுத்திவிட்டேன்..
ஆனால், அவனோ அவனை தாக்கியவர்களை தனித்தனியாக ஒரு மிருகம் போல் தாக்கியுள்ளான் என்பது
பிறகுதான் எனக்குத் தெரியும்.. ப்ளஸ் டூ விற்குப் பிறகு அவன் கல்லூரிக்கு நுழையும் பொழுது கத்தியை
தூக்க மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுத்ததின் பேரில் மீண்டும் எங்கள் தொடர்பு புதிப்பிக்கப்பட்டது..
ஆனால், விதி வேறு மாதிரி விளையாடிவிட்டது.. கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ராக்கிங்கில்
மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்துவிட்டு அவனைத் தாக்கிவிட்டனர்.. மீண்டும் அவன் கத்தி தூக்கியது அப்போதுதான்..
அவனைத் தாக்கிய மாணவர்களை அவன் இந்த முறை கல்லூரி வளாகத்தினுள்ளேயே துரத்தி துரத்தி வெட்டி விட்டான்..
பிரச்சினை மிகப்பெரியதாக ஆகிவிட்டது.. போலீஸ் கேஸ் ஆகி அதை அவன் சரி செய்ய ஒரு ஆண்டு காலம் ஆனது..
அந்த சமயத்தில் என்னால் அவனை புரிந்து கொள்ளமுடியவில்லை..
பல பெண்களோடு அவனுக்கு அந்த காலகட்டத்தில் பழக்கம் ஏற்பட்டது.. அதனால், எங்களுக்குள் மீண்டும் தகராறு..
அதன்விளைவாகத்தான் அவன் வாழ்க்கை வேறு மாதிரி திரிந்துவிட்டது.. இருந்த போதும் அவன் என் மீது இருக்கும் காதலை
இன்றளவு மட்டுமல்ல.. இந்த ஜென்மம் பூராவும் நினைத்துக்கொண்டுதான் இருப்பான்..

- மூன்றாம் ஆண்டு முடிந்ததும் என்னை பெண் கேட்டு என் வீட்டிற்கு வந்தான்.. அப்போது, எனது அப்பா அவனை மிகவும்
அவமானப்படுத்திவிட்டார்.. அதன்பின் ஓடிப் போகலாமா என்று நான் கேட்டதற்கு, கல்யாணம் என்று நடந்தால் அது உன்னோடுதான்
என்றும் அது நமது பெற்றவர்கள் முன்னிலையில்தான் என்றும் கூறிவிட்டு வேலை தேடி சென்னைக்குச் சென்றுவிட்டான்..
அதற்குள் என் வீட்டில் எனக்கு வேறு ஒரு இடத்தில் மணம் முடித்துவிட்டார்கள்..
அவன் திரும்பி வந்த பொழுது என் திருமண விஷயம் கேள்விப்பட்டு மிகவும் நொறுங்கிப் போய்விட்டதாக கேள்விப்பட்டேன்..

- எனது திருமணத்தை தடுத்து நிறுத்த நான் எவ்வளவோ முயன்றேன்.. முடியவில்லை... இறுதியாக எனது அப்பா இறந்த பிறகு
எனக்கு வேறுவழியில்லை எனும் நிலையில்தான் திருமணத்திற்கு சம்மதித்தேன்..

- அவனோடு பழகிய வரை அவன் என்னை 'வி' என்றுதான் கூப்பிடுவான்.. அவன் அம்மாவின் சாயல் என்னிடம் இருப்பதாகக் கூறுவான்..

- என் மடியில் தலை வைத்து படுத்திருக்கும் பொழுதுகளில் இறந்துவிடவேண்டும் என்று புலம்புவான்..

- என் கைகளால் அவன் கண்களை மூட சொல்வான்.. அப்படி செய்தால் சிறிது நேரத்தில் தூங்கியும் விடுவான்..
எனது கைகளில் அவன் ஒரு பாதுகாப்பை உணர்ந்தான்..

- என் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு, பயமாக இருக்கிறது என்று சொல்லி என்னை இறுக்கமாக கட்டிப்பிடிக்கச் சொல்வான்..

- என்னைப் பாடச் சொல்லி ரசித்துக் கேட்பான்.. அந்த கணம் பிரபஞ்சமே அமைதி பெற்றுவிட்டதாக சொல்வான்..
அதிலும் குறிப்பாக ஆண்டாள் பாசுரங்கள் பாடச் சொல்லிக் கேட்பான்.. அந்த சமயங்களில் மனதில் ஏதோ ஒன்று நிறைவு பெற்றது
என்று எண்ணி அவன் கண்களில் நீர் தேங்கும்.. சில சமயம் என் மடியில் தலை புதைத்து தேம்பித் தேம்பி அழுவான்..
என் குரல் மீது அவனுக்கு அப்படி ஒரு பைத்தியம்.. என் குரல் மீது மட்டுமல்ல இசை மீதும்தான்..

- அவனது வாழ்க்கை என்னால் முழுமையடையும் என்று சொல்வான்.. இந்த பரிசுத்தமான அன்பில்.. எனது ஸ்பர்சத்தில் மரிக்கவேண்டும்
என்று ஆசைப்பட்டான்..

- என்னுடன் இருக்கும் சந்தர்ப்பங்களில் தன்னை ஒரு குழந்தையாக பாவித்துக் கொள்வான்.. அந்த சமயங்களில்
அவன் எப்படி பிறரை அடிக்கிறான் என்று எனக்கு ஆச்சரியம் ஏற்படும்..

- கார்க்கி தேடிய தாயின் மடி... பாரதி புலம்பித் தள்ளிய கண்ணம்மா.. என்று என்னைச் சொல்வான்..

- கவிதைகள் எழுதுவான். ஏகத்திற்கு ஏதேதோ எழுதுவான்.. அத்தனையும் சமூகம் பற்றிய அவலங்களாக இருக்கும்..
இறுதியாக நான் வேறு ஒரு நபருடன் மணமான விஷயம் கேள்விப்பட்ட அன்று அனைத்து கவிதைகளையும் கொளுத்திவிட்டான்..

- இந்த சமூக சிக்கல்களில் அனைவரும் மாட்டிக் கொண்டு தவிப்பதற்கு அரவணைத்துச் செல்லும் பெண்மை இல்லாததே காரணம்
என்பான்..

- அவனது பால்யம் மிகவும் விசித்திரமாணது..
அவன் தாத்தா பாட்டியுடன்தான் வளர்ந்தான்.. அவனுடைய உலகம் என்பது அவனது வீடு, பள்ளிக்கூடம், பேஸ்கட்பால் கிரவுண்ட்..
எதைப்பற்றிய பிரக்ஞையும் இல்லாத உலகம் அவனுடையது.. பலநாட்கள் அவனது அம்மாவிற்காக அவன் ஏங்கியிருக்கிறான்..
தனிமையில் அழுதிருக்கிறான்.. அவனது தாத்தாவும் பாட்டியும் இறந்த பிறகு அவனது வாழ்வு சூன்யமாகிப் போனது..
தனிமையில் தனது வாழ்க்கையை வாழ ஆரம்பித்த பொழுது அவனுக்கு வயது பதினான்கு.. அந்த காலகட்டத்தில்தான்
அவன் வாழ்க்கையில் நான் ஒரு வசந்தமாக வந்ததாக சொல்வான்.. வாழ்க்கைக்கு பணம் தேவைதான்..
ஒரு அளவிற்கு மேல் பணம் என்பது நம்முடைய பாதுகாப்பிற்கு என்கின்ற நிலை போய் பணத்திற்கு நாம் பாதுகாப்பாளராகிவிடுவோம்
என்று அவன் சொல்லும் போது வேடிக்கையாக இருக்கும்.. ஆனால், அதில் ஒரு வருத்தம் இருக்கிறது என்பதை
சில நாட்கள் கழித்துதான் நான் உணர்ந்தேன்.. அந்த வயதில் அவனுக்கு அப்படி ஒரு ஞானம்..

- காரும் பைக்கும் அவனுக்கு அந்த வயதிற்கு அதிகம்தான்.. ஆனால், அவைகள் ஒரு அம்மாவிற்கோ அப்பாவிற்கோ ஈடாகாது..
அதை அவனது பெற்றவர்கள் உணரவில்லை.. வேறு யாராவது இருந்தால் வேறு மாதிரி வாழ்ந்திருப்பார்கள்..

- மூன்று விஷயங்கள்..
1. அவனை பெற்றவர்கள் அவனை தனிமையில் விட்டிருக்கக்கூடாது..
2. நான் அவனது வாழ்க்கையில் நுழைந்திருக்கக்கூடாது..
3. பள்ளியில் தவறுதலாக அவன் தாக்கப்பட்டிருக்கக்கூடாது...

இந்த மூன்று விஷயங்களும் நடந்து போன சம்பவங்கள்.. ஆனால், அவனுக்கு அப்படி நடந்திருக்கக்கூடாது..

இனி, இதற்கு மேல் பேசி பிரயோசனம் இல்லை.. நடந்து முடிந்த சம்பவங்களுக்கு காலம் தான் பதில்சொல்லவேண்டும்..
என்று அவள் சொல்லி முடிக்கையில் அவளது கண்களின் ஓரம் சில நீர்த்துளிகள் பூத்திருந்தது..
இதற்குமேல், சங்கரைப்பற்றிய எந்த விபரங்களும் எனக்குக் கிடைக்கவில்லை.. அநேகமாக அவன் சென்னையில் இருக்கலாம்
என்று அவள் சொன்னதின் பேரில் மீண்டும் சென்னைக்குத் திரும்பினேன்..

முத்து
14-11-2003, 10:44 PM
அற்புதமாய் உள்ளது .. ராம்பால் அவர்களே ...
மீண்டும் அடுத்த பகுதியைக் கொடுத்தமைக்கு நன்றிகள் ...
விரைவில் அடுத்த பகுதியைத் தாருங்கள் ...

இளசு
16-11-2003, 09:39 PM
முடிவிலியை முடிக்க வந்திருக்கும்
இளவல் ராமுக்கு வாழ்த்துகள்.

இக்பால்
17-11-2003, 10:01 AM
செய்தி வாசிப்பது போன்ற தோரணையில் எழுதப்பட்டதுபோல் தோன்றுகிறது.
அப்படியா? இல்லை நான் தான் அப்படி வாசித்து விட்டேனா?
எது எப்படியோ...கொஞ்சம் வித்தியாசமாக போகிறது.
நன்றி ராம். 12க்கு போகிறேன்.-அன்புடன் அண்ணா.