PDA

View Full Version : மௌனத்தின் சரத்துக்கள்..



rambal
14-11-2003, 06:36 AM
மௌனத்தின் சரத்துக்கள்..

தனிமையில்
மௌனத்தின் சரத்துக்களை
மொழி
வாசித்துக் கொண்டிருக்கிறது..

காலக்குதிரையேறி
பிரபஞ்ச எல்லை தாண்டி
பறந்து கொண்டிருந்தவனைப்
பற்றிய செய்தி
அதில் இருந்தது..

கடிவாளமில்லாத
காலக் குதிரையாய்
மனசு
அலை பாய்ந்து..
எழுதிவிட்டுப் போனக் குறிப்புகளும்
அதில் இருந்தது..

காலபூதம் அலைக்கழித்து
கரை தட்டி நின்றதில்
சந்தோசமடைந்தது
பற்றியும்
அதில் இருந்தது..

எழுதுவதற்கு மொழி தேடி
அலைந்து
கிடைக்காது போக..
லாயத்தில் கடிவாளத்தோடு
குதிரை கட்டப்பட்டு விட்டதோடு
குறிப்புகள் முடிந்து போயிருந்தது..

பிரிந்து போன மொழியோ
திரும்பி வந்து
மௌனத்தின் சரத்துக்களை
வாசித்துக் கொண்டிருக்கிறது...

Nanban
14-11-2003, 06:51 AM
மௌனத்தின் சரத்துகளை
வாசிக்க வாசிக்க
பூத்த புன்னகைகள்
வரவாகக் கிடந்தது......

செலவான சோகங்களுக்கு
கணக்கு எழுதியது போதும்;
வரவுக்கும் செலவுக்கும்
நடந்த கணக்கு முடித்தலில்
வரவாக விஞ்சிய
புன்னகைகளுக்கு
சேமிப்பு கணக்குத்
தொடங்க வேண்டும்.....

இனி மௌனவாசிப்புகளை
மொழி நிறுத்திக் கொள்ளட்டும்.......

இ.இசாக்
14-11-2003, 06:55 AM
ராம்பால் அவர்களே
மௌனவாசிப்பு மொழியின் நீட்சி
அதன் பரிமான பார்வையாக தங்கள் கவிதையுள்ளது.
வாழ்த்துகள்

kaathalan
14-11-2003, 03:35 PM
முதலில்! ராம்பால் என்ற கவிஞன் திரும்ப பல அனுபவங்களுடன் கவிதைகள் படைக்க வந்தமை நன்று. முன்பைப்போல் அதே ஆர்வம் பொறுப்பு சமுகத்தின் மேல், இன்னும் கூடுதலாகக்கொண்டு இனி இவரது கவிதைகள் இங்கு வெளிவரக்காத்திருக்கும் நண்பர்கள் என்னுடன்.

மெளனத்தின் சரத்துக்கள் உங்கள் உள்ளக்கிடங்கை காட்டுகிறது.
கவலைகள்; என்னவாக இருந்தாலும் உதறக்கூடியதை உதறிவிட்டு இங்கே மேலும் கவிதைகள் படையுங்கள் அன்பரே.