PDA

View Full Version : எங்கோ சென்ற கவிதைகள்...



rambal
14-11-2003, 06:28 AM
எங்கோ சென்ற கவிதைகள்...

முகவரி தவறிய
வழிப்போக்கனாய்
வழிதவறி
எங்காவது
அலைந்து கொண்டிருக்கலாம்...

குப்பைத்தொட்டி முதல்
கூலாங்கல் வரை
எழுதியதால்
சோர்ந்து போயிருக்கலாம்..

இப்பொழுதெல்லாம்
வானம் எப்போதும் மேகமூட்டமாய்
இருப்பதால்
எங்காவது
பதுங்கியிருக்கலாம்..

அல்லது மழையில்
நனைந்து
ஜலதோசம் ஏற்பட்டு
மருத்துவரைக் காண
சென்றிருக்கலாம்...

இப்படி ஏதேனும்
ஒரு காரணம் இருக்கலாம்..
கவிதைகள் வராமல் போனதற்கு?

நான் என் செய்வது?
என்னிடம் வந்து சேரா கவிதைகளுக்கு..

Nanban
14-11-2003, 06:45 AM
வெற்றி பெற
வெற்றியாளர்களின்
மத்தியில் இரு
என சொல் உண்டு........

கவிதைகளின்
மத்தியிலே
இருந்தால்
கவிதைகள்
வாராது
எங்கே போய்விடும்......?

படைக்க வரவில்லை என்று
பிரம்மனா
கவலைப் படுவது......?

வழிதவறி
எங்கெங்கோ
சுற்றியதாலே
புதுப்புது
அனுபவங்கள்
பெற்று வரலாம்....

சோர்ந்து போனதாலே
புதுவழிகளைக்
கண்டு வரலாம்.......

ஜலதோஷம் பிடித்ததினாலே
குரல் மாறிப்போய்
வரலாம்........

மருத்துவனைக் காண
காத்திருந்த வேளையில்
கவலையுடன் சம்பாஷித்த
மனிதர்களைக் கண்டு
புதுக் கருத்துகளுடன்
வரலாம்.......

எங்கு சென்றாலும்
அடைத்து வைக்க
முடியாத குரல் அல்லவா
கவிஞனுடையது.......

வரும்,
மீன் குஞ்சா
நீரைக் கண்டு
கவலைப் படுவது?

வரும்,
கவிதை வரும்........

kaathalan
14-11-2003, 03:42 PM
நண்பனின் பதில் கவிதை தான் எங்களது உணர்வும்.

"வரும்,
மீன் குஞ்சா
நீரைக் கண்டு
கவலைப் படுவது?"

இது உண்மைதான் என்று தெரிந்தும்

"வரும்,
கவிதை வரும்..........."

இனிமேல் கவிதைகள் வரும், பல்வேறுபட்ட அனுபவங்களுடன் வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.