PDA

View Full Version : கவிதையொன்றின் கதை



ஆதவா
29-09-2010, 06:53 AM
மொழிகளற்ற நாட்டில் பிறந்தவன்
யாராலும் சுவைக்கமுடியாத எழுத்துக்களால்
கவிதை எழுதிவிட்டு மாண்டு போனான்
அவனது மரண ரகசியம் அறியும் பொருட்டு
ரகசியம் அறிபவர்களால் மிகச் சிரமங்களுக்கிடையே
வாசிக்கப்பட்டது அக்கவிதை
ஒருவர்பின் ஒருவராக ஏதாவதொரு வழியில்
இறந்து போனார்கள்.
கவிதைக்குப் பேய் பிடித்து விட்டதாக
நம்பப்பட்டது
சில வருடங்களுக்குப் பிறகு
பாவம் நீக்குபவர்கள் சிரமேற்கொண்டு வாசித்து
சாத்தானிடமிருந்து நீங்கப்பெற்றதாகக் கூறிவிட்டு
தற்கொலை செய்து கொண்டார்கள்
கவிதைக்கு இறைமை கிடைத்துவிட்டதாக
நம்பப்பட்டது
உலகமே அதனை வாசிக்க ஆர்வமாக
எல்லா மொழிகளிலும் அச்சிடப்பட்டது
வாசித்த எல்லாருமே விதவிதமாகச் செத்தார்கள்
கவிதை ஒரு உயிர்க்கொல்லி என்று
நம்பப்பட்டது
பயந்து போன மக்கள்
அதனைப் பூட்டி வசிக்க இயலாத இடத்தில் புதைத்து
சாவியை ஏழு கடலுக்கு அப்பால் வீசியெறிந்தார்கள்
கவிதை தீண்டத்தகாத கொடியநோய் என்று
நம்பப்பட்டது
யுகங்கள் கடந்த பிறகு
வாசிக்க ஆளேயில்லாத தனிமையில்
அது தன்னைத் தானே வாசித்து
திடீரென மறைந்து போனது
கவிதை இறைவனின் குறியீடு என்று நம்பப்பட்டு
இன்று எல்லோராலும் வணங்கப்படுகிறது...

த.ஜார்ஜ்
29-09-2010, 08:31 AM
எதோ ஒரு பாதை இருப்பதுபோல் உணரமுடிகிறது.ஆனால் நடக்கமுடியவில்லை. மாயத்தோற்றம்தானா..
சுவையாயிருப்பது மாதிரி இருக்கிறது. ஆனால் எதிலிருந்து வந்த சுவை.
தீர்க்கதரிசிகளே வந்து வழிகாட்டுங்கள்.

தாமரை
29-09-2010, 08:37 AM
அடடா படிச்சீட்டீங்களா ஜார்ஜ்? ஆதவா அவ்வளவு எச்சரிக்கை செய்தானே.. கேட்காம இப்படி மாட்டிகிட்டீங்களே!!!

ஆதவா
29-09-2010, 08:55 AM
எதோ ஒரு பாதை இருப்பதுபோல் உணரமுடிகிறது.ஆனால் நடக்கமுடியவில்லை. மாயத்தோற்றம்தானா..
சுவையாயிருப்பது மாதிரி இருக்கிறது. ஆனால் எதிலிருந்து வந்த சுவை.
தீர்க்கதரிசிகளே வந்து வழிகாட்டுங்கள்.

இ.ராஜா + எஸ்.பி.பியின் “காதலின் கீதமொன்று” என்ற பாடலைக் நேற்று மாலை கேட்டபொழுது, அந்த நேரம், அதன் ரம்மியம் ஆகியவை சேர்த்து என்னை இந்த உலகில் வாழ்வதை ரத்து செய்து வேறெங்கோ கொண்டு போய் விட்டது. ஆனால் எனக்கு சத்தியமாகத் தெரியாது ராஜா என்ன வாத்தியங்கள் உபயோகித்தார், என்ன இசைக்குறிப்புகள், இராகங்கள், எஸ்பிபியின் குரல் இன்னும் என்னென்னவோ இருக்கும், அத்தனையும் தெரியாது.. ஆனால் ஒன்றுமட்டும் இழுக்கிறது... அது என்னவென்று தெரியவில்லை. நடக்கிறேன்... பாதையில்லை, உயிர் இருக்கிறது, உடலில்லை... இதை நிறையபேர் அனுபவித்திருப்பார்கள்.

கவிதைகளும் அப்படித்தான்... சில நமக்குப் புரியாது... ஆனால் சுவையாக இருக்கும்... சில நமக்கு நன்கு புரிந்துவிடும். ஆனால் உப்புசப்பில்லாமல் இருக்கும்... ஈரோட்டில் வாங்கிய இளங்கோ கிருஷ்ணனது காயசண்டிகை, இயல்பும் நவீனமும் இணைந்த கவிதைகள். பெரும்பாலும் எளிய கவிதைகள்தான் என்றாலும் சில கவிதைகள் என்ன சொல்லவருகிறார் என்பது தெரியாது. அல்லது புரிய நேரமெடுக்கும் என்றாலும் எனக்கே தெரியாமல் மனம் மட்டும் சிரிப்பதைக் கண்டிருக்கிறேன். நம் மன்றத்தில் கூட சிலரது எழுத்துக்கள் அப்படிப்பட்டவை!!

நன்றிங்க த.ஜார்ஜ்..

(இந்த கவிதை படிச்சுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை:D)


அடடா படிச்சீட்டீங்களா ஜார்ஜ்? ஆதவா அவ்வளவு எச்சரிக்கை செய்தானே.. கேட்காம இப்படி மாட்டிகிட்டீங்களே!!!

ஆடு அதுவா வந்து பிரியாணி ஆயிடறேன்னு சொல்லுது... போட்றலாமா.... :lachen001::lachen001:

த.ஜார்ஜ்
29-09-2010, 03:12 PM
அடடா படிச்சீட்டீங்களா ஜார்ஜ்? ஆதவா அவ்வளவு எச்சரிக்கை செய்தானே.. கேட்காம இப்படி மாட்டிகிட்டீங்களே!!!

ஓகோ. எச்சரிக்கை வேறு இருந்ததா?
வாசிக்கத்தெரியாத ஆடு.